Wednesday, June 06, 2018

நீர் மேலாண்மை:
A Lovely Canal in England

UK (இங்கிலாந்து என்று சிலர் ஒட்டு மொத்தமாக சொல்வர்)  என்று சொன்னவுடன் லண்டன் என்று பலருக்கு நினைவுக்கு வந்தாலும் இங்கு வந்து சென்றவர்களுக்கு நினைவில் நிற்பது இந்த ஊரின் பசுமை.  மீண்டும்.மீண்டும் அதை புகழ்வார்கள். மேலும் இங்கு மக்களுக்கு கிடைக்கும் சுத்தமான தண்ணீர் அவர்களை வியக்க வைக்கும். இதன் காரணம் இங்கு இடைவிடாமல் மழை பொழிவதாக நம்பி செல்வார்கள்.
“கொடுத்து வச்சவங்க சார்”...இந்த ஊர்காரங்க என்று சொல்லி செல்வார்கள்.

நம் மாநிலத்தின் அளவே மக்கள் தொகை கொண்ட
நம்மை விட பெரிய நிலப்பரப்பு
நம்மை விட குறைந்த அளவு மழை வளம். கொண்ட ஒரு இடம்
நம் மாநிலத்தை விட பசுமையாக இருப்பது எப்படி?
அங்கு மக்கள் தண்ணீருக்கு ராவும் பகலும் குடத்தை தூக்கி கொண்டு அலைந்து கஷ்டப்படாமல் 24 மணிநேரமும் சிறப்பாக வாழ்வதெப்படி ?????   கேள்விகள்...கேள்விகள்

உண்மை என்ன ?

சில விவரங்களை பார்ப்போம்.
UK மக்கள் தொகை :  6.5 கோடிகள்  (65.65 மில்லியன் – 2016)
தமிழகத்தின் மக்கள் தொகை     6.7 கோடிகள்  (67.86  MILLION  - 2012)
  UK யின் நிலப்பரப்பு             2,42,426 சதுர கிமீ 
தமிழ்நாட்டின் நிலப்பரப்பு          1,30,000 சதுர கிமீ 
UK யின் வருட மழை பொழிவு     885 mml
TN ன் வருட மழை பொழிவு       945 mml (சுமார் 10% அதிகம்)

இதை தாண்டி இவர்களுக்கு நம்மூரை போல் பக்கத்து மாநிலத்தில் இருந்து வரும் காவிரி போன்ற ஆறுகளும் கிடையாது. முல்லை பெரியார் அணைக்கட்டிலிருந்து நீர் வரத்தும் கிடையாது. நான் மேலே சொன்ன கணக்கில் இந்த நதி நீர்வளங்களை கணக்கில் கொள்ளவில்லை. மேலும் இத்தகைய பெருநதிகள் இல்லாமல் போவதால் இவர்களிடம் பெரும் அணைக்கட்டுகளும் கிடையாது. அது தனிகதை.

இப்படி இருக்க நம் மாநிலம் மட்டும் குடிக்க தண்ணீர் பஞ்சம் என்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்றும் புலம்பும் நிலை ஏன்?

சிறப்பான நீர் மேலாண்மை இல்லாததுதான். 
சிறப்பான திட்டமிடலும் நீர் பகிர்வும்தான் காரணம்.

இந்த பிரச்சனையின் பல பக்கங்களில் ஒரு சிறு பகுதியை பார்க்கலாம்.

இங்கு சிறு வாய்க்கால்கள் சிறப்பாக பராமரிக்கப் படுகின்றன.
ஏரிகள் ஆக்கிரமிக்கப் படுவதில்லை.
புதிய ஏரிகள் உருவாக்கப்படுகின்றன.
நீர் வளத்தை சுத்திகரித்து பகிர்வதில் தனியார்கள் இருந்தாலும் அவை அரசால் உள்ளூர் நகராட்சிகளால் வெகு சிறப்பாக கண்காணிக்கப் படுகிறது.
எந்த கழிவு நீரும் ஆற்றிலோ வாய்கால்களிலோ விடப்படுவதில்லை.
முழுவதும் சுத்திகரிக்கப் பட்டு மறு சுழற்சி முறையில் திரும்ப உபயோகிக்கப் படுகிறது.

இங்கு தனியார் யாரும் வீட்டு உபயோகத்திற்கோ, தொழிற்சாலைக்கோ ஆழ்துளை கிணறு தோண்ட முடியாது. அரசிடம் கேட்டு அவர்கள் மூலமாக குழாய் மூலம் தண்ணீர் பெற்றே பயன்படுத்த முடியும்.

ஒரு வீடோ, அலுவலகமோ, தண்ணீர், மின்சாரம், கழிவு நீர் சுத்திகரிப்பு வழி ஆகியவற்றை செய்யாமல் இயங்கவே முடியாது. இது நகரபுரமோ, கிராமபுறமோ எங்கிருந்தாலும் ஒரே சட்டம்தான்.  இதை மீறுபவர்கள் கடுமையாக விரைந்து தண்டிக்கப் படுகிறார்கள். அதற்கான சட்டங்கள் உண்டு. இப்படி செய்பவர்க’ளை எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் சமுதாயம் புறக்கணித்து அவமதிக்கிறது. எனவே யாரும் செய்ய துணிவதில்லை. முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது.
River in TN

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் எந்த ஒரு குடியிருப்போ, தொழில்சாலையோ அமையவே முடியாது.

பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்..இங்கிலாந்தில் எந்த ஒரு வீட்டிலும் தண்ணீர் மேலேற்றும் “பம்பு”களோ “மோட்டார்” களோ கிடையாது. நீங்கள் முதல் மாடியில் இருந்தாலும் மூணாவது மாடியில் இருந்தாலும் தண்ணீரை உங்கள் வீட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துடன் அளிக்க வேண்டியது அந்த நகராட்சியின் கடமை.  இன்றுவரை அதை தவறாமல் செய்கிறார்கள். 3 மாடிக்கு மேல் இருக்கும் கட்டிடங்களுக்கு அதற்கான சிறப்பு வசதிகளை செய்து விட்டுத்தான் அனுமதியே கிடைக்கிறது. அத்தகைய கட்டிடங்களும் குறைவு.

