Thursday, March 23, 2017

1947 முதல் 1967 வரை..!

காமராஜர் ஆட்சி பொற்காலம் என்கிறார்களே அது ஏன் ?  
அது விழ வேண்டிய அவசியம் என்ன என்று ஒரு நண்பர் சமிபத்தில் கேட்டார் .


பதில் ஒரு வரியில் சொல்லக்கூடியதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

பொற்காலம் என்பதற்கு பல்வேறு தரவுகள் இன்று காணக் கிடைக்கின்றன. காரணம் அவை அரசு செயல்பாட்டு குறிப்புகளில் இருந்தே யாவரும் அறியலாம்.  ஒரு இருபது  ஆண்டுகளில் இந்த தமிழ்நாட்டு பன்முக வளர்ச்சிகளை அடைந்தது. அது அப்போது இருந்தவர்களுக்கு மிகச் சாதாரணமான காரியமாக தெரிந்தது.

ஆனால் அதன் மகத்துவம் அடுத்த ஐம்பது ஆண்டுகளின் ஆட்சியாளர்களின் செயலின்மை ஊழல் காரணமாக பிரம்மாண்டமாக பரிமளித்தது.

நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பது போல!!
....
காங்கிரஸ் ஆட்சி விழுந்த தேர்தல் நடந்த போது நான் சிறுவன். ஒட்டு போடும் வயதில்லை. 9 வயது ...ஆனாலும் சுற்றி நடப்பதை பெருமளவு உணர்ந்து இருந்தேன் என்றே சொல்ல வேண்டும். 

நான் நகரத்தில் மயிலையில் அப்போது வாழ்ந்தவன். கிராம புறங்களை அந்த தேர்தல் சமயத்தில் காணாவிட்டாலும் செய்திகளை வாசிக்க வேண்டும் என்று என் தந்தையார் எம்மை பழக்கியதால் அரசியலை அவதானித்தேன். நான் கண்டது ஒரு சிறு ஜன்னல்தான்.

இதை இரு வகையாக பிரிக்கலாம். 1. சமுகம். 2. அரசு.
. 
அரசு யார் வேண்டுமானாலும் அணுக கூடியதாக இருந்தது. சிறு வேலைகளுக்கெல்லாம் லஞ்சம் கிடையாது. அரசு மருத்துவமனையில் என் தாய் என்னை அழைத்து செல்லும் போது நிறைய மரியாதையும் மனிதாபிமானமும் கண்டேன். ராயபேட்டை மருத்துவமனையும், பொது மருத்துவமனையும் நிறைய சுத்தமாக இருந்தது. எம்.ஜி.ஆர். ராயபேட்டை மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றார்.  மந்திரிகள் மருத்துவமனைகளை கண்காணிக்க வருவது சகஜம்.

அரசு மக்களை கைவிடாது என்று நம்பினார்கள். இருக்கும் தெருக்கள் சரியாக பராமரிக்கப் பட்டன. மக்கள் நல திட்டங்களை அரசு முனைப்போடு செய்ய விழைந்தது. தமிழக மெங்கும் மின்சாரம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதில் அந்த அரசு மிகவும் முனைப்பாக செயல்பட்டது. 
எல்லா ஊர்களுக்கும் சாலை வசதி தேவை என்பதை உணர்ந்து அதற்காக முனைந்தது. அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கல்விக்கு பெரும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு அதை நோக்கி அரசு செயல்பாடுகள் அமைந்தன.ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரூ ஆரம்ப பள்ளி தொடங்க வேண்டும் என்கிற நோக்கம் செயலாக்க பட்டது. 

மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு ஏழை எளியோர் குழந்தைகள் பலன் பெற்றனர்.  உணவு கிடைக்கும் என்கிற ஒரே காரணத்தினால் கூட பள்ளிக்கு வந்த குழந்தைகள் என் வகுப்பிலேயே இருந்தனர்.  நான் படித்த அரசு உதவி பெற்ற பள்ளியிலும் மதிய உணவு திட்டம் நிறைவேற்றப் பட்டது. ஊழியர்கள் ஒரு ஈடுபாட்டுடன் செயல்பட்டதாக எனக்கு பட்டது.  

ஊழல் துளிர் விடும் நேரம் என்று நினைக்கிறேன்.  ( அது
1966  என்று நினைக்கிறேன். மதிய உணவு வரும் போது மாணவர்களை தவிர சில ஆசிரியர்களும், பியுனும அந்த உணவு வந்தவுடன் தங்களுக்கு எடுத்து வைத்துக் கொண்டு பிறகுதான் மாணவர்களுக்கு பரிமாற தொடங்குவார்கள்.  அதற்கே அவர்கள் பயந்து பயந்து மறைத்து எடுத்து செல்வார்கள்.  இது பெரிய விஷயமா என்றால்...இது பெரிய விஷயத்தின் தொடக்கம் என்றே கூறுவேன். )

திறமையுள்ளவர்கள் மட்டுமே அரசு வேலையில் சேர முடியும் என்கிற ஒரு நம்பிக்கை இருந்தது.
கடவுள் நம்பிக்கையும், மற்றவர்களுக்கு துரோகம் செய்து சம்பாதிப்பது பாவம் என்று நம்பினார்கள். தெரிந்தே உணவுகளில் கலப்படத்தை அனுமதிக்கவில்லை.  

காசு சம்பாதிக்கும் ஒரே துறையாக காவல்துறை இருக்கவில்லை. திருடர்களே இல்லாத ராமராஜ்யம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் திருடர்கள் இரவில் மட்டும் திருடி பகலில் வெளியில் தைரியமாக வலம் வர பயந்தார்கள்.  நல்லவரிடம் பணம் இல்லாமல் போனாலும் மரியாதையை மக்கள் கொடுத்தனர். அது அவர்கள் வாழ்வில் நிறைவை தந்தது. ரவுடி கூட ஒரு தைரியமான நல்லவரை காணும் போது பயந்தான். மரியாதையாக ஒதுங்கி போனான். காரணம் எந்த ரவுடிக்கும் தான் செய்வது தவறு என்று தெரியும்.

அரசியலில் மரியாதை அறுபதுகள் வரை மிச்சம் இருந்தது. அண்ணா போன்ற பேச்சாளர்களே முதல் முதலில் மேடையேறி கிளுகிளுப்பு பேச்சை வதந்தியை மறைமுக தமிழ் சொல்லாற்றலுடன் பேசி கூட்டம் சேர்த்தனர். அவர் கூட ஒரு எல்லைக்குள் நின்று தாக்கினார்.  

ஆனால் அவர் போட்ட விதை பின் கருனாநிதியின் தலைமையில் வெற்றிகொண்டான் தீப்பொறி ஆறுமுகம் என்று ஆல்போல் தழைத்தது.

நான் அறிந்து எந்த காங்கிரஸ் கட்சிகாரனும் ( திருமதி. அனந்தநாயகி அம்மாளை தவிர ) மாற்று கட்சிக்காரனை கூட அவமரியாதையாக பேச துணியவில்லை. நெல்லை ஜெபமணி போன்றோர் உரத்த குரலில் முழங்கினாலும் அதில் ஒரு கண்ணியம் இருக்கும். இதில் அனந்தநாயகி அம்மாள் மயிலை தொகுதியில் ம.பொ.சி க்கு எதிராக போட்டியிட்ட போது பேசியவை மிகவும் தரம் குன்றிய பேச்சு. (அப்போதைய தரத்திற்கு...இப்போதை நிலை வேறு.)

ப்ளெக்ஸ் போர்டுகள் இல்லை. மிகப்பெரிய அரசியல் கூட்டங்கள் நகரை ஸ்தம்பிக்க வைக்கவில்லை. அண்ணாவின் இறுதி ஊர்வலமே சென்னையை ஒட்டு மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த முதல் நிகழ்வு என்று கூட சொல்லலாம். வீதி முனை கூட்டங்கள் அதிகம். பெரிய பெரிய பேச்சாளர்கள் கூட தெரு முனை கூட்டங்களுக்கு வந்தே ஆக வேண்டிய நிலை.  

தினசரிகளில் முழு பக்க விளம்பரங்கள் கிடையாது. விளம்பரங்கள் கொடுக்கும் அளவுக்கு கட்சிகளிடம் பணம் கிடையாது. ஒவ்வொரு கூட்டத்திலும் துண்டு ஏந்தி தொண்டர்கள் வருவார்கள். கிட்ட தட்ட பிச்சை போல்...கூட்டத்திற்கு வந்தவர்கள் காசு போட்டு உள்ளூர் மன்ற நிர்வாகிகள் போண்டியாகாமல் காப்பாற்றுவார்கள்.

தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் சைக்கிள் ஊர்வலம் விடப்படும். காலையில் ஒரு முறையும் மாலை ஒருமுறையும் அந்த தொகுதி கட்சியினருடன் சில சமயம் தொகுதி வேட்பாளரே வருவார். கோஷமிட்டு செல்வார்கள். பெரிய செலவு கிடையாது.
சிறு நோட்டிஸ்கள் கையில் கொடுக்கப்படும். முக்கால்வாசி அவை சாணி பேப்பரில் அச்சடித்து இருக்கும். கொஞ்சம் பணம் இருப்பவர்களே சுவரொட்டியில் கொஞ்சம் பெரிய அளவில் விளம்பரம் செய்வார்கள். பெரிய படம் வைத்தவன் நல்லவன் என்று நம்பப்படவில்லை.  எல்லாவற்றிக்கும் மேலாக ஒட்டு போட மக்கள் பணமோ குடமோ வாங்கவில்லை. ஒட்டு போடுவதை பெருமையாக விழா போல் பங்கு கொண்டனர்.

