ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை
விமர்சிப்பது
அத்தனை நாகரீகமானது அல்ல. ஆனால்...அதே நபர்
தன தனிப்பட்ட வாழ்க்கையால் ஒரு
சமூகத்தை பாதிக்க
நேர்ந்தாலோ அல்லது அவரது தனி
வாழ்க்கையை காட்டி
பொதுவில் பரிதாபம் தேட நினைத்தாலோ
அவரது தனி வாழ்க்கையும்
பொதுவில் விமர்சிக்கப்பட்ட தீரும்.
ஜெயா வின் வாரிசுகள் என்று அவரது
சொத்துக்களுக்கு மட்டுமன்றி
அவர் தலைமை தாங்கிய கட்சிக்கும் இன்று
சண்டை தொடங்கி விட்டது.
ஜெயா வின் கடந்தகாலத்தை அவரை
சார்ந்தவர்கள் இரு வேறாக
பார்க்கின்றனர்.
1
ஒரு ஜோன் ஆப் ஆர்க் போல போராட்டத்தில் வெற்றி கண்ட மங்கை என்று அவர் அறியப்பட வேண்டும் என்று ஒருபுறம் கூவுகினறனர்.
2
இன்னொரு புறம் அவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு எந்த சுகத்தையும்
அனுபவிக்காமல் பிறருக்காகவே வாழ்ந்து, மரணத்திலும்
வஞ்சிக்கப்பட்ட தியாக சுடர். அவர் மீது
பரிதாப படுங்கள் என்று ஒரு புறம் கூவுகின்றனர்.
3. அவரது எதிரிகள் அவரை ஒரு பெரும்
அரக்கியாக கருணையே இல்லாத பேராசை பிடித்த சாத்தானாக பார்க்கிறார்கள்.
இவை இல்லாமல் பொதுவான (IMPASSIONED) பார்வையாளனாக இங்கு
இவரை வெளிக்காட்ட யாரும் துணிவதில்லை.
காரணம் அது சார்பில்லாத நிலை. அங்கு யாரும் செல்வதில்லை.
ஜெயா...இவரின் வாழ்க்கையை அவரது
கூற்றுக்களின் அடிப்படையில் பார்த்தாலேயே சில விஷயங்கள் விளங்கு கின்றன.
1 ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும்
தேவையான தாய் தந்தையுடன் வாழும் ஸ்திரமான
வாழ்க்கை தொடக்கம் இவருக்கு இல்லை. எந்த குழந்தைக்கும் அதன் தந்தைதான் முதல்
ஆளுமையுள்ள ஆண் (சூப்பர்மேன்). அப்படி பட்ட தந்தை இளம் வயதிலேயே இறக்கும் போது ஒரு
வெற்றிடம் உருவாகிறது. மேலும் பின்னாளில் இறந்த தந்தையும் பெரிய போற்றக்கூடிய
ஆளுமையில்லை என்று தெரிய வரும் போது ஏமாற்றம் அதிகரிக்கிறது. இது முதல் அடி. சுருங்கி போகிறார்.
2 அடுத்து குழந்தையின் புகலிடம் தாய்.
ஆனால் பொருளாதார நெருக்கடி
காரணமாக தாயும் பிரிகிறார். இது அடுத்த
அடி.
ஆனால் இங்கு இன்னொரு வாய்ப்பு
கிடைக்கிறது. தாத்தா பாட்டியுடன் வளரும்
வாய்ப்பு. செல்லமாக வளர்க்கப்படும் சூழல். அதீத செல்லம் ஆளை கெடுக்கும். அதுதான்
நடக்கிறது.
இதுவும் குறைந்த காலமே..சென்னைக்கு
மாற்றம். புதிய இடம். புதிய வாழ்க்கை.
3
தாயின் சினிமா வாழ்க்கை இவர் விரும்பாவிட்டாலும் இவரை பாதிக்கிறது.
பள்ளியில் இவர் சீண்டப்படுகிறார். (BULLYING ). இவரது தாயை தரக்குறைவாக பேசி இவர்
சீண்டப்படுவது இவருக்கு புதிராகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. அந்த வயதில் தன்னை
தனது தாயின் பொருட்டு சீண்டுவது இவருக்கு விளங்கவில்லை. கோபமும் வெறுப்பும் இவரை
மேலும் தனிமை படுத்துகின்றன.. நட்புகள் வெகு குறைவானதாகிறது.
அன்றைய கால கட்டத்தில் சினிமாவில்
இருக்கும் பெண்களுக்கு சமூகத்தில் தரக்குறைவான மரியாதையே இருந்த காரணத்தினால்
சந்தியாவின் தாய் வழி தந்தை வழி பிராமண சொந்தங்கள் நெருங்கி வரவில்லை. அதை பற்றி சந்தியாவும் பெரிதாக கவலை
கொள்ளவில்லை. ஆனால் ஜெயாவுக்கு தன் குடும்பம் தனிமைப்படுத்தப்படுகிறது என்று புரிய
தொடங்கியது.
அன்றைய கால கட்டத்தில் சினிமா உலகில்
தவிர்க்க முடியாத பல விஷயங்கள் தன்னை சுற்றி நடப்பது ஒரு பதின்பருவ பெண்ணான
ஜெயாவுக்கு ஆண்களின் மீது வெறுப்பை
அளித்ததில் ஆச்சரியமில்லை.
.(இதற்கு மேல் சொல்ல வேண்டியதில்லை
என்றே நினைக்கிறேன்.). இவரது சூழ்நிலையின்
காரணமாக அவர் அன்று கண்ட பல ஆண்களும் ஒரே விஷயத்தை படப்பிடிப்புக்கு வெளியே
தேடுபவர்களாக அமைந்தது ஒரு துரதிஷ்டம்..அதனால் மேலும் சுருங்கி மேலும் பிடிவாதக்காரியாகிறார்.
இவர் இப்படி ஆக ஆக இவரை மேலும் மேலும் சமாதான படுத்த வேண்டிய கட்டாயம்
சந்தியாவிற்கு ஏற்படுகிறது. எனவே இவர் ஆட்டியபடியெல்லாம் ஆட வேண்டிய நிலை. இது ஒரு தாயின் குற்ற உணர்ச்சியின்
விளைவே. சினிமா எனும் ஒரு மீள முடியாத
சூழலில் சிக்கி இருக்க அதில் இருந்து வெளியில் வரமுடியாமல் அதே சமயம் மகளையும்
காத்து மகிழ்விக்க இவர் இப்படி செய்வதே சரி என்று நினைத்தார்.
