Thursday, July 08, 2010

சாருவுக்கு ஒரு கடிதம் -


அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,

உங்களின் வலைப்பக்கத்தை தவறாமல் தினம் படித்து இன்புறுகிறேன் என்று பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்க வருவேன்.

இதுபற்றி உங்களுக்கு நான் எழுதும் கடிதம் இது.

முதலில் உங்களின் வலைப்பக்கத்தை படிக்க தொடங்கிய போது ஒரு சுவாரசியம் இருந்தது. ஏதோ ஒரு சொல்ல வருகீறீர்கள். என்ன என்று புரிந்து கொள்ள முயற்ச்சிப்போம் என்று தொடங்கினேன். ஆனால் போக போக (எனக்கு தெரிந்து!) உங்களின் தினப்படி கட்டுரைகளில் ஒரு ஆற்றாமையும் ஒரு அயற்ச்சியும் ஒரு கோபமும் இருப்பது தெளிவாகிற்று. கோபம் என்று நான் கூறியது எல்லா சமுக நோக்கர்களும் கூறும் தற்போதையச் சமூக நிலை குறித்தான தார்மீக கோபம் அல்ல.

உங்களின் பொருளாதார நிலை குறித்த கோபம். உங்களுக்குகான (நீங்கள் நியாயம் என்று நினைக்கும்!) அங்கீகாரம் கிடைக்காதற்கானக் கோபம்! நீங்கள் அடையத்துடிக்கும் உச்சத்திற்கு செல்லுவதற்கான வழி தெரியாத‌ கோபம்!. ("அடப் பாவிகளா" என்பீர்கள்)

உண்மையில் இதைச் சொன்னாலும் நீங்கள் கோபம் கொள்வீர்கள்.
இதைத்தான் சமீபத்தில் சங்கர் என்கிற வாசகர் தெளிவு படுத்தினார். ஆனால் நீங்கள் அதை கேட்பதாக இல்லை.
யோசித்து பாருங்கள்! உங்களின் தற்போதைய வெற்றிக்கோ தோல்விக்கோ இன்னொருவர் காரணமா? நிச்சயமாக இல்லை.

நீங்கள்தான்.!!

"உண்மையை சொல்கிறேன். சத்தியத்தை சொல்கிறேன்" என்று நீங்கள் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வது உங்களது உரிமை. ஆனால் இதனால் யாருக்கு லாபம்?

"உங்கள் எழுத்துக்கள்தான் என் அறிவு விழியை திறந்தன! உங்கள் எழுத்துக்களை படித்தப் பின் தான் எனக்கு இந்த உலகத்தை பார்க்கத் தெரிந்தது!" என்று எழுதும் வாசகர்களின் கடிதங்களைக் கொண்டு உப்பு புளி கூட வாங்க முடியாது என்பது உங்களின் எழுத்துலேயே வெளிச்சம்.

இத்தனைக்கும் இந்த மகானுபாவர்கள் உங்களின் வலைத்தள பக்கத்தை படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை பதித்து தன் பெயர் அதில் வந்தவுடன் அதன் மூலம் மகிழ்வுரும் அன்பர்கள். இப்படி எழுதுபவர்களெல்லாம் உங்களின் புத்தகங்களை வாங்கியிருந்தாலேயே உங்களின் வருமானம் கொஞ்சம் பெருகியிருக்கும். ஆக இவர்களாலும் உங்களுக்கு லாபமில்லை.

தன்னைப் பற்றியே "மிக" அதிகம் புகழ்ந்து கொள்ளும் ஒரே தமிழ் எழுத்தாளர் நீங்களாத்தான் இருப்பீர்கள்.


உங்களின் இசை ரசனை உலகிலேயெ உயர்வானது என்கீறீர்கள்.
உங்களின் சினிமா ரசனை உலகிலேயெ உயர்வானது என்கீறீர்கள். இதற்கு இந்தியாவிலேயே யாரும் இணை கிடையாது என்று சவால் வேறு விடுகீறீர்கள். யாருக்குமே புரியாத பல பெய‌ர்களை சொல்லி அவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று தமிழ்நாட்டில் வாதிட்டு என்ன பயன்?

"பின்நவீனத்துவம்" என்கிறீர்கள். எனக்கு நவீனம் என்றால் "புதிய" என்ற ஒரே அர்த்தம் மட்டும் தெரியும். அது என்ன பின் நவீனத்துவம். "BACK TO THE FUTURE" - போலவா? புரியல சாமி!

