இன்று மனது மிகவும் சோர்ந்திருக்கிறது. காரணம் இன்று காலை டியுப் தமிழில் ஒரு விடியோ பார்த்தேன். அதில் போரில் கொல்லப்பட்ட தமிழ்விடுதலை பெண் புலிகளின் சடலங்களை சிங்கள ராணுவம் கையாளும் படம்.
மிகவும் கொடுமை.
எத்தனை இளைய பெண்கள் இவர்கள்? இவர்களுக்கு கனவுகள் கிடையாதா?
மனம் மிகவும் கனத்து போனது.
மரணம் சோகம்தான். எல்லோருக்கும் ஏற்படுவதுதான்.
அந்த மரணம் யார் மூலம் எப்படி வருகிறது அது எப்படி கையாளப்படுகிறது என்பது ஓரளவுக்கு நாம் வாழும் வாழ்க்கையை சார்ந்திருக்கிறது.
அது மேலும் நாம் வாழும் சமுதாய்த்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது.
இந்த இளம் பெண்களின் சடலங்களை ஏதோ இறந்த நாயை இழுத்து போடுவது போல போட்டது மிகவும் கொடுமை.
இந்த கொடுமையின் தாக்கத்தை வார்த்தைகளில் என்னால் கொண்டுவர முடியவில்லை.
ஏன் இந்த அவலம்.?
ஒரு நாட்டின் அல்லது இனத்தின் கலாசாரம் அவர்கள் வாழ்வை கையாளும் விதத்தில் எப்படி பிரதிபலிக்கிறதோ அதே போல் அவர்கள் சாவை கையாளும் விதத்திலும் பிரதிபலிக்கிறது.
சிங்கள இனத்தின் கலாசாரம் இதுதானா!
போரில் வெல்வது தோற்பது வேறு. இந்த பெண் வீராங்கனைகள் (அவர்களை பொறுத்தவரை அதுதான் நிஜம்!) வீரமாக போராடித்தானே செத்தார்கள்?
பின் ஒரு வீராங்கனைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ஏன் இவர்களுக்கு அளிக்கவில்லை?
வீரம் தன்னிடம் இருந்தாலும் மற்றவரிடம் இருந்தாலும் பாராட்டுவதுதான் உண்மையான வீரனுக்கு அழகு என்று படித்திருக்கிறேன்.
உண்மையான சிறந்த கலாசாரம் மிக்க நாட்டில் சாலையில் அடிபட்ட ஒரு நாயின் பிணத்தைக் கூட மிகவும் கெளவுரவமாக கையாளவார்கள்.
சிங்களரின் நாகரிகம் இதுதானா?
இறந்த அந்த பெண்களின் உடலில் இருக்கும் உடைகளை களைந்து என்ன கண்டார்கள்? ஒருவேளை ஆணா பெண்ணா என்று பார்த்தார்களா.?
எதற்கு கணக்கெடுக்கவா? சரி எடுத்தீர்கள். ஆனால் அதை ஒரு மருத்துவரை கொண்டு ஒரு நாகரிமான இடத்தில் மறைவாக செய்யமாட்டீர்களா? பிறகு அந்த உடலை நாகரீகமாக மூடி அனுப்ப மாட்டீர்களா? இப்படியா!
ஒரு ராணுவம் எப்படி இயங்குகிறது என்பது அந்த நாட்டின் "மனோ நிலையை"
வெளிக் காட்டுகிறது என்பார்கள்.
அப்படி பார்த்தால் இந்த ராணுவத்தினரின் நடவடிக்கைகளை கொண்டு சிங்கள நாட்டின் மனோ நிலையை ஊகிக்க முடிகிறது.
ஹிட்லரின் ஆட்சியில் யூதர்களை அந்த ராணுவம் கையாண்ட விதம்தான் எனக்கு ஞாபகம் வந்தது.
