Sunday, September 17, 2017

ஈ.வே. ராமசாமி ஐயா !

-                    
இன்று பெரியாருக்கு பிறந்தநாள்.
மோடிக்கும் இன்று பிறந்தநாள்.
ஒருவர் அரசியலில் இருந்து சமுக மாற்றம் தேடி வெளியே வந்தவர்.
இன்னொருவர் சேவை மையத்தில் இருந்து அரசியலுக்கு இடம் மாறியவர்.
என்னை பொறுத்தவரை இருவரும் ஒரு எதிர்வினையால் உருவானவர்கள்.

மோடி ஒரு அரசியல் கட்சி தலைவர்.
ஆக பிறந்தநாள் வாழ்த்துகளுடன் நிறுத்துகிறேன்.

பெரியார் - இவரை பற்றி பேசலாம்.! பேச வேண்டும்.

இவரது பரிணாமத்தில் ஆதியில் தமிழ் நாட்டில் இவர் வீழ்த்த நினைத்தது இரண்டு. ஒன்று காங்கிரஸ். இன்னொன்று பிரமாணர்களின் ஆதிக்கம். இதற்கு காரணம் இவரது தனிப்பட்ட அனுபவங்களாக இருந்தாலும் எடுத்த நிலைப்பாடு ஒட்டு மொத்த சமுகத்திற்காக என்று மாற்றியது இவரது பாணி.

இவை இரண்டிலும் இவர் வெற்றி பெற்றுவிட்டார் என்றே நினைக்கிறேன்.

இவர் முன் வைத்த கொள்கைளில் பல முரண்பாடுகள் இருந்தாலும் கேள்வி கேளுங்கள் என்ற வகையில் இவர் மீண்டும் நம் பகுத்தறிவை தூசி தட்டினார்.
எதிர்த்து கேட்பது பாவம். தவறு என்று இருந்த நிலையை மாற்றி கேள்விகளை தொடுத்தார். முறை குருரமாக இருந்தாலும் கேள்விகள் அடிநாதம் நியாயமானவையா என்றால் பெரும்பாலும் ஆம் என்றே சொல்லவேண்டும்.

இந்து அல்லது சனாதன தர்மத்தில் ஒரு காலத்தில் மிகவும் போற்றப்பட்ட, பின்பற்றப்பட்ட உண்மையை தேடும் வாத பிரதிவாதங்கள் மறைந்து குருட்டுத்தனமான வழிப்பாடு சடங்குகளில், ஜாதி சண்டைகளில் இறைதேடல் முழுகடிக்கப் படும் வேளையில் இதுபோல் தொடர்ந்து இந்த சமுதாயத்தில் யாராவது ஒருவர் தோன்றி கொண்டே இருப்பார்கள். இருகின்றார்கள்.  அது நாராயண குருவாக இருக்கலாம். ராமானுஜராக இருக்கலாம். பெரியாராக இருக்கலாம். இன்னரும் அறியப்படாதா ஆயிரம் பேர் இருக்கலாம். இன்னமும் வருவார்கள்.

இதில் இவர் பெரிதும் வெற்றி பெற்றாரா என்றால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது.  அதற்கும் காரணம் உண்டு. நம் சமுக அமைப்பு முறையும் இதற்கு காரணமாக இருக்கலாம். காலம் காலமாய் இருந்த வந்த பழக்கங்களை ஒரே இரவில் அல்லது ஒரே தலைமுறையில் தூக்கி போட நாம் விரும்புவதில்லை. மாற்றங்களை நம் மனம் எதிர்த்து கொண்டேதான் வரும். அப்பாவின் நினைவாக வீட்டில் தூசி படிந்து நிற்கும் பழைய சைக்கிளை போன்று பல விஷயங்கள் நம்மிடம் தினம் தேங்குகின்றன.

உதாரணமாக இவர் குடுமி, பூணல், வீபூதி, குங்குமம் போன்ற அடையாளங்களை கிண்டல் செய்து அமங்கலம் என்று பெரிதும் கருத்தப்பட்ட கருப்பு சட்டையை முன் வைத்தார். என்ன ஆயிற்று?  இன்று அந்த கருப்பு சட்டை என்பதே சடங்காகி போனது. ஒரு அடையாளமாகி போனது.

சிலைகளை உடைத்து கற்சிலைகளில் கடவுள் இல்லை என்றார். இவருக்கே ஊரெல்லாம் சிலை வைத்து ஊதுபத்தி கொளுத்தி வருஷம் தவறாமல் மாலையிட்டு வணங்கி வருகின்றனர் இவரது சிஷ்ய கோடிகள்.

அடுத்து இவர் மடங்களை அவைகளின் செயல்பாடுகளை சாடினார். ஆனால் இன்று இவரது சீடர் இவரது இயக்கத்தையே ஒரு மடம் போல் ஒரு குடும்பத்தின் சொத்தாக்கி இயக்கத்தின் சொத்துகளை கை கொண்டு  எதிர்ப்பவர்களை வெளியேற்றுகிறார். இயக்கம் முற்றிலும் வியாபாரமயமாகி விட்டது. ஆக கடவுளை கும்பிடவும் காசு வேண்டும். கடவுளை திட்டவும் காசு வேண்டும் என்கிற நிதர்சனம் வெளிவந்து விட்டது. இதில் மடம் என்ன? இயக்கம் என்ன?  கலர்தான் மாறியது. காட்சிகள் ஒன்றே.

இவர் தெருத்தெருவாக சென்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரசாரம் செய்து கடவுள் நம்பிக்கையை பரிகசித்தாலும் இன்று வரை
இவரது மன்றங்கள் மறைந்து கோவில்களே அதிகமாக வளர்ந்தது.

கடவுளே இல்லை என்றவரின் பிரதான சீடரே ஒன்றே கடவுள் ஒருவனே தேவன் என்று திசைமாறி போனார். அவரது சீடரை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

அரசியல் போக்கிரிகளின் புகலிடம் என்று ஒதுங்கியவரின் சீடர்கள்தான் கடந்த 50 வருடங்களாக அரசியல் செய்து ஆட்சியில் இருந்து சமுக நீதி தேடுகின்றனர்.

இன்று பெரியாரின் கொள்கைகள் கடவுள் மறுப்பிலிருந்து சாதி ஒழிப்பு என்று சுருங்கி விட்டது என்று சொல்ல புகுந்தால் அங்கும் தோல்வியே!

ஒரு ஜாதியை குறி வைத்து தாக்கி அதன் ஆதிக்கத்தை நீக்கிய இவரால் அந்த வெற்றிடத்தை வேறு ஒரு சில ஜாதிகள் பிடித்ததை தடுக்க இயலவில்லை. காரணம் இவர் முன் வைத்த ஒற்றை சாதி வெறுப்பே !  
எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று சாதி சங்கங்களின் வீச்சு அரசியல் பொருளாதார நிலைகளில் இருக்கிறது. அடுத்த சாதிக்காரனை என் மகள் மணந்தால் சொந்த பெண்ணானாலும் வெட்டுவேன் என்கிற அளவுக்கு வெறி படித்து அலைகின்றனர்.

ஆக இவர் தொடங்கி ஒரு நூறு ஆண்டுகளிலேயே இத்தனை வழி மாறுதல்களும் மருவதலும் இவரது கொள்கைகளில் நடக்கும் என்றால் சுமார் 5000 வருடங்களாக இருந்து வரும் வாழ்க்கை முறைகளில் எத்தனை எத்தனை வழுவதலும் திசை மாற்றங்களும் நிகழ்ந்திருக்கும்?  அந்த புரிதலோடு பிரச்சனைகளை அணுக வேண்டாமா?

இதற்கெல்லாம் காரணம் பெரியார் கேள்விகளை கேட்டார். மற்றபடி மாற்று வழி எதுவும் சொல்லவும் இல்லை. ஒருவேளை அவருக்கு தெரிந்திருக்கலாம்.  மாற்று வழிகளை சொன்னாலும் அந்த வழி இன்னொரு மதமாக மாறும் வாய்ப்பு மிக அதிகம் என்று இவர் பயந்திருக்கலாம். அப்படித்தான் ராமானுஜரும் கடவுளாகி போனார். நாராயண குருவுக்கும், சீரடி பாபாவுக்கும் கோவில் கண்டோம் நாம்.

