Friday, July 26, 2013

திரும்பிப் பார்க்கிறேன்.!!












திரும்பிப் பார்க்கிறேன்.!!

இந்த ஜூன் மாதம் முதல் நான்  இங்கிலாந்து வந்து 13 வருடங்கள் நிறைவடைந்து விட்டது.. பதிமூன்று  வருடங்கள்....பெரிய இடைவெளி.
இந்தியாவை விட்டு 1993லெயே வெளியேறி "வெளிநாட்டு இந்தியர்" வாழ்க்கையை தொடங்கினாலும் வருடம் 2000 வரை மத்திய கிழக்கு நாடுகளிலேயெ இருந்ததனால் பெரிய வித்தியாசங்கள் தெரியவில்லை.

ஆனால் 2000 ஆண்டு ஜுன் 4ம் தேதி இங்கிலாந்து வந்த போது என் மனநிலை எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது?

2000 ஆண்டு ஹீத்தோரோவில் இறங்கும் போது மனம் ரெக்கை கட்டி பறந்துச்சு. மொத நாள் கண்ணுல பாக்கிற எல்லாமே புதுசா வித்தியாசமா தெரிந்தது. எங்கு பார்த்தாலும் பசுமை. மேலும் நான் வந்து இறங்கிய இடம் லண்டனிலிருந்து சுமார் 100 மைல் தொலைவு. சரியான பழமையான கிராமம். ஆனால் எல்லா வசதிகளுடன் கூடிய நல்ல கிராமம்.

வெய்யிலிலேயே வறுத்தெடுக்கப்பட்டு இதுகாலம் இருந்த எனக்கு இந்த ஊர் (நினைவிருக்க‌ட்டும்..அது ஜூன் மாத‌ம்!‍ இங்கிலாந்தின் வெய்யில்கால‌ம்.) "ஏசி" செய்ய‌ப்ப‌ட்ட‌ ஊராக‌வே தெரிந்த‌து. இந்த‌ ஊரில் வ‌ந்த‌ முத‌ல் த‌மிழ‌ன் நான்தான். ஆப்பிரிக்கா வ‌ழியாக‌ வ‌ந்த‌ இன்னொரு வ‌ட‌நாட்ட‌வ‌ர் இருந்தாலும் நேராக‌ வந்த‌ இந்திய‌னும் நான்தான். எங்கு பார்த்தாலும் சுத்த‌ம். வெள்ளைக்கார‌ர்க‌ள். வீடுக‌ள் வ‌ரிசையாக‌ நேர்த்தியாக‌ இருந்த‌ன‌. சாலையில் ப‌ள்ள‌ம் மேடுக‌ள் கிடையாது. எல்லோரும் கார் வைத்திருந்த‌ன‌ர். பேருந்தில் கூட்ட‌மே கிடையாது. எல்லோரும் எல்லாவ‌ற்றுக்கும் "தேங்க‌ஸ்" என்ற‌ன‌ர். யாரும் பெரிதாக‌ அல‌ட்டிக் கொள்வ‌தில்லை. எல்லார் முக‌த்திலும் சிரிப்பு இருந்த‌து. தெருவில் ந‌ட‌ந்து செல்வோர் பெரும‌ள‌வு இல்லை என்றே சொல்ல‌லாம். அப்ப‌டி ந‌ட‌ப்ப‌வ‌ர்க‌ள் ஒன்று த‌ன் நாயை கூட்டிக் கொண்டு "வாக்கிங்" சென்ற‌ன‌ர் அல்ல‌து வேக‌மாக‌ உட‌ற்ப‌யிற்ச்சிக்காக‌ ந‌டை ப‌ழ‌கின‌ர்.

ஒன்று போல‌ எல்லோரும் என்னை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் "ஹ‌லோ" என்று சொல்லிவிட்டு சிரித்துவிட்டு செல்கின்ற‌ன‌ர். ஆஹா...சொர்க‌த்துக்கே வ‌ந்துவிட்டோம‌டா! என்று என‌க்கு பெரிய‌ ச‌ந்தோஷம். (ஆட்க‌ள் வேறு இள‌மையாக‌ கொ...தும் கு...மாக‌ ம‌..ம் ம‌ந்தார‌முமாக‌ இருந்தாங்க‌ளா...கேட்க‌வே வேணாம்!!)