எனக்கு தெரிந்து சென்னை நகரம் எப்படி உருமாறியது.:
நகர அபிவிருத்தி கழகம் (CITY IMPROVEMENT TRUST – CIT NAGAR – பின்னாளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) சென்னையை சுற்றி புதிய பகுதிகளை திட்டமிட்டு அமைத்தது. அப்படி அமைக்கும் இடங்களில் பூங்காக்களையும், அமைத்தது. 
இவைதான் சி.ஐ.டி நகர் என்கிற பெயரில் அபிராமபுரத்தில், ராஜா அண்ணாமலை புரத்தில், தியாகராஜா நகரில், நந்தனத்தில் உருவாகின. அடையாறு பகுதியில் இந்திரா நகர், சாஸ்திரி நகர், காந்தி நகர், நேரு நகர் பெசன்ட் நகர் என்று மிகப்பெரிய விரிவாக்கம் திட்டமிட்டு தொடங்கி வெகு விரைவில் முடிக்கப்பட்டது. புதிதாக பல வேறு மக்கள் இந்த நகர்களில் குடியேறினர்.  மேற்கு மாம்பலத்திற்கு மேற்கே அசோக் நகர், பின் அதன் விரிவாக்கம் ( பின்னாளில் கே.கே.நகர் ஆனது ) திட்டமிட்டு தொடங்கியது.
அதையும் தாண்டி திட்டங்கள் பூவிருந்தமல்லி, பரங்கிமலை சாலை வரை வரை படத்தில் இருந்தன. 1967  காங்கிரஸ் ஜெயித்திருந்தால் இவை நிச்சயம் நிறைவேறியிருக்கும்.   
ஈ.காடு தாங்கல அருகே ஜாபர்கான் பேட்டையில் 1200 அடுக்கு மாடி குடியிருப்புகள் நவரத்தினா காலனி என்று தொடங்கப்பட்டு முடிக்கும் போது கழக ஆட்சியில் பாரதி தாசன் காலனி ஆகியது

அண்ணா நகரும் திட்டத்தில் பாதி நிறைவேறியிருந்தது. அப்போது அதன் பெயர் இடவில்லை. காங்கிரஸ் தோற்றதும் திமுக செய்த முதல் வேலை அந்த திட்டம் முடிந்தவுடன் அந்த குடியிருப்பு பகுதிக்கு அண்ணா நகர் என்று பெயர் வைத்ததுதான். 
அதே போல் அசோக் நகர் விரிவாக்கம் முடிந்தவுடன் அதன் பெயர் கே.கே.நகர் என்று பெயர் மாறியது. காரணம் அப்போது ஆட்சியில் கருணா இருந்தார்.  நந்தனத்தில் இருந்த கலைக் கல்லூரிக்கு அருகில் கட்டப்பட்ட அலுவலகம் தமிழ்நாடு Housing Board ஆகியது. அதற்கு எதிரில் கட்டப்பட்ட 10 மாடி கட்டிட பெயரிலும் சர்ச்சை வந்தது. பெரியார் மாளிகை என்று இருந்ததை கருணாநிதி மாளிகை என்று பெயர் மாற்றி பின் அது கலவரமானது. எம்.ஜி.ஆர் வந்து அது மீண்டும் பெரியார் மாளிகை ஆனது..

அண்ணா மேம்பாலம் திட்டமிடப்பட்டு முடிக்கும் போது ஆட்சி இல்லாமல் போக அந்த பாலமும் அண்ணாவின் பெயரை சுமந்தது.
இவையெல்லாம் நகர அபிவிருத்திகள் பற்றியது.

