Saturday, January 28, 2017

வளர்ச்சியா ? வீழ்ச்சியா ?Image may contain: sky, cloud and outdoor

கொஞ்சம் திரும்பி பார்த்தால் நாம் எப்படி பொதுவாக முன்னேற்றம் வேகம் என்கிற கலர் கண்ணாடியை போட்டுக்கிட்டு போக ஆரம்பிச்சு அதன் பக்க விளைவுகளே எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் விழிக்கிறோம். 

உடனே நான் முன்னேற்றத்திற்கு எதிரி பழமைவாதி ...
என்று நவீன ஐன்ஸ்டீன்கள் கிளம்பிடாதீங்க.!!!

எந்த ஒரு மாற்றத்தையும் அதன் முழு பரிமாணங்களுடன் பார்ப்பது அதனால் நாம் பெற்ற நல்லதுகளும் கெட்டதுகளும் பற்றி அறிய உதவும்.

ஒரு மேற்கத்திய ஆள் சொன்னார்...உலகின் அதி மோசமான கண்டுபிடிப்பு...2 ஸ்ட்ரோக் இஞ்சின்தான்.
என்றார். முதலில் இது அபத்தமாக இருந்தது. பின்
கொஞ்சம் கொஞ்சமாக அவர் சொல்வதின் அர்த்தம் புரிந்தது.

முதலில் இந்த இஞ்சினுக்கான எளிய எரிபொருள் தேடுதல் தொடர்ந்தது. அதன் பலன் நமக்கு பெட்ரோல் கிடைத்தது. தார், மற்றும் கச்சா எண்ணையை பற்றி மனிதன் முன்பே அறிந்தாலும் அதை இந்த இஞ்சின் கண்டு பிடிப்புடன் இணைத்ததுதான் .. Deadly Combination.
இந்த பெட்ரோல் தனியே வரவில்லை. அதன் தொடர்ச்சியாக டீசல், கெரோசின் தார், இப்படி அதன் உப பொருள்கள் வந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்கு அடியில் பதுங்கியிருந்த விஷங்கள் மேலே கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டன. சுற்று சூழல் மாசு பட்டது. விஷத்தின் கடைசி எச்சமாக பிளாஸ்டிக் வந்தது.
இது அடுத்த 25000 வருஷத்திற்கு நம்மை விட்டு போகாது என்று இப்போது சொல்ல தொடங்கியிருக்கின்றனர்.

இதன் இன்னொரு பக்கம் பாருங்கள். முதலில் சிறு இஞ்சின், பின் கார், லாரி, பஸ், மற்ற இயந்திரங்கள் என்று இதை சார்ந்த பொருள்களின் உருவாக்கம். இதற்கான தொழிற்சாலைகள் பிர்மானடமாக உலகெங்கும் உருவாகின்றன. இப்போது இந்த தொழில்களுக்கான இடு பொருள்களின் தேவை அதிகரிக்கிறது. இப்போது அதை தேடி பூமியை பெருமளவு சேதப்படுத்த தொடங்குகிறோம்.

ரப்பர், கண்ணாடி, ரசாயன கலவை பெயின்ட், இப்படி
இதன் உப பொருள்களின் லிஸ்ட் ரொம்ப பெரிது.

இப்போதும் வேகம் வேகம் வேகம் இன்னும் வேகமான கார்களுக்கும், பஸ்களுக்கும் நாம் தேடி சென்று கொண்டு இருக்கிறோம். இப்போது இதற்கான சாலைகள் அமைப்பு. பின் அதற்கான கட்டுமான பொருள்கள் சேகரிப்பு ..இப்படி இன்னொரு பக்க உருவாக்கங்கள்.

இவையெல்லாம் முன்னேற்றம் என்கிற அளவிலேயே உங்கள் முன் வைக்கப்படுகிறது. இவைகளில் எத்தனை வளர்ச்சிகள் நமக்கு நல்லது செய்தன..எவ்வளவு கெட்டது செய்தன என்று சிந்தியுங்கள். இது நிச்சயம் தேவை..
காரணம் நாளை ..பசித்தால் நீங்கள் பெட்ரோலை குடிக்க முடியாது. பிளாஸ்டிக்கை திங்க முடியாது.