க‌டைக‌ளுக்கு சென்றாலும் பெரிய‌ அள‌வில் கூட்ட‌ம் இல்லை. க‌ண்ணுக்கெட்டும் வ‌ரை வித‌வித‌மான‌ உண‌வு பொருள்க‌ள். வொயினில் ம‌ட்டும் எம்மா.....எத்த‌னை வ‌கைக‌ள்.? இந்த‌வித‌மான‌ சூப்ப‌ர் மார்கெட்டுக‌ளை ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் க‌ண்டிருந்தாலும் இங்கு அவை வித்தியாச‌மாக‌ இருந்த‌ன‌. ச‌த்த‌மே இல்லை. இத்த‌னை பெரிய‌ சூப்ப‌ர் மார்கெட்டில் எப்ப‌டி இத்த‌னை நிச‌ப்த‌மாக‌ வியாபார‌ம் ந‌ட‌க்கிற‌து? வியாபார‌ம் ந‌ட‌க்குதா இல்லையா என்றே தெரிய‌வில்லை. (இந்தியா ம‌ற்றும் துபாய் போன்ற‌ நாடுக‌ளில் ச‌த்த‌ம் காதை துளைக்கும்! த‌லைவ‌லிதான் மிஞ்சும்)

வீட்டில் த‌ண்ணிர், மின்சார‌ம் காஸ் என்று எத‌ற்கும் அல‌ய‌ வேண்டிய‌தேயில்லை. குழாயை திற‌ந்து நேர‌டியாக‌ த‌ண்ணீர் பிடித்து குடிக்க‌லாம். அத்த‌னை சுத்த‌ம்!!

இதெல்லாம் முத‌லில் க‌ண்ட‌போது பெரும் ச‌ந்தோஷ‌ம். ஆஹா..வெற்றியை அடைந்துவிட்டோம் என்று பெரும‌கிழ்ச்சி. ஆனால் அதுதான் ந‌ம‌து போராட்ட‌த்தின் தொட‌க்க‌ம் என்று ந‌ம‌க்கு புரிய‌ கொஞ்ச‌ம் கால‌ம் எடுக்கும்.

முத‌ல் ஆச்சரிய‌ அதிரிச்சிக்கு பின்..வேலை தேடும் போதுதான் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நான் யார்?..நான் வ‌ந்திருக்கும் நாடு எது? இங்கு ந‌ம்மை அவ‌ர்க‌ள் எப்ப‌டி பார்க்கிறார்க‌ள்? ந‌ம‌க்கு அவ‌ர்க‌ள் மீது இருக்கும் அபிப்பிராய‌ம் இதுவ‌ரை என்ன‌...? அது ச‌ரியா? என்று ப‌ல‌ கேள்விக‌ள் எழுந்த‌ன‌.

அதுவ‌ரை நான் ப‌டித்த‌வ‌ன், ப‌ண்டித‌ன், என்கிற‌ நினைப்பு இருந்த‌து. நான் முட்டாள் அல்ல‌ புத்திசாலி என்றே நினைத்தேன். உல‌க‌த்திலேயே இந்திய‌ர்க‌ள் மிக‌ புத்திசாலிக‌ள் (பெரும‌ள‌வு உண்மை!). ந‌ம‌து க‌லாசார‌ம் மிக‌ உய‌ர்ந்தது, வெள்ளைக்காரன் கலாசாரம் இழிந்தது என்றெல்லாம் ம‌ன‌தில் இருந்த‌து.(காலம் காலமாக போதிக்கப்பட்டவை!!) யாராவ‌து இந்திய‌ர்க‌ள் கிண்ட‌ல் செய்தால் மிக‌வும் கோப‌ம் வ‌ரும். அவ‌ர்க‌ள் சொல்வ‌து த‌வ‌று என்றும் நிலைமெ வேறு என்று வாதிடுவேன்.

ஆனால் இவை உண்மையா.? என் எண்ண‌ங்க‌ள் ச‌ரியா?
இல்லை.