மேலும் நம் அடிமை மனோ நிலை அப்படி பட்டது. அரசியலிலோ, சமூகத்திலோ வெற்றிடத்தை அது எந்நாளும் ஏற்றுக் கொள்ளாது. அந்த பீடத்தில் யாரையாவது ஏற்றி வைத்து பார்த்தே மகிழும்.

பெரியார் கேள்விகள் கேட்டார். ஆனால் அவை அனைவரையும் சென்றடைந்தும் அடிப்படை மாற்றங்கள் நிகழாத காரணம் அந்த கேள்விகள் கேட்ட முறை.  வெறுப்பின் அடிப்படையில் சமுதாயத்தை பிரித்து கேட்கப்பட்ட கேள்விகள் விடைகளை காண விடாது. அந்த கேள்விகளிலிந்து தப்பிக்க வழி தேடி எதிர் கேள்வி கேட்டு வாதங்களை மொன்னையாக்கும். ஆதுதான் இப்போது நடக்கிறது.

வெறும் வெறுப்பையே வளர்க்கும்.  இன்று விஞ்சியிருப்பது வெறுப்பே ! கேள்விகள் மறந்து போயின.

ஆகவே பொங்கலுக்கு பொங்கல் வீட்டை சுத்தம் செய்து ஒட்டடை விலக்கி, வெள்ளையடித்து வைப்பது போல் நம் வாழ்வியலிலும் இது போன்று சிலர் தொடர்ந்து தோன்றுவது நல்லதே..

அடுத்து வரும் பெரியாராவது அனைவரையும் ஒருங்கினைத்து சமுக ஒற்றுமையை வலியுறுத்தி கேள்விகள் எழுப்பட்டும்.

இப்போது கூட நான் பெரியாரை இகழ்வதாக மட்டுமே நினைத்து என் ஜாதியை ஊகித்து திட்டுவீர்கள். அது தவறு. நான் பெரியாரின் கேள்விகளை வரவேற்கிறேன். வழி முறைகளைதான் கேள்வி கேட்கிறேன். அதைத்தான் பெரியார் சொல்லி கொடுத்ததாக நான் நினைக்கின்றேன்.

பெரியார் முடிவல்ல. அவரை கடவுளாக்காதீர்கள். அவர் ஒரு தொடக்கமே!

தீட்டிய மரத்தில்தான் பதம் பார்க்க வேண்டும். குருவை மிஞ்சிய சிஷ்யன் தான் குருவுக்கு பெருமை.

கேள்விகளை பெரியாரிடம் இருந்தே தொடங்கி உண்மைகளை தேடுவோம்.

Thursday, September 07, 2017

காவல்துறை

இன்று NEET எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் மோதல் முற்றுகிறது.

காவல்துறை :-

இவர்கள் ஒன்றும் ஆகாசத்தில் இருந்து வந்து குதித்துவிட வில்லை.
நம்மிடையே பிறந்து வளர்ந்து நம்முடனே வாழ்ந்து மடிய போகிறவர்கள்தாம் இவர்கள்.


ஆனால் பாருங்கள்...இவர்கள் மட்டும் விறைப்பாக தப்போ சரியோ அதிகாரிகள் அமைச்சுகள் சொன்னதை சிந்திக்காமல் செயல் பட பழக்கப்படுத்த படுகிறார்கள். அதற்கு இவர்கள் கடமை என்று பெருமிதம் வேறு கொல்கிறார்கள்.


இது அடிமைகள் நாட்டில் வெள்ளையன் அமைத்து கொடுத்த உளவியல் அடிமைத்தனம்.  சீருடை அணிந்து விட்டால் நீ பந்த பாசங்களை பார்க்க கூடாது என்று பழக்கப்படுத்தினர். சரி...நல்ல விஷ்யதான். பந்த பாசங்களை பார்க்க கூடாது.  ஆனால் நியாயம் அநியாயங்களை பார்க்க கூடாது என்று எவன் சொல்லி கொடுத்தான்.? தர்ம அதர்மங்களை பார்க்க கூடாது என்று சொல்லியது யார்?