இன்று தமிழகம் இருக்கும் நிலையில், செந்தமிழ் நாட்டு மக்கள் பெட்ரோலிய விலை உயர்வையும், காஸ் சிலிண்டர் உயர்வையும் இதனால் வீட்டுப் பொருளாதாரத்தில் ஏற்ப்படும் ஓட்டையைப் பற்றியும் கவலை கொண்டு இருக்கிறார்கள். தினசரி சமுகப் பொருளாதார பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்து கொஞ்சம் வலைப்பக்கம் வந்தால் இப்படி நீங்கள் அவர்களை வறுத்து அவர்களின் அறியாமையை எள்ளி நகையாடிக் கொண்டிருந்தால் எவன் உங்களின் எழுத்துக்களை மேலும் அறிய உங்களின் புத்தகங்களை வாங்குவான்?.

உங்களின் கருத்துப்படி நீங்கள் ஐரோப்பிய மனநிலை கொண்ட ஆனால் போதாத காலத்தினால் (பொல்லாத காலத்தினால்!) தமிழகத்தில் வந்துப் பிறந்துவிட்ட ஒரு மனிதர். இப்படி எத்தனை காலம் சொல்லிக் கொண்டிருக்கப் போகீறீர்கள்? உங்களுக்கு ஐரோப்பா எந்த அளவுக்குத் தெரியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு ஐரோப்பாவை ஒரளவுக்கு தெரியும். 10 ஆண்டுகளாக ஐரோப்பாவில் வாழ்ந்து வருகிறேன்! இந்தியாவில் அல்லது தமிழகத்தில் இருப்போரெல்லாம் ஏங்கி தூக்கு மாட்டிக் கொண்டு தொங்குமளவுக்கு ஐரோப்பா சொர்கமா! என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அதற்காக நான் தமிழகத்தை ராஜா பாடியது போல் (சொர்கமே என்றாலும்!!) சொல்லவில்லை. நிச்சயம் இந்தியா மற்றும் தமிழகம் ஐரோப்பியரிடமிருந்து அல்லது உலகிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஆயிரமிருக்கு. என்னுடைய வலைப்பக்கத்திலேயே அதைப் பற்றி விரிவாக் ஒரளவுக்கு எழுதியிருக்கிறேன்.

இருந்தாலும் உலகமும் நம்மிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகளும் நிறைய உண்டு என்பதையும் அறிய வேண்டும்.

சரி!.. உங்களுக்கு ஐரோப்பா அவ்வளவு விருப்பம் என்றால் நீங்கள் இங்கு குடியேறலாமே! யார் தடுத்தது? ஆனால் ஒன்று! இங்கு உங்களின் தமிழ் எழுத்து விலை போகாது. பிரஞ்சோ! ஸ்பானிஷோ அல்லது ஜெர்மானிய மொழியோதான் கற்று எழுத வேண்டும். அப்படி எழுதினாலும் அவர்களின் கலாசார வேர்களை நீங்கள் கற்க ஒரு ஆயூள் தேவை. ! அப்புறம் எங்க எழுத!!

நீங்கள் பிறந்து, வளர்ந்து, அறிந்த ஒரு (தமிழ்)நாட்டு மக்களையே பெருமளவு கவர முடியாதவர் வேறு மொழி கற்று அங்கு ஜெயிப்பேன் என்பதை உங்களின் யோசனைக்கே விட்டு விடுகிறேன்.


முதலில் உங்களை புரிந்து கொள்ளூங்கள்.

மற்றவர்கள் குறைகளை விவரிக்கும் போது மட்டும் நீதி பேசும் நீங்கள் உங்கள் முறை வரும் போது செளகரியமாக நீதியை மறந்து விடுகிறீர்கள்.

"நீயா நானாவில்" கோபி உங்களை வஞ்சகமாக வரவழைத்து உங்களின் விளக்கங்களை பெறுமளவு சொல்லவே விடாமல் வெறும் மன்னிப்பு மட்டுமே கேட்க வைத்தது எத்துனை குற்றமோ அத்துனை குற்றம் நீங்கள் உங்களுடைய கருத்துக்கு எதிர்கருத்துக்களை சாடும் முறை. உதாரணமாக இந்த வாரத்தில் நீங்கள் ஞாநியைப்பற்றி எழுதியவை.

முன்பு ஞாநி உங்களை குறை சொன்னார் என்று கோபம் கொண்டு காத்திருந்து இன்று அவர் அமெரிக்கா சென்றிருக்கும் சமயத்தில் "பிராமண வாக்கு" அல்லவா என்று அவரது ஜாதியை வெளிப்படுத்தி பாய்ந்தது கேவலம். மேலும் அவருக்கு நல்ல ஸ்பான்சர்கள் வாய்க்கட்டும் என்று கேலி வேறு. தேவையா?

நான் ஞானியின் கைக்கூலி என்று என் மீது பாயாதீர்கள். நான் மேலே சொன்னது ஒரு உதாரணம்தான். ஜெயமோகனை நீங்கள் விவரிக்கும் விதம் இன்னும் மோசம்.

ஒரு சக எழுத்தாளர் மற்றும் கருத்தாளர் மீது இத்தனை காழ்ப்புணர்வு தேவையா? இதுதான் நீங்கள் அறிந்த ஐரோப்பிய பழக்கமா? தனிப்பட்ட முறையில் தாக்குவது எந்த ஐரோப்பிய நாகரீகம்?

ஞாநி தன் எழுத்துக்களில் எப்போதும் தன் சாதியின் அடையாளத்தை திணித்ததில்லை. உண்மையில் அவருக்குத் தன் ஜாதியின் பேரில் அபிமானம் இருக்குமா என்பது கூட சந்தேகமே! அவரது கருத்துக்களுக்கு உடன்படாதவர்களும் அவரை ஒரு ஜாதியின் பெயரால் சீண்ட மாட்டார்கள் (திராவிட இயக்கங்களை தவிர!‍ அது அவர்களின் தனிப்பட்ட ஸ்டைல்!)

நான் படித்தவரை திரு. ஞாநி சாதிச் சகதியைத் தாண்டித்தான் தான் கருத்துக் களைப் பதித்திருக்கிறார்.

அவரை நீங்கள் இப்படி தரம் தாழ்ந்து சீண்டலாமா?

உங்களின் எழுத்துக்களை மற்றவர்கள் மதம் மற்றும் சாதீக் கண்ணாடி கொண்டுப் பார்ப்பது தவறுதானே? அதே தவறை நீங்கள் செய்யலாமா?
உங்களின் மதமோ அல்லது சாதியோ எனக்குத் தெரியாது என்பது வேறு விஷயம். தெரிந்தாலும் எம் போன்று வெறும் கருத்துக்களை மட்டுமே நாடிப் போகின்றவர்கள் எழுதியவரின் சாதி மத அடையாளங்களை சட்டை செய்வதில்லை.


பாரதியின் பாடல்களை எமக்கு படிக்கச் சொல்லிக் கொடுத்த போது அவர் ஒரு பிராமணர் என்று சொல்லிக் கொடுக்கவில்லை. அவர் ஒரு தேசிய கவி என்றே எம் ஆசிரியை சொல்லிக் கொடுத்தார். பின்னாளில்தான் அவரது ஜாதிப் பின்புலம் நாங்கள் தற்செயலாக தெரிந்து கொண்டோம்.

இன்றுவரை எனக்கு பாரதிதாசனின் ஜாதி தெரியாது! தெரியவேண்டியதுமில்லை.
இத்தனைக்கும் சிறுவயதில் பாரதிதாசனின் மகன் எம் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்துல்ரகுமானி கவிதையை படித்து ரசித்த காலங்களில் அவரது மதம் எமது கண்ணுக்கு தெரியவில்லை. இத்தனைக்கும் அவரது பெயரைக்கூட அவர் மாற்றிக் கொண்டு எழுதவில்லை.

இப்படி பேசிக் கொண்டே போகலாம்.
இதற்காக நீங்கள் என்ன மதம் என்று நான் கேட்க தயாராக இல்லை. அது எனக்கு தேவையில்லாத விஷயம்.
இருந்தாலும் நீங்கள் நாசூக்காக ஒரு சக எழுத்தாளரின் சாதியை வெளிப்படுத்தி அல்லது சொல்லி வஞ்சப் புகழ்ச்சி பாடுவது தவறு.

இது போல எத்துணைப் பேரை நீங்கள் பகைத்துக் கொண்டீர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. கோபமும் ஆற்றாமையும் மனிதனை எங்கெல்லாம் கொண்டு செல்கிறது என்று பாருங்கள்.

சுஜாதாவிற்கு பிறகு உங்கள் எழுத்துக்களைத்தான் இளைஞர்கள்/இளைஞிகள் மிகவும் விரும்புவதாக நீங்களாக்க் கூறியுள்ளீர்கள். உங்களின் புத்தகங்களின் விற்பனையைப் பார்த்தால் (உங்களின் கணக்குப் படியே) அந்தக் கூற்றீல் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

சரி.! அந்த சுஜாதா அப்படி ஒரு மகத்தான வெற்றியைப் எப்படி பெற்றார் என்று யோசித்தீர்களா?