சென்னையை சுற்றி தொழில் பேட்டைகள் தொடங்கப்பட்டன. பாடி, அம்பத்தூர், கிண்டி ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய தொழில் பேட்டைகள். தனியார்கள் தொழில் தொடங்க லஞ்சம் கொடுக்காமல் ஊக்குவிக்கப்பட்டனர். 
டிவிஎஸ் குழுமம் பாடியில் பெரிய அளவில் முதலீடு செய்தது. கிண்டியில் EASUN குழுமம் தொழிலகம் அமைத்தது. 
கிண்டியில் ரயில் பாதையை ஒட்டி பெரிய தொழிற்சாலை...
ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, அயினாவரத்தில் ரயில் பெட்டி தொழில்சாலை விரிவாக்கம், 
அம்பத்தூரில் DUNLAP டயர் தொழில் தொடக்கம், 
டி.ஐ. சைக்கிள் தொழில்சாலை தொடக்கம். 
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் தொழில்சாலைகளும் முயன்றால் வேலை கிடைக்க வாயுப்பும் பெருகியது. இது கிராமப்புற மக்களை நகரத்தை நோக்கி நகர்த்தியது...
இது போல் கிராமம் அபிவிருத்தி திட்டங்களும் சேலம், திருச்சி போன்ற பெரு நகரங்களில் பெரிய தொழில்சாலைகள் மத்திய அரசின் உதவியுடன் தொடங்கப்பட்டன.
96 லட்சம் கன அடிகள் கொள்ளளவில்  பல்வேறு நீர் வள திட்டங்கள் விரைவாக திட்டமிடப்பட்டு முடிக்கப்பட்டன.
இப்படி இந்த மாநிலமே நாலு கால் பாய்ச்சலில் ஒரு 20 வருடங்களில் மாற்றம் அடைந்தது.

பக்கத்தில் இருக்கும் ஆந்திராவோ, கர்நாடகாவோ யோசித்து பார்ப்பதற்குள் நாம் பல்வேறு வகைகளில் முந்தினோம்.

1967 க்கு பிறகு நமது காங்கிரஸ் எதிர்ப்பு மற்றும் மொழி பிரச்சனை வேகத்தால் மத்திய அரசால் பெரிதும் புறக்கணிக்கப்பட்டோம். மத்திய அரசோடு பெரிய அளவில் மோதிய காரணத்தால் பல்வேறு பெரிய தொழில்சாலைகள் கர்நாடகாவுக்கு தடம் மாறியது.

பதினைந்திற்கும் மேற்பட்ட I.T.I., BHEL, BEL, BEML, HAL போன்ற பெரும் தொழில்கள் பங்களுருக்கு போனது. ஆனால்  அங்கு அதற்கான தொழிலாளர்கள் போதிய அளவில்  இல்லாமல் தமிழர்கள் அங்கு பெரிய அளவில் குடியேறியது இன்னொரு கதை.

அரசியல் என்பது ஒரு சமுக சேவையாகவே பார்க்கப்பட்டது. அதில் வருமானம் வராது எனவே இருக்கப்பட்டவன், அதை இழக்க அல்லது தியாகம் செய்ய தாயாரானவ்ன் தான் நுழைய முடியும் என்று இருந்தது.

தேர்தலை தாண்டி சமுகமே வேறு மாதிரி இருந்தது. மக்கள் பயந்து வேலை செய்யவில்லை. அது அவர்களின் வேலை. அதை சிறப்பாக செய்ய முயன்றார்கள். பணம் இல்லாவிட்டாலும் தன்மானம் நிறைய இருந்தது. கை வண்டி இழுப்பவர் கூட பிச்சை எடுக்க தயங்கினார்.

சரி...இதெல்லாம் காங்கிரஸ் சாதனைகள்........அவர்கள்.செய்யாது என்ன ?

கிராமங்கள் தோறும் காங்கிரஸ் மன்றங்களை வைத்து அடித்தட்டு மக்களை நெருங்க வில்லை. கட்சி எல்லா விதத்திலும் கிராமங்களில் பெரிய குடும்பங்களின் கைகளிலேயே இருந்தது. சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தலைமுறை மிச்சம் இருந்ததால் கட்சி இன்னமும் தியாகிகளையே தேடியது.

சுதந்திர போராட்ட காலத்திலும் சமுகத்தில் பெரிய இடத்தை சேர்ந்தவர்களே பங்களிப்பை முன்னெடுத்து சென்றதால் இப்போதும் அவர்களின் ஆளுமை மிச்சம் இருந்தது. சாதாரண மக்கள் தங்கள் சொல் கேட்பார்கள் என்று ஒரு வித மயக்கத்திலே காலம் ஓடியது.
மாறி வரும் தலைமுறையை இவர்கள் கவனிக்க வில்லை. ஊரில் பெரிய தலை சொன்னால் போதும் என்கிற பாணியிலேயே கட்சி நடத்தப்பட்டது. நேரு சொன்னால் வேதம் என்று முன்னெடுக்கப் பட்டது. பெரியவர்கள் நாட்டு நல்லதையே செய்வார்கள் என்று நம்ப வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது.