இங்கு தண்ணீர் அசுத்தப்படுத்துவதை பெரும் குற்றமாக பார்க்கின்றனர்.
சிறு கால்வாய்களின் அவசியமும் அவைஎப்படி இயற்கையுடன் ஒத்து இருத்தல் அவசியத்தையும் மிக கவனமாக உணர்ந்து செயல்படுகின்றனர்.
அதனால்தான் எந்த கிராமத்திற்கு சென்றாலும் தெள்ளிய நீரோடை பாய்வதை நீங்கள் காணலாம். இங்கு யாரும் வாய்கால்களில் சோப்பு போட்டு குளிக்கவோ, துணி தோய்க்கவோ தடை செய்யப்படுகிறது.
நீரில் மீன்களின் அவசியத்தை உணர்ந்து அவைகளின் வகைகளும்  எண்ணிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். மீன் இவர்களின் சிறப்பு உணவாக இருந்தாலும் கண்ட இடத்தில் பிடித்து கண்ட இடத்தில் விற்க முடியாது.
மேலும் மரங்களை வளர்ப்பதில் தனி கவனம் கொள்கின்றனர். தோட்டங்களை பராமரிப்பதில் ஒவ்வொருவரும் பெருமை கொள்கின்றனர். தனி கவனம் செலுத்தி தன் தோட்டங்கள் சிறப்பாக இருக்க முயல்கின்றனர். இந்த தொட்டக்க்லையை கொண்டு ஒரு பெரிய வியாபரமே உருவாகியுள்ளது. ஊர் அழகாக இருக்க நகரத்தில் இல்லாவிட்டாலும் கிராமங்களில் மக்கள் தங்கள் ஒய்வு நேரத்தை இலவசமாக செலவழிக்கின்றனர். அப்படி செய்பவர்களை அந்த ஊர் மதிக்கிறது. பைத்தியக்காரன் என்று சொல்வதில்லை.

சரி...இப்படிப்பட்ட ஊரில் “கெமிகல்” தொழிற்சாலைகளே இல்லையா என்றால் அப்படிப்பட்ட தொழிற்சாலைகள் உண்டு என்பதுதான் உண்மை. மிகப்பெரிய ICI தொழிற்கூடங்கள் உண்டு. கோகோ கோலா, பெப்சி போன்ற தொழிற்கூடங்களும் உண்டு. ஆனால் அவைகளில் இருந்து வரும் கழிவு நீர்களின் தன்மை மிகக்கடுமையாக கவனிக்கப்படுகிறது. சில இடங்களில் கழிவு நீர் வெளியே வருவதே இல்லை. அவை மறுசுழற்சி செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு கட்டுமானங்கள் செய்யாவிட்டால் அந்த ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப் படுவதேயில்லை.

பொது மக்கள் இந்த விஷயத்தில் ஓரளவு அறிவுடன்தான் இருக்கிறார்கள்
அரசு நீர் பங்களிப்பை சிறப்பாக பராமரிக்கிறது. .
மாசுக்கட்டுப்பாட்டு துறை லஞ்ச ஊழலுக்கு போகாமல் சமுதாய உணர்வுடன் தொடர்ந்து செயல்படுகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எல்லோரும் சேர்ந்து ஒழுங்காக தேரை இழுக்கிறார்கள். பலன் கிடைக்கிறது.

இப்போது சொல்லுங்கள் நாம் எங்கிருக்கிறோம்.?
நாம் எங்கு செல்ல வேண்டும்?

நன்றி
ரவி சுந்தரம்
படித்தவுடன் பகிரவும்.  -  நாலு பேருக்கு விவரம் தெரியட்டும்.

Tuesday, January 30, 2018

தீதும் நன்றும் பிறர் தர வாரா !

 நம் வாழ்வில் நாம் விரும்புவது யாது என்று முடிவு செய்வது நாம்.
அதற்கான அத்தனை முன்னெடுப்புகளையும் செய்வது நாம்.
அந்த இலக்கை அடைந்த பிறகு பெருமையை பெற்றுக் கொள்வதும் நாம்.
ஆனால் தோல்வி என்று வரும் போது மட்டும் அதன் காரணத்தை இன்னொருவர் தோளில் சுமத்த முற்படுவது ஏன்?
 "அவா" ளால காரியம் கெட்டுது.
இவிங்களால நாம் நாசமானோம் என்று புலம்புகிறோம்.

இதைப் பற்றி நிறைய பேர் நிறைய பேசிட்டாங்க.

ஒருத்தர் கேட்டார். "சொல்றதெல்லாம் நல்லாத்தான் சார் இருக்கும். தெருவில் இறங்கி போராடும் போதுதான் புரியும். சும்மா..கம்புயுட்டர் கிடைச்சுதுன்னு ரூம்புல உட்கார்ந்து கொண்டு லொட்டு லொட்டு ன்னு கி போர்டை தட்டினால் சரியா போச்சா ??".

நியாயமான கேள்விதானே!

ஒரு தாழ்த்தப் பட்டவரின் வலி மற்றும் அவர் அனுபவிப்பதாக சொல்லும் அவமானம் இன்னொரு சாதிக்காரருக்கு எப்படி புரியும்.?

புரியாதுதான்.

அப்படி பார்த்தால் என் கால்வலி என்னவென்று என் பெண்டாட்டிக்கே புரியாது. அது அவருக்கு வரவேண்டும். அப்போது கூட அது அவரது வலி. என்னுடையது அல்ல.

ஆகவே இந்த சமுகம் இப்படித்தானா? 
வெறும் கழிசடைகளை மட்டும் கொண்டதா?
என்றால் அப்படி என்றுமே இல்லை என்றுதான் சரித்திரம் சொல்கிறது.

பழைய கதைகளை அப்புறம் பார்ப்போம். இப்போதை நடைமுறைகளை 
கண் எதிரே நடப்பவைகளை உதாரணம் கொள்வோம்.

மூன்று பேரை எடுத்துக் கொள்வோம்.

இவர்களை உலகம் தலையில் வைத்து கொண்டாடியது. கொண்டாடுகிறது.
1.   
      முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
2.   ஆஸ்கார் பரிசு பெற்ற ஏ.ஆர். ரஹ்மான்.
3.   இசைஞனி : இளையராஜா .

இந்த மூவரும் மிகவும் பின்தங்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இருவர் பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை.

இவர்களுக்கு இந்த வெற்றி சும்மா கிடைத்துவிடவில்லை.
எத்தனை வலி, ?
எத்தனை துரோகம்?
எத்தனை கிண்டல்?
எத்தனை இழி சொல்?
இத்தனையும் தாண்டி வென்றதெப்படி?

