Wednesday, January 25, 2017

 EMPIRE STRIKES BACK

ஒரு வாரம் ஒரே ஒரு வாரம் காவல்துறையின் இறுக்கத்தை தளர்த்திய உடனே தமிழ் இளைஞர்கள் (சுமார் 15 லட்சம் பேர் என்று யாரோ கணித்த எண்கள் ) இந்த அரசியல்வாதிகளின் கண்ணில் பயத்தை காட்டி விட்டனர்.

VVIP, VIP என்று எல்லோருக்கும் பெரும் பயமே வந்துவிட்டது. இதில் கட்சி வித்தியாசம் எல்லாம் கிடையாது. எல்லோரின் இருப்பும், அரசியல் எதிர்காலமும் பெரும் கேள்வி கேட்கப் பட்டது.

இப்போது தெரிகிறதா !!! இப்பொது புரிகிறதா தமிழ்நாடு அல்லது இந்திய ஆட்சியாளர்கள் தங்களை
தக்க வைத்துக் கொல்கிறார்கள் என்று ???
அடக்கு முறை...ஒரே வழி. மக்களை தொடர்ந்து ஒரு பயத்திலேயே வைத்திருக்கும் முறை.

இந்த போராட்டம் தொடங்கியது என்னவோ ஜல்லிக்கட்டு என்று இருக்கலாம். ஆனால் இதன் வேர் இன்னுமும் ஆழமான பல விஷயங்களை கொண்டது என்று உங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும். என்ன...அவிங்களுக்கு புரிய கொஞ்சம் தாமதம் ஆனது. அவ்வளவுதான்.

ஆனால் இந்த அரசியல்வியாதிகள் அவ்வளவு எளிதில் ஒடுங்கி ஒதுங்கி போய் விடுவார்கள் என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் மடையர்கள்.
இவர்கள் அமிபாக்கள் போன்றவர்கள். ஒரு பக்கம் வெட்டினால் மற்ற கூறுகள் ஒன்றிணைந்து மீண்டும் உயிர்த்தெழும்.

இந்த ஒரு வாரம் நடந்தது அவர்களுக்கு புதிது. எங்கு சென்றாலும் வழி விட்டு விலகித்தான் அவர்கள் கண்டிருக்கிறார்கள். முதல் முறையாக வழி மறிக்கப்பட்டு அதுவும் காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்டது அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாத விஷயம்.

ஒரு உணமையான ஜனநாயகத்தில் ஒரு நேர்மையான காவல்துறை இருக்கும் போது சில சமயம் இப்படித்தான் நடக்கும் என்று இவர்களுக்கு தெரியாது. இவர்கள் இதுவரை கண்டதெல்லாம் அரசியவாதி, கட்சிக்காரன் மற்றவர்களை பெரியவன். கேள்விகளுக்கு அப்பாற்பட்டவன்.. காவல்துறை இத்தகையோருக்கு சேவை செய்யவே இருக்கிறது என்பது போன்ற தவறான புரிதல்கள். அது வளர நாம்தான் காரணம்.

இந்த ஒரு வாரம் நீங்கள் அவனுக்கு காட்டியது புதிய விஷயம். அஹிம்சை போராட்டம். சரியான வலுவான தலைமை இல்லாத அரசு. ஆட்சி கட்டிலுக்கு சண்டை நடக்கும் நேரம். யார் பக்கம் சாய்வது என்று தெரியாமல் விழிக்கும் ஒரு தடுமாற்றம். எங்கு சென்று வருங்கால அரசியல் வாழ்வை தக்க வைத்துக் கொள்வது என்று புரியாத நிலை.

இப்படி அவன் மயங்கிய சமயத்தில் நீங்கள் அவனை சாதாரணமாக்கி விட்டீர்கள். அவன் கட்டி வைத்திருந்த சாதி, மத, இன கட்டுமான பிம்பங்களை உடைத்தீர்கள். இது அவனை மட்டுமன்றி அவனால் பலனடையும் அவனது கட்சியை சார்ந்த பல லட்சம் பேரை மிரட்டியது.
ஆளும் கட்சிக்கே இதுதான் என்றால் எதிர்கட்சிக்கு இன்னும் அதிர்ச்சி.