ஹிட்லரின் ஆட்சி காலம் சுமார் 10 ஆண்டுகள் நடந்தது. அப்போது அவரும் தான் யாராலும் வீழ்த்தப் பட வாய்ப்பில்லை என்றே நம்பினார். ஆனாலும் அவர் வீழ்த்தப்பட்டார்.
ராஜபக்க்ஷே சரித்திரத்தை படிக்க வேண்டும். இவர் இலங்கையை அழைத்துச் செல்லும் பாதை ஹிட்லர் ஜெர்மனியை அழைத்து செல்லும் அதே பாதைதான்.
இது பேச்சு வார்த்தைக்களுக்கு தயாரில்லாத ஒரு முரட்டு கொலைகார கூட்டமாக தெரிகிறது. ராணுவத்திற்கும் கூலிப்படைக்கும் வித்தியாசம் காண சிங்கள நாடு தவறிவிட்டது. தனது ராணுவத்தை கூலிப்படையாகத்தான் ஆட்சியாளர்கள் நினைக்கிறனர் என்று தெரிகிறது.
இந்த நிகழ்வுகள் மற்றும் காட்சிகள் தமிழனின் (முக்கியமாக ஈழத்தமிழன்) மனதில் தீராத வலியையும் வேதனையையும் உண்டாக்கியுள்ளது. இது மறக்கப் படும் என்பது வெறும் கனவு. தமிழ் இனத்தின் மீது இவர்கள் எத்தனை வன்மம் கொண்டுள்ளனர் என்பது இந்த படஙளின் மூலமாக தெரிகிறது.
சிங்கள சமுதாயம் விழித்துக் கொண்டு இந்த அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் ராஜபக்க்ஷ் போன்ற அரசியல்வாதிகளிடமிருந்து தன்னை மீட்டு கொள்ளாவிட்டால் வெகுவிரைவில் இவர்கள் உலகப் பார்வையில் தனிமைப் படுத்தப்படுவார்கள். மேலும் இவர்கள் இதைவிட படுபயங்கரமான வன்முறைகளுக்கு ஆளாவது நிச்சயம். அந்த வன்முறை மற்றவர்களிடமிருந்து வந்தாலும் வராவிட்டாலும், கட்டுப்பாடில்லாத சொந்த ராணுவத்தினாலேயே வந்து சேரும்.
இது ஜோசியமில்லை. பல ஆப்பிரிக்க நாடுகளை பாருங்கள். கட்டுபாடில்லாத ராணுவம் என்ன செய்யும் என்பது தெளிவாக புரியும். வெறிபிடித்த கூட்டத்திற்கு சொந்த கூட்டம் மற்ற கூட்டம் என்று வித்தியாசம் கிடையாது.
இங்கு நான் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். நான் புலிகளின் ஆதரவாளன் இல்லை. உண்மையில் அவர்களின் அணுகுமுறை மற்றும் வன்முறையில் எனக்கு உடன்பாடில்லைதான்.
ஆனால் இன்று நான் கண்டது மனித நாகரீகத்திற்கு சவால் விடும் செயலல்லவா? இது போல் எந்த சமுதாயமும் கேவலப்படவோ சீரழியவோ கூடாதல்லவா?
கடைசியாக ஒரு வார்த்தை!
ஒரு நேர்மையான நோக்கத்திற்காக, கொண்ட கொள்கைக்காக, தம் இனம் தலை நிமர்ந்து வாழ, தம் உயிரை பணயம் வைத்து போரிட்ட இந்த இளம் பெண்களின் மனோபலம் வியக்க வைக்கிறது. இவர்களின் மனோ நிலையை வெளியில் இருக்கும் மற்றவர்கள் புரிந்து கொள்வது மிகவும் கடினம். இவர்கள் எடுத்துக் கொண்ட பாதை சரியா இல்லையா என்பது பலாராலும் விவாதிக்கப்படுகிறது. நான் அதற்குள் செல்ல தயாரில்லை.
ஆனால் ஒன்று சிங்களவர் நாகீரிகம் கொண்டவரில்லை என்பது தெளிவாகிறது.