இன்று அதே எண்ணைக்காக எத்தனை லட்சம் மக்கள் கேள்வியே இன்றி கொல்லப்படுகின்றனர் ? கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர்
மத்திய கிழக்கில் மட்டும் போர்களில் இறந்து போனார்கள்.

இத்தனை அசுர விஷயங்களும் வெறும் ஒரு 150 ஆண்டுகளிலேயே நடந்து விட்டன. ஆனால் இதனால் பாழாய் போன உலகை சீர் செய்ய இன்னமும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இப்போது இன்று இந்த நிமிடம் நாம் பிளாஸ்டிக்கை உபயோகிப்பதை நிறுத்தினால் கூட இருக்கும் குப்பை அடுத்த 25000 வருஷங்கள் ஆகும். ...என்ன செய்ய போகிறோம்...!!

இது வளர்ச்சியா ? வீழ்ச்சியா ?

Thursday, January 26, 2017

கேள்விகள்.



என் சிறுவயதில் நான் என் தந்தையை நிறைய கேள்விகள் கேட்பேன்.
எல்லோரும் செய்வதுதானே !!
இதில் என்ன அதிசயம் என்றுதானே நினைக்கிறீர்கள்.
ஆனால் நான் பல அடிப்படை நம்பிக்கைகளை எங்கள் குடும்பம் வழி வழியாக நம்பி வந்தவைகளையே கேள்வி கேட்டேன். 
 வழக்கப்படி குடும்பம் மிரண்டு போனது. ஆனால் என் தந்தை என் மீது கோபப் படவில்லை.
 இதுல காமெடி என்னவென்றால் அவர் முழுவதும் நம்பியவைகளையே நான் கேள்விக்குரியதாக்கி விளக்கம் கேட்டேன். அவரால் சொல்ல முடியவில்லை.
ஆனாலும் அவர் கோபப்பட்டு திட்ட வில்லை.
எல்லாம் பின்னாடி தெரியும் என்று மழுப்பவில்லை.
தெரியவில்லை என்று ஒத்துக் கொண்டார்.
காரணம் அவர் பொய் சொல்லி அறியார்.
இது என்னை வெளியே பார்க்க வைத்தது. கேள்விகளுக்கு
வெளியே புத்தகங்களில் தேடினேன்.
நான் கண்ட முதல் சிறுவர் நூலகம்
மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் நூலகம். பின் பல இடங்கள்.
சில பதில்கள் கிடைத்தன. பல பதில்கள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன். நெடிய பயணம் இது.
இது என்னை பண்படுத்தியதா?? இருக்கலாம்.
அதற்கு நான் தேடிய முறையும் ஒரு காரணம்.
திறந்த மனத்துடன் தேடினேன்.
There was no pre-Conceived notion.
பெரியார் தவறு என்று நினைத்து அவரை படிக்கவில்லை. ஆதிசங்கரர் சரி என்று நினைத்து அவரை தெரிந்து கொள்ளவில்லை.
ஆனால் படித்த பிறகு அதை ஒப்பிடு சிந்தனைக்கு உள்ளாக்கினேன். அங்குதான் விடைகள் அதிகம் கிடைத்தது. ஒருவர் சொல்லிவிட்டார் என்பதாலேயே உண்மையாகாது.
அடுத்து இன்றைய உண்மை நாளைய பொய்யாக வாய்ப்பு அதிகம்.
மேலும் கருத்துக்கள் எப்போதும் அதன் காலத்துடன் பொருத்தி பார்த்து புரிந்து கொள்ளல் வேண்டும்.
வெகு சில தத்துவங்களே காலத்தை கடந்து நிற்கும்.
குறளைப் போல எது நின்றது.????
ஆனால் நிறைய சாக்கடைகளை தாண்டித்தான் சில நன்னீர் ஓட்டங்களை காணமுடியும் என்று புரிகிறது.
உலக அளவில் தேடினேன்.
பார்வை விரிவடைந்தது. ஆனால் பலன் இருந்ததா
தெரியாது. பலன் கிடைத்தே ஆக வேண்டும் என்கிற
கட்டாயமா?
ஒரு பார்வையாளனாக பலவற்றை கடந்து போனேன். ஒவ்வொரு நாளும் இதுதான் சிறந்தது உச்சம் என்று நினைக்கும் விஷயங்கள் மாறிக் கொண்டே வந்தன.
அதன் காரணம் நான் கடக்கும் பாதையும் ஏறும் என் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். என் சென்ற ஆண்டு இலக்கு இன்று இல்லை. இன்றைய இலக்கு நாளை இல்லாமல் போகலாம்.
சிலசமயம் இலக்கு தேவையா என்றே கேட்க தோன்றுகிறது.
வாழ்க்கை ஒரு நதி போல என்று சொன்னவன் புரிந்தவன்

