Friday, July 23, 2010

போபால் விபத்தும் பிரிட்டானிய பெட்ரோலியத்தின் விபத்தும்! ‍ பகுதி=2






இந்த கட்டுரைக்கு இரண்டாம் பகுதி எழுத தொடங்குவதற்கு முன்பு வலைத்தளத்தில் இதன் தொடர்பாக ஒரு கட்டுரையைக் கண்டேன்.
அந்த கட்டுரை என் எழுத்தைவிட ஆழமாகவும் நிறைய புள்ளிவிவரங்களுடன்
இருந்தது. அதை அனைவரும் அறிய அதன் வலைத் தொடர்பினை இங்கு
இணைத்துள்ளேன். திரு.முத்துகிருஷ்ணனின் இந்த கட்டுரை மிகவும் யோசிக்கவும், இந்தியா என்று தம் மக்களை மனிதர்களாக மதிக்க கற்றுக் கொள்ளப் போகிறது என்று விசனப்படவும் வைக்கிறது.

வலைத் தொடர்பு: http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=3157


நன்றி: "உயிர்மை" வலைத்தளம்.


இந்த கட்டுரையிலேயே இந்த போபால் விபத்திற்கு பின் நாம் என்ன செய்திருக்க வேண்டும் என்பதை திரு. முத்துக்கிருஷ்ணன் ஒரு கனவு கண்டதைப் போல எழுதியிருக்கிறார்.

இந்த கட்டுரைக்கு பின் நான் இரண்டாம்பாகம் எழுதுவதற்கு ஏதும் இல்லை.

கட்சி பாகுபாடில்லாமல் ஜாதி பாகுபாடில்லாமல் மதபாகுபாடில்லாமல் ஒன்றாகக் கூடி தம் மக்களையே கொள்ளையடித்து சொகுசு காணுவதையே கூட்டாக செய்யும் ஒரு கொலைவெறி கும்பல் அரசியல் என்கிற பெயரால் இந்தியாவைச் சூறையாடவா நாம் சுதந்திரம் பெற்றோம்?

கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் நடிகர் நடிகைகளைப் பற்றி எழுதுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவையாக மாறி கொஞ்சம்கூட சமுதாய நோக்கம், மற்றும் கடமையில்லாத முதுகெலும்பில்லாதப் புழுக்களாக மாறிவிட் ஊடகங்கள் இந்த நாட்டை எங்கு அழைத்துச் செல்கின்றன?



ச‌க‌ ம‌னித‌ரை கொஞ்ச‌ம் கூட‌ ம‌னிதாப‌த்துட‌ன் அணுகாத, சீருடை அணிந்த‌, அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு வால் பிடித்து சாமான்யனின் மீது கொலைவெறியுட‌ன் ச‌ட்ட‌ப்ப‌டி வ‌ன்முறையை க‌ட்ட‌விழ்த்துவிடும் கும்ப‌லாக‌ இருக்கும் காவ‌ல்துறை ந‌ம்மை இன்னும் என்ன‌ செய்ய‌ப்போகிற‌து?

வேலை கிடைத்த‌ நாளிலிருந்து ஓய்வு பெறும்வரை யாரைப் பிடித்தால் எந்த‌ ப‌த‌வி கிடைத்து இன்னும் எவ்வ‌ள‌வு ச‌ம்பாதிக்க‌லாம் என்ப‌தையே நித‌மும் யோசித்து, த‌ம்மிட‌ம் வ‌ரும் ம‌க்க‌ளிட‌ம் இன்னும் எவ்வாறு ல‌ஞ்ச‌ம் வாங்க‌லாம் என்ப‌தை ஒரு விஞ்ஞான‌ முறையில் யோசித்து அம‌ல்ப‌டுத்தும் அர‌சு அதிகாரிக‌ள் எனும் இந்த‌ பேராசைக்கூட்ட‌ம் இன்னும் என்ன‌ செய்ய‌ போகிற‌தோ?

எல்லாம் முடிந்து கொஞ்ச‌ம் நீதி கிடைக்குமா என்று நீதிம‌ன்ற‌த்துக்குச் சென்றால் அங்கு நீதி அல்லது சாதகமான தீர்ப்புக்கு இவ்வ‌ள‌வு விலை
என்று விள‌ம்ப‌ர‌ விலை வைத்து விற்காத‌ குறையாக‌ சீர‌ழிந்து போன‌ நீதித்துறை!

ஆக‌ ஒரு நாடு சிற‌ப்பாக‌ ந‌ட‌க்க, ஒழுங்காக‌ இய‌ங்க‌ வேண்டிய‌ 5 துறைக‌ள் அல்ல‌து 5 தூண்க‌ளான‌ மேற்கூறிய‌ 5 துறைக‌ளும் பேராசையின் பிடியில் சிக்கி அவைக‌ளின் அடிப்ப‌டை க‌ட‌மைக‌ளுக்கு நேர் எதிரான‌ செயல்க‌ளில் ஈடுபடுகின்ற‌ன‌.

எப்ப‌டி ஒரு ம‌னித‌னின் உட‌லில் இருக்கும் அங்க‌ங்க‌ள் அவைக‌ளின் அடிப்ப‌டை செய‌ல்பாட்டிற்கு விரோத‌மாக‌ செய‌ல்ப‌ட்டால் அந்த‌ ம‌னித‌ன் துன்புறுவதும் இற‌ப்ப‌தும் நிச்ச‌ய‌மோ அது போல‌ ஒரு நாட்டின் அழிவிற்கு மேற்க்கூறிய‌ துறைக‌ளின் (Politics, Government, Executive, Judiciary and so called voice of the people which is also known as Press) செய‌ல்பாடுக‌ளே கார‌ண‌மாகும்.

வேர்க‌ளில் வெந்நீரைக் கொட்டி எந்த‌ செடியையும் வ‌ள‌ர்க்க‌ இய‌லாது.
ந‌க‌ர்புற‌த்திலும் கிராம‌புற‌த்திலும் காடுக‌ளில் வாழும் ப‌ழ‌ங்குடிக‌ளையும் அழித்து இவ‌ர்க‌ள் எந்த‌ நாட்டை ஆள‌ப்போகிறார்க‌ள்? செஞ்ச‌ட்டை நோய் ச‌ட்டீஸ்க‌ர் ம‌ற்றும் ம‌த்திய இந்திய‌ காடுக‌ளில் வ‌ள‌ர்ந்திற்கு நாம் சீனாவை குறை சொல்ல‌க்கூடாது. கார‌ண‌ம் இவ‌ர்க‌ளின் ந‌ல‌னை க‌வ‌னிக்காம‌ல் போன‌து ந‌ம‌து த‌வ‌றுதானேய‌ன்றி சீனாவின் த‌வ‌று இல்லையே?

அண்டை மாநில முன்னாள் முதலமைச்சருக்கே தடியடி!

சொந்த நாட்டு முன்னாள் ஜனாதிபதியையே தன் செருப்பை தானே தூக்க வைக்கும் "பாதுகாப்புச் சோதனை" செய்யும் விமானநிலைய அதிகாரி!

அண்டை மாநிலத்திற்கு குடிக்க தண்ணி கொடுக்காதையே ஒரு சாதனையாக கூறும் ஒரு மாநில முதல்வர்!


புற்று நோய் முற்றிவிட்ட‌து!


காப்பாற்றவ‌து க‌ஷ்ட‌ம்

Wednesday, July 14, 2010

போபால் விபத்தும் பிரிட்டிஷ் பெற்றோலியம் விபத்தும்!


1984ம் ஆண்டு போபால் நகரம் ஒரு பெரும் சோகத்தில் துயரத்திற்கு ஆட்பட்டது. அன்று இன்றுள்ளது போல் தொலைத் தொடர்பு வசதிகள் நாடு முழுவதும் பெருகவில்லை. இன்று உள்ளதைப் போன்று செயற்க்கை கோள் சார்ந்த தனியார் தொலைக் காட்சிகளும் இல்லை. எல்லா செய்திகளும் சற்றே கால தாமதமாகத்தான் கொஞ்சம் உண்மையும், நிறைய யூகங்களுடன் கசியத் தொடங்கும். இப்படிப் பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் ஒரு அமெரிக்க கம்பெனியில் நிகழ்ந்த விபத்து இது. இந்த விபத்தில் சுமார் 15,000 மக்கள் உடனடியாகவும் மேலும் சுமார் 15,000 பேர் 3 மாதங்களுக்குள்ளாகவும் இறந்ததாக ஒரு கணக்கு உண்டு. வழக்கப்படி அரசின் கணக்குப் படி சுமார் 3000 பேர் மட்டும் இறந்ததாகக் கூறப்படுகிறது. மற்றப்படி அடுத்த வந்த காலகட்டங்களில் மேலும் சுமார் 5.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் இன்றும் மூன்று தலைமுறைகளாக அங்குள்ள மக்கள் பல்வேறு வகைகளாக பாதிக்கப்பட்டு வருவதாக தன்னார்வுக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

சரி. இதற்கும் சமிபத்தில் (ஏப்ரல் 2010ல்) அமெரிக்க கடற்கரையில் (மெக்ஸிகோ வளைகுடாவில்) நிகழ்ந்த ஒரு எண்ணெய் கிணறு விபத்திற்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் நடந்த விபத்துக்களில் இல்லை.
அதை சம்பந்தப் பட்டவர்கள் கையாண்ட விதத்தில் இருக்கிறது விஷயம்.


இதிலிருந்து நாம் (அரசு, மற்றும் ஊடகங்கள் மற்றும் பொது மக்களாகிய)படிக்க வேண்டியவை நிறைய உண்டு. படிப்போமா இல்லையா என்பது நமது கேள்வி.

முதலில் விபத்தின் தன்மையை ஒப்பிடுவோம்.

போபாலில் நடந்த விபத்தை மெக்சிகோ வளைகுடா விபத்துடன் ஒப்பிட முடியாது. வேண்டுமானால் ஜப்பானில் நடந்த அணுகுண்டு தாக்குதலுடன் இதை ஒப்பிடலாம். காரணம் யூனியன் கார்பைட் விபத்திற்கு முன்பும் பின்பும் உலகில் இது போன்று ஒரு தொழிற்சார்ந்த விபத்து ஏற்பட்டதில்லை. மோசமான் விதிமுறைகள் அல்லது விதிமுறைகளே இல்லாத நாடுகளில் கூட இது போன்ற பெரிய மனித உயிரிழப்பு நேரவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேன்டும்.

பீ. பி. விபத்தில் உயிரிழந்தவர்கள் 11 நபர்கள். போபால் விபத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 30000 (விவாததிற்குரிய) பேர்களுக்க்கு மேல்.

போபாலி உயிரிழந்த கால்நடைகள் சுமார் 5 லட்சத்திற்கும் மேல்.

பீ.பி விபத்து மற்றும் எண்ணெய் கசிவினால் உயிரிழந்ததாக சொல்லப்படும் கடல்வாழ் உயிரனங்கள் சுமார் 20 பறவைகள் மற்றும் 5 ஆமைகள். மீன்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இதுவரை யாரும் அதை கணக்கெடுக்கவில்லை. கணக்கெடுக்க முடியுமா என்றும் தெரியவில்லை.

இப்படி ஒவ்வொரு தளத்திலும் இந்த இரு விபத்துக்களும் மலைக்கும் சிறு கல்லுக்குமான வித்தியாசம் போன்று உள்ளது. ஆனால்....

இது சம்பந்தமாக இந்தியா மற்றும் அமெரிக்கா எடுத்த அல்லது எடுக்கின்ற‌ நிலைப்பாடுகள் மலைக்க வைக்கின்றன.

போபால் விபத்தில் அமெரிக்கா முதலிம் மெளனமே சாதித்தது. இன்றும் அது இந்தியாவில் இந்தியர்களின் கவனக்குறைவால் நடந்த விபத்து என்றே சித்தரிக்கப்படுகிறது.

இது ஒரளவுக்கு உண்மையாக இருந்தாலும் இது சரியா?

இந்த விஷயத்தில் இந்தியாவும் (!) முதலில் மெளனமே சாதித்தாலும் பின்பு மெல்ல பேருக்காக கூவத் தொடங்கியது. இருந்தாலும் இன்று வரை இந்திய அரசாங்கம் இந்த விபத்திற்கு இந்திய தொழிலாளர்களின் அசிரித்தையான நடவடிக்கையே காரணம் என்று நம்புவதாகத்தான் தெரிகிறது. இது ஏறக்குறைய அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடேயாகும்.

அதே அமெரிக்கா இன்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்று பெயர் இருப்பதினாலேயே எண்ணெய் கசிவுக்கு காரணம் அந்த கம்பெனியும் அதை நடத்தும் நிர்வாகியும் (இவர் ஒரு பிரிட்டிஷ்காரர்) பொறுப்பு என்கின்ற விதத்தில் பிரசாரம் செய்கின்றது. உண்மையில் இந்த விபத்து நடந்த இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் மற்றும் துணை குத்தகைக்கார கம்பெனிகள் எல்லாம் (ஹாலி பர்ட்டன் போன்ற)அமெரிக்க கம்பெனிகளே!ஆனால் சாமர்த்தியமாக விபத்து நடந்த காரணத்தை யாரும் கேள்வி கேட்காமல் அதற்கு பின்பு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறைபாடுகளுக்கு தாய் கம்பெனியான பிரிட்டிஷ் பெட்ரோலியமே காரணம் என்று கேட்டு மிரட்டுகின்றது அமெரிக்கா!

சரி!. இதுவும் ஒரு வாததிற்காக நியாயம் என்றே கொள்வோம். ஆனால் இதே வாதத்தை யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கும் ஏன் இந்த அமெரிக்கா செய்யவில்லை. அந்த சமயத்தில் மெளனம் காத்ததேன்?
பிறகு நடக்கும் கூத்தை பாருங்கள்.

விபத்து நடந்து 2 மாததில் எண்ணெய் கசிவு ஏற்ப்பட்டவுடன் அமெரிக்க பத்திரிக்கைகள்,தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் ஒட்டு மொத்தமாக கூக்குரல் இடத்தொடங்குகின்றன.

ஆனால் நமக்கு போபால் விபத்தில் அடிபடும் யூனியன் கார்பைட் ஒரு அமெரிக்க கம்பெனி என்பதே இன்னும் (26 வருடங்களுக்கு பிறகும்) பலருக்கு தெரியாது. இதில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களும் அடக்கம். இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல!. இன்னும் பலருக்கு விபத்து நடந்ததே தெரியாது. நன்றி நமது ஊடகங்கள்.!!

எண்ணெய் கசிவு ஏற்ப்பட்ட 3 மாதத்தில் அமெரிக்க செனட் சபையின் புலன் விசாரணைக்குழுவுக்கு முன்பு பிரிட்டிஷ் பெட்ரோலிய தலைவர் ஆஜர் படுத்தப்பட்டு கேள்வி கேட்கப்பட்டு வறுத்தெடுக்கப்படுகிறார். மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவைக்கப் படுகிறார். இதை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பி மக்களிடம் கொண்டு செல்கின்றன.

ஆனால் போபால் விபத்தில் யூனியன் கார்பைடின் அன்றைய இந்திய தலைவர் கைது செய்யப்பட்டு 3 மணி நேரத்தில் விடுதலை செய்யப்படுகிறார். பின் அரசின் தனி விமானத்தில் டெல்லி சென்று அங்கிருந்து சொந்த நாடான அமெரிக்காவிற்கு தப்பி செல்கிறார்.இதற்கு அன்றைய மத்தியபிரதேச முதன் மந்திரியான அர்ஜுன்சிங்கும், மத்தியில் நரசிம்ம ராவும், ராஜிவ்காந்தியுமே காரணம் என்று இன்று சொல்கின்றனர். இன்றுவரை அந்த அமெரிக்கர் தேடப்படும் குற்றவாளியாகத்தான் இருக்கிறார்.

இந்த அவலத்தை அன்று எந்த பத்திரிக்கையும் எழுதவில்லை. இந்த விஷயம் அவர்களுக்குத் தெரியாது என்று யாரும் சொல்லி இன்று தப்பிக்கலாம். ஆனால் உண்மை வேறானாது. உள்ளூர் மற்றும் தலை நகரை சேர்ந்த அனைத்து பத்திரிக்கைகளுக்கும் தெரிந்த விஷ்யம்தான் இது. என்ன கேவலம் பாருங்கள்?

சரி. இப்போது மிகப்பெரிய சுற்றுப்புற சூழல் விபத்திற்கு பின் (சுமார் 20 பறவைகளின் உயிரழப்பிற்குபின்!) அமெரிக்க அதிபர் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு வேட்டு வைக்கும் வகையில் இடைக்கால நிவாரணமாக
சுமார் 1 பில்லியன் டாலர்கள் (சுமார் 4500 கோடி ரூபாய்கள்) கேட்கிறார். எதற்கு? சுற்றுசூழல் சுத்திகரிப்பதற்கு, மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதற்கு மற்றும் சுற்றுலா துறையின் வீழ்ச்சியனால் பாதிக்கப்பட்டோருக்க்கு இடைக்கால இழப்பீடு வழங்க இந்த நிதி என்கிறார். இது இடைக்கால நிதிதான். முடிவில் சுமார் 20 பில்லியன் டால்ர்கள் (சுமார் ரூ 90,000 கோடி) வரை பிரிட்டிஷ் பெட்ரோலியம் தரவேண்டியிருக்கும் என்று கருத்தப்படுகிறது. இந்த எண்களும் மாறவாய்ப்புண்டு.

ஆனால் போபால் விபத்தில் நடந்த அநியாயத்தை பாருங்கள்.
விபத்து நடந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு மேலும் பலர் உயிர் இழந்ததிற்குப் பிறகு சுமார் ரூ.2500 கோடியை இந்திய அரசிற்கு தருவதற்கு யூனியன் கார்பைட நிறுவனம் ஒத்துக் கொண்டது. (அரசிடம் போன பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி போய் சேர்ந்தது என்பது தனி சோகக்கதை.) இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் அந்த யூனியன் கார்பைடுக்கு இந்தியாவில் எவ்வளவு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருந்தது என்பதாகும். இதை யாராவது கவனித்தார்களா? இல்லை.

என்னுடைய யூகம் அந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு இந்த 2500 கோடிகளை விட அதிகம் என்றே நினைக்கிறேன். உதாரணமாக சென்னை கிண்டியில் (தொழில் பேட்டையில்) இருந்த அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய நிலம் மற்றும் கட்டிடம் எப்படி யாரால் விற்கப்பட்டு இன்று அங்கு மிகப்பெரிய கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனங்களின் அலுவலகமாக மாறியது என்று யாராவது ஆராய்ந்தால் விளங்கும்.
செய்தார்களா நமது அறிவு சார்ந்த ஊடகங்கள்?. இல்லையே!

கேள்வி கேட்டார்களா நமது செஞ்சட்டை தோழர்கள்!? இருந்தால் எம் மக்களுக்கு தெரிவிக்கலாம்.!!
இது போன்று அந்த யுனியன் கார்பைட் நிறுவனத்திற்கு சென்னை, டெல்லி, மும்பை, கல்கொத்தா என்று நாடு முழுவதும் பரந்து விரிந்த சொத்துக்கள் இருந்ததன. அந்த சொத்துக்களை விற்க முனையும் போது இந்த வழக்கு தடையாக இருந்த காரணத்தால் கொஞ்சம் வாய்க்கரிசி (2500 கோடி) போட்டு
கைக் கழுவி விட்டது அந்த கம்பெனி. இதில் யார் யார் லாபம் பார்த்தார்களோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இன்று அந்த யூனியன் கார்பைட் கம்பெனியை உலக அளவில் வாங்கி வியாபாரம் செய்வது "டொவ்" கெமிகல் என்னும் இன்னொரு அமெரிக்க கம்பெனி. இந்த கம்பெனி தனக்கும் போபால் வழக்குக்கும் சம்பந்தமே இல்லை ஆகவே தான் யாருக்கும் நட்ட ஈடு தர இயலாது என்று தெளிவாக சொல்லிவிட்டது. இவர்கள் இப்போது இந்தியாவில் கடை விரித்திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அது வேறு கதை.

சரி நம்ம பிரச்சனைக்கு வருவோம்.
சுமார் 20 பறவைகளும் 2 ஆமைகளும் இறந்தற்கு சுமார் 4500 கோடி என்றால் 30000 மனிதர்களுக்கும் 5,00,000 கால் நடைகளுக்கும் எத்தனை கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று யோசித்து பாருங்கள்.

விபத்து நடந்து 3 மாத்திலேயே இப்படி கூத்தடிக்கும் அமெரிக்கா அன்று ஏன் மெளனம் சாத்தித்தது?

இதற்கெல்லாம் காரணம் நாமே!!

நம்மிடம் உளவியல்ரீதியாகவே பல்வேறு குறைப்பாடு இருப்பதாக எனக்குப் படுகிறது.நாம் நடத்தும் அரசு, நம் ஊடகம், நம் வியாபாரம் நம் தனிப்பட்ட வாழ்க்கை என்று பலவித்ததில் நாம் குறைப்பாடுள்ளவர்களாக இருக்கிறோம் என்பது உண்மை.

இந்த போபால் விபத்தை நாம் அணுகிய விதத்தை பகுதி 2ல் பார்ப்போம்.
.

Saturday, July 10, 2010

பேசும் (கதறும்!!) படம்!





இந்த படத்திற்கு கருத்து விளக்கம் ஆகியவை எழுத தேவையில்லை என்பது என் கருத்து.

ஆயிரம் விஷ்யங்களை ஒரு படத்தில் சொல்லலாம் என்பதன் இன்னொரு சாட்சி! (தமிழ் ஊடகங்கள் கவனிக்க வேண்டும்!)


நன்றி பட்டாப்ட்டிஅவர்களே.!..வலைப்பதிவில் தாங்கள் விவரித்த மொத்த கருத்தும் இதில் அடக்கம் ..






















Thursday, July 08, 2010

சாருவுக்கு ஒரு கடிதம் -


அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,

உங்களின் வலைப்பக்கத்தை தவறாமல் தினம் படித்து இன்புறுகிறேன் என்று பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்க வருவேன்.

இதுபற்றி உங்களுக்கு நான் எழுதும் கடிதம் இது.

முதலில் உங்களின் வலைப்பக்கத்தை படிக்க தொடங்கிய போது ஒரு சுவாரசியம் இருந்தது. ஏதோ ஒரு சொல்ல வருகீறீர்கள். என்ன என்று புரிந்து கொள்ள முயற்ச்சிப்போம் என்று தொடங்கினேன். ஆனால் போக போக (எனக்கு தெரிந்து!) உங்களின் தினப்படி கட்டுரைகளில் ஒரு ஆற்றாமையும் ஒரு அயற்ச்சியும் ஒரு கோபமும் இருப்பது தெளிவாகிற்று. கோபம் என்று நான் கூறியது எல்லா சமுக நோக்கர்களும் கூறும் தற்போதையச் சமூக நிலை குறித்தான தார்மீக கோபம் அல்ல.