ஆனால் வளர்ந்து வந்த திமுகா வோ சாமான்யர்களை அணுகியது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞ்சர்களை தெரிவு செய்து ஊக்கு வித்தது. அண்ணாவும் கருணாநிதியும், நெடுஞ்செழியனும், அன்பழகனும், சம்பத்தும், செல்லாத கிராமங்கள் இல்லை என சொல்லலாம். மேல்தட்டு மக்களை மட்டும் அணுகாமல் நாத்திகத்தை நயம் பட பேசி இடத்திற்கு ஏற்றவாறு கதை சொல்லி அடித்தட்டு மக்களையும் இது தனக்கான கட்சி  என்று நம்ப வைத்ததுதான் இவர்கள் சாமர்த்தியம்.

தேசியம் என்பதை முன்னெடுக்கும் போது மாநில நலனும் அவர்களின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்பது கத்தி மேல் நடப்பது போன்றது.  முக்கியமாக மொழி கொள்கை. இதில் மத்தியில் இருந்த காங்கிரஸ் விந்திய மலைக்கு தெற்கே என்ன இருக்கிறது என்று கூட அறியாதவர்களாக இருந்தனர். அவர்கள் விந்திய மலைக்கு தெற்கே இருந்த அனைவரையும் மதராசி என்கிற ஒற்றை சொல்லில் அடைத்து தாண்டி போனார்கள். ஹிந்திதான் தேசிய மொழி என்று பிரகடன படுத்த முயன்றனர். மத்திய அரசின் இந்த திணிப்பினால் காமராஜர் ஆட்சி மட்டுமல்ல அன்று தேசியம் பேசிய அனைவரும் தடுமாறினார்கள். இது அண்ணா போன்று வளர்ந்து வரும் தலைமுறைக்கு ஒரு பெரும் வாய்ப்பாக மாறியது. திராவிடம் பேசிய பெரியார் கூட தமிழுக்காக பெரிய அளவில் பேசவில்லை. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றே சொன்னார். (ஆனால் அவர் தன் கடவுள் மறுப்பு கொள்கையை கூட தமிழில்தான் சொன்னார் என்பது வேறு விஷயம் )

ஆனால் அவரது சீடர்கள் தமிழ் மொழிகாக பெரிதும் போராட முன் வந்தனர். இது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்று தமிழுக்காக திமுகவினரை தவிர மா.பொசி போன்று பலரும் போராடினாலும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சென்று தங்கள் கட்சியை நிலைநிறுத்த இரவும் பகலும் உழைத்த திமுக கழகத்தவருக்கே மொழி காத்த புகழ் சென்றது. மொழி போராட்டத்தில் அரசு வன்முறையை ஒடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கைகள் மேலும் மக்களை ஆளும் கட்சியிலிருந்து அன்னியபடுத்தியது. ஒரு தமிழராக காமராஜர் மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்பட்டாலும் அவரை மத்தியில் இருந்த காங்கிரசை சேர்ந்த ஹிந்தி வெறியர்களே முதுகில் குத்தினார்கள்.

பட்ட காலிலே படும் என்பது போல் அதே அறுபதுகளில் பெரும் அரசி பஞ்சம் வந்தது. பின்னாளில் உருவானது போல் மத்திய மாநில அரசுகள் பெரும் சேமிப்பு கிடங்க்குளை அப்போது உருவாக்க தவறியதன் பலன் அரசி பஞ்சமாக விடிந்தது. இரண்டு பட்டங்கள் அல்லது பருவங்களில்  மழை தவறியோ அல்லது பெருமழை பெய்து வெள்ளம் வந்து நாசமானதினாலோ சரியாக நினைவில்லை...அரசி பஞ்சம் வந்தது.  இந்திய சீன போர் கூட ஒரு காரணமாக இருக்கலாம். நிதர்சனம். பஞ்சம். மக்களுக்கு அரசி கிடைப்பது அரிதானது.

பக்தவத்சல அரசு மத்திய அரசிடம் வேண்டிய போது அவர்கள் கோதுமை தர ஒத்துக் கொண்டனர். ஆனால் அதற்குள் மக்களிடையே எதிர்கட்சிகள் இந்த பிரச்னையை பெரிதாக்கி பலன் காண தொடங்கின. அங்கு பட்டினி சாவு..இங்கு பட்டினி சாவு என்று புரளிகள் கிளம்பின. மக்கள் கோதுமையை வேற்று கிரகத்து உணவு போல் அணுகினர். அதை எப்படி என்ன செய்வது என்று கிராம மக்கள் இடையே பெரும் குழப்பம் இருந்தது.  ரொட்டியே (Bread) அப்போதெல்லாம் மருத்துவமனையில் வியாதிஸ்தர்கள் மட்டும் உண்ணும் உணவு என்கிற நினைப்பு இருந்தது.