அவர் எதற்காகவும் யாருடனும் தன்னை ஒப்பிட்டுக் கொண்டதில்லை.

யாருக்கும் அவர் உபதேசித்ததில்லை.

யாரையும் அவர் ஊடகங்களில் பகிங்கரமாக திட்டியதில்லை. திட்டி எழுதியதில்லை. (எனக்கு அவரை தனிப்பட்ட வகையில் தெரியாது! இருந்தாலும் அவரை தெரிந்தவர்கள் கூட, அவர் தனிப்பட்ட முறையிலும் நல்லவர் என்றே கூறுகின்றனர்)

அவர் தன் மேதாவித்தனைத்தை தானே மெச்சிக் கொண்டதில்லை.
ஒரு முறை தன் எழுத்துக்களை அவரைக் கொண்டே விமர்சிக்கச் சொன்ன போது அவர் அதை ஒரு தர்ம சங்கடமாகவே உணர்ந்து எழுதினார்.

சிலர் அவரை அந்த கால எழுத்தாளரான தேவனுடன் சிலசமயம் ஒப்பிட்ட போது (அவரது ஆரம்ப கால நகைச்சுவை கூடிய துப்பறியும் கதைகளை கொண்டு!) அவர் அதை மறுத்ததுடன் மட்டுமல்லாது பிற்காலத்தில் அதனினும் மாறுப் பட்டே எழுதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

தனக்கு தெரிந்தவற்றை, புரிந்தவற்றை, புதிய விஷயங்களை அழகாக ஒரு கதையின் ஊடாகவோ அல்லது ஒரு கட்டுரையின் ஊடாகவோ அவர் தொடர்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்படி சொல்வதிலும் ஒரு அழகுணர்ச்சியை கையாண்டார்.

அதில் ஒரு காழ்ப்புணர்ச்சி இல்லை. கயமை இல்லை. எதிராளியை வீழ்த்தி கொக்கரிக்கும் ஆணவம் இல்லை.

அவரைப் பின்பற்றுவது அத்துணை எளிதல்ல என்றும் இன்னொருவர் அதுப் போல வர சமிபத்தில் சாத்தியமல்ல என்றும் மனுஷ்யபுத்திரன் கூறுகின்றார்.

அவர் போல இன்னொரு ஐரோப்பிய அல்லது அமெரிக்க எழுத்தாளர் எழுதிப் புகழ் பெற்றிருந்தால் அந்த எழுத்தாளர் மிகச் சாதாரணமாக ஒரு தீவையை சொந்தம் கொண்டாடும் அளவுக்கு செல்வந்தராக இருந்திருப்பார் என்று திரு. மதன் அவர்கள் திரு. சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் சொன்னார். அது உண்மைதான்.

ஆனால் அந்த உண்மை சுஜாதாவிற்கு அவர் உயிருடன் இருந்த போதே தெரியாதா? நிச்சயம் தெரிந்திருக்கும்.
ஆனால் அவர் அதை வெளிக்காட்டிக் கொண்டதேயில்லை. பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்று அவர் பலமுறை மறைமுகமாகக் கூறினார்.

அதுதான் அவரது உயர்நிலைக்கு காரணம்.

மேலும் ஒரு முறை மறுபிறப்பைப் பற்றிய கேள்வியில் மீண்டும் பிறந்தால் தான் இதே தமிழ் எழுத்தாளனாக அதே முதுகு வலியுடன் பிறக்க வேண்டும் என்பதே தன் விருப்பமாகக் கூறினார். கவனியுங்கள்! அவர் அடுத்த பிறவியிலாவது தான் ஒரு ஐரோப்பிய அல்லது அமெரிக்க எழுத்தாளராகப் பிறந்து ஒரு தீவை விலைக்கு வாங்க கேட்கவில்லை.

இப்போது சொல்லுங்கள்! வெற்றியின் வழி தெரிந்ததா?

"நான் எந்த காலத்திலும் சுஜாதாவை ஒரு எழுத்தாளராக மதித்ததில்லை. அவர் ஒரு எழுத்தாளரே இல்லை. அவர் ஒரு கதை சொல்லி.(அது என்ன கருமாந்தரமோ!).அவர் ஒரு இலக்கியவா(வியா)தியே அல்ல! நான் வேறு ரகம். நான் உலக இலக்கியத்தின் ரட்சகன்" என்று நீங்கள் கூறலாம்.