இவர்கள் இன்றைய சுபவீக்களும், கீரைமணிகளும் சொல்வது போல் முன்னேறவே முடியாமல் அல்லவா போயிருக்க வேண்டும்.

ஆனால் இந்த மூவரையும் இனம், மதம், மொழி ஜாதி என்று அனைத்தையும் கடந்து உலகம் ஏன் கொண்டாடுகிறது?

இதில் முதலாமவர் பல மேடைகளில் தன் வெற்றியின் ரகசியத்தை தெளிவாக பலமுறை சொல்லிவிட்டுத்தான் சென்றார்.
அதாவது உன் உயரம் உன் மனத்தின் உயரம்தான் என்றார்.

ஏ.ஆர். ரஹ்மான் சொன்னது. இன்னமும் தெளிவு.
ஆஸ்கார் வெற்றியின் ரகசியம் கேட்ட போது ..
“வாழ்வின் முக்கியமான ஒரு திருப்பத்தில் என்னிடம் இரண்டே வழிகள் தென்பட்டன. ஒன்று அன்பு வழி. இன்னொன்று வெறுப்பு வழி.  வெறுப்பு வழியில் செல்வது மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் அன்பு வழியில் செல்லத்தான் மிகவும் உறுதி தேவைப்பட்டது. நான் அன்பின் வழியை தெரிவு செய்தேன்.
என் பணிகளை வெற்றி தோல்வி எதிர்ப்பார்ப்பு இன்றி செய்து கொண்டே இருந்தேன். வெற்றியோ, தோல்வியோ எல்லா புகழும் இறைவனுக்கே” என்று சொன்னார். இதுவும் ஆன்மிகம் தான்.

இதில் யாருடைய சொல்லும் செயலும் என் அனுமதியின்றி என்னை பாதிக்க விடவில்லை என்பதுதான் மறை பொருள்.

அடுத்து இளையராஜா ...இவரும் ஆன்மீகத்தின் வேறு ஒரு தளத்தில் இருந்து தம் இலக்கை அடைந்தார்.

இசை உலகில்  இவருக்கு இளைய ரஹ்மான் இஸ்லாத்தில் நின்று கண்ட இறையை இவர் இந்துமதத்தில் நின்று கண்டார்.

இவர் தனது உயரம் என்ன என்று அடைய வேண்டிய இலக்கு என்ன என்று ஏற்கனவே புரிந்து கொண்ட காரணத்தால் அவரது பயணம் தீர்க்கமானதாக இருக்கிறது. இவர் வெற்றியை தேடி போகவில்லை. வெற்றி இவரை தேடி வந்தது.

ஒவ்வொரு உயத்தை கடக்கும் போதும் இவரை சுற்றி இருந்த ஒவ்வொரு போலி உறவுகள் தாமாகவே பல்லிளித்து வீழ்ந்து பட்டன.
சமிபத்தில் வீழ்ந்தது ஒரு 40 வருட போலி நட்பு.
அதையெல்லாம் கவனிக்கும் அருகாமையில் அவர் இல்லை.

இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை இவர்கள் தம் உயரத்தை தாமே தீர்மானித்து கொள்கின்றனர்.
அதனால்தான் இவர்கள் தங்களின் சிறு சிறு இடர்பாடுகளுக்கு தோல்விகளுக்கு  இன்னொரு பலி ஆட்டை தேடுவதில்லை.
இவர்களின் வெற்றியை வளர்ச்சியை இவர்களின் ஜாதியோ மதமோ தீர்மானிப்பதில்லை.

இஅதையெல்லாம் கடந்து இவர்கள் நிற்க முடியும் என்று நம்பினார்கள். நிற்கிறார்கள்.
இதுதான் பகுத்தறிவு.  
Wednesday, December 20, 2017

2017 சென்னை விஜயம். சில அனுபவங்கள்!