வேலை தேடும் போது எல்லா இட‌த்திலும் வெள்ளைய‌ர்க‌ள் இத‌மாக‌ பேசி ப‌த‌மாக‌ எழுதி வாங்கி கொண்டு சொல்லி அனுப்புவ‌தாக‌ சொல்வார்க‌ள். ஆனால் வார‌ங்க‌ள் க‌ட‌ந்து ஒன்றும் ந‌ட‌க்காது. நேர‌ம் செல்ல‌ செல்ல‌ ம‌ன‌சு க‌ரையான் புடிச்சு ம‌ர‌ம் போல‌ வ‌லுவிழ‌க்கும். வெளியே ப‌ந்தாவாக‌ காட்டிக் கொண்டாலும் உள்ளே புழுங்க‌ ஆர‌ம்பித்தேன். கையில் இருக்கும் காசு க‌ரைய‌ ஆர‌ம்பித்த‌து. க‌வ‌லை ம‌ன‌தை அரிக்க‌த்தொட‌ங்கிய‌து. என்ன‌ ந‌ட‌க்கிற‌து. ஏன் என‌க்கு வாய்ப்புக‌ள் இல்லை. என் க‌ல்வி ம‌ற்றும் அனுப‌வ‌ங்க‌ள் ந‌ன்றாக‌த்தானே இருக்கு என்று ம‌ன‌ம் கிட‌ந்த‌ அலைந்த‌து. என‌க்கு பிற‌கு இந்த‌ ப‌க்க‌ம் வ‌ந்த‌ வெள்ளைய‌ர் ம‌ற்றும் ஐரோப்பிய‌ர்க‌ளுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது ந‌ம‌க்கு ஏன் வாய்ப்பு ம‌றுக்க‌ப்ப‌டுகிற‌து என்று யோசிக்க‌ தொட‌ங்கினேன். அப்போதுதான் புரிந்த‌து இங்கிலாந்தின் ம‌றுப‌க்க‌ம்.

ந‌ம் த‌மிழ் பெய‌ரை விண்ண‌ப்ப‌த்தில் க‌ண்ட‌வுட‌னேயே அவ‌ர்க‌ள் அதை தூக்கி த‌ள்ளி வைத்து விடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் ந‌ம்மை ந‌ம் நிற‌த்தின் கார‌ண‌மாக‌ அல்ல‌து ந‌ம்ம‌வ‌ர் மீத் அவ‌ர்க‌ளுக்கு இருக்கும் த‌வ‌றான‌ எண்ண‌த்தின் கார‌ண‌மாக‌ நிராக‌ரிப்ப‌து புரிந்த‌த போது ம‌ன‌ம் வெறுத்து போயிற்று. ஈழ்த்த‌மிழ‌ர் பிர‌ச்ச‌னையால் அவ‌ர்க‌ளுக்கு த‌மிழ‌ர் என்று ஒரு இன‌ம் இருப்ப‌து தெரியும்.
ம‌ற்ற‌ப‌டி சென்னை எங்கிருகிற‌து என்றே ப‌ல‌ பேருக்கு தெரியாது.
சென்னையில் ப‌ட்ட‌ப் ப‌டிப்பு என்றால் நாம் ந‌ம் மொழியில் ப‌டித்திருப்போம் என்று ந‌ம்புகின்ற‌ன‌ர். என‌வே ந‌ம் ஆங்கில‌ மொழி அறிவு ப‌ற்றி அவ‌ர்க‌ளுக்கு பெரிய‌ ச‌ந்தேக‌ம் உண்டு.

பிற‌கு போராடி ஒரு வேலை பெற்று அதில் போராடி முன்னேறி ...அது வேறு க‌தை. ஆனால் இந்த‌ போராட்ட‌ங்க‌ளால் வெள்ள‌ய‌ரைப் ப‌ற்றி நான் தெரிந்து கொண்ட‌வை.

வெள்ளைய‌ரில் பெரும்பான்மையான‌வ‌ர்க‌ளுக்கு உலக‌ அறிவு நிறைய‌ உண்டு. ஆனால் அவ‌ர்க‌ள‌து உல‌க‌ம் இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ம‌ற்றும் ஆப்பிரிக்கா ம‌ட்டுமே. இப்போது கொஞ்ச‌ கால‌மாக‌ சீன‌ர்க‌ளைப் ப‌ற்றி பேசுகின்றன‌ர். ம‌ற்ற‌ப‌டி அவ‌ர்க‌ளுக்கு பாக்கிஸ்தானை தெரிந்த‌ அள‌வுக்கு கூட‌ இந்தியாவைப் ப‌ற்றி தெரியாது. இந்தியாவில் எத்தனை பிரதேசங்கள், எத்தனை மொழிகள் எத்தனை கலாசாரங்கள் உள்ளன என எதுவுமே இப்போதுள்ள தலைமுறை மற்றும் சென்ற தலை முறையினருக்கும்( 40 வயதுள்ளவர்கள்) தெரியாது. சுமார் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரளவு இந்தியாவைப் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கு தெரிந்த இந்தியா 1947க்கு முற்பட்டது. (அந்த இந்தியாவைப்பற்றி நாமே மறந்துவிட்டோம்!!)

நம‌து ஊட‌க‌ங்க‌ளில் தின‌மும் வெள்ளைக்கார‌னையும் அவ‌ன‌து கிரிக்கெட், புட்பால்,என்று எழுதினாலும் இங்கு ந‌ம்மைப் ப‌ற்றி எந்த‌ ப‌த்திரிக்கையும் எழுதாது. நாம் பாக்கிஸ்தானுட‌ன் விளையாடினாலும் ச‌ரி ஆஸ்திரேலியாவுட‌ன் விளையாடினாலும் ச‌ரி இங்கு அந்த‌ செய்திக‌ள் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌டும்.


டேவிட் பெக்க‌ம் யாரு அவ‌ருக்கு இப்போது என்ன‌ சிகைய‌ல‌ங்கார‌ம் அவ‌ருக்கு இப்போ எத்த‌னை குட்டிங்க‌ என்ப‌துவ‌ரை இந்தியாவில் ந‌ம்ம‌ ஊட‌க‌ங்க‌ள் எழுதி குவித்துவிட்டன.(இத்தனைக்கும் கால்பந்தில் நம் லட்சணம் நமக்கே தெரியும்!) ஆனா இங்கிருக்கிற‌வ‌ங்க‌ளுக்கு ந‌ம‌து சச்சின் ப‌ற்றி பெரும‌ள‌வு தெரியாதென்றே சொல்ல‌ வேண்டும். கிரிக்கெட் ப‌ற்றி பேசுப‌வ‌ர்க‌ள் கூட‌ ச‌ச்சினை போகிற‌ போக்கில் "ஆமா..அப்ப‌டி ஒருத்த‌ர் இருக்கார் இல்லா.." என்றே சொல்வார்க‌ளேய‌ன்றி..அவ‌ர‌து ஆட்ட‌ சாத‌னைக‌ளை உல‌க‌ சாத‌னைக‌ளை எந்த‌ ஊட‌க‌மும் பேசாது.

இதை எழுதிய‌ உட‌னே...ச‌ச்சினைப் ப‌ற்றி தெரியாவிட்டால் என்ன‌..இது ஒரு பெரிய‌ விஷ‌ய‌மா என்று கேட்க‌ மாட்டீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன். ச‌ச்சின் ஒரு குறியீடே..




ந‌ம்மைப் ப‌ற்றி "ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்" ஒரு குழ‌ப்ப‌மான‌ தெளிவில்லாத‌ புகைப்ப‌ட‌த்தை காட்டியுள்ள‌து.

நம‌க்கு பிரின்ஸ் வில்லிய‌ம்ஸ் என்றால் யார்...அவ‌ர் இப்போது யாரை ம‌ண‌க்க‌ப் போகிறார் என்று விலாவ‌ரியாக‌த் தெரியும். ஆனால் இங்குள்ள‌ ப‌த்திரிக்கைக‌ள் ந‌ம் பிர‌த‌ம‌ர் இங்கிலாந்து விஜ‌ய‌ம் செய்தாலே அந்த‌ செய்தியை வெளியிடாது. தொலைக் காட்சியில் இதை செய்தியாக‌ சொல்ல‌ மாட்டார்க‌ள். போகிற‌ போக்கில் திரும‌தி. பிர‌திபா பாட்டில் வ‌ந்த‌தை சொன்னாலும் புகைப்ப‌ட‌ங்க‌ள் அல்ல‌து காட்சிக‌ள் காட்ட‌ப்ப‌ட‌ மாட்டாது. ஆனால் சீன‌ துணைப் பிர‌த‌ம‌ர் வ‌ந்தால் அவ‌ர‌து பேட்டி ஒளிப‌ர‌ப்ப‌ப்ப்டும்.
டோனி பிளேரும், கார்ட‌ன் பிரெள‌னும், ச‌மிப‌த்தில் டேவிட் கேம‌ருனும் இந்தியா வ‌ந்த‌ போது இந்தியா என்ன‌ அல்லோல‌ ப‌ட்ட‌து என்று எல்லோருக்கும் தெரியும்.


