Wednesday, June 06, 2018

நீர் மேலாண்மை:




A Lovely Canal in England

UK (இங்கிலாந்து என்று சிலர் ஒட்டு மொத்தமாக சொல்வர்)  என்று சொன்னவுடன் லண்டன் என்று பலருக்கு நினைவுக்கு வந்தாலும் இங்கு வந்து சென்றவர்களுக்கு நினைவில் நிற்பது இந்த ஊரின் பசுமை.  மீண்டும்.மீண்டும் அதை புகழ்வார்கள். மேலும் இங்கு மக்களுக்கு கிடைக்கும் சுத்தமான தண்ணீர் அவர்களை வியக்க வைக்கும். இதன் காரணம் இங்கு இடைவிடாமல் மழை பொழிவதாக நம்பி செல்வார்கள்.
“கொடுத்து வச்சவங்க சார்”...இந்த ஊர்காரங்க என்று சொல்லி செல்வார்கள்.

நம் மாநிலத்தின் அளவே மக்கள் தொகை கொண்ட
நம்மை விட பெரிய நிலப்பரப்பு
நம்மை விட குறைந்த அளவு மழை வளம். கொண்ட ஒரு இடம்
நம் மாநிலத்தை விட பசுமையாக இருப்பது எப்படி?
அங்கு மக்கள் தண்ணீருக்கு ராவும் பகலும் குடத்தை தூக்கி கொண்டு அலைந்து கஷ்டப்படாமல் 24 மணிநேரமும் சிறப்பாக வாழ்வதெப்படி ?????   கேள்விகள்...கேள்விகள்

உண்மை என்ன ?

சில விவரங்களை பார்ப்போம்.
UK மக்கள் தொகை :  6.5 கோடிகள்  (65.65 மில்லியன் – 2016)
தமிழகத்தின் மக்கள் தொகை     6.7 கோடிகள்  (67.86  MILLION  - 2012)
  UK யின் நிலப்பரப்பு             2,42,426 சதுர கிமீ 
தமிழ்நாட்டின் நிலப்பரப்பு          1,30,000 சதுர கிமீ 
UK யின் வருட மழை பொழிவு     885 mml
TN ன் வருட மழை பொழிவு       945 mml (சுமார் 10% அதிகம்)

இதை தாண்டி இவர்களுக்கு நம்மூரை போல் பக்கத்து மாநிலத்தில் இருந்து வரும் காவிரி போன்ற ஆறுகளும் கிடையாது. முல்லை பெரியார் அணைக்கட்டிலிருந்து நீர் வரத்தும் கிடையாது. நான் மேலே சொன்ன கணக்கில் இந்த நதி நீர்வளங்களை கணக்கில் கொள்ளவில்லை. மேலும் இத்தகைய பெருநதிகள் இல்லாமல் போவதால் இவர்களிடம் பெரும் அணைக்கட்டுகளும் கிடையாது. அது தனிகதை.

இப்படி இருக்க நம் மாநிலம் மட்டும் குடிக்க தண்ணீர் பஞ்சம் என்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்றும் புலம்பும் நிலை ஏன்?

சிறப்பான நீர் மேலாண்மை இல்லாததுதான். 
சிறப்பான திட்டமிடலும் நீர் பகிர்வும்தான் காரணம்.

இந்த பிரச்சனையின் பல பக்கங்களில் ஒரு சிறு பகுதியை பார்க்கலாம்.

இங்கு சிறு வாய்க்கால்கள் சிறப்பாக பராமரிக்கப் படுகின்றன.
ஏரிகள் ஆக்கிரமிக்கப் படுவதில்லை.
புதிய ஏரிகள் உருவாக்கப்படுகின்றன.
நீர் வளத்தை சுத்திகரித்து பகிர்வதில் தனியார்கள் இருந்தாலும் அவை அரசால் உள்ளூர் நகராட்சிகளால் வெகு சிறப்பாக கண்காணிக்கப் படுகிறது.
எந்த கழிவு நீரும் ஆற்றிலோ வாய்கால்களிலோ விடப்படுவதில்லை.
முழுவதும் சுத்திகரிக்கப் பட்டு மறு சுழற்சி முறையில் திரும்ப உபயோகிக்கப் படுகிறது.