தி.நகரில் சிவஞானம் தெருவில் இருக்கும்
வீட்டில் இவர் வளர்ந்த போது இவரது கோபமும் பிடிவாதமும் மிகவும் பிரசித்தம்.
மாடியில் இவர் வளர்ந்த அந்த சிறிய அறையில் இவர் கோபத்தினால் உடைத்த தொலைபேசிகள்
(அந்த காலத்தில் கருப்பாக மிகவும் கனமாக இருக்கும் ) நூற்றுக்கணக்கானவை என்று
வேலைக்காரர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். (நான் கேட்டது 80 களின் இறுதியில் - 30
வருடங்கள் முன்பு) ஒவொரு முறையும் பக்கத்தில் இருக்கும் தொலைபேசி இணைப்பகத்தில்
இருந்து ஆட்கள் வந்து புது தொலைபேசியை வைத்து விட்டு 5 ரூபாய் (அன்று பெரிய பணம்
அது ) வாங்கி செல்வார்களாம்.
இப்படி ஒரு மூர்க்கத்தனமான கோபம்
கொண்டவர் செல்வி.ஜெயலலிதா.
இப்படிப்பட்ட மூர்கத்தனமான பிடிவாதமே
பின்னாளில் இவரை கண்டு
பலரையும் நடுங்க வைத்தது.
இப்படி இவரது பிடிவாதத்திற்கு வளைந்து
கொடுத்து மற்றவர்களிடம் இருந்து இவரை காப்பாற்றி பொத்தி பொத்தி வளர்த்த சந்தியா
இவரது நடிப்பு வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக வடிவமைக்க தொடங்குகிறார்.
இவரது தாயின் தொழில் இவர்
விரும்பாமலேயே இவர் மீது வீழ்கிறது. முதலில் இவர் அதை மறுத்தாலும் குடும்பத்தின்
பொருளாதார சூழலை சொல்லி மெல்ல இவரது தாயார் இவரை கரைக்கிறார். முதலில் இந்த திரைத்துறையில் இருக்கும்
முதலைகளை இவர் அறியவில்லை. அறிந்த போது காலம் கடக்கிறது.
இங்கு சில பிம்பங்களை உடைக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லது
செய்தார். சில சமயம் அவர் கொஞ்சம் அதிகமாகவே தன்னிடம் வந்தவர்களை கட்டியணைத்து
கொள்வார். மூச்சு முட்டும். வேறு
வழியில்லை. அதான் அவரது குணம். அதிலிருந்து நீங்கள் மிரண்டு வெளியேறினால் அவர்
கோபித்து கொள்வார். மறைமுகமாக உங்களை தனிமைப் படுத்தி வேறு வழியில்லாமல் அவரிடமே
திரும்பி வரும் வகை செய்வார். அன்று அவரால் அது முடிந்தது. இது அன்று அவருடன்
இருந்த பல புத்திசாலிகளுக்கு தெரியும்.
இப்படிப்பட்ட எம்.ஜி.ஆர்.ஜெயலலிதாவின்
மீது அக்கறை கொண்டார். ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்புக்கு பிறகு அவர் ஜெயாவை தன
நிழலுக்கு கீழ் கொண்டு வர பிரியப்பட்டார்.
இது ஜெயா போன்ற பிடிவாத குணம் கொண்டவருக்கு பிடிக்க வில்லை. எம்.ஜி.ஆர்.
தனக்கு பிடித்தவர்களை யார் சந்திக்க வேண்டும். யார் சந்திக்க கூடாது என்கிற
அளவுக்கு நுணுக்கமாக கட்டுப்படுத்துவார். இது அவரின் ஒரு குணம். அவரை பொறுத்தவரை
ஜெயா ஒரு சிறு பெண்.சினிமாவில் இருக்கும் பல முதலைகளிடம் மாட்டிக் கொள்ளாமல் தான் பாதுபாக்ப்பதாகவே நம்பினார். இது ஜெயாவுக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை.
தன சுதந்திரத்தில் எம்.ஜி.ஆர். தலையிடுவதாகவே ஜெயா கொதித்தார்.
அன்றைய சினிமா கொஞ்ச காலத்திற்கு இரண்டு
குழுக்களாகவே பெரும்பாலும் இயங்கியது. எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி....இதில்
சிக்காமல் தப்பிய பெருந்தலைகள் வெகு குறைவு. அப்படி தப்பியவர்கள் இந்த இருவர்
சினிமாவிற்கு வருவதற்கு முன்பே கொடி கட்டியவர்களாக இருந்திருப்பார்கள்.
இந்த இருவருக்கும் தனி தனி
தயாரிப்பாளர்கள். தனி தனி நடிகைள் மற்றும் துணை நடிகர் கூட்டம். எம்.ஜி.ஆர்.
படத்தில் நடித்த நாயகி சிவாஜி படத்தில் நடித்தால் திரும்ப எம்.ஜி.ஆர். படித்ததில்
நடிப்பது கடினம். அவர்கள் வேறு மொழியில் யாருடனும் நடிக்கலாம் ஆனால் அது தமிழில்
கூடாது. இது ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்.
இதில் தப்பியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பதமினி, பானுமதி போன்றவர்களே...
இந்த சூழலில் எம்.ஜி.ஆரின் நெருக்கம்
தன மகளை பாதுகாத்து தான் அடைய முடியாத வெள்ளித்திரை உச்சத்துக்கு கொண்டு செல்லும்
என்று சந்தியா நம்பினார். அதன் விளைவு, ஜெயா தான் சிறைப்படுத்தப்பட்டது போல்
உணர்ந்தார். ஆண்கள் என்றாலே பெண்களை கட்டுக்குள் வைத்து கொண்டு பயன்படுத்துபவர்கள்
என்கிற எண்ணம் ஜெயாவுக்கு வலுக்கிறது.