இருக்கிற பிரச்சனை போதாது என்று அன்று ஒரு முட்டாள் மத்திய மந்திரி தமிழகம் வந்துஒரு பேட்டியில் மக்கள் உணவின்றி எலிக்கறி உண்கிறார்கள் என்று கேட்டபோது “எலிக்கறி உண்டால் தப்பில்லை” என்று சொன்னதாக செய்தி வந்து இன்னமும் பிரச்சனை எரிய தொடங்கியது.  எதிர்கட்சிகள் இதை இன்னமும் ஊதி பெரிதாக்கினார்கள்.
தேர்தலில் கழகங்கள் கோஷங்களை தாறுமாறாக இது போன்ற பிரச்சனைகளை பயன்படுத்தினார்கள். அதற்காகவே ஒரு குழு உருவாக்கி ஊர் ஊராக சென்று ஊதினார்கள்.

உதாரணமாக : “காமராஜ நாட்டார். காபி குடிக்க மாட்டார்.
              சுண்டெலியை கண்டால் சும்மா விட மாட்டார்”
மேலும்:  பக்தவசல குரங்கே..பதவியை விட்டு இறங்கே...
       பக்தவசலம் அண்ணாச்சி..பருப்பு விலை என்னாச்சி..

இது போல் பல...ஊருக்கு ஊர் கோஷங்கள் மாறுப்படும். இது மக்களை பெரிதும் கவர்ந்தன.  வெறும் காந்திமகான் பேர் சொல்லி ஒட்டு கேட்டதெல்லாம் பழமையாகி போனது.

மக்களுக்காக அரசு எடுத்த எடுக்கவுள்ள செய்லபாடுகளின் செய்திகள் மிகத்தாமதமாகவே மக்களை சென்றடைந்தது. 
இன்று இருப்பது போல் அன்று ஊடகங்கள் பெருமளவு இல்லாத காரணத்தால் செய்திகள் மக்களை நேரடியாக சென்றடைய காலதாமதம் ஆனது. வழக்கம் போல் புரளிகள் வெகு வேகமாக மக்களை சென்றடைந்தது.   இந்த விஷயத்தில் தினத்தந்தியும், முரசொலியும் போட்டி போட்டன. தினமணியோ உண்மையைத்தான் சொல்வேன் என்று நியாயம் பேசியது. எதிராளியை அடிக்க பொய்யும் உதவும் என்பதை ஒத்துக் கொள்ளாத காலம் அது.

இதெல்லாவற்றையும் தாண்டி ஒரு விஷயம் இருந்தது.  அதாவது அரசியல் பெருநகரங்களில் இருந்து சிறு ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய் சேர்ந்து விட்டது. 1962 ல்  திமுக 52 எம்.எல்.ஏ க்களை எப்படி அடைய முடிந்தது என்று காங்கிரஸ் பெரிதாக சிந்திக்க வில்லை என்றே தோன்றுகிறது. சமுதாயம் மாறிவருவதை காங்கிரஸ் உணர்ந்ததாகவே இல்லை. இதுவரை சொன்னதை அப்படியே கேட்ட ஒரு பெரும்திரளான கூட்டம் இன்று கேள்வி கேட்கும் கூட்டமான அடுத்த தலைமுறையை காண தொடங்கியது. 

1947  சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த பெருவாரியான மக்கள் ஒட்டு போடும் வயதுக்கு வந்து விட்டனர். அவர்களுக்கு சுதந்திரம் அதற்கான அடி வலி தியாகம் எல்லாம் வெறும் சரித்திரமாக அப்பன் பாட்டன் சொல்லும் பொழுது போகாத கதையாக மாறியது. . மாறிவரும் சமுகத்தின் அடையாளங்களை அவன் சினிமாவில் அதிகம் கண்டான். அதில் அவனுக்கு செய்தி இருந்தாகவே பட்டது. எம்.ஜி.ஆர். கேள்வி கேட்டார். பொங்கி எழு என்றார். பணக்காரன் வில்லனாகவே காட்டப்பட்டான். ஊரில் பெரியவர் என்றுமே அடக்குபவானாகவும் கற்பழிப்பவனாகவும் ஏய்த்து பிழைப்பவனாகவும் காட்ட்ப்பட்டான்.
கடவுளை வணங்கி அதன் அடையாளங்களுடன் ஊரில் பெரிய மனிதர் கெட்டவராகவே பெரும்பாலான கதைகள் முடிந்தது.

இந்த ஊடகத்தை முற்றிலும் புறகணித்த காங்கிரஸ் இந்த ஊடகத்தினால் வந்த தாக்கத்தையும் அறியாமல் போனார்கள்.  
ஒரு காலத்தில் ஊரில் பெரிய மனிதர் சொன்னால் ஊரே அந்த கட்சிக்கு ஒட்டு போடும் என்கிற நிலை மாறி இப்போது பெரிய அளவில் வந்த அடுத்த தலைமுறை இளஞ்சர்கள் இந்த பதிய ஊடகங்களால் உந்தப்பட்டு மாற்று வழி தேடினர்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடியதாக காங்கிரஸ் கூறினாலும் காங்கிரஸ் கட்சியிலும் ஜாதி சண்டை வெகுவாக நடந்தது. ஜாதிகளின் அடிப்படையில் ஒட்டு சேகரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வழக்கத்துக்கு வந்தது. ஜாதி பெயர்களை தங்களின் பின்னே போட்டுக் கொள்ள யாரும் தயங்காத தலைமைகள்  அப்போது இருந்ததன. பொதுவாக மக்கள் நலம் மனதில் கொண்டிருந்தாலும் மாறி வரும் சமுகத்தின் வேகம் அறியாமல் போன ஒரு பழைய கட்சியாக காங்கிரஸ் உருவகப்படுத்தப் பட்டது.

அந்த சமயத்தில் பிராமண எதிர்ப்பு என்கிற போர்வையில் ஓரளவு ஜாதி மறுப்பு கடவுள் மறுப்பு செய்ய முனைந்த பெரியாரின் வாரிசுகள் பெரியாரை விட்டு விலகினாலும் இந்த ஜாதி மறுப்பு மேக்கப்பை போட்டுக் கொண்டு வந்து வளரும் புதிய தலைமுறையினரை கவர்ந்தனர். பின்னாளில் இவர்களும் அதே சாதி ஒட்டு அரசியலில் கொடிகட்டி பறப்பார்கள் என்று அந்த இளஞசர்கள் அறிய மாட்டார்கள். கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரின் சீடர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஏன் கொள்கை மாறினார் என்று யாரும் கேட்க வில்லை

அன்று புதிய மாற்று தேடிய மக்களுக்கு பெரிய நம்பிக்கையை விதைத்து சரியான மாற்றாக தங்களை கழகங்கள் காட்டி கொள்ள முடிந்ததே வெற்றியின் காரணம். படிக்காத காமராஜர் என்று  மறைமுகமாக அவமான படுத்த ஒரு இரட்டை எம்.ஏ படித்த அண்ணா வால் முடிந்தது. அருகே மெத்த படித்த ஒரு பேராசிரியர். ஒரு நெடுஞ்செழியன் இப்படி இருந்தனர்.. ஆனால் அடுத்து வந்த கருணா நிதி என்ன படித்தார் என்று யாரும் கேட்க முடியவில்லை. தமிழ் தமிழ் என்று நாள் தோறும் கூவிய கழகத்தலைவர்கள் தங்கள் அண்ணா ஆங்கிலத்தில் மிகப்பெரும் புலமை பெற்றவர் என்பதை பெருமகிழ்வுடன் சொல்லி புளகாங்கிதம் அடைந்தனர்.

ஹிந்திக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்திய கழகத்தை சேர்ந்த முரசொலி மாறன் தான் (சன் டிவி சகோதர்களின் தந்தை ) ஹிந்தி ஆட்சி மொழியாக (Official) காரணம் என்றால் யார் நம்புவார்கள்.??  அந்த மசோதா ஓட்டெடுப்பு வந்த போது...அதாவது ஹிந்தி ஆட்சி மொழியாக அறிவிக்கப்டலாம் எனும் மசோதா வந்து பாராளுமன்றத்தில் ஒரு ஒட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது. அந்த ஒரு ஓட்டை போடாமல் வயிற்றுபோக்கு பேதியாகிறது என்று ஓட்டெடுப்பு நடக்கும் போது ஒட்டு போடாமல் வெளியேறிய புண்ணியவான் இந்த மாறன்தான். அன்று இவர் ஒட்டு போட்டிருந்தால் குறைந்தபட்சம் அந்த மசோதா நிறைவேறாமல் போயிருக்கும்  பின்னாளில் அது நிறைவேறியிருக்கலாம் என்பது வேறு விஷயம். ஆனால் முக்கியமான தருணங்களில் நழுவுவது திமுக வின் பண்பே..
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எதையும் சிந்தித்து பேச வேண்டும. நடைமுறைக்கு ஒவ்வாத பொய்களை மக்களிடத்தே சொல்வது தவறு என்று நம்பிய காமராஜர் எதிர் கொண்ட எதிரி யார் தெரியுமா ?  ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூணுபடி அரிசி தருவேன். தராவிட்டால் எங்களை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்று வாக்குறுதி தரும் திமுக. அன்றைக்கு ஒரு படி அரிசி குறைந்த பட்ச விலையே ஒரு ரூபாய்க்கு மேல்.... இந்த நிலையில் எப்படி இவர்களால் தர முடியும் என்று கேட்பதற்கு ஆள் இல்லை.
இப்படி நிறைய பொய்களை பேசி பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் கழகத்தவர்கள்.