உங்களின் பொருளாதார நிலை குறித்த கோபம். உங்களுக்குகான (நீங்கள் நியாயம் என்று நினைக்கும்!) அங்கீகாரம் கிடைக்காதற்கானக் கோபம்! நீங்கள் அடையத்துடிக்கும் உச்சத்திற்கு செல்லுவதற்கான வழி தெரியாத‌ கோபம்!. ("அடப் பாவிகளா" என்பீர்கள்)

உண்மையில் இதைச் சொன்னாலும் நீங்கள் கோபம் கொள்வீர்கள்.
இதைத்தான் சமீபத்தில் சங்கர் என்கிற வாசகர் தெளிவு படுத்தினார். ஆனால் நீங்கள் அதை கேட்பதாக இல்லை.
யோசித்து பாருங்கள்! உங்களின் தற்போதைய வெற்றிக்கோ தோல்விக்கோ இன்னொருவர் காரணமா? நிச்சயமாக இல்லை.

நீங்கள்தான்.!!

"உண்மையை சொல்கிறேன். சத்தியத்தை சொல்கிறேன்" என்று நீங்கள் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வது உங்களது உரிமை. ஆனால் இதனால் யாருக்கு லாபம்?

"உங்கள் எழுத்துக்கள்தான் என் அறிவு விழியை திறந்தன! உங்கள் எழுத்துக்களை படித்தப் பின் தான் எனக்கு இந்த உலகத்தை பார்க்கத் தெரிந்தது!" என்று எழுதும் வாசகர்களின் கடிதங்களைக் கொண்டு உப்பு புளி கூட வாங்க முடியாது என்பது உங்களின் எழுத்துலேயே வெளிச்சம்.

இத்தனைக்கும் இந்த மகானுபாவர்கள் உங்களின் வலைத்தள பக்கத்தை படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை பதித்து தன் பெயர் அதில் வந்தவுடன் அதன் மூலம் மகிழ்வுரும் அன்பர்கள். இப்படி எழுதுபவர்களெல்லாம் உங்களின் புத்தகங்களை வாங்கியிருந்தாலேயே உங்களின் வருமானம் கொஞ்சம் பெருகியிருக்கும். ஆக இவர்களாலும் உங்களுக்கு லாபமில்லை.

தன்னைப் பற்றியே "மிக" அதிகம் புகழ்ந்து கொள்ளும் ஒரே தமிழ் எழுத்தாளர் நீங்களாத்தான் இருப்பீர்கள்.


உங்களின் இசை ரசனை உலகிலேயெ உயர்வானது என்கீறீர்கள்.
உங்களின் சினிமா ரசனை உலகிலேயெ உயர்வானது என்கீறீர்கள். இதற்கு இந்தியாவிலேயே யாரும் இணை கிடையாது என்று சவால் வேறு விடுகீறீர்கள். யாருக்குமே புரியாத பல பெய‌ர்களை சொல்லி அவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று தமிழ்நாட்டில் வாதிட்டு என்ன பயன்?

"பின்நவீனத்துவம்" என்கிறீர்கள். எனக்கு நவீனம் என்றால் "புதிய" என்ற ஒரே அர்த்தம் மட்டும் தெரியும். அது என்ன பின் நவீனத்துவம். "BACK TO THE FUTURE" - போலவா? புரியல சாமி!

இன்று தமிழகம் இருக்கும் நிலையில், செந்தமிழ் நாட்டு மக்கள் பெட்ரோலிய விலை உயர்வையும், காஸ் சிலிண்டர் உயர்வையும் இதனால் வீட்டுப் பொருளாதாரத்தில் ஏற்ப்படும் ஓட்டையைப் பற்றியும் கவலை கொண்டு இருக்கிறார்கள். தினசரி சமுகப் பொருளாதார பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்து கொஞ்சம் வலைப்பக்கம் வந்தால் இப்படி நீங்கள் அவர்களை வறுத்து அவர்களின் அறியாமையை எள்ளி நகையாடிக் கொண்டிருந்தால் எவன் உங்களின் எழுத்துக்களை மேலும் அறிய உங்களின் புத்தகங்களை வாங்குவான்?.

உங்களின் கருத்துப்படி நீங்கள் ஐரோப்பிய மனநிலை கொண்ட ஆனால் போதாத காலத்தினால் (பொல்லாத காலத்தினால்!) தமிழகத்தில் வந்துப் பிறந்துவிட்ட ஒரு மனிதர். இப்படி எத்தனை காலம் சொல்லிக் கொண்டிருக்கப் போகீறீர்கள்? உங்களுக்கு ஐரோப்பா எந்த அளவுக்குத் தெரியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு ஐரோப்பாவை ஒரளவுக்கு தெரியும். 10 ஆண்டுகளாக ஐரோப்பாவில் வாழ்ந்து வருகிறேன்! இந்தியாவில் அல்லது தமிழகத்தில் இருப்போரெல்லாம் ஏங்கி தூக்கு மாட்டிக் கொண்டு தொங்குமளவுக்கு ஐரோப்பா சொர்கமா! என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அதற்காக நான் தமிழகத்தை ராஜா பாடியது போல் (சொர்கமே என்றாலும்!!) சொல்லவில்லை. நிச்சயம் இந்தியா மற்றும் தமிழகம் ஐரோப்பியரிடமிருந்து அல்லது உலகிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஆயிரமிருக்கு. என்னுடைய வலைப்பக்கத்திலேயே அதைப் பற்றி விரிவாக் ஒரளவுக்கு எழுதியிருக்கிறேன்.

இருந்தாலும் உலகமும் நம்மிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகளும் நிறைய உண்டு என்பதையும் அறிய வேண்டும்.

சரி!.. உங்களுக்கு ஐரோப்பா அவ்வளவு விருப்பம் என்றால் நீங்கள் இங்கு குடியேறலாமே! யார் தடுத்தது? ஆனால் ஒன்று! இங்கு உங்களின் தமிழ் எழுத்து விலை போகாது. பிரஞ்சோ! ஸ்பானிஷோ அல்லது ஜெர்மானிய மொழியோதான் கற்று எழுத வேண்டும். அப்படி எழுதினாலும் அவர்களின் கலாசார வேர்களை நீங்கள் கற்க ஒரு ஆயூள் தேவை. ! அப்புறம் எங்க எழுத!!

நீங்கள் பிறந்து, வளர்ந்து, அறிந்த ஒரு (தமிழ்)நாட்டு மக்களையே பெருமளவு கவர முடியாதவர் வேறு மொழி கற்று அங்கு ஜெயிப்பேன் என்பதை உங்களின் யோசனைக்கே விட்டு விடுகிறேன்.


முதலில் உங்களை புரிந்து கொள்ளூங்கள்.

மற்றவர்கள் குறைகளை விவரிக்கும் போது மட்டும் நீதி பேசும் நீங்கள் உங்கள் முறை வரும் போது செளகரியமாக நீதியை மறந்து விடுகிறீர்கள்.

"நீயா நானாவில்" கோபி உங்களை வஞ்சகமாக வரவழைத்து உங்களின் விளக்கங்களை பெறுமளவு சொல்லவே விடாமல் வெறும் மன்னிப்பு மட்டுமே கேட்க வைத்தது எத்துனை குற்றமோ அத்துனை குற்றம் நீங்கள் உங்களுடைய கருத்துக்கு எதிர்கருத்துக்களை சாடும் முறை. உதாரணமாக இந்த வாரத்தில் நீங்கள் ஞாநியைப்பற்றி எழுதியவை.

முன்பு ஞாநி உங்களை குறை சொன்னார் என்று கோபம் கொண்டு காத்திருந்து இன்று அவர் அமெரிக்கா சென்றிருக்கும் சமயத்தில் "பிராமண வாக்கு" அல்லவா என்று அவரது ஜாதியை வெளிப்படுத்தி பாய்ந்தது கேவலம். மேலும் அவருக்கு நல்ல ஸ்பான்சர்கள் வாய்க்கட்டும் என்று கேலி வேறு. தேவையா?

நான் ஞானியின் கைக்கூலி என்று என் மீது பாயாதீர்கள். நான் மேலே சொன்னது ஒரு உதாரணம்தான். ஜெயமோகனை நீங்கள் விவரிக்கும் விதம் இன்னும் மோசம்.

ஒரு சக எழுத்தாளர் மற்றும் கருத்தாளர் மீது இத்தனை காழ்ப்புணர்வு தேவையா? இதுதான் நீங்கள் அறிந்த ஐரோப்பிய பழக்கமா? தனிப்பட்ட முறையில் தாக்குவது எந்த ஐரோப்பிய நாகரீகம்?

ஞாநி தன் எழுத்துக்களில் எப்போதும் தன் சாதியின் அடையாளத்தை திணித்ததில்லை. உண்மையில் அவருக்குத் தன் ஜாதியின் பேரில் அபிமானம் இருக்குமா என்பது கூட சந்தேகமே! அவரது கருத்துக்களுக்கு உடன்படாதவர்களும் அவரை ஒரு ஜாதியின் பெயரால் சீண்ட மாட்டார்கள் (திராவிட இயக்கங்களை தவிர!‍ அது அவர்களின் தனிப்பட்ட ஸ்டைல்!)

நான் படித்தவரை திரு. ஞாநி சாதிச் சகதியைத் தாண்டித்தான் தான் கருத்துக் களைப் பதித்திருக்கிறார்.

அவரை நீங்கள் இப்படி தரம் தாழ்ந்து சீண்டலாமா?

உங்களின் எழுத்துக்களை மற்றவர்கள் மதம் மற்றும் சாதீக் கண்ணாடி கொண்டுப் பார்ப்பது தவறுதானே? அதே தவறை நீங்கள் செய்யலாமா?
உங்களின் மதமோ அல்லது சாதியோ எனக்குத் தெரியாது என்பது வேறு விஷயம். தெரிந்தாலும் எம் போன்று வெறும் கருத்துக்களை மட்டுமே நாடிப் போகின்றவர்கள் எழுதியவரின் சாதி மத அடையாளங்களை சட்டை செய்வதில்லை.


பாரதியின் பாடல்களை எமக்கு படிக்கச் சொல்லிக் கொடுத்த போது அவர் ஒரு பிராமணர் என்று சொல்லிக் கொடுக்கவில்லை. அவர் ஒரு தேசிய கவி என்றே எம் ஆசிரியை சொல்லிக் கொடுத்தார். பின்னாளில்தான் அவரது ஜாதிப் பின்புலம் நாங்கள் தற்செயலாக தெரிந்து கொண்டோம்.

இன்றுவரை எனக்கு பாரதிதாசனின் ஜாதி தெரியாது! தெரியவேண்டியதுமில்லை.
இத்தனைக்கும் சிறுவயதில் பாரதிதாசனின் மகன் எம் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்துல்ரகுமானி கவிதையை படித்து ரசித்த காலங்களில் அவரது மதம் எமது கண்ணுக்கு தெரியவில்லை. இத்தனைக்கும் அவரது பெயரைக்கூட அவர் மாற்றிக் கொண்டு எழுதவில்லை.

இப்படி பேசிக் கொண்டே போகலாம்.
இதற்காக நீங்கள் என்ன மதம் என்று நான் கேட்க தயாராக இல்லை. அது எனக்கு தேவையில்லாத விஷயம்.
இருந்தாலும் நீங்கள் நாசூக்காக ஒரு சக எழுத்தாளரின் சாதியை வெளிப்படுத்தி அல்லது சொல்லி வஞ்சப் புகழ்ச்சி பாடுவது தவறு.

இது போல எத்துணைப் பேரை நீங்கள் பகைத்துக் கொண்டீர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. கோபமும் ஆற்றாமையும் மனிதனை எங்கெல்லாம் கொண்டு செல்கிறது என்று பாருங்கள்.

சுஜாதாவிற்கு பிறகு உங்கள் எழுத்துக்களைத்தான் இளைஞர்கள்/இளைஞிகள் மிகவும் விரும்புவதாக நீங்களாக்க் கூறியுள்ளீர்கள். உங்களின் புத்தகங்களின் விற்பனையைப் பார்த்தால் (உங்களின் கணக்குப் படியே) அந்தக் கூற்றீல் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

சரி.! அந்த சுஜாதா அப்படி ஒரு மகத்தான வெற்றியைப் எப்படி பெற்றார் என்று யோசித்தீர்களா?

அவர் எதற்காகவும் யாருடனும் தன்னை ஒப்பிட்டுக் கொண்டதில்லை.

யாருக்கும் அவர் உபதேசித்ததில்லை.

யாரையும் அவர் ஊடகங்களில் பகிங்கரமாக திட்டியதில்லை. திட்டி எழுதியதில்லை. (எனக்கு அவரை தனிப்பட்ட வகையில் தெரியாது! இருந்தாலும் அவரை தெரிந்தவர்கள் கூட, அவர் தனிப்பட்ட முறையிலும் நல்லவர் என்றே கூறுகின்றனர்)

அவர் தன் மேதாவித்தனைத்தை தானே மெச்சிக் கொண்டதில்லை.
ஒரு முறை தன் எழுத்துக்களை அவரைக் கொண்டே விமர்சிக்கச் சொன்ன போது அவர் அதை ஒரு தர்ம சங்கடமாகவே உணர்ந்து எழுதினார்.

சிலர் அவரை அந்த கால எழுத்தாளரான தேவனுடன் சிலசமயம் ஒப்பிட்ட போது (அவரது ஆரம்ப கால நகைச்சுவை கூடிய துப்பறியும் கதைகளை கொண்டு!) அவர் அதை மறுத்ததுடன் மட்டுமல்லாது பிற்காலத்தில் அதனினும் மாறுப் பட்டே எழுதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

தனக்கு தெரிந்தவற்றை, புரிந்தவற்றை, புதிய விஷயங்களை அழகாக ஒரு கதையின் ஊடாகவோ அல்லது ஒரு கட்டுரையின் ஊடாகவோ அவர் தொடர்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்படி சொல்வதிலும் ஒரு அழகுணர்ச்சியை கையாண்டார்.

அதில் ஒரு காழ்ப்புணர்ச்சி இல்லை. கயமை இல்லை. எதிராளியை வீழ்த்தி கொக்கரிக்கும் ஆணவம் இல்லை.

அவரைப் பின்பற்றுவது அத்துணை எளிதல்ல என்றும் இன்னொருவர் அதுப் போல வர சமிபத்தில் சாத்தியமல்ல என்றும் மனுஷ்யபுத்திரன் கூறுகின்றார்.

அவர் போல இன்னொரு ஐரோப்பிய அல்லது அமெரிக்க எழுத்தாளர் எழுதிப் புகழ் பெற்றிருந்தால் அந்த எழுத்தாளர் மிகச் சாதாரணமாக ஒரு தீவையை சொந்தம் கொண்டாடும் அளவுக்கு செல்வந்தராக இருந்திருப்பார் என்று திரு. மதன் அவர்கள் திரு. சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் சொன்னார். அது உண்மைதான்.

ஆனால் அந்த உண்மை சுஜாதாவிற்கு அவர் உயிருடன் இருந்த போதே தெரியாதா? நிச்சயம் தெரிந்திருக்கும்.
ஆனால் அவர் அதை வெளிக்காட்டிக் கொண்டதேயில்லை. பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்று அவர் பலமுறை மறைமுகமாகக் கூறினார்.

அதுதான் அவரது உயர்நிலைக்கு காரணம்.

மேலும் ஒரு முறை மறுபிறப்பைப் பற்றிய கேள்வியில் மீண்டும் பிறந்தால் தான் இதே தமிழ் எழுத்தாளனாக அதே முதுகு வலியுடன் பிறக்க வேண்டும் என்பதே தன் விருப்பமாகக் கூறினார். கவனியுங்கள்! அவர் அடுத்த பிறவியிலாவது தான் ஒரு ஐரோப்பிய அல்லது அமெரிக்க எழுத்தாளராகப் பிறந்து ஒரு தீவை விலைக்கு வாங்க கேட்கவில்லை.

இப்போது சொல்லுங்கள்! வெற்றியின் வழி தெரிந்ததா?

"நான் எந்த காலத்திலும் சுஜாதாவை ஒரு எழுத்தாளராக மதித்ததில்லை. அவர் ஒரு எழுத்தாளரே இல்லை. அவர் ஒரு கதை சொல்லி.(அது என்ன கருமாந்தரமோ!).அவர் ஒரு இலக்கியவா(வியா)தியே அல்ல! நான் வேறு ரகம். நான் உலக இலக்கியத்தின் ரட்சகன்" என்று நீங்கள் கூறலாம்.

ஆனால் உண்மையில் நீங்கள் அவர் அடைந்த்தைப் போன்று புகழடையவும், அங்கீகரிக்கப்படவும், செல்வம் பெறவுமே (அவர் பெற்றாரா என்று தெரியாது) ஏங்குகிறீர்கள் என்பது நிதர்சனம்.

மேலும் ஒரு விஷயம்.

ஒவ்வொரு மனிதனின் மனவிகாரங்கள் அவரது செயல் அல்லது படைப்புகளில் வெளிவரப் பார்க்கும். அதை சாமர்த்தியமாக ஒதுக்குவதே ஒரு சிறந்த மனிதனின் செயலாகும் என்று படித்திருக்கிறேன்.

"ஒரு 7 வயது பெண் குழ்ந்தையை............போன்று"..என்ன ஒரு மட்டமான உவமானம்!!!. இந்த கருமத்தை மீண்டும் மீண்டும் வேறு எழுதி உங்களின் இயலாமையை கோபத்தை வெளிப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

இன்னொரு முறை " அவரையும் என்னையும் எப்படி ஒப்பிட முடியும்...தனியறையில் யாருடை ........சரியாக வேலை செய்கிறது என்பதை போன்ற‌ விஷயமா" என்பது போன்ற எழுத்துக்கள் உங்களை பொதுவாக பார்வையாளர் மத்தியில் எங்கு நிறுத்தும் என்பது தெரியாதா?

ரஞ்சீதா ராஜசேகருடன் இருந்த நிலை குறித்து விவரிக்கும் போது இன்னும் கண்ணீயம் காக்க வேண்டும். அவர் எதை சுவைத்தார்?அவருக்கு என்ன தண்டனை போன்ற அபத்தங்களை நிறுத்தலாம்.

நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள் என்கிற கோபத்தை விட நீங்கள் தூக்கி நிறுத்திய நபர் உங்களை இப்படி நாலு பேருக்கு பதில் சொல்ல வைத்து விட்டானே என்கிற கோபமே உங்களை இன்னும் இது போன்று அந்த விவகாரத்தில் பேசச் சொல்கிறது.
இதற்கு நீங்கள் இப்போது ஒன்றும் செய்ய இயலாது. ஒரளவுக்கு பேர் தெரிந்த மனிதராக இருப்பவர்கள் தங்களை கவர்ந்த விட்ட ஒரே காரணத்தினால் இன்னொரு தனிமனிதரை தங்களின் எழுத்து அல்லது ஊடகத்தின் மூலமாக் உயர்த்திப் பிடிக்கும் போது இது போன்று விபத்துக்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். காரணம்...to error is human!!

ஆக திரு. சாரு அவர்களே! கொஞ்சம் யோசியுங்கள்.

தொடர்ந்து வலைத்தளத்தில் நீங்கள் படிக்கப் பட வேண்டியவராக இருக்க மற்ற வியாபார பத்திரிக்கைகள் செய்யும் அதே விளம்பர உத்தியான "அதிர்ச்சி" உத்தியை (MATERIAL FOR SHOCK VALUE!) கையாளுவது சில சமயம் எதிர் விளைவுகளையும் உண்டாக்கும்.

56 வயதில் தெருவுக்கு தெரு பப்பு எங்கிருக்கிறது என்று தேடி பின் அதைப் பற்றி எழுதுவது ஒரு டைரிக் குறிப்பாக இருக்கலாம். நிச்சயமாக இலக்கியமா?

வெறும் பெண் ரசிகைகளைப் பற்றி விலாவரியாகக் கூறி உங்களின் இளமையின்(!) ரகசியத்தை எழுதுவதும் ஒரு டைரிக் குறிப்பே. (நிச்சயம் நான் வயத்தெரியவில்லை! ‍ என் இளமை எனக்கு தெரியும்!) யாருக்காக இந்த இளமைத் தோற்றம் என்று தெரியவில்லை! ஒருவேளை தலைமுடிக்கு, மீசைக்கு மை அடிப்பது போன்று இது ஒரு உத்தி என்றே நினைக்கிறேன். முன்பு 70 / 80களில் சில தமிழ் எழுத்தாளர்கள் இந்த உத்தியை உபயோகித்தனர்.
இது எந்த விதத்தில் உங்கள் எழுத்துக்களை பரவலாக்க உதவும் என்று தெரியவில்லை.

திருவல்லிக் கேணி முரளி, தனுஷ் போன்று உங்களின் தீவிர ஆதரவாளர்கள்
சொல்வது போன்று நான் வெறும் சாதாரண வாசகன் தான். எனக்கெல்லாம் பதிலளித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். ஆனால் சிந்தியுங்கள்.

இன்று வரை நீங்கள் எழுதியது மக்களை சென்றடையவில்லை என்றால் அதற்கு உங்கள் எழுத்தும் ஒரு காரணமாக இருக்கலாம். யாருக்கு தெரியும்?

56 வயதில், தொடர்ந்து ஒரு 30 வருடம் ஒரு மொழியில் எழுதி கிடைக்க வேண்டிய புகழ் மற்றும் அங்கீகாரம் கிடைக்காமல் போகும் போது,(உங்களின் கூற்றுப்படி) மீண்டும், மீண்டும் உங்களை விளக்கிக் கொள்ள தேவைப்படும் போது ஒரு அயர்ச்சி உண்டாவது நியாயமே. இந்த உழைப்பில் பாதி கூட செய்யாதவனுக்கு மரியாதை செய்யப்படுவதாக நீங்கள் நினைத்தால் வருவது ஆற்றாமையே!

ஆனால் அதை வெல்ல நீங்கள் எடுக்கும் ஆயுதம் வீண் கோபம். அது சரியல்ல.

உங்களின் எழுத்துக்கு அதற்குரிய உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத்தான் பலரும் நினைக்கிறார்கள். உங்களின் புத்தகம் விற்க வேண்டுமானால் ஒன்று இன்னும் சிறப்பாக எழுதுங்கள். அல்லது சிறப்பான விற்பனை உத்திகளை கையாளுங்கள்.

உங்கள் வலைத்தளத்திலேயே "இ‍‍புத்தகமாக" விற்கலாமே"

அதெல்லாம் சரி! வலைத்தளத்தில் கூகுள் "வைக்கிபிடியாவில்" போய் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல் என்று எழுதினால் பல பேர் பெயர்கள் (உ.ம். ராமகிருஷணன், சுந்தரராமசாமி, சுஜாதா)வருகிறது.

உங்கள் பெயரை காணவில்லையே!!!
உங்களுக்கு வலைத்தளத்திலும் நண்பர்கள் அதிகமில்லை போலிருக்கு.

சீக்கிரம் உங்கள் பெயரை அந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலில் சேருங்கள்.
வாழ்த்துக்கள்.