ஆனால் உண்மையில் நீங்கள் அவர் அடைந்த்தைப் போன்று புகழடையவும், அங்கீகரிக்கப்படவும், செல்வம் பெறவுமே (அவர் பெற்றாரா என்று தெரியாது) ஏங்குகிறீர்கள் என்பது நிதர்சனம்.

மேலும் ஒரு விஷயம்.

ஒவ்வொரு மனிதனின் மனவிகாரங்கள் அவரது செயல் அல்லது படைப்புகளில் வெளிவரப் பார்க்கும். அதை சாமர்த்தியமாக ஒதுக்குவதே ஒரு சிறந்த மனிதனின் செயலாகும் என்று படித்திருக்கிறேன்.

"ஒரு 7 வயது பெண் குழ்ந்தையை............போன்று"..என்ன ஒரு மட்டமான உவமானம்!!!. இந்த கருமத்தை மீண்டும் மீண்டும் வேறு எழுதி உங்களின் இயலாமையை கோபத்தை வெளிப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

இன்னொரு முறை " அவரையும் என்னையும் எப்படி ஒப்பிட முடியும்...தனியறையில் யாருடை ........சரியாக வேலை செய்கிறது என்பதை போன்ற‌ விஷயமா" என்பது போன்ற எழுத்துக்கள் உங்களை பொதுவாக பார்வையாளர் மத்தியில் எங்கு நிறுத்தும் என்பது தெரியாதா?

ரஞ்சீதா ராஜசேகருடன் இருந்த நிலை குறித்து விவரிக்கும் போது இன்னும் கண்ணீயம் காக்க வேண்டும். அவர் எதை சுவைத்தார்?அவருக்கு என்ன தண்டனை போன்ற அபத்தங்களை நிறுத்தலாம்.

நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள் என்கிற கோபத்தை விட நீங்கள் தூக்கி நிறுத்திய நபர் உங்களை இப்படி நாலு பேருக்கு பதில் சொல்ல வைத்து விட்டானே என்கிற கோபமே உங்களை இன்னும் இது போன்று அந்த விவகாரத்தில் பேசச் சொல்கிறது.
இதற்கு நீங்கள் இப்போது ஒன்றும் செய்ய இயலாது. ஒரளவுக்கு பேர் தெரிந்த மனிதராக இருப்பவர்கள் தங்களை கவர்ந்த விட்ட ஒரே காரணத்தினால் இன்னொரு தனிமனிதரை தங்களின் எழுத்து அல்லது ஊடகத்தின் மூலமாக் உயர்த்திப் பிடிக்கும் போது இது போன்று விபத்துக்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். காரணம்...to error is human!!

ஆக திரு. சாரு அவர்களே! கொஞ்சம் யோசியுங்கள்.

தொடர்ந்து வலைத்தளத்தில் நீங்கள் படிக்கப் பட வேண்டியவராக இருக்க மற்ற வியாபார பத்திரிக்கைகள் செய்யும் அதே விளம்பர உத்தியான "அதிர்ச்சி" உத்தியை (MATERIAL FOR SHOCK VALUE!) கையாளுவது சில சமயம் எதிர் விளைவுகளையும் உண்டாக்கும்.

56 வயதில் தெருவுக்கு தெரு பப்பு எங்கிருக்கிறது என்று தேடி பின் அதைப் பற்றி எழுதுவது ஒரு டைரிக் குறிப்பாக இருக்கலாம். நிச்சயமாக இலக்கியமா?

வெறும் பெண் ரசிகைகளைப் பற்றி விலாவரியாகக் கூறி உங்களின் இளமையின்(!) ரகசியத்தை எழுதுவதும் ஒரு டைரிக் குறிப்பே. (நிச்சயம் நான் வயத்தெரியவில்லை! ‍ என் இளமை எனக்கு தெரியும்!) யாருக்காக இந்த இளமைத் தோற்றம் என்று தெரியவில்லை! ஒருவேளை தலைமுடிக்கு, மீசைக்கு மை அடிப்பது போன்று இது ஒரு உத்தி என்றே நினைக்கிறேன். முன்பு 70 / 80களில் சில தமிழ் எழுத்தாளர்கள் இந்த உத்தியை உபயோகித்தனர்.
இது எந்த விதத்தில் உங்கள் எழுத்துக்களை பரவலாக்க உதவும் என்று தெரியவில்லை.

திருவல்லிக் கேணி முரளி, தனுஷ் போன்று உங்களின் தீவிர ஆதரவாளர்கள்
சொல்வது போன்று நான் வெறும் சாதாரண வாசகன் தான். எனக்கெல்லாம் பதிலளித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். ஆனால் சிந்தியுங்கள்.

இன்று வரை நீங்கள் எழுதியது மக்களை சென்றடையவில்லை என்றால் அதற்கு உங்கள் எழுத்தும் ஒரு காரணமாக இருக்கலாம். யாருக்கு தெரியும்?

56 வயதில், தொடர்ந்து ஒரு 30 வருடம் ஒரு மொழியில் எழுதி கிடைக்க வேண்டிய புகழ் மற்றும் அங்கீகாரம் கிடைக்காமல் போகும் போது,(உங்களின் கூற்றுப்படி) மீண்டும், மீண்டும் உங்களை விளக்கிக் கொள்ள தேவைப்படும் போது ஒரு அயர்ச்சி உண்டாவது நியாயமே. இந்த உழைப்பில் பாதி கூட செய்யாதவனுக்கு மரியாதை செய்யப்படுவதாக நீங்கள் நினைத்தால் வருவது ஆற்றாமையே!

ஆனால் அதை வெல்ல நீங்கள் எடுக்கும் ஆயுதம் வீண் கோபம். அது சரியல்ல.

உங்களின் எழுத்துக்கு அதற்குரிய உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத்தான் பலரும் நினைக்கிறார்கள். உங்களின் புத்தகம் விற்க வேண்டுமானால் ஒன்று இன்னும் சிறப்பாக எழுதுங்கள். அல்லது சிறப்பான விற்பனை உத்திகளை கையாளுங்கள்.

உங்கள் வலைத்தளத்திலேயே "இ‍‍புத்தகமாக" விற்கலாமே"

அதெல்லாம் சரி! வலைத்தளத்தில் கூகுள் "வைக்கிபிடியாவில்" போய் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல் என்று எழுதினால் பல பேர் பெயர்கள் (உ.ம். ராமகிருஷணன், சுந்தரராமசாமி, சுஜாதா)வருகிறது.

உங்கள் பெயரை காணவில்லையே!!!
உங்களுக்கு வலைத்தளத்திலும் நண்பர்கள் அதிகமில்லை போலிருக்கு.

சீக்கிரம் உங்கள் பெயரை அந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலில் சேருங்கள்.
வாழ்த்துக்கள்.

24 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட...பட...பட்...



”கால்ல முள்ளு குத்தின (தேடி வந்து) கதைதான்”..

கலக்கல் பதிவு பாஸ்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உங்கள் பதிவை, தமிலிஸ்ல் இணைத்துவிட்டேன்...

( மற்றவர்களுக்கும் போய் சேரட்டும் பாஸ்..)

பொன் மாலை பொழுது said...

இத்தனை நாள் எங்கிருந்தீர்கள்? தெரியாமல் போயிற்றே!
பட்டா ...நீங்களும் கூட லேட்டா??

எதிரில் இருந்தால் உங்கள் கைகளை பிடித்து குலுக்கி நோக அடித்திருப்பேன்.
அந்த "நபரை' பற்றிய மிகச்சரியான ஆய்வு அறிக்கை.

மற்றவர்களிடமிருந்து "இவர்" எவ்வாறு மாறு படுகிறார், எப்படி தனக்குத்தானே "மான்யம் 'விட்டுக்கொள்கிறார்
என்று தெளிவாக விரிவாக சொன்னீர்கள்.
எனக்கு ஏனோ சுஜாதாவுடன் இந்த "கருமாந்திரத்தை " ஒப்பிட்டு பேசுவதே கோபத்தை உண்டாக்குகிறது.
சுஜாதா இறுதிவரையில் சுயமாக, இயல்பாக , தலைகனம் இல்லாமல் நல்ல, சிறந்த மனிதராகவும் வாழ்தவர்.
பிறரிடமிருந்து "இரந்து வாழாமல்" தன் சொந்த உழைப்பில் முன்னேறியவர்.
இந்த 'கருமமோ' தனக்கு" யாரும் தரவில்லையே " என்று புலம்பி திரியும் ஜென்மம்.
அதற்கு காவடி தூக்கவும் சில சொந்த புத்தி அற்ற ஜென்மங்கள்.

ILLUMINATI said...

பாஸ்,இது செவிடன் காதில் ஊதிய சங்கு.
சுவைத்த,ஓசி f பத்தியும் எழுதுறப்பயே தெரிய வேணாம்?

ரசிகைகளின் 'நீங்க இந்திரன்,சந்திரன்' வகைக் கடிதங்களை போடுறப்பையே தெரியல,இதுக்கு வேண்டியது அங்கீகாரம் இல்ல.சொம்பு தூக்கிங்க னு..

என்னதான் சுத்தப்படுத்தினாலும்,சாக்கடை சந்தனம் ஆகாது.வேற நல்ல எழுத்தாளர்கள் ஆயிரம் இருக்காங்க.போய் படிங்க.இந்த ஆளோட உளறல்களை படிச்சு நேரத்த வேஸ்ட் பண்ண வேணாம்.அதுலயும் முக்கியமா அவரோட வெப்சைட்ட.

Swami said...

arumayana padhivu. enga ellarudaya manadhil iruppadayum padam pidithu katti irukkireergal.Keep it up!!

ILLUMINATI said...
This comment has been removed by the author.
Raman Kutty said...

கக்கு மாணிக்கத்தின் வரிகளையும் உங்கள் பதிவின் வரிகளையும் வரிக்கு வரி வழிமொழிகிறேன்.. ஹும் ... சாரு படிக்க வேண்டும்.. திருந்த மாட்டார் என்றே தோன்றுகிறது. அவரது வயதின் பிடிவாதம் விடாது. இந்த வயதில் உள்ளவர்களிட்ம் காணப்படும் அதே குணம். நான் எல்லாம் என் வயசு காலத்தில என்று தொடங்கி.. இப்ப கூட நான் அப்படித்தான் என்பது வரை..

பொன் மாலை பொழுது said...

நண்பர்" raman- Pages " அவர்களுக்கு,

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி .

ரவிக்குட்டி அவர்கள் எழுதி இருப்பதை 'அந்த ' நபர் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.,
உண்மையில் இந்த ஆய்வறிக்கையை படித்து தெளிய வேண்டியது அவரின் சீடர்களே அன்றி
வேறு யார் உள்ளார்?

இதனை படித்து புரிந்து கொள்ளும் மன நிலை அந்த ஆளுக்கு உண்மையில் இருக்குமானால்
இது போன்ற ஒரு கலந்துரையாடலே வந்திருக்காது. மனதில் விகாரம் அனைவருக்கும் இருக்கலாம்.
ஆனால் "இந்த"ஆளுக்கு உள்ள விகாரம் ...அப்பப்பா கடலை விட மிகப்பெரியது. ஒரு மன நோயாளிதான் !

Ravikutty said...

உங்களின் மேலான வரவிற்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே!
அன்புடன்
ரவி

sikkandar said...

excellent article....

வேலன். said...

நீண்ட கட்டுரை...அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்,
வேலன்.

powerstarbala said...

Engaiyaa irrundeenga ivvalu naala? ithukku mela intha aalaa (charu)va onnum ketka mudiyathu..

தமிழன் said...

என் மனதில் பட்டதை சொல்லி விட்டீர்கள் .

Thomas Ruban said...

சபாஸ் ரவிகுட்டி சார்.

தமிலிஸ்ல் இணைத்த பட்டாபட்டிக்கும் நன்றிகள் இல்லையென்றால் ஒரு அருமையான மிகச்சரியான ஆய்வு கட்டுரையை தவறவிட்டிருப்பேன்.

பகிர்வுக்கு நன்றிகள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Congrats!

Your story titled 'சாருவுக்கு ஒரு கடிதம் -' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th July 2010 11:51:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/298759

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

hayyram said...

//Congrats!

Your story titled 'சாருவுக்கு ஒரு கடிதம் -' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th July 2010 11:51:02 PM GMT//

congrats from me also.

regards
ram

www.hayyram.blogspot.com

hayyram said...

//Congrats!

Your story titled 'சாருவுக்கு ஒரு கடிதம் -' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th July 2010 11:51:02 PM GMT//

congrats from me also.

regards
ram

www.hayyram.blogspot.com

ராம்ஜி_யாஹூ said...

அருமையாக எழுதி உள்ளீர்கள்.

உண்மையிலேயே சாரு வின் பதிவுகளில் ஒரு வித எதிர் மறையான எண்ணமே வெளிப்படுகிறது. (negative attitude writings, fault finding on others attitude)

என் குழந்தையை சாருவின் எழுத்துக்களை தவிர், படிக்காதே என்றே சொல்வேன், ஏனென்றால் எதிர் மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் ஒரு எழுத்து அது. (Continouous reading will develop negative attitude mindset)

உங்களின் தர்க்க ரீதியான வாதம் /எழுத்து மிகவும் ஈர்க்கிறது என்னை.

இனைய காலத்திற்கு முன்பு வரை இவர்கள் கூறி கொண்டு இருந்த ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர் சங்கதிகள் எல்லாம் இபோது எடுபடாது, இப்போது ச்சுசென்றம், சின்னாளப்பட்டி , விக்கிரவாண்டி போன்ற சிறு நகரம், கிராம மக்களும் வாஷின்டன் போஸ்ட், கார்டியன் (guardian) படிக்க முடியும்.,

சவுக்கு said...

மிக மிக விரிவான, ஆழமான பதிவு. தீர்க்கமான பார்வை. பல பேரின் மனதில் இருந்த ஆதங்கத்தையும் உணர்வுகளையும், ஒரு சேர வெளிப்படுத்தியுள்ளீர்கள். நித்யானந்தா அம்பலப்பட்ட உடன், சாரு எழுதிய பதிவில் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளைப் பார்த்தால், எப்படிப்பட்ட ஏமாற்றத்திலும் ஆத்திரத்திலும் அவர் இருந்தார் என்பது புலப்படும்.

மேலும், நித்யானந்தாவைப் பற்றி, ஆகா ஓகோ என்று எழுதிய பதிவுகள், அவர் முகத்தில் அறையுமே என்று, வசதியாக லேப்டாப்பில் வைரஸ் என்று ஒரு டுபாக்கூர் காரணத்தை வேற சொல்லியிருந்தது சாரு எந்த அளவுக்கு ஒரு நேர்மையற்ற நபர் என்பதை புலப்படுத்துகிறது.

இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள், சாருவைப் பற்றியெல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதுதான் எனது வேண்டுகோள்.

வாழ்த்துக்கள்.

raja said...

மிக அருமையான பதிவு. உங்கள் கருத்துக்களை மிகவும் நாகரீகமான முறையில் தெரிவித்து இருக்கிறீர்கள்.சாதாரணமாக வலைப்பக்கங்களில் சாறுவுக்கு மறுப்பு தெரிவிப்பவர்களின் பதில் ஆக்ரோசமாக இருக்கும்.ஆனால் நீங்கள் பொறுமையாக விளாக்கமாக இத்தனை நீளத்திற்க்கு அளித்திருக்கின்றீர்கள் அதற்க்காக உங்களை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

பொன் மாலை பொழுது said...

// இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள், சாருவைப் பற்றியெல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதுதான் எனது வேண்டுகோள்.//

---------------------------சவுக்கு


என் ஆதங்கமும் இதுதான். 'அதுகளை " பற்றி நாம் எழுதவோ "அதுகளை " பற்றி படிக்கவோ நமக்கு எவ்வித அவசியமும் இல்லை.

அகல் said...

அழகு... அற்புதமான ஆய்வு...

Ravikutty said...

திரு. பட்டாபட்டி மற்றும் "hayyram" போன்ற நண்பர்களின் மூலம் நான் "தமிலிஸ்"ல் இணைந்து ஒரு பத்து இருபது பேருக்கு அறியப்பட்டேன் என்பதில் மகிழ்ச்சி. நண்பர்களுக்கு நன்றிகள் உறித்தாகுக.

Giri Ramasubramanian said...

ரவி,

நீங்கள் நான்கு வருடங்களில் மொத்தமே முப்பத்து சொச்ச பதிவுகள் மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். ஏழே ஏழு பேர் தொடர்கிறார்கள்.

எனக்கு வெட்கமாயிருக்கிறது. நான் பக்கம் பக்கமாகக் குப்பைகளை எழுதிக் குவிக்கிறேனோ என எண்ணுகிறேன், உங்கள் இந்தப் பதிவைப் பார்த்தபின்.

அட்டகாசம், அருமை, அற்புதம்.....
என்ன ஒரு சிறப்பான கடிதம் இது.

ஆனால், விஷயம் என்னவென்றால், இதை நீங்கள் யாருக்கு எழுதினீங்களோ அவரோ அல்லது அவரது ________களோ இதை சட்டை செய்யும் பக்குவத்தில் இல்லை என்பதே உண்மை.

முப்பது வருடமாக இலக்கிய உலகில் இருப்பவரை விமரிசிக்க நீ யார் என்பார்கள். விமரிசனம் தேவையில்லை என்றால் வெறுமனே வீட்டுக்குள்ள டைரி எழுதிக்கணும்னு அவங்களுக்கு தெரியாது.