இதை மீற ஜெயா தொடர்ந்து பல விதங்களில்
கடைசிவரை பல முறை முயன்றார். சில
வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் இவரை போலவே இளம் வயதினாரான ஜெய்சங்கர் இவர்
வீட்டுக்கு வந்த பேசிக் கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு எம்.ஜி.ஆர்.ரின்
ஆட்கள் வந்து ஜெயா எத்தனை முறை கத்தினாலும் பொருட்படுத்தாமல் ஜெயஷங்கரை அவமதித்து
மிரட்டி ஜெயாவின் வீட்டில் இருந்து வெளியேற்றினர் என்று சொல்வார்கள்.
சரி..கதைக்கு வருவோம்...
எம்.ஜி.ஆர். ஜெயாவின் வாழ்வில் நுழைந்த
சில வருடங்களில் ஜெயாவை பெரிதும் காத்த பொத்தி பொத்தி வளர்த்த அவரது தாயார்
இறந்தார். அப்போது ஜெயாவுக்கு வயது 22 . வாழ்வில் வனப்பும் வளமும் சேர்ந்து கொண்டு
தன்னம்பிக்கை துளிர்க்க தொடங்கிய காலம். வெளியில் எப்படி காட்டிக் கொண்டாலும்
மனதளவில் இவர் தனது நங்கூரமாக நினைத்த தாய் திடீரென்று மறைந்தது இவருக்கு
பேரதிர்ச்சியாக இருந்தது. உண்மையை சொன்னால் இவர் இந்த பிரிவின் தாக்கத்தில்
இருந்து தன் வாழ்நாள் முழுவதும் மீளவே இல்லை. இந்த அன்பிற்கு இணையான அன்பினை தரும்
ஆட்களை தேடிக் கொண்டே இருந்தார். அப்படி ஒரு நிபந்தனையில்லா அன்பு சசிகலா தருவதாக
நம்பியதால்தான் அவர் கடைசிவரை சசிகலாவை மட்டும் மீண்டும் மீண்டும் மன்னித்தார்.
விட்டு கொடுக்கவில்லை.
இவர் தனக்கு நண்பர்கள் என்று யாரையும்
முழுதாக நம்பிட வாய்ப்பில்லை. தன ஆசை, கோபம் பிடிவாதங்களுக்கு
வளைந்து நெளிந்து போகும் ஒரே தொடர்பு அறுந்த போது இவரூக்கு என்ன செய்வது என்று
தெரியாமல் நிலை குலைந்து போனதாய் அவர் தெரிவிக்கிறார். அதே சமயம் குடும்பத்தில்
தாய் இறந்த சமயம் சொத்து பிரச்சனையும் எழுகிறது. 1965 க்கு பிறகு குடும்ப கடன்களை
ஜெயாவின் வருமானமே அடைத்தது. அப்படி இருக்க தி.நகர் வீடு யாருக்கு சொந்தம் என்பது
போன்ற சொத்து பிரச்சனைகள் தொடங்கியது. இதுவும் ஜெயாவுக்கு அதிர்ச்சியே. அதே சமயம் ஜெயாவின் பேரில் போயஸ் தோட்டத்தில்
சந்தியா நிலம் வாங்கி வீடு கட்டவும்
திட்டமிட்டிருந்தார். சொத்து தகராறில் அண்னன் உட்பட மற்றவர்களால் தான்
வஞ்சிக்கப்பட்டதாகவே ஜெயா நம்ப தொடன்கிறார்.
ஆண்களின் மீதான நம்பிக்கை மேலும் தகர்ந்தது.
இந்த நிலையில் சந்தியாவின் மரணத்திற்கு
வந்த எம்.ஜி.ஆர். அந்த குடும்பத்தின்
குழப்பங்களை தீர்க்க தலைப்பட்டார். அன்று அவருக்கு இருந்த செல்வாக்கால் நடுவில்
வேறு யாரும் புக முயற்சிக்கவில்லை. சொத்து
பிரிப்பு பிரச்சனையின்றி தீர்த்த எம்.ஜி.ஆர். ஜெயாவை முழுவதும் தன நிழலுக்கு
கொண்டுவந்து விட்டார்.
இந்த நிலை ஜெயாவுக்கு
பிடிக்காவிட்டாலும் வேறு வழியில்லை.
கையறு நிலையில் விரும்பாத சில
விஷயங்களை கட்டாயத்தின் பேரில்
செய்ய வேண்டிய சூழல் கொடுமையான மன
அழுத்தத்தை கொடுக்கும்.
திட மனதில்லாதவர்களுக்கு பைத்தியம் கூட
பிடிக்கும். ஆனால் ஜெயா பிடிவாதகாரி. போராட்ட குணம் மிக்கவர். கோழையில்லை.
எம்.ஜி.ஆர். தன்னை இழுத்த
இழுப்புக்கெல்லாம் வர சொல்வதை
வெறுத்தார். அனால் எம்.ஜி.ஆர்.
அவருக்கு தெரிந்த அளவில் தான் நல்லது செய்வதாகவே நினைத்தார். என்ன செய்தாலும் இந்த
பெண் இப்படி முரண்டு பிடிக்கிறதே என்றே நினைத்திருப்பார். எம்.ஜி.ஆரின் அனுபவத்தில் இது அவருக்கு
ஆச்சரியமாகவும் இருந்திருக்கும். ஏன் என்றால் அவருக்கு முன் யாரும் பிடிவாதம்
பிடித்ததில்லை. அவர் அப்படி ஒரு ஆளுமை.
ஆனாலும் அவருக்கு ஜெயாவின் இந்த
பிடிவாதமே பிடித்து போனது. அதனாலேயே எத்தனை முரண்டினாலும் அவர் ஜெயாவை
மீண்டும் மீண்டும் மன்னித்து தன்னிடமே வைத்துக் கொண்டார். இது ஒரு LOVE HATE RELATIONSHIP
இப்படி பட்ட உறவில் இருந்ததனாலோ
என்னவோ ஜெயாவுக்கு ஆண்கள் மீது வெறுப்பு
இன்னமும் வளர்ந்தது.
சிறிது காலம் பிறகு இவரின் சினிமா
வாய்ப்புகள் சுருங்கும் போது இவருக்கு தெலுங்கு நடிகர் சோபன் பாபு வின் அந்தரங்க
நட்பு கிடைத்தது.
எம்.ஜி.ஆரின். கட்டுக்குள் இருந்து
தான் விலகி தான் சுதந்திரமாக செயல் படுவதாக நினைத்து சொபன்பாபுவுடன் இணைகிறார். சோபன்பாபுவுக்கு
ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை குட்டிகள் இருந்தாலும் சுமார் ஏழு வருடங்கள் இவர்
சோபன் பாபுவுடன் ஹைதராபாத்தில்
குடும்பமும் நடத்தினார்.
முழுதாக ஒரு ஆணை நம்பி வந்து தாம்
சந்தோஷமாக விரும்பியபடி வாழ்வதாக மகிழ்ந்தார். அதை ஒரு நேர்முகத்திலும்
தெரிவித்தார். தனது வாழ்க்கை தேர் ஒரு நிலைக்கு
வந்து விட்டதாகவே நினைத்தார்.
விதி யாரை விட்டது ???
சோபன்பாபுவின் முதல்தார வாரிசுகள்
வளர்ந்து இந்த இரண்டாம்தார பிரச்சனைகளை கேள்வி கேட்க தொடங்கினர். குடும்ப சண்டைகள்
தொடங்கின. மீண்டும் வாழ்க்கையில் ஒரு ஸ்திரத்தன்மை உடைவதை
ஜெயாவால் பொறுக்க முடியவில்லை. உடைந்து
போனார்.
தனக்காக சோபன்பாபு துணை நிற்பார் என்று
நம்பியது வீணாய் போனது.
இரண்டாம்தார பிரச்சனையில் சோபன் பாபு
தன முதல்தாரம் பக்கமே
நின்றுவிட்டார். இது மிகப்பெரிய அதிர்ச்சி. அடிப்படை
சரியில்லாமல்
தொடங்கும் எந்த உறவும் இப்படித்தான்
முடியும் என்று புரியும் போது
கலக்கமே உண்டாகும்.
தன் தாய் இரண்டாம் தாரமாக வாழ்க்கை
பட்டு அனுபவித்த வேதனைகளை தான் தாண்ட முயற்சித்து முடியாமல் அதை நிலையில் தானும்
வீழ்ந்து பட்டது ஜெயாவால் ஜீரணிக்க முடியவில்லை.
மீண்டும் ஒரு ஆணால் தான் வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறார்.
திரும்ப சென்னை வருகிறார். ஒரு முறை
இவர் தற்கொலைக்கு முயன்றார் என்கிற வதந்தி உண்டு.
அப்போது மீண்டும் இவர் வாழ்வில் எம்.ஜி.ஆர். இரண்டாம் முறையாக நுழைகிறார்.
இந்த சமயம் எம்.ஜி.ஆர். அரசியலில்
நுழைந்து தனி கட்சி கண்ட நேரம்.
அவருடைய செயல்பாடுகளும் அதிகார மற்றும்
தொடர்பு எல்லைகளும் விரிவடைந்த நேரம். இந்த சமயத்தில் ஜெயாவுக்கு உதவ முன் வந்த
எம்.ஜி.ஆர். அவருக்கு ஆறுதல் கூறி மாற்று வழி காட்ட முனைகிறார்.
தனது தொடர்புகளின் மூலம்
பத்திரிகைகளில் இவர் எழுத எம்.ஜி.ஆர். ஏற்பாடுகள் செய்கிறார். அதில் ஒன்று
துக்ளக். இன்னொன்று குமுதம்.
இப்போதுதான் சந்திரலேகா உபயத்தில்
சசிகலா வந்து சேருகிறார்.
கூடவே நடராஜனும் இணைகிறார். இந்த புதிய
தொடக்கத்தில் தனக்கு கிடைக்கும் வரவேற்பு ஜெயாவை சிந்திக்க வைத்து தனி நடை போட
வைக்கிறது. எந்த ஆண்கள் தன்னை வஞ்சித்தனரோ
அவர்களை தன்னால் வெல்ல முடியும் என்று நம்ப தொடங்குகிறார். அந்த ஆண்களையே இவர்
உபயோகிக்க முடிவு செய்கிறார். முதல் பலி...எம்.ஜி.ஆர்.
எந்த நடராஜனை கொண்டு தன்னை கண்காணிக்க
எம்.ஜி.ஆர். சொன்னாரோ அதே நடராஜன் சசிகலா துணை கொண்டு இவர் காய்களை நகர்த்த
தொடங்குகிறார்.
எம்.ஜி.ஆர்ஐ திறமையாக கையாண்டு அவரை
நெருங்கி தனக்கு வேண்டியதை சாதித்து கொள்கிறார். கட்சியில் பதவி பெறுகிறார்.
கிடைத்த இடத்தை தக்க வைக்க உழைத்து
முன்னேறுகிறார்.
தன்னை சுற்றி ஒரு கூட்டம் அவசியம்
என்று உணர்ந்து அரசியலில் நிலைக்க எல்லா வழிகளையும் தெரிவு செய்கிறார். எம்.ஜி.ஆறே
விலகினாலும் விடாமல் இவர் தொடர்ந்து தொடர்புகளை தக்க வைத்துக் கொள்கிறார்.
அரசியல் ஆட்டம் தொடங்குகிறது.
இந்த சமயத்தில்தான் திடிரென்று
எம்.ஜி.ஆர். மறைகிறார்.
மீண்டும் ஒரு தடுமாற்றம்.
தன்னை சுற்றி இருக்கும் ஆண்கள் கூட்டம்
மீண்டும் ஒரு முறை தன்னை வகைப்படுத்தவும்
பயன்படுத்தவும் முயல்வதை உணர்ந்து கொள்கிறார்.
ஆனால் இந்த முறை இவரை சுற்றி இவர்
சுயமாக சேர்த்த ஆண் பெண்
கூட்டம் நிற்கிறது. இது இவருக்கு புது
தெம்பை அளிக்கிறது. இப்போது இவர் ஆட்களை பயன்படுத்துவதில் கைதேர்ந்தவராக ஆனதால்
திறம்பட தன இமேஜை கட்டமைக்கிறார். யாரையும் தம்மை நெருங்க விடவில்லை. தனியாக துளிர்த்து பின்னாளில் தன்னை
மீறும் என்று இவர் கணிக்கும் எந்த ஆட்களும் தனது அருகில் இல்லாமல்
கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
முதல் முறை சட்ட மன்றத்தில்
தாக்கப்படும் போது உண்மையில் இவரும் கருணாநிதியை சுட்டிக்காட்டி "அடிடா அவனை
" என்று வன்முறையை தூண்டியவர்தான். ஆனாலும் பிரச்சனை வெடித்த பிறகு தான்
மானபங்க படுத்தப்பட்டதாக தைரியமாக கூறி பெண்களின் இரக்கத்தை பெற்றார்.