இந்த‌ வித்தியாச‌ங்க‌ளை ந‌ம் இந்திய‌ர் யாரும் பெரிதாக‌ யோசிப்ப‌தில்லை. ந‌ம் தூத‌ர‌க‌மும் இதைப் ப‌ற்றியெல்லாம் க‌ண்டு கொள்வ‌தில்லை. அவ‌ர்க‌ளுக்கு இங்குள்ள‌ இந்திய‌ரை சுர‌ண்ட‌வே நேர‌ம் போத‌வில்லை. போதாத‌ குறைக்கு தூத‌ர‌க‌த்தில் வேலை செய்வோர் தாம் வேலை செய்யும் இருக்கைக்கு ஏற்ப‌ எப்ப‌டி ச‌ம்பாதிக்க‌லாம், த‌ன் (த‌குதியில்லாத‌)மாமான், ம‌ச்சானை எப்ப‌டி இங்கு கொண்டுவ‌ந்து குடிய‌ம‌ற‌த்த‌லாம் என்று யோசிக்க‌வே நேர‌ம் போத‌வில்லை.

ச‌ரி விஷ்ய‌த்துக்கு வ‌ருவோம்...

நாம் இவ‌ர்க‌ளைப் ப‌ற்றி அல‌ட்டிக் கொள்வ‌து போல் இவ‌ர்க‌ள் ந‌ம்மைப் ப‌ற்றி பெரிதாக‌ அல‌ட்டிக் கொள்வ‌தில்லை.

அவ‌ர்க‌ளுக்கு அவ‌ர‌க‌ள‌து நாடும் அவ‌ர்க‌ள‌து ம‌க்க‌ளும் பெரிதும் முக்கிய‌மாக‌ ப‌டுகிற‌து. நியாய‌ம் தானே. அப்ப‌டித்தானே இருக்க‌ வேண்டும்.
இந்த‌ குண‌ம் இவ‌ர்க‌ளின் எல்லா ம‌ட்ட‌திலும் ப‌ர‌வி இருப்ப‌து பெரிதும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து.
சாதார‌ண பெட்ரோல் ப‌ங்கில் வேலை கேட்டாலும் வெள்ளைய‌ர் யாரும் வேலை கேட்டு வ‌ர‌வில்லையென்றால் ம‌ட்டுமே ந‌ம்ம‌வ‌ர்க‌ளுக்கு அந்த‌ வேலை கிடைக்கும். இதில் ச‌ந்தேக‌மே வேண்டாம். . இத்த‌னைக்கும் இது போன்று வேலைக்கு வ‌ரும் வெள்ளைய‌ர் வேலை செய்வ‌தில் மிக‌வும் சோம்பேறிக‌ளாக‌வும் மிக‌வும் திமிர் பிடித்த‌வ‌ர்க‌ளாக‌வும் இருப்பார்க‌ள் என்று அவ‌ர்க‌ளே சொல்வார்க‌ள். இருந்தாலும் முத‌லிட‌ம் இவ‌ர்க‌ளுக்கே. இது நியாய‌மாக‌ பார்த்தால் ச‌ரியாக‌ இருந்தாலும் ந‌டைமுறை வாழ்க்கையில் ந‌ம‌க்கு பிர‌ச்ச‌னையாக‌ இருக்கிற‌து.