இது அரசியல் பதிவு அல்ல  
சொர்கமே என்றாலும் எங்கூரு போலாகுமா என்று நெஞ்சை நிமிர்த்தி சண்டை போட வருபவர்கள் படிக்க வேண்டாம். மற்றவர்களுக்கு தடையில்லை.
படாத பாடு படுவேனோ என்று பயந்து கொண்டே வந்த அளவுக்கு இல்லை. கொஞ்சம் ரசிக்கவே செய்தேன்.
பயத்தின் காரணம்..என்னிடம் ஆதார் இல்லை.
புது பணம் இல்லை. இப்படி பல இல்லைகள். பின் எப்படி கடைத்தேறுவது என்கிற பயம்தான்.
குடியேற்ற துறை அதிகாரிகள் மிகவும் வேகமாகவும் திறமையாகவும் செயல்படுகிறார்கள்.
வருடா வருடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
நிறைய தமிழர் அல்லாதவர்களும் வேலை செய்கிறார்கள். வெளிநாட்டு வெள்ளைக்காரர்களை கண்டு பம்முவதில்லை.
எல்லாம் தெரியும். நில்லுடா ..என்று ஒரு கெத்து தெரிகிறது. இது ஒரு 20 வருடம் முன்பு கம்மி.
சுமார் 15 வருடங்களுக்கு முன் வரும் போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விட்டு வெளியே வர எப்படி என் வாடகை வண்டி கஷ்டப்பட்டதோ அதே நிலைமைதான் இன்றும்!
காரணம்தான் வேறு..அன்று விமானநிலைய விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் கட்டுதல்..இன்று மெட்ரோ ரயில். வருடா வருடம் வந்தாலும் இந்த நுழைவாயிலேயே நம்மை நோக அடிப்பார்கள.
கண்ணா..இது சும்மா trailer தான். மெயின் picture இனிமேதான் என்பது போல் இருக்கிறது.
இந்த முறை நான் ஆட்டோகாரரின் வாயில் விழுந்து புறப்பட வில்லை. நன்றி...உபர்..மற்றும் ஓலா..
மிகக்குறைந்த கட்டணத்தில் சொகுசு பயணம்.
என் வாழ்நாளில் 45 வருடத்தில் கடைசியாக அந்த மாயாஜாலம் நிகழ்ந்தே விட்டது. எந்த அரசாலும், கருணாவோ, எம்.ஜி.ஆரோ ஜெயா வோ செய்ய முடியாததை டெக்னாலஜி சாதித்தது. இந்த ஆட்டோ என்னும் கொள்ளையர்களிடம் இருந்து என்னை போன்று இந்த சென்னை மக்களை காப்பாற்றியது.
சும்மா போய் கல்கண்டு வாங்குவதை போல் சிம் கார்டு வாங்க முடியவில்லை. காரணம் என்னிடம் ஆதார் கார்டு இல்லை. நான் என் பாஸ்போர்டை காட்டியும் வேலைக்கு ஆகவில்லை. ஆதார்ணா..ஆதார்தான்.
ஆபிசர் ஸ்ட்ரிக்ட் டு..ஸ்ட்ரிக்ட் டு...என்று விவேக் மாதிரி எதிரொலித்தார்.
சிவப்பா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல், சிவப்பா இருப்பவன் ஏமாறுவான் என்று என் மூஞ்சியில் எழுதியிருந்தது போலிருக்கு. ஆதார் கார்டுக்கு கட்டணம் என்று எங்கள் இரண்டு பேருக்கு தலா 250 ரூபாய் வாங்கி கொண்டார். சரி..என்று கொடுத்துவிட்டு போட்டோ வெல்லாம் எடுத்த பிறகு பணத்திற்கு ரசீது கேட்டேன். அப்ப பார்த்தாங்க பாருங்க ஒரு பார்வை.. மூஞ்சியில் துப்பாத குறைதான். சண்டை போட்டு என்ன பயன்?? முதலை வாயில் போனது என்னைக்கு திரும்பியிருக்கு?
டிஜிடல் இந்தியா இன்னும் வெகு தொலைவில்தான். நான் இருந்த 60 நாட்களும் எல்லா சில்லறை செலவுகளும் பணம் கொண்டே செலவிட்டேன்.
எங்கும் என்னை கார்டு கொடுங்க என்று வற்புறுத்த வில்லை. நகர அளவில் பெரிய செலவுகள் எல்லாம் மக்கள் இயல்பாக கார்டுகளில் செலவு செய்ய தொடங்கி விட்டனர். அது மளிகை கடையோ (மாதாந்திர ) இல்லை துணி கடையோ கார்டுதான்.
வியாபாரம் வேண்டும் என்பவர்கள் கார்டுக்கு தனியாக சார்ஜ் செய்வதில்லை. பெட்ரோல் போடும் இடம் போன்ற மக்கள் தவிர்க்க முடியாத இடங்களில் தான் இந்த சார்ஜ் எனும் அநியாய கொள்ளை நடக்கிறது. இதை அரசு ஒரே ஒரு சட்டத்தின் மூலம் நிறுத்த முடியும்.
டிஜிடல் இந்தியாவை பற்றி பேசும் போது ஒரு காமெடி கண்டேன். R.K.நகர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பஜக வேட்பாளர் கரு.நாகராஜனே தன் டெபாசிட்டை (Rs.10,000/-) பணமாத்தான் கட்டியதை தொலைகாட்சியில் கண்டேன். சிரிப்பு வந்தது. ஒரு அரசு அமைப்பே டிஜிடல் இந்தியாவிற்கு தயாராகாத போது பொதுமக்கள் எப்படி ????
சென்னையின் சாலைகளை பாராட்ட வேண்டியோ என்னவோ நான் ஒரு முறை ஹைதிராபாத் சென்று வந்தேன். சென்னையை விட அதிகமான வாகனங்களும் மோசமான டிரைவர்களையும் படு மோசமான சாலைகளையும் கொண்டது என்று ஹைதிராபாத் பெருமை கொள்ளலாம்.
பங்களூர் வாகன நெரிசலில் சென்னைக்கும் ஹைதிராபாத்துக்கும் சவால் விடுகிறது.
ஆக மொத்தம் பெருநகரங்கள் நரகங்கள் தான்.
(ஒரு வேளை நான் பார்த்த இடங்கள் அப்படியோ !)
இன்னமும் சென்னையில் ஒருவர் வெறும் 100 ரூபாயில் உண்டு உயிர் வாழ முடிகிறது என்பது வியப்பே ! (இது வீட்டு வாடகை இல்லாமல் !) அம்மா கேண்டின், மற்றும் சில மெஸ்கள் இந்த புண்ணியத்தை தேடி கொள்கின்றன.
ரயில் டிக்கெட்டுக்கு மக்கள் பெரிதும் அலட்டி கொள்வதில்லை. அடிதடிக்கும் போவதில்லை. நன்றி..RAIL APPS. இது பலரின் சிரமத்தை குறைத்து பயணத்தை எளிதாக்குகிறது. TTR க்கு வருமானம் குறைந்திருக்கலாம். ஆனால் இன்னமும் மக்களில் 30 சதவிகிததில் இருக்கும் பரம ஏழைகளுக்கு அவசியமான இரண்டாம் வகுப்புகள் மற்றும் சாதா ரயில்கள் குறைந்துவிட்டது வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் இன்னமும் இந்த ஹைவே கொள்ளயர்கலான தனியார் பேருந்துகள் மற்றும் எதற்குமே உதவாத அரசு பேருந்துகளை நம்பித்தான் இருக்கிறார்கள். பாவம்.
நகர பேருந்துகள் இன்னமும் சாலையில் ஓடுவது ஒரு வியப்பே..அதை இயக்கும் டிரைவர்கள் இன்னமும் பாவம்!!. டிக்கெட் கொடுக்க புத்தம் புதிய டெக்னோலாஜி கொண்ட மெசின். ஆனால் அந்த நடத்துனருக்கு உட்கார உடைந்த சீட். !! துருபிடித்த கம்பிகள் எங்கும் நம்மை கிழித்துவிடுமோ என்கிற உதறலுடன் பயணம். இதில் பயணம் செய்ய ஒரு ஜென் நிலை தேவைப்படுகிறது.
நெடுஞ்சாலை "டோல்" கொள்ளை எப்போதும் போல் உள்ளது. "சார்..இந்த toll காலம் முடிஞ்சு பல வருஷமாச்சு..தெரியுமா" என்று சொல்லி கொண்டே காசு கொடுத்து சென்றார் ஒருவர். அந்த toll செங்கல்பட்டு வெளிப்புற சாலையில் இருக்கிறது.
எதற்கும் கவலைப் படாமல் ஜனங்கள் போத்திசிலும் சரவணா ஸ்டோர் லிம் வாங்கி குவித்து கொண்டே இருக்கின்றனர். நான் நுழைந்த எல்லோர் வீட்டிலும் வேண்டா பொருள்கள் என்று அவர்கள் தூக்கி போட்டவைகளே ஒரு வண்டி கொள்ளும். வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 5 எலக்ட்ரோனிக்ஸ் பொருள்கள். (mobile, tab etc )
இது சிறு நகரங்களிலும் குறைவில்லை. இந்த பழைய பொருள்களின் பாட்டரிகளை எப்படி கையாள போகிறார்கள் என்று பயம் மேலிடுகிறது.
பாடியிலும், போரூரிலும் வாகன நிறுத்துங்களே இன்றி 7 மாடிகள் வணிக மையம் அமைத்து சாலைகளை போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார்கள். அடேங்கப்பா...என்ன கூட்டம் என்று வியந்து மக்கள் குவிகிறார்கள். ஒருவேளை இந்த ஸ்தம்பிக்க வைத்ததே அதற்காக தானோ.!
எல்லோரிடமும் காசு சரளமாக விளையாடுது.!
ஒரு ரூபாய்/50 காசு சில்லைரையை திருப்பி கேட்டால் வெளி உலக ஜந்துவை பார்ப்பது போல் பார்கிறார்கள்.
30 அடி அகலமே கொண்ட எங்கள் தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் விலை 1.75 கோடி!!
சென்ற ஆண்டு மழையில் இந்த குடியிருப்பின் கீழ்தளம் முழுகியது.
மின்சாரம் பல நேரங்களில் ஜெனரேட்டரில் இயங்குகிறது.
இந்த குடியிருப்பில் ஒருவரின் மாத "மெயின்டனஸ்" கட்டணம் 3000 ரூபாய். அப்படியும் குடிக்க தண்ணீரை விலைக்குத்தான் பாட்டிலில் வாங்கி குடிக்கிறார்கள்
இத்தனை இடஞ்சலில் இந்த குடியிருப்பில் வாழ வங்கியில் கடன் வாங்கி மாதம் குறைந்த பட்சம் 75 ஆயிரம் EMI செலுத்துபவரை பார்த்து பரிதாப படவே தோன்றுகிறது.
இந்தியாவில் மக்கள் பணக்காரர்களாகி விட்டார்கள். ஆனால் பணக்காரர்களுக்கான வாழ்வை இன்னும் வாழவில்லை.
PEOPLE EXIST HERE. THEY DON'T LIVE.
In fact, many people don't even know what is difference between existence and living.
என் இளமைகாலம் இத்தனை குழப்பங்கள், மன அழுத்தங்கள் நிறைந்திருக்க வில்லை என்கிற மட்டில் மகிழ்ச்சி.
நான் இன்று வெறும் பார்வையாளனாக...
கடவுளுக்கு நன்றி.
Ravi Sundaram

Thursday, October 05, 2017

தமிழ் இனம் ???

தமிழ் :-
(பெரிய பதிவு – பொறுமையில்லாதவர்கள் தாண்டி போங்கள்)

நான் எழுப்பும் சில கேள்விகள் சில தமிழருக்கு பிடிக்காமல் போகலாம்.
ஆனால் உண்மையில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டே ஆக வேண்டும்.
பல ஊடகங்கள் இந்த அடிப்படை கேள்விகளை தவிர்த்து செல்கின்றன என்பது வருத்தத்திற்குரியது. நாம் கேட்போம்.

இன்றைய சூழலில் ஒரு இனம் என்பதன் வரையறை என்ன?  மொழியா? நிறமா? வசிக்கும் இடமா? வழிபடும் இறையா? வழிபாட்டு முறையா? இல்லை பெருமிதம் கொள்ளும் சாதியா?  எது ஒரு இனத்தை தீர்மானிக்கிறது.

மொழிதான் என்றால் ஆங்கிலம் அல்லது பிரஞ்சு முதல் மொழியாக பேசம் அனைத்து நாட்டு மக்களும் ஆங்கிலேயர்கள் அல்லது பிரெஞ்சுகாரர்கள் ஆகி விடுவார்களா?  அமெரிக்காவிலும், கனடாவிலும், காமருன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பிரஞ்சு முதல் மொழியாக பேசம் மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவர்களும் ஒன்றா? இது போன்ற கேள்விகள் அமேரிக்கா முதல் ஆந்திரா வரை வைக்கலாம்.
இலங்கையில் தமிழில் பேசும் இசுலாமியர் தங்களை தமிழர் என்று முன்னிறுத்துவதில்லை.  

நிறம் அல்லது வசிக்கும் இடம்தான் என்றால் எல்லா வெள்ளை தோல்காரனும் ஐரோப்பியாவில் உண்டு. ஆனால் அனைவரும் ஒன்று இல்லை என்று அவர்களே சொல்கிறார்கள். ஒன்றாக வாழ முடியாது என்று தவிர்க்கின்றனர்.
ஆப்பிரிக்காவில் இருக்கும் அனைத்து கருப்புறரும் ஒரே இனத்தவரா என்றால் அங்கும் இல்லை என்றே சொல்கின்றனர். டுட்சி, ஹூட்டு மற்றும் மசாய்-மாரா என்று பல்வேறு இனக் குழுக்கள் இருக்கின்றன.
1994ம வருடம் வெறும் 100 நாட்களில் சுமார் 10 லட்சம் மக்கள் இரண்டு இன குழுக்களிடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டனர். இதில் மிதவாத ஹூட்டுகள் 2 லட்சம்.  மீதம் டுட்சிக்கள். இத்தகைய படுகொலைகளை வெள்ளையன் கூட கருப்பர்கள் மீது செலுத்தவில்லை.

அடுத்து வழிபடும் இறையா என்றால் அங்கும் சிக்கல். இஸ்லாமியர்கள் எல்லா இஸ்லாமியரையும் தங்கள் இனமாக கொள்வதில்லை. அரபிநாடுகள் எல்லாம் இதற்கு உதாரணங்கள். கிறிஸ்துவ நாடுகள் எல்லாம் இதற்கு இன்னோர் உதாரணங்கள். பௌத்தமும் அப்படித்தான்.
ஆக வணங்கும் இறையும் இனத்தை குறிக்காது..

சாதியா என்றால் நிச்சயமாக இல்லை என்று இன்று நடக்கும் சாதி சண்டையை கண்டாலே விளங்குகிறது.

ஆக இனம் என்று இன்று ஒன்றை முன்னிறுத்த முடியாது. அது வழக்கொழிந்து போன ஒரு அடையாள படுத்தும் முறை.