Wednesday, January 25, 2017

 EMPIRE STRIKES BACK

ஒரு வாரம் ஒரே ஒரு வாரம் காவல்துறையின் இறுக்கத்தை தளர்த்திய உடனே தமிழ் இளைஞர்கள் (சுமார் 15 லட்சம் பேர் என்று யாரோ கணித்த எண்கள் ) இந்த அரசியல்வாதிகளின் கண்ணில் பயத்தை காட்டி விட்டனர்.

VVIP, VIP என்று எல்லோருக்கும் பெரும் பயமே வந்துவிட்டது. இதில் கட்சி வித்தியாசம் எல்லாம் கிடையாது. எல்லோரின் இருப்பும், அரசியல் எதிர்காலமும் பெரும் கேள்வி கேட்கப் பட்டது.

இப்போது தெரிகிறதா !!! இப்பொது புரிகிறதா தமிழ்நாடு அல்லது இந்திய ஆட்சியாளர்கள் தங்களை
தக்க வைத்துக் கொல்கிறார்கள் என்று ???
அடக்கு முறை...ஒரே வழி. மக்களை தொடர்ந்து ஒரு பயத்திலேயே வைத்திருக்கும் முறை.

இந்த போராட்டம் தொடங்கியது என்னவோ ஜல்லிக்கட்டு என்று இருக்கலாம். ஆனால் இதன் வேர் இன்னுமும் ஆழமான பல விஷயங்களை கொண்டது என்று உங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும். என்ன...அவிங்களுக்கு புரிய கொஞ்சம் தாமதம் ஆனது. அவ்வளவுதான்.

ஆனால் இந்த அரசியல்வியாதிகள் அவ்வளவு எளிதில் ஒடுங்கி ஒதுங்கி போய் விடுவார்கள் என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் மடையர்கள்.
இவர்கள் அமிபாக்கள் போன்றவர்கள். ஒரு பக்கம் வெட்டினால் மற்ற கூறுகள் ஒன்றிணைந்து மீண்டும் உயிர்த்தெழும்.

இந்த ஒரு வாரம் நடந்தது அவர்களுக்கு புதிது. எங்கு சென்றாலும் வழி விட்டு விலகித்தான் அவர்கள் கண்டிருக்கிறார்கள். முதல் முறையாக வழி மறிக்கப்பட்டு அதுவும் காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்டது அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாத விஷயம்.

ஒரு உணமையான ஜனநாயகத்தில் ஒரு நேர்மையான காவல்துறை இருக்கும் போது சில சமயம் இப்படித்தான் நடக்கும் என்று இவர்களுக்கு தெரியாது. இவர்கள் இதுவரை கண்டதெல்லாம் அரசியவாதி, கட்சிக்காரன் மற்றவர்களை பெரியவன். கேள்விகளுக்கு அப்பாற்பட்டவன்.. காவல்துறை இத்தகையோருக்கு சேவை செய்யவே இருக்கிறது என்பது போன்ற தவறான புரிதல்கள். அது வளர நாம்தான் காரணம்.

இந்த ஒரு வாரம் நீங்கள் அவனுக்கு காட்டியது புதிய விஷயம். அஹிம்சை போராட்டம். சரியான வலுவான தலைமை இல்லாத அரசு. ஆட்சி கட்டிலுக்கு சண்டை நடக்கும் நேரம். யார் பக்கம் சாய்வது என்று தெரியாமல் விழிக்கும் ஒரு தடுமாற்றம். எங்கு சென்று வருங்கால அரசியல் வாழ்வை தக்க வைத்துக் கொள்வது என்று புரியாத நிலை.