இந்த‌ த‌ற்காப்பு ந‌ட‌வ‌டிக்கையை இவ‌ர்க‌ள் வேலைக்கு ஆட்க‌ள் சேர்க்கும் எல்லா இட‌ங்க‌ளிலும் த‌வ‌றாம‌ல் க‌டைபிடிப்பார்க‌ள். அது ம‌ருத்துவ‌ர் வேல‌கென்றாலும் ச‌ரி ந‌ர்ஸ் வேலைக்கென்றாலும் ச‌ரி..வெள்ளைய‌ருக்கு பின்ன‌ரே ந‌ம‌க்கு உரிமை.

இவ‌ர்க‌ள் ந‌ம்ம‌வ‌ர்க‌ளை ந‌ம்புவ‌து ஒரே ஒரு துறையில் ம‌ட்டும்தான். அதாவ‌து க‌ணினி துறையில் ம‌ட்டும்தான். கார‌ண‌ம் க‌ணினி துறையில் வெள்ளைய‌ர்க‌ளின் போட்டி மிக‌வும் குறைவு. மேலும் ப‌ல‌ க‌ணினி நிறுவ‌ன‌ங்க‌ள் இந்தியாவிலிருந்து வ‌ந்து இங்கு சேவை செய்கின்ற‌ன‌. ஆக‌வே அந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் அடிமைக‌ளை (நிஜ‌மா.!) இந்தியாவிலிருந்து த‌ருவித்து இந்த‌ வெள்ளைக்கார‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் குறைந்த‌ ச‌ம்ப‌ள‌த்தில் வேலைக்க‌ம‌ர்த்துகின்ற‌ன‌.

ச‌ரி..இந்த‌ நிற‌வெறியை த‌விர‌ இந்த‌ நாட்டில் நான் என்ன‌வெல்லாம் க‌ண்டேன்.
சொல்கிறேன்..

இவர்களின் பொது ஒழுக்கம், சமுதாய அக்கறை, துணிதல், உண்மையின் மீது நம்பிக்கை, மற்றும் கொடுக்கும் தன்மை..

பொது ஒழுக்கம் என்றால் என்ன என்று நம்மில் பலருக்கு தெரியாமலே இருக்கும். யாராவது பார்கிறார்களா என்று கூட யோசிக்காமல் பளிச் என்று எச்சை துப்பும் நம்மால் இதை புரிந்து கொள்வது கடினம்.  (இந்த கொடுமையை நியாப்படுத்துவது வேறு உண்டு!) ஆனால்  இவர்கள் அதை செய்வதில்லை.

குழந்தை பருவத்திலிருந்தே பொது ஒழுக்கம் கற்று கொடுக்கப்படுகிறது.

1. தெருவில் எச்சில் துப்பாதே.?  (கால்பந்தாட்ட வீரர்கள் விளையாடும் போது அதிகம் இது போல் துப்புவதை தொலைகாட்சியில் கண்டு அதையும் கண்டித்தது இந்த சமுகம்.)

2. கண்ட இடத்தில் தெருவை கடக்காதே

3. பொது இடத்தில் சத்தமிட்டு பேசுவதோ ஒருவரை பெயர் கூவி அழைப்பதோ தவறு

4. எங்கு சென்றாலும் வரிசையில் நில்
வாகனம் ஓட்டினாலும் வரிசையை மீறி போகக்கூடாது.

5. தெருவில் குப்பை போடாதே.

6. அடுத்தவரை தொடர்ந்து முறைத்து பார்ப்பது அநாகரீகம்.

7. சினிமா போன்ற கலைக் கூடங்களில் நிசப்தம் முக்கியம். அப்போதுதான் எல்லோரும் ரசிக்க முடியும் என்பது இவர்கள் முடிவு. அதிகம் பேசினால் வெளியே அனுப்பிவிடுவார்கள்..

8. உண்மை பேசுவது மிகவும் முக்கியம். பொய் சிலநாள் உன்னை காக்கும். ஆனால் மாட்டினால் மானம் போகும். சமுதாயம் உன்னை ஒதுக்கும். (இதெல்லாம் நமக்கும் தெரியும்!! )

9. பணம் சம்பாதிப்பது பாவமல்ல அதை சரியான வழியில் சம்பாதிப்பதுதான் ஒரே வழி.  குறுக்கு வழியில் சம்பாதிப்பது நரகலை தின்பதற்கு சமம். அப்படி குற்றம் செய்து மாட்டுபவர்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள்.
அவர்களின் குற்றம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களை தொடர்ந்து வரும். எவரும் அப்படி பட்டவருடன் தம்மை சம்பந்த படுத்திக் கொள்ள மறுக்கின்றனர்.

10. நேர்மை புகழப்படுகிறது. நேர்மை ஒருவரின் தியாகமல்ல..அது அவரின் சமுதாய கடமையாக கருதப்படுகிறது.

11. துரோகம் மன்னிக்கப்படுவதில்லை.

12. போலிசை கண்டு இங்கு யாரும் பயப்பட தேவையில்லை..

13. நீதி மன்றத்தில் நேர்மை  உண்டு. நீதி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் விரைந்து கிடைக்கும்.

14. வன்முறையை ஒரு போதும் எந்த ஒரு அரசியல்வாதியும் மறைமுகமாக கூட தூண்டுவதில்லை. அப்படி தூண்டுபவர் முற்றிலும் ஒதுக்கப்படுகிறார்.

15.  அரசியல் / அரசாங்க கடமையை தியாகமாக யாரும் பார்ப்பதில்லை.

16. இறந்தபின் காசு கூட வராது என்பதை அதிகம் உணர்ந்தவர்கள் இவர்கள்.
(காதற்ற ஊசிகூட கடைசி காலத்தில் கூட வராது என்று பாடியவர் நாம்.. ஆனால் அதிகம் தங்கம் வாங்கி பதுக்குவதும் நாம்தான்.)  தம் சொத்துக்களை அதிகம் பொது நலத்திற்க்காக எழுதி வைக்கின்றனர். கடந்த சுனாமியின் போது அதிகபட்ச நிதி கொடுத்த நாடு இது. பொது மக்கள் கொடுத்தது 400 மில்லியன். இதைத்தவிர அரசு 400 மிலியன் கொடுத்தது

17. அப்பன் சொத்துக்காக பொதுவாக பிள்ளைகள் ஏங்குவதில்லை. அதில் பெருமையும் படுவதில்லை. அதானால்தான் 18 வயதானவுடன் தாமே உழைத்து முன்னேற முயல்கின்றனர். அதிலேயே பெற்றோரும் பிள்ளைகளும் பெருமை கொள்கின்றனர்.

18. வாழ்க்கை ஒருமுறை. வாழ்ந்து பார்த்துவிடுவோம் என்று பலரும் உணர்ந்துள்ளனர். தம் மனதுக்கு பிடித்த வேலைகளை பெற போராடுகின்றனர்.

19. செக்ஸ் ஒரு பெரிய விஷயமாக பேசப்படுவதில்லை. கண்ணகி கதையெல்லாம் இவர்களுக்கு புரியாது. மனது பொருத்தம் பெரிதாக பேசப்படுகிறது. இதிலும் இவர்கள் உண்மையை அடிப்படையாக கொள்கின்றனர். ஒருபுறம் கற்ப்பை பெரிதாக பேசிவிட்டு திருட்டுத்தனமாக கள்ள உறவு இவர்கள் கொள்வதில்லை. சராசரியாக ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு 10 பேருடனும்,  ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு 16 பேருடனும் உடலுறவு கொள்வதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

20. தம் நாட்டை பெரிதும் மதிக்கின்றனர். இந்த நாட்டில் பிறக்காத எவரும் இந்த நாட்டை ஆளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

21. அறிவாளிகள் பெரிதும் மதிக்கப்படுகின்றனர். பொதுவாக அறிவாளிகள் தம் துறை சார்ந்தே கருத்து தெரிவிக்கின்றனர். தம் துறை சாராத விஷயங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கின்றனர்.  ஊடகங்களும் எல்லாவற்றிக்கும் எல்லாரிடமும் கேள்வி கேட்பதில்லை.

22. கைத்தொழில் பெரிதும் மதிக்கப்படுகிறது.
எல்லா தொழிலுக்கும் ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு உண்டு. ஒரு புதிய தொழில் நுட்பம் அல்லது முறை வந்தால் உடனே அதை ஒழுங்குபடுத்தும் வாரியம் தொடங்கப்பட்டு விடுகிறது. இதில் 95 சதவிகிதம் அவை சுய ஒழுங்கு அமைப்பாவகவே இருக்கின்றன. தொழில் நேர்மை அந்த தொழில் நெடுநாள் வாழ வழி செய்யும் என்று நம்புகின்றனர்.