இங்கு தனியார் யாரும் வீட்டு உபயோகத்திற்கோ, தொழிற்சாலைக்கோ ஆழ்துளை கிணறு தோண்ட முடியாது. அரசிடம் கேட்டு அவர்கள் மூலமாக குழாய் மூலம் தண்ணீர் பெற்றே பயன்படுத்த முடியும்.

ஒரு வீடோ, அலுவலகமோ, தண்ணீர், மின்சாரம், கழிவு நீர் சுத்திகரிப்பு வழி ஆகியவற்றை செய்யாமல் இயங்கவே முடியாது. இது நகரபுரமோ, கிராமபுறமோ எங்கிருந்தாலும் ஒரே சட்டம்தான்.  இதை மீறுபவர்கள் கடுமையாக விரைந்து தண்டிக்கப் படுகிறார்கள். அதற்கான சட்டங்கள் உண்டு. இப்படி செய்பவர்க’ளை எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் சமுதாயம் புறக்கணித்து அவமதிக்கிறது. எனவே யாரும் செய்ய துணிவதில்லை. முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது.
River in TN

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் எந்த ஒரு குடியிருப்போ, தொழில்சாலையோ அமையவே முடியாது.

பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்..இங்கிலாந்தில் எந்த ஒரு வீட்டிலும் தண்ணீர் மேலேற்றும் “பம்பு”களோ “மோட்டார்” களோ கிடையாது. நீங்கள் முதல் மாடியில் இருந்தாலும் மூணாவது மாடியில் இருந்தாலும் தண்ணீரை உங்கள் வீட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துடன் அளிக்க வேண்டியது அந்த நகராட்சியின் கடமை.  இன்றுவரை அதை தவறாமல் செய்கிறார்கள். 3 மாடிக்கு மேல் இருக்கும் கட்டிடங்களுக்கு அதற்கான சிறப்பு வசதிகளை செய்து விட்டுத்தான் அனுமதியே கிடைக்கிறது. அத்தகைய கட்டிடங்களும் குறைவு.

இங்கு தண்ணீர் அசுத்தப்படுத்துவதை பெரும் குற்றமாக பார்க்கின்றனர்.
சிறு கால்வாய்களின் அவசியமும் அவைஎப்படி இயற்கையுடன் ஒத்து இருத்தல் அவசியத்தையும் மிக கவனமாக உணர்ந்து செயல்படுகின்றனர்.
அதனால்தான் எந்த கிராமத்திற்கு சென்றாலும் தெள்ளிய நீரோடை பாய்வதை நீங்கள் காணலாம். இங்கு யாரும் வாய்கால்களில் சோப்பு போட்டு குளிக்கவோ, துணி தோய்க்கவோ தடை செய்யப்படுகிறது.
நீரில் மீன்களின் அவசியத்தை உணர்ந்து அவைகளின் வகைகளும்  எண்ணிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். மீன் இவர்களின் சிறப்பு உணவாக இருந்தாலும் கண்ட இடத்தில் பிடித்து கண்ட இடத்தில் விற்க முடியாது.
மேலும் மரங்களை வளர்ப்பதில் தனி கவனம் கொள்கின்றனர். தோட்டங்களை பராமரிப்பதில் ஒவ்வொருவரும் பெருமை கொள்கின்றனர். தனி கவனம் செலுத்தி தன் தோட்டங்கள் சிறப்பாக இருக்க முயல்கின்றனர். இந்த தொட்டக்க்லையை கொண்டு ஒரு பெரிய வியாபரமே உருவாகியுள்ளது. ஊர் அழகாக இருக்க நகரத்தில் இல்லாவிட்டாலும் கிராமங்களில் மக்கள் தங்கள் ஒய்வு நேரத்தை இலவசமாக செலவழிக்கின்றனர். அப்படி செய்பவர்களை அந்த ஊர் மதிக்கிறது. பைத்தியக்காரன் என்று சொல்வதில்லை.