இப்படி அவன் மயங்கிய சமயத்தில் நீங்கள் அவனை சாதாரணமாக்கி விட்டீர்கள். அவன் கட்டி வைத்திருந்த சாதி, மத, இன கட்டுமான பிம்பங்களை உடைத்தீர்கள். இது அவனை மட்டுமன்றி அவனால் பலனடையும் அவனது கட்சியை சார்ந்த பல லட்சம் பேரை மிரட்டியது.
ஆளும் கட்சிக்கே இதுதான் என்றால் எதிர்கட்சிக்கு இன்னும் அதிர்ச்சி.

அங்க அடிச்சா இங்கத்தான் வருவான் என்று இருந்த எதிர்கட்சிகள் நீங்கள் அவனையும் ஒதுக்கியதை நம்ப முடியாமல் விழித்தனர். காத்திருப்போம் என்று ஒரு கூட்டமும், உள்ளே ஊடுருவி குழப்பம் விளைவித்து ஆளும் கட்சியை மேலும் சேதமடைய செய்வோம் என்று அவர்கள் திட்டமிடுவதற்கு ஒரு 5 நாள் தேவைப்பட்டது.

இப்ப ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இருவரும் கை கோர்க்க கூட ரெடியாக நேரம் வந்தது. காரணம் இப்போது இருக்கும் எந்த கட்சியும் உங்களை நீங்கள் நினைத்தபடி வளர விடாது. அதில் அவர்களுக்கு லாபமில்லை.

இது எல்லாவற்றையும் விட ஒரு பேராபத்து உங்களை சூழ்கிறது. அதுதான் இந்த அயோக்கியர்கள் வளர்த்துவிட்ட காவல்துறை.

நெடுங்காலமாக அரசியல்வாதிகள் காவல்துறையை தங்கள் வசதிக்கு பயன்படுத்தி வந்தனர். அதற்காக அதே காவல்துறை ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் கண்டும் காணாமலே இருந்து வந்துள்ளனர். தேன் எடுத்து கொடுத்தவன் எப்பவும் புறங்கையையே நக்கிகிட்டு இருப்பானா ?
அவன் பங்குக்கு அவனும் திருட தொடங்கினான்.  காவல்துறையும் அரசியல் செய்ய கற்றுக் கொள்கிறது. இல்லைன்னா ஜாபார் ஷெரிப், மற்றும் ஜார்ஜ் போன்ற ஆட்கள் தொடர்ந்து ஜெயிப்பன் பக்கமே இருப்பது எப்படி?

விஷம் முழுவதும் ஏறியாச்சு.

இப்ப காவல்துறை அரசியல் பண்ண தொடங்குது..
புலிவாலை புடிச்ச நாயர் கதையா, வன்முறையில் மட்டுமே ஊறிய காவல்துறைக்கு ஒரு இளைஞ்சர் சமுதாயம் காவல்துறையை பயமின்றி அணுகுவது பிடிக்கவில்லை. பயமே பலன் தரும் என்று நம் காவல்துறை இன்னமும் திடமாக நம்புகிறது.

"இந்த பசங்களை இப்படியே விட்டா பின்னாளில் எல்லோருக்கும் பிரச்சனை சார் " என்று காக்கி சட்டையின் அரசியல்வாதிகள் (ஆளும் / எதிர் இரண்டு பக்கமும் ) வெள்ளை சட்டை அரசியல்வாதிகளுக்கு ஓத தொடங்கினர். இதற்கும் 5 நாட்கள் தேவைப்பட்டது.


இப்படி எல்லோரும் ஒண்ணா கூடித்தான் உங்களை
செஞ்சுட்டாங்க.

இவர்கள் அனைவரும் வெளிதேசத்தவர்கள் அல்ல.
நம்மிடையே இருந்து நம்மால் உருவாக்கப்பட்டவர்கள்
என்பதை மட்டும் மறக்காதீர்கள்.

