தமிழ் :-
(பெரிய பதிவு – பொறுமையில்லாதவர்கள்
தாண்டி போங்கள்)
நான் எழுப்பும் சில கேள்விகள் சில
தமிழருக்கு பிடிக்காமல் போகலாம்.
ஆனால் உண்மையில் இந்த கேள்விகள்
கேட்கப்பட்டே ஆக வேண்டும்.
பல ஊடகங்கள் இந்த அடிப்படை கேள்விகளை
தவிர்த்து செல்கின்றன என்பது வருத்தத்திற்குரியது. நாம் கேட்போம்.
இன்றைய சூழலில் ஒரு இனம் என்பதன்
வரையறை என்ன? மொழியா? நிறமா? வசிக்கும்
இடமா? வழிபடும் இறையா? வழிபாட்டு முறையா? இல்லை பெருமிதம் கொள்ளும் சாதியா? எது ஒரு இனத்தை தீர்மானிக்கிறது.
மொழிதான் என்றால் ஆங்கிலம் அல்லது
பிரஞ்சு முதல் மொழியாக பேசம் அனைத்து நாட்டு மக்களும் ஆங்கிலேயர்கள் அல்லது
பிரெஞ்சுகாரர்கள் ஆகி விடுவார்களா?
அமெரிக்காவிலும், கனடாவிலும், காமருன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும்
பிரஞ்சு முதல் மொழியாக பேசம் மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவர்களும் ஒன்றா? இது
போன்ற கேள்விகள் அமேரிக்கா முதல் ஆந்திரா வரை வைக்கலாம்.
இலங்கையில் தமிழில் பேசும் இசுலாமியர்
தங்களை தமிழர் என்று முன்னிறுத்துவதில்லை.
நிறம் அல்லது வசிக்கும் இடம்தான் என்றால்
எல்லா வெள்ளை தோல்காரனும் ஐரோப்பியாவில் உண்டு. ஆனால் அனைவரும் ஒன்று இல்லை என்று
அவர்களே சொல்கிறார்கள். ஒன்றாக வாழ முடியாது என்று தவிர்க்கின்றனர்.
ஆப்பிரிக்காவில் இருக்கும் அனைத்து
கருப்புறரும் ஒரே இனத்தவரா என்றால் அங்கும் இல்லை என்றே சொல்கின்றனர். டுட்சி,
ஹூட்டு மற்றும் மசாய்-மாரா என்று பல்வேறு இனக் குழுக்கள் இருக்கின்றன.
1994ம வருடம் வெறும் 100 நாட்களில்
சுமார் 10 லட்சம் மக்கள் இரண்டு இன குழுக்களிடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டனர்.
இதில் மிதவாத ஹூட்டுகள் 2 லட்சம். மீதம்
டுட்சிக்கள். இத்தகைய படுகொலைகளை வெள்ளையன் கூட கருப்பர்கள் மீது செலுத்தவில்லை.
அடுத்து வழிபடும் இறையா என்றால்
அங்கும் சிக்கல். இஸ்லாமியர்கள் எல்லா இஸ்லாமியரையும் தங்கள் இனமாக கொள்வதில்லை.
அரபிநாடுகள் எல்லாம் இதற்கு உதாரணங்கள். கிறிஸ்துவ நாடுகள் எல்லாம் இதற்கு இன்னோர்
உதாரணங்கள். பௌத்தமும் அப்படித்தான்.
ஆக வணங்கும் இறையும் இனத்தை
குறிக்காது..
சாதியா என்றால் நிச்சயமாக இல்லை என்று
இன்று நடக்கும் சாதி சண்டையை கண்டாலே விளங்குகிறது.
ஆக இனம் என்று இன்று ஒன்றை முன்னிறுத்த
முடியாது. அது வழக்கொழிந்து போன ஒரு அடையாள படுத்தும் முறை.
இனத்தின் அடிப்படையில் இன்று ஒன்று சேருங்கள்
என்று சொல்வது மிகவும் அபத்தம். இது ஆகாத காரியம்.
ஆஹா. அப்படியெல்லாம் கிடையாது. தமிழர்
என்றொரு இனம் உண்டு. அவர்க்கு தனியே ஒரு காரம், மணம் குணம் உண்டு என்று
சொல்வீர்களானால் கீழ கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
1. ஒரு இந்திய தமிழனோ, மலேசிய தமிழனோ இலங்கையில் ஈழத்தமிழனுக்கு தலைமை
ஏற்க முடியுமா? பலகாலம் ஈழத்தமிழருக்காக
பேசிய நெடுமாறன ஐயா கூட போக முடியாது..
2. அட..அதை விடுங்கள்..ஒரு மலையக தமிழன் யாழ்ப்பாண தமிழனுக்கு தலைமை
ஏற்க விடுவார்களா? அல்லது யாழ்ப்பாண
தமிழர்தான் மலையக தமிழருக்கு தலைமை ஏற்க முடியுமா?
ஐரோப்பா வந்து பாருங்கள். திரிகோண மலை தமிழனை ஒரு யாழ்பான தமிழன்
மதிப்பதில்லை.
3. மலேசியாவில் பிறந்து அங்கு அமைச்சரான டத்தோ சாமி வேலு போன்றவர்களை
தமிழகம் முதலமைச்சராக ஏற்குமா ?
4. அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ இரண்டு தமிழர்கள் இணைத்து பேசிக்
கொண்டால் முதலில் கேட்கும் கேள்வி...நீங்கள் எந்த ஊர்?
உங்கள் ஊரை சொன்னதுமே ஓரளவு உங்கள் ஜாதியும் கணிக்கப் பட்டுவிடும்.
இந்திய தமிழன் என்று நீங்கள் சொல்வீர்கள் ஆனால் உடனே இலங்கை தமிழன் ஒரு
இடைவேளியுடனே பேசுவார்.
சினிமாவும், வணங்கும் கடவுள்கள் மட்டுமே உங்களையும் அவர்களையும் இணைப்பதாக
அவர்கள் நினைக்கிறார்கள். இப்பவும் உங்க
விஜய் , உங்க ரஜினி உங்க கமல் என்றுதான பேசுவார்கள்.
இந்திய தமிழன் என்றாலே இனமானம் அற்றவன் என்கிற ஒரு கிழ்நோக்கு பார்வை
மட்டுமே உண்டு. குறிப்பாக யாழ் தமிழர்கள் இடையே ..
உரிமைக்காக போராடி உயிர் துறக்க துணிந்த வீரர்கள் தாங்கள் என்கிற
பெருமிதம் உண்டு அவர்களிடையே....தவறில்லை. அது அவர்களின் அனுபவம்.
இத்தனைக்கும் ஈழ போராட்டத்தில் இந்திய
தமிழ் மக்கள் பல் வேறு விதத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கிடையே ஈழத்தமிழர்களுக்கு
பேருதவி செய்தவர்கள். உணவு ஊட்டிய கைகளை கடித்த சம்பங்கள் நிறைய உண்டு. (நான்
ராஜீவ் கொலையை சொல்லவில்லை!). அப்படியிருந்தும் இன்றும் ஈழத்தமிழர்களுக்கு நம்
மக்கள் உதவி செய்ய மறுக்க மாட்டார்கள். ஈழத்தில்
நிகழ்ந்த சோகத்திற்கு நம் இந்திய தமிழர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்பதில்
தவறில்லை. அது மனிதாபிமான அடிப்படையில் நியாயமும் கூட...
நடந்த சோகத்தில கொண்ட கோபத்தில்
இந்தியாவை உடைப்போம் என்று ஒரு சிலர் பின்புலம் இருந்து இயக்குவது தவறு. தமிழர்
என்கிற எம் இனத்திற்காக ஒரு தனி நாடு வேண்டும் என்று கேட்பது மகா அபத்தம்.
இனமானம் என்று உணர்ச்சி தூண்டி பேசி
இன்னொரு தலைமுறையை காவு குடுக்காதீர்கள் என்றே இறைஞ்சுகிறேன்.
அவரவர் இருக்கும் நாட்டில் நேர்மையாக
நியாயமாக நாட்டு பற்றுடன் இருங்கள்.
இதற்காக என்னை தமிழ் துரோகி என்று
திட்ட முயலுமுன் என் கேள்விகளை சிந்தியுங்கள்.
நன்றி.