உண்மையில் இந்த காவல் துறையினர் அதுவும் கடைநிலை இடைநிலை காவலர்கள் மிகவும் பரித்தாபத்திற்குரியவர்கள்.

வேலையில் சேரும் போதே முக்கால்வாசி பேர் கடன் வாங்கி காசு கொடுத்துதான் சேருகிறார்கள். இதில் முக்கால்வாசி பேர் பெரிய படிப்பும் படித்திருப்பதில்லை.  நல்ல படிப்பு படித்தவர்கள் இந்த கடைநிலை இடைநிலை காவல் வேலைகளுக்கு வருவதில்லை.

வேலைக்கு சேர்ந்தால் அரசு உத்தியோகம். சம்பளம் கிம்பளம் தாராளம். நிரந்தர பணி என்கிற சில அபத்த காரணங்களுக்காகவே பலரும் இதில் சேருகின்றனர். இன்னொரு மிக முக்கிய காரணம் கல்வியில் பெரிதாக சாதிக்க முடியாத பட்சத்தில் பலரும் வறுமையிலிருந்து தப்பிக்க இந்த வேலையில் சேர முனைகின்றனர்.

சேர்ந்த பிறகுதான் பணம் மட்டுமே வாழ்வு கிடையாது என்கிற நிதர்சனம் உறைக்கும்.  காரணங்கள் பல.
குறைந்த பட்சம் 12 மணி நேரமாவது தொடந்து பணி சம்பந்தப்பட்டு செலவிட வேண்டும். கேட்டால் இது 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டிய வேலை என்று தெரிந்துதானே சேர்ந்தாய்...என்பார்கள்.
யோசித்து பாருங்கள். காவல் நிலையத்தில் பாரா நிற்கும் ஒருவர் சுமார் 6 முதல் எட்டு மணி நேரம் நின்று கொண்டே இருக்க வேண்டும். இது தொடக்க நிலை வேலை. இதை தவிர சில விஷேசங்கள் VIP விசயங்கள், இப்படி “பாரா டுட்டி” க்கு சென்றால் சில இடங்களில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது. இயற்க்கை உபாதைகளுக்கு வழியே இல்லை. பெண் காவலர்கள் நிலை அதை விட மோசம். கண்ட இடத்தில் “சிப்” பை கழட்டி நிற்க முடியாது.

போக்குவரத்து காவலரின் நிலை அதை விட கொடுமை. கொளுத்தும் வெயிலில் மோசமான டிசல் பெட்ரோல் புகை நடுவே நாலு மணி நேரம் நின்று பாருங்கள். மூன்றாவது நாள் மருத்துவமனையே செல்வீர்கள்.

இது ஒரு சின்ன உதாரணம்தான். இன்னும் பல உண்டு.

மேலும் இன்று இந்தியாவில் காவல்துறை தங்களின் அடியாள் கூட்டமாகவே அரசியல்வாதிகளால் பார்க்க படுகிறது.

எல்லாவற்றுக்கும் இவர்கள்தான் முன்னிறுத்த படுகிறார்கள்.

சாலை விபத்து ஏதோ காரணத்தால் நடந்து மக்கள் வீதியை மறித்தால் சமாதானம் பேசி கலைய சொல்ல இவர்கள்தான் வேண்டும். பிரச்சனை வழக்கப்படி தடியடியில் முடியும்.

குடிநீர் இன்றி மக்கள் போராடினால் குடிநீர் அதிகாரிகள் மக்கள் முன்னே வர மாட்டார்கள். அவர்களுக்கும் காவல்துறைதான் வந்த சமாதானம் செய்யும்.

சாக்கடை விஷயமா?  போராட்டமா?
ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் இவர்கள்தான் முன்னிலயில் அனுப்ப படுகிறார்கள்.

அரசின் அனைத்து துறைகளின் தோல்வியினால் அல்லது தவறான செயல்பாட்டினால் நிகழும் அனைத்து போராட்டங்களுக்கும் இவர்கள்தான் வந்து சமாதான பேச்சு நடத்துவார்கள். அது எப்படி சாத்தியம்?

வருமுன் காக்கும் பழக்கமே நம் அரசிடம் கிடையாது. மோதலை முன்பே தவிர்ப்போம் என்பது இவர்கள் பழக்கமே இல்லை.

எப்போதும் கொதிநிலையில் இருக்கும் தமிழகத்தில் தினமும் ஒவ்வொரு மாவட்டத்தில் ஏதாவது ஒரு பக்கம் போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். இதை சமாளிக்க வேண்டியவர்கள் இந்த காவலர்களே.

இந்த ஒரு வேலைக்கே இவர்களுக்கு நேரம் போதாது. இந்த லட்சணத்தில் மற்ற குற்றங்களுக்கு புலனாயவோ, குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவோ இவர்களுக்கு எங்கு நேரம் கிடைக்கிறது?
இதுமட்டுமல்ல. ஊரில் இருக்கும் அனைவருக்கும் “பந்தோபஸ்து” வேறு இவர்கள்தான். செத்தவன், சாக கிடக்கிறவன், ஊரை அடிச்சு உலையில் போட்டவன், அவன் கூத்தியா வீடு என்று அனைவருக்கும் இவர்கள் பந்தோபஸ்து வேறு.!!

இப்போ புதிதாக சாராயகடைகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும். என்ன கருமம்டா?

ஆடுத்து கோயில் திருவிழாக்கள் வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு!

இதைத்தாண்டி கோழி திருடினவன் முதல் ஆடி கார் திருடினவரை தேடனும்.

இத்தனை கூத்துக்கு நடுவுல உயர் அதிகாரிகள் வீட்டு குழந்தை கக்கா போவது முதல் பள்ளி கூடம் போவது வரை இவர்களின் பொறுப்பு.
ஒவ்வொரு அதிகாரிகள் வீட்டிலும் குறைந்தது 3 பேர் வேலைக்கு இருப்பார்கள்.

சரி இத்தனை கலாட்டாக்களின் நடுவிலும் வேலை செய்யும் இடத்தில் மரியாதையாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

டேய்..அல்லது யோவ் என்றுதான் மேல் அதிகாரி அழைப்பார்கள். அவர்களுக்கு
சிகரெட் முதல் சினிமா டிக்கெட் வரை வாங்கி தர வேண்டும். கூழை கும்பிடு போட வேண்டும். இல்லாவிட்டால் பணி இட மாற்றம்தான். (TRANSFER)..

இவர்களுக்கு மனைவி மக்கள் கிடையாதா? அவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போகாதா?  எல்லோரும் எல்லா இடத்தில் வேலை செய்துவிட முடியாதா? இவர்களின் குழந்தைகள் படிப்பு இடமாற்றத்தால் கெடாதா? இப்படி எதையும் முக்கால்வாசி அதிகாரிகள் கவனிக்க மாட்டார்கள். கேட்டால்...”அதெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது சார் “ என்று பதில் வரும்.

கான்ஸ்டபிளை இன்ஸ்பெக்டர் மிரட்டுவார். இன்ஸ்பெக்டரை, ஏ.எஸ்.பி. மிரட்டுவார். ஏ.எஸ்.பி.யை எஸ்.பி மிரட்டுவார்...இப்படி மிரட்டல் ஒரு தொடர்கதையாகவே மேல் நோக்கி செல்லும்.

ஆனால் அதிகாரிகள் இதற்கு நேர் மாறு.  அவர்கள் செல்லும் இடமெல்லாம் இவர்களின் சொகுசு வாழ்க்கையும் தொடரும். ஏர்கண்டிஷன் இல்லாமல் இவர்களின் பணியறை இருக்காது. இது போதும் இவர்களை பற்றி சொல்ல?