ஒரே ஒரு வாரம் நீங்கள் விடுதலையை சுவாசித்திர்கள்.
இடை இடையே உங்களின் அருகிலேயே சில சாக்கடைகள் புகுந்தாலும் அதெல்லாம் எளிதில் தீர்க்க கூடிய குப்பைகளே.

இது போன்ற நியாயமான சுதந்திரம் மீண்டும் வர முன்னை விட நீங்கள் பத்து மடங்கு அதிகம் திட்டமிட்டு வேலை செய்ய வேண்டும்.
காரணம் அடுத்த முறை எதிரிகளை SURPRISE செய்ய முடியாது. அவர்கள் தயாராக இருப்பார்கள்.

திட்டமிடுங்கள். சரியான தலைமையை தெரிவு செய்யுங்கள். மாற்று அரசியலை முன்னெடுங்கள்.

நம்பிக்கைதானே வாழ்க்கை.!!

வாழ்த்துகள்


Tuesday, January 24, 2017

தொலை தூரம் வந்து கற்ற கல்வி.!!

மேற்கு நாடுகளில் வாழ வந்தபின் நான் புரிந்து கொண்டது, அங்கு இந்தியாவில் /தமிழகத்தில் நாம் எப்படி மெல்ல கலாசார ரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு அழிக்கபடுகிறோம் என்பதேயாகும்.
நம்மிடத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. நிறைய இருந்தன. இருக்கின்றன. 


ஆனால் அதற்கான தீர்வுகளை 5000 வருடங்கள் பழைமை கொண்ட நம்மிடையே தேடாமல் வெறும் 1000 வருட சரித்திரம் கொண்ட ஐரோப்பியரிடமும், இப்போது அதனின் எச்சமான வெறும் 225 வருடங்களேயான அமெரிக்க குடியேறிகளிடமும் தேடியது,தேடுவது எத்தனை மடமை.??
இவர்கள் தங்களின் 1000 வருட சரித்திரத்தில் போரிட்டு அழித்துக் கொண்டது போக மிச்சம் இருந்த கலாச்சாரத்தையும் இன்று கார்போரேட்களின் காலடியில் வைத்து இழந்து விட்டு மீட்க முடியாமல் சூழ்நிலை கைதிகளாய் நிற்கதியாய் நிற்கின்றனர்.
எல்லா விஷயமும் வேண்டாம். பதிவு புத்தகமாகிவிடும். உதாரணமாக கால்நடைகள் பற்றி பார்போம்.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா???
இங்கிலாந்தில் மரபணு மாற்றம் செய்யப்படாத மாடுகளே கிடையாது.
எந்த அளவுக்கு மாற்றம் என்பதில்தான் மாட்டின் விலை தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் ஒரு விஷயம். இந்த ஊரில் கிராமப்புறங்களுக்கு சென்றவர்கள் கூட காளைகளை கண்டிருக்கவே முடியாது.ஏன் என்றால் அவைகள் பிறப்பதையே அரிதாக்கி விட்டனர். எல்லாம் ஒரு சிலரிடம் மட்டுமே போய் சேர்ந்து விட்டது.
நான் இந்த ஊர்களில் வந்த போது கண்ட ஒரு விஷயம் என் கண்ணை உறுத்தியது. இங்கு எந்த பசுவுக்கும் கொம்பு இல்லை. எல்லா பசுவும் கிட்டதட்ட ஒரே நிறத்தில் அதாவது கறுப்பும் வெளுப்புமாகவே இருந்தன. நான் இருந்த இடம் சரியான கிராமம். வழக்கமாக பொருளாதார தற்சார்பு கொண்ட இது போன்ற கிராமங்களில் என்னை போன்று அன்னியர்களை நுழையவே விடமாட்டார்கள்.
நம்மூரு போல் பண்ணையார் ஆளை வச்செல்லாம் அடிச்சு விரட்ட மாட்டார்கள். ஆனா ஊரு மொத்தமும் உங்களுக்கு வாடகைக்கு கூட வீடு தரமாட்டார்கள். மத்தபடி சிரித்து பேசி
அனுப்பி விடுவார்கள்.
அப்படிபட்ட இடத்தில் நான் கண்ட விஷயங்களை நோண்டிய போது கிடைத்த விஷயங்களே இவர்கள் கால் நடைகளை நவீன விஞ்ஞானத்தில் இழந்தது. இயந்திர புரட்சியில் இவர்கள் இழந்தது இதுவும் ஒன்று. ஒரு 200 வருடங்களில் படிப்படியாக இவர்கள் கால்நடைகளை விட்டு வெகு தூரம் வந்து விட்டனர். திரும்ப போக நினைத்தாலும் முடியாது.
இன்று இவர்களின் சொந்த உரிமை என்று கொண்டாடும் ரகங்களே இல்லை. அப்படி சொல்லப் படுபவைகளும் பெருமளவு மரபணு மாறியவைகளே...
இவர்கள் கால்நடைகளை உணவுப் பொருளாகவே பார்த்து 10 தலைமுறைகளுக்கு மேல் ஆகி விட்டது.
ஒரு 10 வருடம் முன்பு foot and mouth decease என்று ஒரு நோய் இங்குள்ள கால்நடைகளை தாக்கிய போது அத்தனை கால்நடைகளையும்...ஆமாம் நாட்டின் அத்தனை கால்நடைகளையும் கொன்று தீயிட்டு எரித்தார்கள். புதைத்தால் கூட நோய் திரும்ப வரும் என்கிற பயம். எத்தனை லட்சம் என்று தெரியாது. உலகம் மெளனமாகத்தான் இருந்தது. ஜீவ காருண்ய ரட்சகர்கள் எதுவும் பேசவில்லையே???
அன்று பத்து வருடம் முன்பு இந்த நோய் தாக்குதல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து மாட்டுக்கறி இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது.
இன்று வரை தடை நீடிக்கிறது.
இப்பொழுது கவனியுங்கள்.. எப்பொதிருந்து நம் நாட்டிலிருந்து மாட்டுக்கறி ஏற்றுமதி கொடிகட்டிப் பறக்க தொடங்குகிறது???
இப்போது புரிகிறதா உலக சந்தையின் சூட்சுமம்.?
இன்னொரு விஷ்யம். சமிபத்தில் அறிந்தது. நம் கால்நடைகள் foot and mouth decease க்கு சிக்காத மரபாம். ஒரு பேட்டியில் செனாபதி சொல்ல கேட்டேன். அந்த நோயும் வெறும் வேப்பிலை சாறு கொண்டு தீர்க்க முடியும் என்று ஒருவர் சொன்னார். வேப்பிலை இங்கு முளைக்காது. இதை பரிசோதித்து கூட பார்க்காமல் அமெரிக்க உணவு சந்தையின் கட்டளையின் படி அத்தனை கால்நடைகளையும் இங்கு அழித்தார்கள். இந்தியாவையும் இந்த வலையில்தான் சிக்க வைக்கின்றனர்.
இத்தகைய காட்சிகளை கண்ட நான்
என் வாழ்நாளில் நம்முரில் கண்ட காளைகளான தஞ்சை குட்டை காளை, மொட்டை காளை, ஓங்கோல் காளைகளே இன்று அரிதாகி போனதை நினைத்து பார்க்கிறேன்.
எல்லாமே இங்கு உணவாகி போகிறது.
இவர்கள் ஏற்கனவே தங்களின் உணவு சங்கிலியை அறுத்து உண்டு ஏப்பம் விட்டு விட்டனர். எனவே அடுத்து இவர்களின் பார்வை ஆசிய ஆப்பிரிக்க உணவு சங்கிலியின் மீது வீழ்ந்திருக்கிறது. அதன் முதல் படிதான் இந்த ஜீவகாருண்ய வேடம். அதில் நாம் பாதி விழுந்து விட்டோம்.
அவர்களுக்கு புரியாதது நமக்கும் கால்நடைகளுக்குள் இருக்கும் ஒரு பந்தம். அதை நம் மதம் வளர்த்தது.
கிராமிய கலாசாரம் வளர்த்தது. It is time tested inter related inter dependent life style which was nurtured and sustained by temple rituals and traditions.
இல்லையென்றால் ஒரு 5000 ஆண்டுகள் இந்த பந்தம் எப்படி தொடரும்???
இப்போது சொல்லுங்கள்.
ஒரு இறந்துபோன கலாசார பிணத்தின் மீது வாழ்பவர்களா நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பிக்கிறார்கள்??? அன்றும் சரி..இன்றும் சரி. நம்மிடம் இருக்கும் ஒற்றை எதிரி ஜாதி சண்டையே. இப்போது இடை செருகலாக மதச்சண்டை.
எதுவாகினும் தீர்வு வெளியே இல்லை.
அப்படி நினைத்தால் குரங்கு அப்பம் பங்கிட்ட கதைதான்.