நன்றி.தி.மு.க..மற்றும் அந்த கட்சியின்
அவசர குடுக்கைகள்.
கருணாநிதிக்கு இந்த பெண்ணின் போராட்ட
குணம் வியப்பாக இருக்கிறது.
பெண் அதுவும் பார்ப்பன பெண் மிக எளிதாக
விழ்த்தி தாண்டி போகலாம் என்று நினைத்த கருணாநிதிக்கு இப்படி நேரடியாக வன்முறைக்கு
பயப்படாத ஜெயலலிதா ஒரு அதிர்ச்சியே. எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கை எடைபோட்டதில்
செய்த அதே தவறை திரும்ப செய்து கையை சுட்டுக் கொண்டார்.
உள்ளூர பயம் நெக்கி தள்ளி மனம் சோர்ந்த
நேரத்தில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக கடிதம் கூட எழுதினார் ஆனால். அதை கொடுக்க வில்லை. பின் மனச் சோர்விலிருந்து
மீண்டு வந்து கடிதத்தை அழிக்க சொன்னார்.
.
இந்த குழப்பமான சூழலில் மீண்டும்
கருணாநிதி இவரை சீண்டும்
விதத்தில் இந்த கடித்தை கைப்பற்றி வெளியிட்டார். இது ஜெயாவுக்கு
பெரிய அதிர்ச்சி.
இந்த கடிதம் நடராஜன் வசம் இருந்தது.
இது போலீசால் கைப்பற்றப்பட்டது என்ற கதையை அவர் நம்பவில்லை. நடராஜன் தான் தனக்கு துரோகம் செய்து கருணாநிதியிடம் விலை போய்
விட்டார் என்று நம்பினார்.
மீண்டும் ஒரு ஆண் தனக்கு துரோகம்
செய்வதாக புரிந்து கொண்டு வெகுண்டார். தான் தோற்று போவதை ஒருநாளும் விரும்பாத ஜெயா
மீண்டு வந்து பழி வாங்கினார். மற்றது அரசியல் வரலாறு.
இத்தகைய பின்புலத்தை மனதில் கொண்டே
ஜெயலலிதா என்கிற
பெண்ணை பார்க்க வேண்டும்.
தொடக்கத்தில் தான் கேட்டதையெல்லாம்
கிடைக்க செய்யும் அம்மாவின்
செல்லத்தில் தொடங்கிய முரட்டு
பிடிவாதம் பின்னாளில் பூதாகாரமாக
வளர்ந்து பலரையும் பாதித்தது.
இது போன்ற மனநிலை எல்லோருக்கும்
சிறுவயதில் தோன்றும். ஆனால் வயது ஏறயேற சூழ்நிலைகளும் மற்றவர்களும் நிதர்சனத்தை
புரிய வைத்து நம்மை தரைக்கு கொண்டு வரும்.
ஆனால் சிலருக்கு அப்படி இறங்க மனம்
வராது. தான் தோற்கவே முடியாத தனிப்பிறவி என்றே நினைத்துக் கொள்வார்கள். அப்படி
தோற்றால் இந்த உலகமே தங்களுக்கு எதிராக
சதி செய்வதாக நம்புவார்கள். இவர்கள் பலமில்லாத சூழ்நிலையில் தோற்றால் இவர்களுக்கு
தற்கொலை செய்யும் மனப்பான்மை கூடும்.
ஹிட்லர் ஒரு உதாரணம்.
ஆனால் ஜெயா போன்ற போராட்ட குணம்
கொண்டவர்கள் தங்களின் சூழ்நிலையை தாங்களே உருவாக்கி தங்கள் காரியங்களை
சாதித்து கொள்வார்கள். அதற்கான புத்திசாலித்தனம் இவர்களிடம் இருக்கும்.
பெரும்பாலான சர்வாதிகாரிகள் குறைந்த
பட்ச மனநிலை இது போன்ற முரட்டு பிடிவாதம் ஆகும். இப்படி பட்டவர்கள் தங்களை சுற்றி
துதிபாடிகளையே வைத்திருப்பார்கள். அப்படிபட்டவர்களையே வளர்த்தெடுப்பார்கள்.
ஜெயா இந்த மாதிரி மனநிலை கொண்டவர்தான்.
முதலில் சுய பச்சாதாபத்தில் தொடங்கினாலும் தான் நினைத்தால் ஆடம் பிடித்தால்
காரியங்கள் நடக்கும் என்பதை தன சித்தியின் மூலம் அம்மாவின் மூலம் இவர் நம்ப
தொடங்கியதுதான் தொடக்கம். இதை எம்.ஜி.ஆரும் வளர்த்தெடுத்தார். இவரது அம்மா இவரை
.."உனக்கென்னடி ..நீ மகாராணி " என்று செல்லமாக சொல்லியதை நிஜமாகவே
நம்பினார் என்றே தோன்றுகிறது. காரணம்...பின்னாளில் இவர் செய்த செயல்கள்.
இந்த நினைவின் காரணமாகவே இவர்
யாருக்கும் கட்டுப்பட மறுத்தார்.
அது எம்.ஜி.ஆரோ, கருணாவோ, யாராக இருந்தாலும் சரி..இவர் தான்
நினைத்ததை செய்ய முற்பட்டார். தான் செய்வது சரியே ...அதன் விளைவுகளுக்காக
யாரிடமும் வருத்தமோ மன்னிப்போ கேட்க முடியாது என்று முரட்டுத்தனமாக நம்பினார்.
ஒரு அரசி யாரிடமும் மன்னிப்பு
கேட்பதில்லை என்றே நினைத்தார்.
செத்தாலும் சாவேனே ஒழிய மன்னிப்பு
மட்டும் கேட்க மாட்டேன் என்கிற
அளவுக்கு பிடிவாதம் இவரிடம் இருந்தது.
முதலில் ஆட்சிக்கு வந்த போது உலகம் இவரது காலடியில்
என்கிற மிதப்பு இவரிடம் இருந்தது. தன்னை ஒரு ராணியாகவே நினைத்தார்.
ஒரு பொதுத் தேர்தலின் வெற்றி ஒரு
மாநிலத்தின் தலைமை பதவி.
தான் வாழ்க்கையில் வெற்றி கண்டதாக உலகையே வென்றதாக
பூரித்தார்.
விளைவு ...
ஒரு ராணி போல வாழ முற்பட்டார். அவர்
வெளியே வந்தால் பண்டிகை.
திரும்பினால் திருவிழா. பேசினால் பாராட்டு விழா.
தன்னை ஒருவரும் கேள்வியே கேட்க
முடியாது என்றே நம்பினார்.
அதுவரை உலகில் யாருமே நடத்திராத
அளவுக்கு மிகப் பெரிய திருமணத்தை நடத்தி காட்டினார். அதில் யாருமே செய்யாத வண்ணம்
நகைக்கடையாக தன்னையும் தன தோழியையும் அலங்கரித்து கொண்டு வீதி உலா வந்தார்.
அடிமைகள் கூட்டம் சேர சேர கொண்டாட்டம்
அதிகம் ஆகியது.
இவர் உட்கார என்றால் இவர்கள் படுக்க
தயாரான அடிமைகள் இருக்கும் போது இவர்க்கு என்ன கவலை !!
இவர் முட்டாள் இல்லை.
தன்னை வணங்குபவர்கள் தங்கள்
சுயநலத்திற்காகத்தான் தன் காலடியில் வீழ்கிறார்கள் என்று இவருக்கு நன்றாகவே
தெரியும். அதனால்தான் அப்படி காலில் விழாமல் தலை தூக்கி பார்ப்பவர்களை அருகிலேயே சேர்ப்பதில்லை.
இந்த ராணி போன்ற மனநிலையில் நல்லது
நடக்காமலும் இல்லை.
தன்னிடம் வந்து காலில் விழுபவர்களை
தான் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நம்ப வைப்பார். அவர்களுக்கு
வேண்டியதையெல்லாம் கொடுத்து உச்சத்தில் கொண்டு போய் மற்றவர்களையும் தன் காலில் விழ வேண்டிய அவசியத்தை
உணர்த்தினார்.
அவர் அறிவித்த திட்டங்கள் பலவும் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான
திட்டங்களே.இது அவரின் புத்திசாலிதனத்தையே காட்டுகிறது. பெண்
வாக்காளர்கள் சாதரணமாக அரசியலில் ஒருவரை நம்ப மாட்டார்கள்.
நம்பி விட்டால் கடைசிவரை மாற மாட்டார்கள். இது எம்.ஜி.ஆர்
க்கும் பொருந்தும். மேலும் ஜெயா ஒரு பெண். எனவே பெண்கள் தங்களின் பிரதிநிதியாக
இவரை பார்க்க தொடங்கினர். இதற்கு தூபம் போடுவது போல் அவரை ஒரு போராடும் நாயகியாக
வெற்றி செல்வியாக தொடர்ந்து உருவகபடுத்தும் ஊடகங்கள் மேலும் வளர்த்தன. ஒரு பெண்ணாக தாங்கள் ஜெயிக்க
முடியாத ஆண் வர்க்கத்தை இவர் ஆள்கிறார் என்கிற நினைப்பே ஒரு சக்தியாக இவருக்கு ஒரு
பிம்பத்தை கொடுத்தது. எனவேதான் யாரை கேட்டாலும் இவர் ஒரு பெண்ணாக
இருந்தும்....இப்படித்தான் புகழுரையை தொடங்குவார்கள்....
அரசியலில் அவர் வேகமாக கற்று கொண்ட
விஷயங்களை திறம்பட
உபயோகித்து எதிரிகளை வீழ்த்தினார். அவர் ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போதும் காவல்துறையை பெரிதாக பகைத்துக் கொண்டதேயில்லை. இன்னும் சொல்லப்போனால் காவல் துறைக்கு
சர்வ சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அதனால் சர்வாதிகார கோட்பாட்டின் படி உளவுத்துறை சிறப்பாக கை கொடுத்தது. ஊரில் போலிசே ரவுடி போல்
இருந்தால் உள்ளூர் ரவுடி பொத்திகிட்டு போவான் என்பது போல் தலைமையே அராஜகமாக இருக்க அடிமைகள் அண்டி பிழைப்பதே
சிறந்தது என்று பதுங்கினர். இந்த நிலை எல்லாம் சரியாக இருப்பது
போன்ற மாயையை உருவாக்கியது. இலவசங்கள் சாதனைகளாக சொல்லப்பட்டது.
ஒரு சொல்,ஒரு புன்னகை, குடும்பத்தை பற்றி ஒரு ஆறுதல் சொல்
அடிமைகளை ஆயுள் சந்தாக்காரராக மாற்றும்
என்னும் வித்தையை
புரிந்து கொண்டு சரியாக பயன் படுத்தினார்.
புத்திசாலித்தனத்தை மீண்டும் மீண்டும்
தன் நலனுக்கும் தன் புகழுக்கும் மட்டுமே பயன்படுத்தினார். ஒரு அரசி போல தன்
அரசவையில் தன்னை புகழ்ந்து பாடுவதை ரசித்தார். தருமிகள் கொண்டாடினர்.
ஒரு கட்டவுட் கேட்டால் அடிமைகள் 100
கட்டவுட் வைத்தனர்.
வீட்டை விட்டு வெளியே வந்தால் நகரம்
ஸ்தம்பித்தது.
நாளாக நாளாக நேர்மையானவர்கள் இவரை
விட்டு விலகினர்.
வெறும் ஜால்ரா கும்பல்களும் தரமற்ற உள்ளூர்
தலைவர்களுமே
இவரை சூழ்ந்திருந்தனர். இந்த கூட்டம்
இவர்களை தவிர மற்றவர்கள்
ஜெயாவை நெருங்கு விடாமல் பார்த்துக்
கொண்டனர். இந்த அமைப்பு ஜெயலலிதாவுக்கு உகந்ததாக இருந்ததால் அவரும் அதை
ஊக்குவித்தார்.
விளைவுகளை கண்டு இவர் வருந்தியதே
இல்லை.
அது இரண்டு லட்சம் அரசு ஊழியர்களை ஒரே
இரவில் வேலையை விட்டு நீக்கியபோதும் சரி, சிதம்பரத்தில் பத்மினி
காவல்நிலையத்திலேயே கற்பழிக்கப்பட்ட போதும் சரி, அவரது எம்.எல்.ஏ.வையே (VPR ரமேஷ்)
துரைசாமி மேம்பாலத்தில் அவரது ஆட்சியின் போது வெட்டப்பட்ட போதும் அவர் அதுகுறித்து
பொதுவில் ஊடகங்களில் வந்து மக்களிடையே பேச வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. இந்த
மூன்றை ஒரு உதாரணத்திற்கே எடுத்துக் கொண்டேன். இது போல பல நிகழ்வுகளுக்கு
இவர் பதில் அளித்ததே இல்லை. நம்ம
மொக்கை ஊடகங்கள் நம்மை விட மிரண்டு அவரை கேள்வியே கேட்டதில்லை. கும்பகோண மாகமக விபத்தோ,
அல்லது மதுக்கடை மூட கோரிய சசிபெருமாள்
மரணமோ இவரை அசைக்க இல்லை.
எத்தகைய புத்திசாலி, வணங்கா முடியாக
இருந்தாலும் அவரை தனது காலில் விழ செய்து இவர் மகிழ்ந்தார். அப்படி விழ மறுத்து
எதிர்த்தவர்களை எந்த அளவுக்கும் சென்று அசிங்கப்படுத்த முனைந்தார்.
உதாரணமாக நாட்டில் உள்ள அனைத்து
அரசியல்வாதிகளும் கண்டு மிரண்ட டி.என். சேஷனின் மீது இவரது ஆட்சியில் மிக மோசமான
முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இவர் பொறுப்புள்ள முதலமைச்சராக ஒரு விளக்கம்
கூட கொடுக்கவில்லை. சுப்ரமணிய சுவாமிக்கு சென்னை நீதி மன்றத்தில் இவருடைய
கட்சிகாரர்களால் கொடுக்கப்பட்ட எதிர்ப்பு உலக வரலாற்றில் ஆம் உலக அரசியல்
வரலாற்றில் தமிழ்நாட்டின் பெயரை நார வைத்தது. ஜெயா வருத்தமோ கண்டனமோ செய்யவில்லை. மிகவும் நேர்மையானவர் என்று பேசப்பட்ட
முன்னாள் தேர்தல் அதிகாரி மலைச்சாமியை தன்னிடம் அழைத்து பின் அவரை ஒன்றுமில்லாமல்
டம்மி ஆக்கினார்.
இந்து மத சாமியார்களும் இவரின்
கோபத்திற்கு தப்பவில்லை. சங்கராச்சாரியார் கைது ஒரு உதாரணம். ஒரு பெரும்பான்மை
மதத்தின் கோபத்திற்கு ஆளாக நேருமே என்கிற கவலையெல்லாம் அவர் படவில்லை. காஞ்சி
சங்கர மடத்தின் வீச்சு இவருக்கு தெரிந்திருக்கிறது.
காஞ்சிக்கு கிடைத்த அடி மதுரை ஆதினம்
வரை எல்லாரையும் ஒடுக்கியது.
பத்திரிக்கைகளையும் இவர் விட்டுவைக்கவில்லை.
இதில் இவர் கருணாநிதியின் பாணியை மேற்கொண்டு அதற்கு மேலும் சென்றார்.
அதாவது முதலில் பேரம் பேசுவது. பிறகு
மிரட்டுவது. மீறி போகும் போது
வன்முறையில் இறங்குவது. இல்லையேல் பொய்
வழக்குகள் போட்டு
அலைய விடுவது. ஜெயாவின் ஆட்சியில்தான்
இதுவரை இல்லாத அளவுக்கு வழக்குகள் பத்திரிகைகள் மற்றும் அதன் முதலாளிகள் மீது
போடப்பட்டது. இதில் கூத்து என்வென்றால் இது அரசு சார்பான வழக்காக போடப்பட்டதால்
அரசு வழக்கறிஞ்சர்கள் ஜெயாவுக்கு தனிப்பட்ட செலவு வைக்காமல் வாதாடுவார்கள். அதே
சமயம் பத்திரிகைகள் தங்கள் சொந்த செலவில் இந்த வழக்குகளை எதிர் கொள்ள வேண்டும்.
யாரால் அரசு இயந்திரத்துடன் நெடுங்காலம் மோத முடியும். ? இதனாலேயே பலரும் பணிந்து போயினர். எதிர்த்து
நின்றவர்களும் கருணாநிதியின் பின்புலத்தாலேயே தைரியமாக எதிர்த்தனர். அவர்கள் மீது
வன்முறை சில சமயம் கட்டவழித்து விடப்பட்டது. கடைசி உதாரணம். நக்கீரன் பத்திரிகை
மீதான தாக்குதல். நக்கீரன் மஞ்சள் பத்திரிகை போன்று செயல்பட்டாலும் அதற்கு ஒரு
அரசின் எதிர் வினை வன்முறையல்ல என்பதை ஜெயா ஏற்றுக் கொள்ள வில்லை.
இந்திராகாந்தி போலவே எதிர் கட்சிகளை
கூடிய மட்டும் பிளந்து பலமிழக்க செய்வார். அதற்காக தன்னுடைய அத்தனை திறமைகளையும்
உபயோகிக்கும் புத்திசாலித்தனம் உண்டு. உதாரணமாக வளர்ந்து வந்த தலித் எழில்மலை
போன்ற தாழ்த்தப்பட்ட தலைவரை தன்னிடம் சேர்த்துக் கொண்டு பின் அவரை ஒன்றுமில்லாமல்
செய்தார். இதன் மூலம் இவருக்கு தாழ்த்தப்பட்ட ஓட்டும் கிடைத்தது. வளரும் இரட்டை
லாபம்.
இதே முறையில் இவர் வைகோ வை அரசியலில்
ஒன்றுமில்லாமல் செய்தார். அந்த விதத்தில் இவருக்கு கருணா நன்றிக்கடனே
செய்யவேண்டும். இது போல பல வேலைகளை பொழுது போக்காக செய்யக் கூடியவர். ஆனால்
எதற்கும் விளக்கம் தர மாட்டார். அது ஒரு அரசியாக தனக்கு தரக்குறைவு என்ற எண்ணமே
இவரிடம் இருந்தது. இவருக்காக மற்றவர்களை பேச விட்டு வேடிக்கையே பார்ப்பார்.
இவருடன் இருந்து பின் மாறுபடுபவர்களை
இவரது வீட்டுக்கு கூப்பிட்டு தேவைப்பட்டால் செருப்பால் கூட அடிப்பார் என்று
கூறுபவர்கள் உண்டு.
இவர் எதற்கும் யாருக்கும் அஞ்சியதாக
தெரியவில்லை. இது வீரம் என்று
கொள்ளலாகாது. இது குரூரம் கொண்ட
வக்கிரம் என கொள்ளலாம்.
அவர் குற்றவாளி என்று இரண்டு முறை
நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியும்
அவர் “என்னை கேள்வி கேட்க நீங்கள் யார்
“ என்கிற விதத்திலேயே
நடந்து கொண்டார்.
இவர் பற்றிய அனைத்து செய்திகளுமே பிறர்
வழி கேட்பதாகவே முடிகிறது. காரணம் இவர் தன்னை பற்றி பொதுவில் பேசுவதில்லை. இவர் மகா புத்திசாலி. “வாராது வந்த மாமணி”
என்றெல்லாம் இவரிடம் பலன் அடைந்தவர்களே கூறுவார்கள். எதிரிகளும் போற்றும்
வல்லமையெல்லாம் இவரிடம் இல்லை.
எல்லா சர்வாதிகாரிகளும் வாழ்ந்த
வாழ்க்கையே இவர் ஒரு ஜனநாயகத்தில் வாழ்ந்தார். அது ஒன்றுதான் வித்தியாசம். ஒரு
குருட்டு அதிர்ஷ்டத்தில் இவருக்கு தொடர்ந்து மீண்டு வர வாய்ப்புகள் கிடைத்துக்
கொண்டே இருந்தது. அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அந்த அளவில் இவர்
புத்திசாலியே. தந்திரசாலியே.
இவருக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு இவர்
மக்களுக்கு எத்தனையோ நல்லது செய்து இறவா புகழ் அடைந்திருக்க முடியும். அத்தனை
வாய்ப்புகளையும் இவர் தனது முட்டாள்தனத்தால் பாழாக்கினார். உதாரணமாக 1991 ல்
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் நடந்த தேர்தலில் மக்கள் திமுக மேல் சந்தேகமும்
கோபமும் கொண்டு மிகப் பெரிய வெற்றியினை இவருக்கு அளித்தனர்.
அத்தகைய வெற்றியை எம்.ஜி.ஆர் கூட
பெற்றதில்லை. ஆனால் நடந்தது என்ன ?
தமிழகம் வரலாறு காணாத கேவலங்களை கொள்ளைகளை ஊழல்களை கண்டதுதான் மிச்சம்.
அந்த ஐந்து வருடங்களில் இவர் செய்த குற்றங்கள் இவரது வாழ்நாள் முழுவதும்
துரத்தியது. அந்த தவறுகளை மறுக்கவும், மறைக்கவும், அதன் விளைவுகளை எதிர்த்தும்
இவர் மேலும் பல தவறுகளையும் செய்ய வேண்டியிருந்தது. அப்படி செய்ய அதற்கான
ஆட்களையும் தொடர்ந்து கூட வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் தன தவறுகளுக்கு தானே
சிறையானார். இரையானார்.
இப்படி ஒரு தலைமை வருவதற்கும் வளர்வதற்கும்
அவர் மட்டும் காரணமல்ல. கடந்த 50 வருடங்களாக தமிழ்நாடு தனிமனித பகைமையில் பிரிந்து அந்த வெறுப்பு அரசியலே கொள்கைகளாக வகுத்துக் கொண்டது.
இதற்கு முழு பொறுப்பும் திமுக வையும் அதன் தலைவர் கருணாநிதியையே சாரும். இப்படிப்பட்ட தனிமனித அரசியல் செய்தே அவர் கட்சியை வளர்த்தார். வளைத்தார். இவருடைய அரசியல் நிழலே தமிழ்நாட்டை திசை திருப்பி பின் எம்.ஜி.ஆர்.ம. ஜெயாவும் அதை வேறு
பாதையில் கொண்டு சென்று விட்டனர். இத்தகைய தமிழக சூழலுக்கு
சற்றும் குறையாமல் மோசமாகி வந்த மத்திய அரசு அரசியலும் இந்த சீரழிவிற்கு உரமிட்டது. மாநில தலைமைகளை தொடர்ந்து சீரழித்து ஒரு குடும்ப ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயன்ற காங்கிரஸ் போன்ற தேசிய தலைமைகள் இங்கு பேச வக்கற்று போயின. உண்மையில் ஜெயா போன்ற புத்திசாலி பிடிவாதவமான ஆளுமையை கண்டு அவர்கள் பம்மினர் என்றே சொல்ல வேண்டும். எல்லாம் ஒரு சுயநலமே.
கட்சிகள், அரசு அதிகாரிகள், ஊடகத்துறைகள், நீதித்துறையினர் காவல் துறையினர் என்று சுயநலம் சமுகத்தின் எல்லா தளங்களிலும் வியாபித்ததால் ஒரு இரண்டு தலைமுறை தாங்கள் செய்வது தவறு இல்லை. புத்திசாலித்தனமே என்று நம்ப தொடங்கிவிட்டனர். அதை மிகச் சரியாக உபயோகித்தார் ஜெயா. சீரழிந்த ஒரு சமுகத்தின் அடையாளம் அவர்.
சரியாக வளர்க்கப்படாத ஒருவர் சந்தர்ப்ப வசத்தால் ஒரு நாட்டின் தலைமை பொறுப்புக்கு வந்தால் அது ஒரு விபத்தே. அதன் விளைவை இந்த தமிழ்நாடு வெகுநாள் அனுபவிக்கும். காரணம் ஒரு நாட்டின் தலைமை தவறுகள் தலைமுறைகளை பாதிக்கும். #jaya, #jayalalitha #amma