காமராஜர் வீழ காங்கிரசின் பங்கு இருபத்தி ஐந்து சதவிகிதம்.
காலத்தின் பங்கு இருபத்தி ஐந்து சதவிகிதம்.
கழகம் வாய்ப்புகளை பயன்படுத்த உழைத்த உழைப்பு இருபத்தி ஐந்து சதவிகிதம்.
மக்களின் முட்டாள்தனம் இருபத்தி ஐந்து சதவிகிதம்.

ஒரு நகரத்தில் வளர்ந்த மாணவனாக நான் கண்டவை இவை. இது ஒரு சின்ன எடுத்துக் காட்டே. இது புறநகர் மற்றும் மாவட்டங்களில் இன்னும் விரிவாக வேறு பல பிரச்சனைகளையும் கொண்டதாக இருக்கலாம். அதை அவர்கள் எழுதுவதே சரி.

நானும் பல விஷயங்களை மேலோட்டமாகவே தொட்டிருக்கிறேன். அதாவது கழக வளர்ச்சியில் சினிமாவின் பங்கு. நான் தொட்டது கொஞ்சம். ஆனால் இந்த ஒரு விஷயத்திற்கே ஒரு புத்தகம் எழுதலாம்.

ஆக மொத்தம் செருப்பு கடிக்கிறதே என்று காலை வெட்டி கொண்ட நிலையில் தமிழகம்.


தமிழ்நாட்டின் நீர் நிலை திட்டங்கள்.

t. தமிழகத்தில் நீர் ஆதார திட்டங்களை யார் அதிகம் நிறைவேற்றியது.??

இதில் சோழன் கட்டிய கல்லணை சேர்க்கப்பட வில்லை.

ஆங்கிலேயன் ஒரு 100 ஆண்டுகளில் நடைமுறை படுத்திய திட்டங்களின் கொள்ளளவு.. 1,30,000 கன அடிகள்
(இதில் மிகப்பெரியது மேட்டூர் அணை மற்றும் முல்லை பெரியார் அணை. மொத்த திட்டங்கள் 8 ).

காங்கிரஸ் வெறும் 20 ஆண்டுகளில் நிறைவேற்றிய நீர் நிலை திட்டங்களின் கொள்ளளவு ...92,500 கன அடிகள். அதாவது வெள்ளையன் ஒரு நூறு வருடத்தில் செய்ததில் 75 சதவிகிதத்தை இவர்கள் வெறும் 20 ஆண்டுகளில் முடித்தனர். மொத்த திட்டங்கள் 20)

ஆனால் நம்ம கழகங்கள் கடந்த 50 ஆண்டுகளில் நிறைவேற்றிய நீர் நிலை திட்டங்களின் கொள்ளளவு என்ன தெரியுமா வெறும் 19,௦௦௦/-
மொத்த திட்டங்கள் 56...இதில் மிகப்பெரிய திட்டம்
இருக்கண்குடி திட்டம். 5000 கன அடி..செயல்படுத்தப்பட்ட ஆண்டு 2009.


ஒன்ஸ் மோர்.
1. வெள்ளையன் - 1,30,000 கன அடிகள். (100 வருடங்கள்)
2. காங்கிரஸ் - 92,500 கன அடிகள் ( 20 வருடங்கள் )
3. கழகங்கள் - 19,000 கன அடிகள் (50 ஆண்டுகள் )


இந்த தகவல்களை ஒரு கழக அன்பரே தந்தார். அவர் வெறும் திட்டங்களின்எ ண்ணிக்கையை கொண்டு கழகங்கள் திராவிட ஆட்சியை முட்டு கொடுத்தார். அது அவர்களின் வழமையான செயல்பாடு.

ஆனால் பாருங்கள்...அதனுள் நுழைந்தால் விவரங்கள் பல்லிளிக்கின்றன.

இதையெல்லாம் பேசாமல் காங்கிரஸ் இளங்கோவன் திருநா வுடன் சண்டை போட்டு கொண்டிருக்கிறார்.
காமராஜர் ஆட்சி பொற்காலம் என்பதன் ஒரு எடுத்துக் காட்டு இது.

சும்மா எதற்கெடுத்தாலும் பார்ப்பன சதி என்று புலம்பிகிட்டு திரிஞ்சா சரியாயிடுமா ?