சரி...இப்படிப்பட்ட ஊரில் “கெமிகல்” தொழிற்சாலைகளே இல்லையா என்றால் அப்படிப்பட்ட தொழிற்சாலைகள் உண்டு என்பதுதான் உண்மை. மிகப்பெரிய ICI தொழிற்கூடங்கள் உண்டு. கோகோ கோலா, பெப்சி போன்ற தொழிற்கூடங்களும் உண்டு. ஆனால் அவைகளில் இருந்து வரும் கழிவு நீர்களின் தன்மை மிகக்கடுமையாக கவனிக்கப்படுகிறது. சில இடங்களில் கழிவு நீர் வெளியே வருவதே இல்லை. அவை மறுசுழற்சி செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு கட்டுமானங்கள் செய்யாவிட்டால் அந்த ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப் படுவதேயில்லை.

பொது மக்கள் இந்த விஷயத்தில் ஓரளவு அறிவுடன்தான் இருக்கிறார்கள்
அரசு நீர் பங்களிப்பை சிறப்பாக பராமரிக்கிறது. .
மாசுக்கட்டுப்பாட்டு துறை லஞ்ச ஊழலுக்கு போகாமல் சமுதாய உணர்வுடன் தொடர்ந்து செயல்படுகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எல்லோரும் சேர்ந்து ஒழுங்காக தேரை இழுக்கிறார்கள். பலன் கிடைக்கிறது.

இப்போது சொல்லுங்கள் நாம் எங்கிருக்கிறோம்.?
நாம் எங்கு செல்ல வேண்டும்?

நன்றி
ரவி சுந்தரம்
படித்தவுடன் பகிரவும்.  -  நாலு பேருக்கு விவரம் தெரியட்டும்.

Tuesday, January 30, 2018

தீதும் நன்றும் பிறர் தர வாரா !

 நம் வாழ்வில் நாம் விரும்புவது யாது என்று முடிவு செய்வது நாம்.
அதற்கான அத்தனை முன்னெடுப்புகளையும் செய்வது நாம்.
அந்த இலக்கை அடைந்த பிறகு பெருமையை பெற்றுக் கொள்வதும் நாம்.
ஆனால் தோல்வி என்று வரும் போது மட்டும் அதன் காரணத்தை இன்னொருவர் தோளில் சுமத்த முற்படுவது ஏன்?
 "அவா" ளால காரியம் கெட்டுது.
இவிங்களால நாம் நாசமானோம் என்று புலம்புகிறோம்.

இதைப் பற்றி நிறைய பேர் நிறைய பேசிட்டாங்க.

ஒருத்தர் கேட்டார். "சொல்றதெல்லாம் நல்லாத்தான் சார் இருக்கும். தெருவில் இறங்கி போராடும் போதுதான் புரியும். சும்மா..கம்புயுட்டர் கிடைச்சுதுன்னு ரூம்புல உட்கார்ந்து கொண்டு லொட்டு லொட்டு ன்னு கி போர்டை தட்டினால் சரியா போச்சா ??".

நியாயமான கேள்விதானே!

ஒரு தாழ்த்தப் பட்டவரின் வலி மற்றும் அவர் அனுபவிப்பதாக சொல்லும் அவமானம் இன்னொரு சாதிக்காரருக்கு எப்படி புரியும்.?

புரியாதுதான்.

அப்படி பார்த்தால் என் கால்வலி என்னவென்று என் பெண்டாட்டிக்கே புரியாது. அது அவருக்கு வரவேண்டும். அப்போது கூட அது அவரது வலி. என்னுடையது அல்ல.

ஆகவே இந்த சமுகம் இப்படித்தானா? 
வெறும் கழிசடைகளை மட்டும் கொண்டதா?
என்றால் அப்படி என்றுமே இல்லை என்றுதான் சரித்திரம் சொல்கிறது.

பழைய கதைகளை அப்புறம் பார்ப்போம். இப்போதை நடைமுறைகளை 
கண் எதிரே நடப்பவைகளை உதாரணம் கொள்வோம்.

மூன்று பேரை எடுத்துக் கொள்வோம்.

இவர்களை உலகம் தலையில் வைத்து கொண்டாடியது. கொண்டாடுகிறது.
1.   
      முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
2.   ஆஸ்கார் பரிசு பெற்ற ஏ.ஆர். ரஹ்மான்.
3.   இசைஞனி : இளையராஜா .