இத்தகைய சூழலில் வேலை செய்யும் காவலர் எப்பேர்பட்ட மனஅழுத்தத்தில் ஆல்லது மன நிலையில் இருப்பார்?  இவருக்கு சிந்திக்கவே நேரம் கிடையாது. வன்முறை இவர்கள் வழக்கமாகிறது. அதை இவர்கள் பெரிதும் நம்புகின்றனர். இதை மாற்ற யாரும் முயலுவதே இல்லை.
ஆட்கள்தான் இத்தகைய நிலையில் இருக்கிறார்கள். மற்ற விஷயங்கள் எப்படி என்று பார்த்தால் அது இன்னும் அவலம்.

ஒரு காவல்நிலையத்தின் ஒரு மாத தேவை என்ன என்று யாராவது அதிகாரிகளிடம் கேளுங்கள். ஒருவருக்கும் தெரியாது?

பேனா முதல் குடிதண்ணீர் வரை அந்த காவல்நிலைய செலவுகளை அந்ததந்த காவல்நிலைய அதிகாரிகளே கவனித்து கொள்ள வேண்டும். ஒரு விலக்கு பழுதடைந்தாலும் அதை சரி செய்ய காசு அரசிடம் இருந்து பெற தலைய சுத்தி மூக்க தொடணும். கடைசியில் கிடைக்கவே கிடைக்காது.

அதானால்தான் வழக்கு பதிய வருபவரிடம் முதலில் எழுத்தர் (Writer) சொல்வது.. “ ஏன்னா..மோட்டார் காணுமா...போய் ஒரு குயர் பேப்பர் வாங்கிட்டு ரெண்டு பேனா வாங்கி வா...வரும் போது வழியில் ரெண்டு டி சொல்லு !”. 

இப்படி தொடங்கினா எப்படி?

தமிழக / இந்திய காவல்துறையை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அதற்கு ஒரு புத்தகமே போடவேண்டும். அப்படியும் மாளாது.
காரணம் அத்தனை அரத பழசான நிலையில் அடிப்படை காவல்துறை மனிதவள நிலையிலும், மற்ற விஷயத்திலும் இருக்கிறது.

திடிரென்று..சில பளபள கார்களையும் ஜீப்புகளையும் கொடுத்து நவீன படுத்துகிறேன் என்று சில தலைமைகள் பம்மாத்து காட்டும்.

ஆனா பாருங்கள்.  சென்ற நூற்றாண்டு இரண்டாம் உலக போரில் பயன்படுத்திய Lee-Enfiled ரக துப்பாக்கியை இன்னமும் பயன்படுத்தும் ஒரே காவல்துறை உலகிலேயே இந்திய காவல்துறைதான்.

உணமையில் அடிப்படையாக காவல்துறையில் மாற்றங்கள் நகழ்த்தப் பட வேண்டும். அதற்கு முதலில் ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப் பட்டு
ஒரு 3 மாதத்தில் (இல்லாட்டா இழுத்துகிட்டே இருப்பாங்க)  ஒரு வெள்ளை அறிக்கை சமர்பிக்க வேண்டும். பிரச்சனைகளை களைய உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

தமிழகத்தில் இன்றைய கணக்கு படி 700 பொதுமக்களுக்கு ஒரு காவலர் என்கிற விதத்தில்தான் இருக்கின்றனர். இது போதாது.

உடல் அளவில், மனதளவில் பழுதுபட்டு நிற்காத காவலரே இப்போது இல்லை என்று சொல்லும் நிலையில் இருக்கிறோம்.

காவல்துறையை மேம்படுத்தி இப்போது காவலர்களை காக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

காவலர்களே...உங்கள் அதிகாரிகள் உங்களுக்காக பேச மாட்டார்கள்.
பொதுநல ஆர்வலர்களே பேசுவார்கள்.!

காவலரே..இன்று NEETக்கு எதிராக குரல் கொடுத்து போராடும் நம் மக்கள்
உண்மையில் உங்கள் வீட்டில் இருக்கும் அனிதாவுக்கும் சேர்த்தே போராடுகிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

கொஞ்சம் கருணை காட்டுங்கள்

மக்கள் இன்னமும் உங்கள் மீது சிறு கருணையும், சிறு, வெகு சிறு மரியாதையும் வைத்துள்ளனர். அதை தக்க வைத்து கொள்ளவாவது
வன்முறையை கட்டவிழ்த்து விடாதீர்கள்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது.