Wednesday, March 12, 2008
நானும் சுஜாதாவும்...
தலைப்பு கொஞ்சம் இளமையாக இருக்கிறதா..
ஆனால் விஷயம் அத்தனை கிளுகிளுப்பானதல்ல.
நேர்மாறானது.
இது சுஜாதா என்கிற என் அபிமான எழுத்தாளரைப் பற்றியது.
இவர் சமிபத்தில் 10 நாட்களுக்கு முன் சென்னையில் இறந்து விட்டார்.
இந்த செய்தி எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
இருக்கிறது என்று சொல்வதின் காரணம் நான் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன்.
ஓரு எழுத்தாளனின் மறைவு நம்மை இப்படி பாதிக்குமா என்று யோசித்து பார்த்து அதிசயிக்கிறேன்.
இதிலிருந்து அவர் என்னை எந்த அளவுக்கு என்னை பாதித்திருக்கிறார் என்று தெரிகிறது.
அவரது எழுத்துகளை நான் எனது 12 அல்லது 13 வயதினிலிருந்து படித்து வருகிறேன். இன்னும் சொல்லப் போனால் ஒரு காலத்தில் வெறி கொண்டவன் போல அவரது கதை வந்த வார இதழ்களை படிப்பதற்காக அந்த இதழ்களை வாங்கும் அறிந்தவர் தெரிந்தவர் வீட்டிற்கு அழையா விருந்தாளியாகப் போய் படித்தவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன். அந்த காலங்களில் எனது வீட்டில் வாரப் பத்திரிக்கையெல்லாம் வாங்க் மாட்டார்கள். வேறு ஒன்றுமில்லை. காசு கிடையாது. அவ்வளவுதான்.
நிர்வாண நகரம், கணஷ் வசந்த, நைலான் கயிறு, சொர்கத்தீவு, என் இனிய இயந்திரா.. மீண்டும் ஜினோ(அய்யோ அந்த செல்ல நாய்குட்டி!) கரையெல்லாம் செண்பகப் பூ..சொல்லிக்கொண்டே போகலாம்.
நானும் என் நண்பன் கண்ணனும் இவரது கதைகளை அதன் புதுமையைப்பற்றி பல நாடகள் பல மாலைகள் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம். அந்த நாட்களில் எனக்கு தெரிந்து படித்த இளைஞ்சர்களிடையே சுஜாதா கதைகளைப் படிப்பவன் /ள் என்று கூறிக் கொள்வது ஒரு பெருமையாகவும் பலசமயங்களில் பேஷனாகவும் இருந்தது.
அவரை நான் ஒரு முறை சந்தித்தேன்.
நேற்று நிகழ்ந்தது போல் பசுமையாக இருக்கிறது.
அது 1980 என்று நினைக்கிறேன். நான் முதன் முதல்லாய் வேலை கிடைத்து டெல்லி வந்திருந்தேன். அந்த கால வழக்கம் போல கரோல்பாகில் கான்பூர் மெஸ்ஸில் (இந்த மெஸ்ஸைப் பற்றிகூட சார் எழுதியிருக்கிறார்) வாசம்.
ஒருநாள் மாலை மெஸ்ஸில் தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எதிரே ஒருவர் வந்து உட்கார்ந்தார். என் கண்களையே நம்ப முடியவில்லை. நம்ம சார். கட்டையான மீசை..பெரிய கட்டம் போட்ட சட்டை..வழக்கம் போல ஒல்லியா இருந்தார். அவரது போட்டோவை தினமனிக்கதிரில் பார்த்திருக்கேன். எனவே உடனே அடையாளம் கண்டு கொண்டேன்.
அவர் காபி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தார். நான் என் தோசையை முடித்துவிட்டேன். பாவம் . அவ்ருக்கு இன்னும் காபி வந்த பாடில்லை. மீண்டும் மீண்டும் யார் யாரோ வந்து என்ன வேண்டும் என்று கேட்டார்களே தவிர காபி வந்த பாடில்லை. மனுஷன் கொஞ்சம் கூட கோபப்படவில்லையே. எனக்கு இதை பார்த்து கொஞம் ஆச்சரியமாகக்கூட இருந்தது. நானும் அவருடன் பேசுவதற்காக காத்திருந்தேன். அவர் அதை உணர்ந்திருக்க வேண்டும்.
எல்லாம் முடிந்து வெளியே வந்து பக்கத்திலிருந்த கடையில் ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்தோம். அவர் அந்த நாட்களில் சிகரெட் பிடிப்பார். வழக்கம் போல ஒரு சாதாரண பாமர வாசகனாக இல்லாமல் பேச முயற்ச்சித்தேன். பொறுமையாக பேசினார்.
அவரது கதையான "காயித்திரி" திரைப் படமாக வந்த நேரம் அது. மறைந்த நடிகர் ஜெயசங்கர் லாயர் கணேஷாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் வசந்தாக திரு. தேங்காய் சீனிவாசன். (கேட்கவே ..கொடுமையா இருக்குல்ல..) நாங்களெல்லாம் இதுக்காகவே அந்த படத்தைப் பற்றி பார்க்காமலேயே மோசமான விமர்சனம் செய்தோம். அப்போதெல்லாம் எங்களுக்கு திரைப் பட தொழிலைப் பற்றி ஒன்றும் தெரியாது. இப்ப மட்டும் தெரியுமான்னு கேட்காதீங்க..
இந்த படத்தைப் பற்றி வெகு ஆவேசமாய் சாரிடம் விவாதித்தேன். 19வயது இளைஞனின் கேள்விகளுக்கெல்லாம் நடுத்தெருவில் பொறுமையாய் பதிலளித்தார். அவரது கதையை அந்த காலத்தில் திரைப் படத்துறையினர் எவ்வாறு அன்றய கமர்ஷியல் காரணங்களுக்காக சிதைக்க முயன்றனர். அதை ஏன் அவரால் தடுக்க முடியவில்லை. மேலும் அவருக்கும் தயாறிப்பாளர் பஞ்சு அருணாசலத்திற்கும் இருந்த நட்ப்பைப் பற்றி இப்படி பல விஷயங்கள் பேசினார்.
கடைசியில் " சார் ..இதே போல துப்பறியும் கதைகளாய் எத்தனை வருடம் எழுதிக் கொண்டிருப்பீர்கள்" என்று கேட்டேன். அதற்கு சொன்னார் "இல்லை இல்லை..இப்ப அதானாலத்தான் வேற மாதிரி கதை எழுதியிருக்கேன். இந்த வாரம் குங்குமம் வந்ததும் பாருங்க..அதுல 5 வாரா தொடர்கதைன்னு ஒரு கான்செப்ட்.. நல்லா இருக்கும். கதை பேரு..".
அவர் முடிக்கவில்லை.. நான் முந்திகொண்டேன். " காகிதச் சங்கிலிகள்".
நான் தான் சாரைப் பற்றி ஒவ்வொரு அறிவிப்பையும் கவனமாக பார்ப்பவனாயிற்றே..
அந்த கதையில் அவர் அதுவரை எழுதாத விதத்தில் மனித உறவுகளை அலசியிருந்தார். அபாரமான கதை. அதற்கு பிறகு அவர் பலவிதங்களில் கதைகள் எழுதி என்னை அசத்தினார்.
எனக்கு தெரிந்து ஒரு எழுத்தாளர் எழுதப் போகும் கதைக்கு மிகப் பெரிய கட் அவுட் ( அதுவும் அண்ணாசாலையில்- கதை.." கனவுத் தொழிற்ச்சாலை"-) வைக்கப் பட்டது இந்தியாவிலேயே இவருக்குத்தான் இருக்கும். அந்தத் தொடர் ஆனந்த விகடனில் வந்தது.
ஒரு சினிமா விளம்பரம் போல் காட்சிகள் சித்தரிக்கப் பட்டு...விரைவில் வருகிறது என்று விளம்பரம்.. அபாரம். அவர் கதை எழுதுவது செய்தியாகி பின் அதற்கு வரும் விளம்பரங்களே செய்தியானது விந்தையிலும் விந்தை.
இன்று வரை அந்த உயரத்தை எவரும் எட்டவில்லை.
அவரை மீண்டும் தொடர்பு கொள்ள பல முறை முயன்றேன். அவர் சென்னை வந்த நாட்களில் நான் வெளிநாடு சென்று விட்டேன். காலங்களும் ஓடிவிட்டது.
அவர் பெஙகளுரைப் பற்றி எழுதியதைப் போல வேறு ஒருவர் எழுதியிருப்பாரா என்று சந்தேகம். உண்மையில் சொன்னால் அவரது கதைகளில் பெங்களுரை படித்து படித்து நான் முதன் முறையாக பெங்களுர் சென்ற போது எனக்கு ஏனோ ஒரு புது ஊருக்கு வந்ததைப் போலவே இல்லை. எல்லா இடங்களும் ஏற்கனவே பார்த்தது போல ஒரு உணர்வு. அந்த அளவுக்கு அவர் பெங்களுரை விவரித்திருந்தார். ஆபூர்வமான எழுத்தாள்மை...
அவர் தனது தந்தை உடல் நலமில்லாமல் இருந்த போது எழுதியது இப்போது
நினைவிற்கு வருகிறது. அவர் வாரா வாரம் பெங்களுரிலிருந்து சேலத்திற்கு ண்.ஸ். பஸ் சர்வீஸில் வந்து போனது. அப்பொழுது அவரது உணர்வுகள். கண்ணில் கண்ணீரை வரவழைத்த எழுத்து.
இன்றும் என் கண்ணோரம் கண்ணீர்த்துளிகள்..
Subscribe to:
Posts (Atom)