இந்த மூவரும் மிகவும் பின்தங்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இருவர் பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை.

இவர்களுக்கு இந்த வெற்றி சும்மா கிடைத்துவிடவில்லை.
எத்தனை வலி, ?
எத்தனை துரோகம்?
எத்தனை கிண்டல்?
எத்தனை இழி சொல்?
இத்தனையும் தாண்டி வென்றதெப்படி?

இவர்கள் இன்றைய சுபவீக்களும், கீரைமணிகளும் சொல்வது போல் முன்னேறவே முடியாமல் அல்லவா போயிருக்க வேண்டும்.

ஆனால் இந்த மூவரையும் இனம், மதம், மொழி ஜாதி என்று அனைத்தையும் கடந்து உலகம் ஏன் கொண்டாடுகிறது?

இதில் முதலாமவர் பல மேடைகளில் தன் வெற்றியின் ரகசியத்தை தெளிவாக பலமுறை சொல்லிவிட்டுத்தான் சென்றார்.
அதாவது உன் உயரம் உன் மனத்தின் உயரம்தான் என்றார்.

ஏ.ஆர். ரஹ்மான் சொன்னது. இன்னமும் தெளிவு.
ஆஸ்கார் வெற்றியின் ரகசியம் கேட்ட போது ..
“வாழ்வின் முக்கியமான ஒரு திருப்பத்தில் என்னிடம் இரண்டே வழிகள் தென்பட்டன. ஒன்று அன்பு வழி. இன்னொன்று வெறுப்பு வழி.  வெறுப்பு வழியில் செல்வது மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் அன்பு வழியில் செல்லத்தான் மிகவும் உறுதி தேவைப்பட்டது. நான் அன்பின் வழியை தெரிவு செய்தேன்.
என் பணிகளை வெற்றி தோல்வி எதிர்ப்பார்ப்பு இன்றி செய்து கொண்டே இருந்தேன். வெற்றியோ, தோல்வியோ எல்லா புகழும் இறைவனுக்கே” என்று சொன்னார். இதுவும் ஆன்மிகம் தான்.

இதில் யாருடைய சொல்லும் செயலும் என் அனுமதியின்றி என்னை பாதிக்க விடவில்லை என்பதுதான் மறை பொருள்.

அடுத்து இளையராஜா ...இவரும் ஆன்மீகத்தின் வேறு ஒரு தளத்தில் இருந்து தம் இலக்கை அடைந்தார்.

இசை உலகில்  இவருக்கு இளைய ரஹ்மான் இஸ்லாத்தில் நின்று கண்ட இறையை இவர் இந்துமதத்தில் நின்று கண்டார்.

இவர் தனது உயரம் என்ன என்று அடைய வேண்டிய இலக்கு என்ன என்று ஏற்கனவே புரிந்து கொண்ட காரணத்தால் அவரது பயணம் தீர்க்கமானதாக இருக்கிறது. இவர் வெற்றியை தேடி போகவில்லை. வெற்றி இவரை தேடி வந்தது.

ஒவ்வொரு உயத்தை கடக்கும் போதும் இவரை சுற்றி இருந்த ஒவ்வொரு போலி உறவுகள் தாமாகவே பல்லிளித்து வீழ்ந்து பட்டன.
சமிபத்தில் வீழ்ந்தது ஒரு 40 வருட போலி நட்பு.
அதையெல்லாம் கவனிக்கும் அருகாமையில் அவர் இல்லை.

இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை இவர்கள் தம் உயரத்தை தாமே தீர்மானித்து கொள்கின்றனர்.
அதனால்தான் இவர்கள் தங்களின் சிறு சிறு இடர்பாடுகளுக்கு தோல்விகளுக்கு  இன்னொரு பலி ஆட்டை தேடுவதில்லை.
இவர்களின் வெற்றியை வளர்ச்சியை இவர்களின் ஜாதியோ மதமோ தீர்மானிப்பதில்லை.

இஅதையெல்லாம் கடந்து இவர்கள் நிற்க முடியும் என்று நம்பினார்கள். நிற்கிறார்கள்.
இதுதான் பகுத்தறிவு.