Tuesday, January 10, 2017

ஜல்லி கட்டு அல்லது ஏறு தழுவதல்


சும்மா கிடக்கிற சங்க ஊதி கெடுக்கிரதுங்கறது இதுதானோ?
ஒரு 50 வருஷத்துக்கு முன்பு மதுரைக்கு மேலே வட தமிழ்நாட்டில் பாதி பேர் வெறுமே செவி வழி செய்தியாக கேள்விப்பட்ட ஜல்லி கட்டை இன்று ஒட்டு மொத்த தமிழ்நாட்டு அடையாளமாக மாற்றிய புண்ணியத்தை "பேட்டா" கட்டிக் கொண்டது.
வீர பாண்டிய கட்ட பொம்மன் பட மாடு பிடி 
காட்சி கூட இதை ஒரு பாண்டி நாட்டு கலாசாரமாகவே
கொண்டு சென்றது.
70 களில் தொலைக்காட்சி வந்த போது கூட வெறும் கருப்பு வெளுப்பு காட்சியாக தென் தமிழ்நாட்டு பொங்கல் சமயத்து நிகழ்வாக இந்த ஜல்லிக்கட்டு வெளியே வந்தது. அன்று யாரையாவது ஜல்லிக்கட்டு என்றால் அலங்கா நல்லூர் என்று மட்டுமே சொல்வார்கள்.வாடி வாசல், மாட்டு பிடிப்பு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவதல் என்கிற வார்த்தைகள் எல்லாம் வட தமிழ்நாட்டு மக்களுக்கு செவி வழி செய்தியே...
80 களில் ரஜினி முரட்டுகாளையாக மாட்டை பிடித்த போதும் பெரிய மாற்றங்கள் இல்லை. அலங்கா நல்லூரை அரசே விளம்பர படுத்தியது. தமிழ்நாட்டு செய்தி சுருளில் பதிவுகள் உண்டு.
பின்னாடி கமல் விருமாண்டியில் மாடு பிடிக்க இறங்கிய போது அதன் உள் இருக்கும் சாதி பரிணாமம் வெளியே தெரிய தொடங்கியது. அதற்கு மேல் ஒன்றும் இல்லை.
ஆனால் இன்று நிலை என்ன ?
மதுரையில் மாடு பிடிக்க தடை கூடாது என்று சென்னையில் 15,000 பேர்கள் (பெரிய எண்ணிக்கையப்பா!) ஊர்வலம் போறான்.
இதுல நகைச்சுவை என்னவென்றால் இன்னமும் வட தமிழ்நாட்டில் மாடு பிடி கிடையாது. இனிமேலும் வராது.
பின் எப்படி இத்தனை கூட்டம் ? சிந்தியுங்கள்.
வேறு பல கோபங்களை உள் அடக்கிய கூட்டம் இது.
ஒற்றை நோக்கத்தோட வந்தாலும் அதில் ஒவ்வொரு ஆளையும் கேளுங்கள்...தமிழ்நாடு பல் வேறு விஷயங்களில் கை விடப்படுவதாகவே வஞ்சிக்க படுவதாகவே கூறுவார்கள்.
ஜாதி சாயம் பூசப்படாமல், கட்சி சாயம் பூசப்படாமல், மத சாயம் பூசப்படாமல் கூட முடிகிறது என்கிற காரணத்தால் தைரியமாக கூடு கின்றனர்.
இந்த போராட்டத்தில் இருந்து படிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
சரியான தீர்வுகளை தமிழர்களுக்கு தாருங்கள்.
இது தேசியத்திற்கு மிகவும் அவசியம்.