23.தொழில் அல்லது புது முயற்சி செய்து தோற்று போகிறவன் கேலி செய்யப்படுவதில்லை. அவனது துணிவிற்க்காக புகழப்படுகிறான். அவனது தோல்வியின் காரணம் ஆராயப்படுகிறது. அது ஆவணப்படுத்தப் பட்டு மீண்டும் ஒருவர் அது போல் தோற்பதை தவிர்க்க முயல்கின்றனர்.

24. எல்லா விஷயங்களும் ஆவணப்படுத்தப்படுகிறது. சரித்திரம் பேணப்படுகிறது. எதிர்கால வெற்றி கடந்த கால சரித்திரத்தில் உள்ளது என்று உணர்ந்துள்ளனர். இவர்கள் ஆவணப்படுத்தாத விஷயமே கிடையாது என்று சொல்லலாம். இதிலும் 99 விழுக்காடு தனிநபர் ஆவண காப்பக பங்கே பெரிதும் உள்ளது.

25. எல்லாவற்றிக்கும் அரசை எதிர்ப்பார்ப்பது கிடையாது. அதை இழிவாக நினைக்கின்றனர்.

26. அரசு வேலைக்காக ஆயுசு முழுவதும் காத்துக்கொண்டிருப்பதில்லை. அரசு வேலை பெரிய மதிப்பாக இல்லை. சிலசமயம் கேலியாகவும் பார்க்கப்படுகிறது.

27. நல்லது எங்கிருந்தாலும் உடனே அதை கொணர்ந்து ஆய்வு செய்து தேவையா தேவையில்லையா என்று தீர்மானித்து பின் ஏற்றுக் கொள்கிறார்கள். இதில் வேகமும் விவேகமும் மிக அதிகம். தேவையில்லாத அரசியலே கிடையாது.

28. ஒரு சிறு நிலப்பரப்பிற்குள் வாழ்வதால் மனதளவில் ஒரு குழு மனப்பான்மை உள்ளவர்களாக இருக்கின்றனர். வெளி உலகைப் பற்றி சாதாரண மனிதன் அதிகம் கவலைபடுவதில்லை. அதை ஊடங்கங்கள் கையில் விட்டுவிடுகின்றனர். ஆக சில சமயம் சில வெளி உலக செய்திகள் சாதாரண மக்களிடம் சென்றடைவதே இல்லை. மக்களுக்கு என்ன தெரிவிக்க வேண்டும் என்பதை ஊடகங்கள் தீர்மானிகின்றன.

 இதுவும். இன்றைய விண்கொள் தொலைக்காட்சி யுகத்தில் வேகமாக மாறிவருகிறது.   எளிதில் இவர்கள் ஏமாறுவதில்லை..

29.  பொதுவாக நேர்மை அடிப்படையாக கொள்வதால் மக்கள் அதை விரும்புவதால் அவர்களிருந்து வரும் அரசியல்வாதிகளும் பெருமளவு நேர்மையுடன் இருக்கின்றனர்.  நேர்மையற்றவர்கள் உடனக்குடன் நிராகரிக்கப்படுகின்றனர்.

30.  இங்கு எல்லாவற்றையும் அரசியலும் சினிமாவும் தீர்மானிப்பதில்லை.

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களிடம் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது. ஆனால் அவை தனிமனித குறைகளாகவும், வக்கிரங்களாகவும் இருக்கின்றன.

எனக்கு தெரிந்து ஒரு நாட்டில் 20 சதவிகிதம் மக்கள் தவறானவர்களாகவும் மீதி உள்ளவர்கள் பண்பாடு உள்ளவர்களாகவும் இருந்தால் அந்த நாடு நல்ல நாடாக பரிமளிக்கும்.  அதே சமயம் ஒரு நாட்டில் 60 சதவிகிதம் கயவர்களாகவும் 40 சதவிகிதம் நல்லவர்களாக இருந்தால் அந்த நாடு மிகவும் கஷ்டப்படும்.

 இந்தியா எந்த பக்கம் என்று உங்களுக்கே தெரியும்.

வந்தே மாதரம்....