இனத்தின் அடிப்படையில் இன்று ஒன்று சேருங்கள் என்று சொல்வது மிகவும் அபத்தம். இது ஆகாத காரியம்.

ஆஹா. அப்படியெல்லாம் கிடையாது. தமிழர் என்றொரு இனம் உண்டு. அவர்க்கு தனியே ஒரு காரம், மணம் குணம் உண்டு என்று சொல்வீர்களானால் கீழ கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

1.       ஒரு இந்திய தமிழனோ, மலேசிய தமிழனோ இலங்கையில் ஈழத்தமிழனுக்கு தலைமை ஏற்க முடியுமா?  பலகாலம் ஈழத்தமிழருக்காக பேசிய நெடுமாறன ஐயா கூட போக முடியாது..
2.       அட..அதை விடுங்கள்..ஒரு மலையக தமிழன் யாழ்ப்பாண தமிழனுக்கு தலைமை ஏற்க விடுவார்களா?  அல்லது யாழ்ப்பாண தமிழர்தான் மலையக தமிழருக்கு தலைமை ஏற்க முடியுமா?
ஐரோப்பா வந்து பாருங்கள். திரிகோண மலை தமிழனை ஒரு யாழ்பான தமிழன் மதிப்பதில்லை.
3.       மலேசியாவில் பிறந்து அங்கு அமைச்சரான டத்தோ சாமி வேலு போன்றவர்களை தமிழகம் முதலமைச்சராக ஏற்குமா ?
4.       அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ இரண்டு தமிழர்கள் இணைத்து பேசிக் கொண்டால் முதலில் கேட்கும் கேள்வி...நீங்கள் எந்த ஊர்?
உங்கள் ஊரை சொன்னதுமே ஓரளவு உங்கள் ஜாதியும் கணிக்கப் பட்டுவிடும். இந்திய தமிழன் என்று நீங்கள் சொல்வீர்கள் ஆனால் உடனே இலங்கை தமிழன் ஒரு இடைவேளியுடனே பேசுவார்.
சினிமாவும், வணங்கும் கடவுள்கள் மட்டுமே உங்களையும் அவர்களையும் இணைப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.  இப்பவும் உங்க விஜய் , உங்க ரஜினி உங்க கமல் என்றுதான பேசுவார்கள்.
இந்திய தமிழன் என்றாலே இனமானம் அற்றவன் என்கிற ஒரு கிழ்நோக்கு பார்வை மட்டுமே உண்டு. குறிப்பாக யாழ் தமிழர்கள் இடையே ..
உரிமைக்காக போராடி உயிர் துறக்க துணிந்த வீரர்கள் தாங்கள் என்கிற பெருமிதம் உண்டு அவர்களிடையே....தவறில்லை. அது அவர்களின் அனுபவம்.

இத்தனைக்கும் ஈழ போராட்டத்தில் இந்திய தமிழ் மக்கள் பல் வேறு விதத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கிடையே ஈழத்தமிழர்களுக்கு பேருதவி செய்தவர்கள். உணவு ஊட்டிய கைகளை கடித்த சம்பங்கள் நிறைய உண்டு. (நான் ராஜீவ் கொலையை சொல்லவில்லை!). அப்படியிருந்தும் இன்றும் ஈழத்தமிழர்களுக்கு நம் மக்கள் உதவி செய்ய மறுக்க மாட்டார்கள்.  ஈழத்தில் நிகழ்ந்த சோகத்திற்கு நம் இந்திய தமிழர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்பதில் தவறில்லை. அது மனிதாபிமான அடிப்படையில் நியாயமும் கூட...
நடந்த சோகத்தில கொண்ட கோபத்தில் இந்தியாவை உடைப்போம் என்று ஒரு சிலர் பின்புலம் இருந்து இயக்குவது தவறு. தமிழர் என்கிற எம் இனத்திற்காக ஒரு தனி நாடு வேண்டும் என்று கேட்பது மகா அபத்தம்.

இனமானம் என்று உணர்ச்சி தூண்டி பேசி இன்னொரு தலைமுறையை காவு குடுக்காதீர்கள் என்றே இறைஞ்சுகிறேன்.  

அவரவர் இருக்கும் நாட்டில் நேர்மையாக நியாயமாக நாட்டு பற்றுடன் இருங்கள்.

இதற்காக என்னை தமிழ் துரோகி என்று திட்ட முயலுமுன் என் கேள்விகளை சிந்தியுங்கள்.


நன்றி. 

தமிழ் செய்தி ஊடகங்கள்.

தமிழக தொ(ல்)லை காட்சிகள்:-


இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு வியாதி உண்டு.
அதாவது எவனாவது ஒரு காரியம் செஞ்சு அது கொஞ்சம் பிரபலம் ஆயிட்டுசுன்னா உடனே எல்லோரும் ஒட்டு மொத்தமா அதே போல் பண்ண முயற்சி பண்றது. அது முதலாவது போல் இல்லாமல் கன்றாவியா இருந்தாலும் விடாது செய்வார்கள. மாத்தி யோசிக்கவே மாட்டானுங்க.


90 களில் சரவணபவன் வந்த வெற்றி கண்டவுடன் உடனே கணேஷ் பவன், காமாட்சி பவன் என்று எல்லோரும் அதே போன்ற நீல நிற போர்டு வைத்தது மட்டுமல்லாது "உயர்தர சைவ உணவகம்" என்று போட்டுக்கிட்டு வாழை இலை வைத்து தொழில் பண்ணினார்கள். சாப்பாடு என்னவோ கண்றாவிதான். இதை COPY CAT SYNDROME என்று சொல்வார்கள்.


இதே கூத்துதான் இந்த தொலைகாட்சிகளிலும் !!
அரட்டை அரங்கம் என்று விசு செய்தாரா? விடாதே!
அதே போல் இன்னொரு கூட்டத்தை கூட்டி இன்னும் அபத்த களஞ்சியமாக பேசி கைதட்டல் வாங்க பாரு.
அது பாஷ்கரராஜா இருந்தாலும் சரி பாக்கியராஜாக இருந்தாலும் சரி..இல்லை நம்ம தாடிக்காரராக இருந்தாலும் சரி..விடாதே..இதுல லியோனி மாதிரி பைத்தியங்கள் பாட்டு வேறு பாடி கடுப்பேத்துவார்கள். பண்டிகை திருநாள் வந்தா போதும் இவனுங்க தொல்லை தாங்காது.


இப்ப செய்தி தொலைகாட்சிளின் கூத்து இன்னும் அதிகம். இவர்கள் தினம் ஒரு நாலு பேரை கூட்டி வைச்சுக்கிட்டு பண்ற கொடுமைய எங்க சொல்ல?
ஆயுத எழுத்து, நேர்பட பேசு, வியுகம்  என்று பல கூத்துகள். இதில் தினமும் ஒரு மொக்கை, குடிகாரன் என்று எல்லோரையும் கூப்பிட்டு நேர்காணல் வேறு. கேள்விக்கு என்ன பதிலாம்.? நாலு பேர் பார்க்கும் போது “பப்ரபா” என்று உட்காருகிறோமே என்று கூட தெரியாமல் வாயில் வந்ததை உளரும் இந்த தற்குறியை எல்லாம் பேட்டி எடுத்து அவனுக்கு ஒரு பிரபலம் உண்டாக்கி தருகிறோமே என்று கூட புரியாது முட்டாள் கூட்டம். அத்தனை விளம்பர வெறியா? TRP RATING அத்தனை முக்கியமா?  அட பக்கிகளே...இது உங்கள் தரத்தை கீழே இழுத்து செல்லும் என்று தெரியாதா?

அந்தி சாய்ந்தால் கை கால் அரித்து உதறல் எடுக்கும் குடிகாரன்கள் போல் ஆகிவிட்டனர் இந்த தொலைகாட்சியினர்?  எவனாவது நாலு பேரை கொண்டு வந்து உட்கார வைத்து “அம்மா..இட்லி சாப்டாங்களா ? இல்லையா? “ என்று பரபரன்னு ஒடறாமாதிரி வேஷம் கட்றாங்க.  அதிமுக கூட்டம்..ஆவடி குமார், சரஸ்வதி, வளர்மதி அல்லது இன்னும் பெயர் தெரியாத கூச்சல் போடும் கூட்டம். திமுக வில் இப்போது சில புதுமுகங்கள் இறக்குராங்க. இவங்க தங்கள் கட்சியின் சரித்திரமே தெரியாமல் பேசுவாங்க!
காங்கிரசில் பேச கூட ஆள் கிடையாது. இல்லைன்னா விஜயதாரிணி மாதிரி ஆளெல்லாம் வருமா?  இருப்பதிலேயே பா.ஜ.க தான் காதை கிழிக்கிறாங்க.
ஏய்யா!  கத்தறிங்க? எதிரே கேள்வி கேட்பவன் ஏற்கனவே உங்களை வெறுப்பேத்துவது என்று முடிவு பண்ணித்தான் கூப்பிடறான். பின்ன ஏன் வந்து கத்தி கடுப்பெத்தறிங்க? என்ன கேட்டா...நீங்க பேசாமல் இருந்தாலே இவனுங்க பண்ற கூத்தில் நாலு ஒட்டு உங்களுக்கு கூட கிடைக்கும். போய் கட்சியை அடிப்படை அளவில் வளர்க்க பாருங்கள்.


கூத்தில் கோமாளிகள் மாதிரி சிறந்த பத்திரிக்கையாளர்கள் என்று சில மொன்னைகள் வேறு வந்து குட்டையை குழப்புவார்கள். உண்மையில் இந்த பத்திரிக்கைகார்கள்தான் நம்மை படுகுழியில் தள்ளியவர்கள். எதை மக்களுக்கு சொல்லவேண்டும். எதை சொல்லக்கூடாது என்று இவர்கள் முடிவு செய்வார்களாம். ஜெயா உயிருடன் இருந்தவரை (அப்போலோவில் 75 நாள் இருந்தது உட்பட) நவத்துவாரங்க்களை அடைத்து கொண்டு இல்லையேல் “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி” என்று கேவலமாக எழுதி கொண்டிருந்தவர்கள்தான் இவர்கள்.

உண்மையில் மணிக்கொரு “பிரேக்கிங் நியுசோ” தினம் ஒரு பேட்டியோ, பொழுதுக்கு ஒரு விவாதமோ தேவையில்லை. வாரம் ஒரு முறை வரும் போதுதான் அதற்கு மதிப்பு கூடுதல். ஆளோ, பிரச்சனையோ சரியாக பின்புல ஆராய்ச்சி செய்து முழு விவரங்களுடன் எதிர் கொள்ளுங்கள். உங்களுக்கும் மரியாதை கிடைக்கும்.  விஜய் சிறந்த நடிகர் இல்லையா என்பது போன்ற மொண்ணை கேள்விகளை கேட்க மாட்டிர்கள்.

உதாரணத்துக்கு தினகரனை பேட்டி எடுக்கும் போது...அவர் என்ன படித்தார்? அவரது குடும்பத்திற்கு இத்தனை வருடத்தில் எப்படி இத்தனை சொத்துகள் வந்தது என்று ஒரு லிஸ்ட் தயார் பண்ணி கேட்க ஏன் தயங்குகிறீர்கள்? savukku தளத்தில் விவரம் ரெடியா இருக்கு! சித்தி ஜெயிலில் இருக்காங்களே..அவிங்க செய்த குற்றம் நியாயமா? உச்ச நீதி மன்றம் வரை சென்றீர்களே இது நியாயமா என்று ஏன் கேட்கவில்லை?  உதயநிதியை கூப்பிட்டு நீங்கள் செய்யும் தொழிலுக்கு முதலீடு ஏது என்று ஏன் கேட்பதில்லை?  ஸ்டாலினை அல்லது கனிமொழியை கூப்பிட்டு உங்கள் குடும்ப தொழில் எது உங்களுக்கு இத்தனை செல்வத்தை கொடுத்தது என்று ஏன் கேட்பதில்லை? அழகிரியை இன்னமும் நிறைய கேட்கலாம்? ஏன் இதையெல்லாம் செய்யவில்லை?

இதையெல்லாம் செய்வீர்கள் என்று நான் நம்பவில்லை. ஏன் என்றால் ஒவ்வொரு செய்தி தொலைக்காட்சியும் மதரீதியாகவோ, ஜாதி ரீதியாகவோ கட்சி ரீதியாகவோ நடத்தப்படுகிறது.

இதுல நடுவாம்! நிலையாம்!

துணிமணி, தங்கநகை, TMT விளம்பரங்களே உங்களு தேவை.
உண்மை அல்ல.!


கமல்ஹாசன்

கமலஹாசன் :-


இவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. இனி இவரை இவரது நிலைப்பாட்டை கேள்வி கேட்கலாம்.


இவரது இன்றைய ஒற்றை கொள்கை ..ஊழல் ஒழிப்பு. இதில் எல்லோருக்கும் பெரிய மாற்று கருத்து இருக்காது. லஞ்சம் வாங்குபவர்களை தவிர..!!


மற்றபடி இவரது் செயல் திட்டங்களில் பிரச்சனைகளில் இவரது நிலைப்பாட்டை யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை.


யாரும் சரியாக ஆட்சி செய்யவில்லை என்பதனால் நானும் முதல்வராவேன் என்று இவர் உரிமை கோர வருகிறார். இதில் பெரிய தவறு இல்லை. இபிஸ் மற்றும் ஒபிஸ் ஆகியோர் யாருக்கு தொண்டு செய்து முதல்வர்கள் ஆனார்கள்?.

 ஸ்டாலின், அன்புமணி சீமான் போன்றோருக்கு இவர் பெரிய இடைஞ்சல். எந்த கட்சியும் சாராமல் இருக்கும் ஒரு 30 சதவிகித வாக்குகளை இவர் குறி வைக்கலாம். அது அடுத்தவருக்கு பெரும் பாதிப்பைதானே ஏற்படுத்தும் ?

கமலின் வருகை பற்றி தேசிய கட்சிகள் எதிர்வினையாற்ற கூட முடியாமல் இருட்டில் காரின் விளக்கு வெளிச்சத்தில் செய்வதறியாது நடுசாலையில் முழித்து கொண்டு உறைந்து போய் நிற்கும் முயலை போல் நிற்கின்றன.

பலன் என்ன என்று எல்லோருக்கும் தெரியும் ?  J
சில தீவிர பா.ஜ.க.வினர் இப்போதே கமலை எள்ளத் தொடங்கிவிட்டனர்.
பலன் என்னவோ பூஜ்யம் தான்!  எப்படியும் சட்னிதான். 


இவரின் "நிறம்" என்ன என்று அறிய முற்படுவதில்தான் இன்று பலர் யோசிக்கின்றனர்.

இவர் கருப்பு சட்டைகாரரா ?
இல்லை காவி சட்டை காராரா?
இல்லை வெள்ளை சட்டைகாரரா ?
இல்லை லுங்கி கட்டி வருவாரா ?


இப்படி இவரை வகைப்படுத்த பிரம்ம பிரயத்தனம் நடக்கிறது. இந்த குழப்பத்தை போக்க கமல் பேச்சு உதவவில்லை. காரணம் பேச்சு எளிமையாக இல்லை

ரஜினியிடம் வெறும் ஒரு பளபளப்பான புகழ் வெளிச்சம் மட்டுமே இருக்கும்.
கமலிடம் எப்போதும் ஒரு புத்திசாலித்தனம் கலந்த புகழ் இருக்கும்.இவரது ரசிகர்களும் தங்களின் நட்சத்திரம் ஒரு புத்திசாலி என்று பெருமை கொள்வார்கள்.

கமலின் இன்றைய அரசியல் எதிரிகளுக்கு இந்த புத்திசாலித்தனத்தின் மீது ஒரு பயம் இருக்கிறது.
“தெர்மோகோல்” மற்றும் “சோப்புநுரை” அளவுக்கு மூளை கொண்ட மந்தி(ரி) களை கொண்ட அதிமுக அரசு இந்த விருமாண்டி காளையை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை. கன்னாபின்னா என்று பேசுகிறது.

முதலில் இவர் சினிமாக்காரர். இவர் பேசக்கூடாது என்றது. ஜெயா என்ன சமுக சேவகியா என்றவுடன் அடங்கியது.
அடுத்து இவரது குடும்ப வாழ்க்கை சரியில்லை என்றது. ஜெயா முதல் செங்கோட்டையன் வரை இவிங்க குடும்ப வாழ்க்கை வாயை அடைக்கிறது.
இப்படி எந்த பக்கம் போனாலும் கேட்டை போட்டா பயபுள்ளக என்ன பண்ணும். ? முழிக்குதுங்க.

இதெல்லாம் தெரிந்துதான் திமுக இப்படியெல்லாம் மோதவில்லை. ஏன்னா...இவிங்க லட்சணம் நாடறியும். அதனால் அவர்கள் வழக்கப்படி எடுத்தவுடன் தமிழர் முறைப்படி "இடுப்புக்கு கீழே" ( தாக்க தொடங்குகின்றனர்.

கமல் பார்ப்பனர் ..
அஹா. அஹா. என்ன கண்டு பிடிப்பு.?
கமல் எந்த அளவு பார்ப்பனர் என்றால் ஜெயா எந்த அளவுக்கு பார்ப்பனரோ அந்த அளவுக்கு.!!!  இன்னும் சொல்லப்போனால் இவர் அதற்கும் வெகு தூரம்.

பிராமண சமுகத்தை விட்டு கமல் வெளியே வெகு காலம் முன்பே வெகு தூரம் வந்துவிட்டார். இவர் எங்களவர் என்று அவர்கள் சொல்லிக் கொள்ளலாம். ஜெயாவுக்கு அப்படித்தான் சிலர் சிலகாலம் சொல்லி கொண்டனர். ஆனால் உண்மையில் கமல் “நம்மவர்” ஆகி வெகு காலம் ஆகிவிட்டது. நம்பாதது உங்கள் இஷ்டம்.

இவரது பெற்றோர் சாதிதான் இவருக்கும் என்றால் ..
பெரியார் நாயக்கரே!
காமராஜர் நாடாரே !
அண்ணா முதலியாரே!
ஜெயா அய்யங்காரே!

கமலை ஜாதி பாட்டிலில் அடைக்க முயலாதீர்கள். இந்த பூதம் அங்கு அடங்காது. அந்த களத்தில் அவரை வீழ்த்த முடியாது.

கொள்கைகளிலும் செயல்பாட்டிலும் இவரை கருத்தியலால் மோதுங்கள்.
வெல்ல வாய்ப்புகள் அதிகம்.
இப்போதுதான் ஒரு புத்திசாலியை களத்தில் சந்திக்க போகிறீர்கள்.
ஆனால் அதற்கு உங்களிடம் சரக்கு இருக்க வேண்டும்.

இவர் நல்லவரா! கெட்டவரா.....! .....தெரியாது. 

ஆனால் முட்டாள் இல்லை.

எனவே ஆட்டம் சூடு பிடிக்கிறது.! 

#KAMAL_HASSAN