அங்க அடிச்சா இங்கத்தான் வருவான் என்று இருந்த எதிர்கட்சிகள் நீங்கள் அவனையும் ஒதுக்கியதை நம்ப முடியாமல் விழித்தனர். காத்திருப்போம் என்று ஒரு கூட்டமும், உள்ளே ஊடுருவி குழப்பம் விளைவித்து ஆளும் கட்சியை மேலும் சேதமடைய செய்வோம் என்று அவர்கள் திட்டமிடுவதற்கு ஒரு 5 நாள் தேவைப்பட்டது.

இப்ப ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இருவரும் கை கோர்க்க கூட ரெடியாக நேரம் வந்தது. காரணம் இப்போது இருக்கும் எந்த கட்சியும் உங்களை நீங்கள் நினைத்தபடி வளர விடாது. அதில் அவர்களுக்கு லாபமில்லை.

இது எல்லாவற்றையும் விட ஒரு பேராபத்து உங்களை சூழ்கிறது. அதுதான் இந்த அயோக்கியர்கள் வளர்த்துவிட்ட காவல்துறை.

நெடுங்காலமாக அரசியல்வாதிகள் காவல்துறையை தங்கள் வசதிக்கு பயன்படுத்தி வந்தனர். அதற்காக அதே காவல்துறை ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் கண்டும் காணாமலே இருந்து வந்துள்ளனர். தேன் எடுத்து கொடுத்தவன் எப்பவும் புறங்கையையே நக்கிகிட்டு இருப்பானா ?
அவன் பங்குக்கு அவனும் திருட தொடங்கினான்.  காவல்துறையும் அரசியல் செய்ய கற்றுக் கொள்கிறது. இல்லைன்னா ஜாபார் ஷெரிப், மற்றும் ஜார்ஜ் போன்ற ஆட்கள் தொடர்ந்து ஜெயிப்பன் பக்கமே இருப்பது எப்படி?

விஷம் முழுவதும் ஏறியாச்சு.

இப்ப காவல்துறை அரசியல் பண்ண தொடங்குது..
புலிவாலை புடிச்ச நாயர் கதையா, வன்முறையில் மட்டுமே ஊறிய காவல்துறைக்கு ஒரு இளைஞ்சர் சமுதாயம் காவல்துறையை பயமின்றி அணுகுவது பிடிக்கவில்லை. பயமே பலன் தரும் என்று நம் காவல்துறை இன்னமும் திடமாக நம்புகிறது.

"இந்த பசங்களை இப்படியே விட்டா பின்னாளில் எல்லோருக்கும் பிரச்சனை சார் " என்று காக்கி சட்டையின் அரசியல்வாதிகள் (ஆளும் / எதிர் இரண்டு பக்கமும் ) வெள்ளை சட்டை அரசியல்வாதிகளுக்கு ஓத தொடங்கினர். இதற்கும் 5 நாட்கள் தேவைப்பட்டது.


இப்படி எல்லோரும் ஒண்ணா கூடித்தான் உங்களை
செஞ்சுட்டாங்க.

இவர்கள் அனைவரும் வெளிதேசத்தவர்கள் அல்ல.
நம்மிடையே இருந்து நம்மால் உருவாக்கப்பட்டவர்கள்
என்பதை மட்டும் மறக்காதீர்கள்.

ஒரே ஒரு வாரம் நீங்கள் விடுதலையை சுவாசித்திர்கள்.
இடை இடையே உங்களின் அருகிலேயே சில சாக்கடைகள் புகுந்தாலும் அதெல்லாம் எளிதில் தீர்க்க கூடிய குப்பைகளே.

இது போன்ற நியாயமான சுதந்திரம் மீண்டும் வர முன்னை விட நீங்கள் பத்து மடங்கு அதிகம் திட்டமிட்டு வேலை செய்ய வேண்டும்.
காரணம் அடுத்த முறை எதிரிகளை SURPRISE செய்ய முடியாது. அவர்கள் தயாராக இருப்பார்கள்.

திட்டமிடுங்கள். சரியான தலைமையை தெரிவு செய்யுங்கள். மாற்று அரசியலை முன்னெடுங்கள்.

நம்பிக்கைதானே வாழ்க்கை.!!

வாழ்த்துகள்


No comments: