இந்த தலைப்பில் நான் கண்டதையும் உணர்ந்ததையும் எழுத தொடங்குகிறேன்.
(தலைப்பு என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதாவின் பாதிப்பு)
நான் இங்கிலாந்து வந்து 10 வருடங்கள் ஆகின்றன. இந்த 10 வருடங்களில் நான் அறிந்தவையும் உணர்ந்தவையும் ஏராளம். இதற்கு முன்பு நான் மத்திய கிழக்கு நாடுகளில் கொஞ்ச காலம் வசித்து வந்தேன்.
ஆனால் நான் இங்கிலாந்து வந்த பிறகுதான் இந்தியாவைப் பற்றி இன்னும் உணர்ந்தேன். இது கொஞ்சம் ஆச்சிரியமாக இருக்கலாம். ஏனென்றால் நான் பிறந்து வளர்ந்த இந்தியாவைப் பற்றி உணர நாம் இங்கிலாந்து அல்லது அமெரிக்கா வரவேண்டுமா என்றால் அதுதான் உண்மை. நாம் உள்ளேயே இருக்கும் போது நம் வீட்டின் அழகு அல்லது அசிங்கங்கள் தெரியாது. கொஞ்சம் வெளியே வந்து நம் வீட்டை திரும்பி பார்த்தோம் என்றால் நம் வீட்டின் அழகு அல்லது அவலம் புரிய வரும். பக்கத்திலிருக்கும் மற்றவர் வீட்டை ஒப்பிட்டு பார்த்தால் (இதை தவிர்க்க இயலாது.) நமது வளமை அல்லது வறுமை இன்னும் புரியும்.
இதைத்தான் திரு. பாலகுமாரன் (எழுத்தாளர்) ஒரு இணையதள பேட்டியில் கூறினார்.
நான் மத்திய கிழக்கு நாட்டில் இருந்தவரை அதை ஒரு பெரிய தொடர் விடுமுறை போலவே உணர்ந்தேன். காரணம் என்றாவது ஒரு நாள் நமது ஊருக்கு நாம் திரும்பி போகவேண்டியதுதான் என்பது மட்டுமல்ல. மத்திய கிழக்கு நாடுகளில் நாம் வாழும் போது நம் இந்தியாவில் இருப்பதைப் போன்றுதான் வாழுகிறொம். தமிழரெல்லாம் ஒரு குழுவாகவும், மலையாளிகளெல்லாம் ஒரு குழுவாகவும், குஜாத்திகளெல்லாம் ஒரு குழுவாகவும் இருக்கிறோம். இதற்கு விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தால் எப்படி பம்பாயில் செம்பூர், டெல்லியில் கரோலபாக், ஜனக்பூரி போன்ற பகுதிகளில் குழுமி இருந்தோமோ அப்படித்தான் துபாயிலும், பகரைனிலும் மஸ்கட்டிலும் இருக்கிறோம். அதானால் நாம் நமது மேன்மையை அல்லது குறைகளை உணர்வதில்லை. மேலும் அந்நாட்டவரின் கலாசாரம் நம்மீது ஒட்டுவதில்லை. காரணம் அவர்களுடன் நமக்கு தனிப்பட்ட முறையில் (அலுவலக வேலை தவிர்ந்து) பழக வாய்ப்பில்லை.
என்னைப் பொறுத்தவரையில் கடந்த 10 வருடங்கள் ஒரு பெரிய பாடமாகவும் ஒரு சவாலாகவும் இருந்தது. பாடம் என்றால் தனிப்பட்ட முறையில் என் மனவளர்ச்சி அல்லது முதர்ச்சி (பர்ஸனல் டெவலெப்மென்ட்) என் சமுதாயப் பார்வை என்று பலவிதங்களில் நான் பலவிஷ்யங்களில் தெளிவு பெற்றேன். இவை போன்ற தெளிவுகள் என்னுள்ளே நான் இந்தியாவில் இருக்கும்போதே ஏன் விதைக்கப் படவில்லை என்பதை கேள்வியாக கேட்டுக் கொண்டேன். அதன் காரணங்களை அறிய தொடங்கியுள்ளேன். அதை இந்த தொடர் மூலமாக பகிர்ந்து கொள்ள முயல்கின்றேன்.
என்னைப் போல பலபேருக்கு இந்த கேள்விகள் எழுந்திருக்கலாம். விடை என்ன? அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இவைகளை இங்கு அலசுவோம்.
பகுதி: 1 - இந்தியாவில் ரேசிசம் அல்லது நிறவெறி அல்லது இனவெறி உண்டா?
இன்றை காலகட்டத்தில் அதுவும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படும் காலத்தில் இந்த கேள்வி நிச்சயம் சரியானதுதான்.
நான் சொல்வேன் இந்தியாவில் இனவெறி உண்டு. நிறவெறி உண்டு. இதற்கும்மேல் ஜாதிவெறி உண்டு. மதவெறி உண்டு. ஜாதிவெறி மற்றும் மதவெறியை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். ஆனால் நிறவெறி உண்டு என்பதற்கு ஆட்சேபம் தெரிவிப்பீர்கள்.
ஆனால் யோசித்து பாருங்கள். நாம் எப்படியெல்லாம் சிகப்பழகை சீராட்டுகிறோம். எப்படியெல்லாம் கறுப்பு அழகை பரிகசிக்கிறோம். சினிமா போன்ற ஊடங்களிலும் கறுப்பாக இருப்பவரின் குணங்கள் கவனிக்கப் படாமல் அவரது நிறத்தை பரிகசித்து (உதாரணம்...ஆயிரம் சொல்லலாம்)கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. திரு. ரஜினியும் முரளியும் ஒரு விதிவிலக்காக கொள்ளப் படுகிறது. இன்னும் சொன்னால் "கறுப்பா இருக்கிறவெனல்லாம் ரஜினியில்லை " என்று ஒரு காமெடி வேறு. ஆக ரஜினியும் கறுப்பு என்கிற குறையை தாண்டி சாதித்திருக்கிறார் என்பதாக முடிக்கிறார்கள். கறுப்பு ஒரு குறையா? ரஜினி அப்படி நினைக்கவில்லை.
நாம் ஏன் இவ்வாறெல்லாம் நினைக்க வேண்டும். காரணம் நமது மனதில் சிகப்பு என்பது (கம்யூனிஸ்ட் சிகப்பல்ல) ஒரு ஆளுமைக்கான நிறமாகவே படிந்து விட்டது. எம்ஜியார், ஜெயலலிதா என்று திரு.தயாநிதி மாறன் வரை அனைத்து அரசியல் பிரமுகர்களின் முக்கியமான விஷயம் "ஏய்..நல்ல சிகப்பா தக்காளி மாதிரி ஆப்பிள் மாதிரி இருக்காங்க இல்லை!!!" என்பதாகும். இதையே பாமர மக்களிடம் இந்த வெகுஜன ஊடகங்கள் தொடர்ந்து சிகப்பாக இருப்பது ஏதோ ஒரு ஒப்பில்லாத குணம் போன்று பரப்பி வருகிறது. மேலும் நம்மை 1947 வரை 200 ஆண்டுகள் வெள்ளைக் காரன் ஆண்டு வந்ததினாலும் நமக்கு இந்த அடிமை புத்தி மனதில் ஆழமாக படிந்துவிட்டது. இதற்கு சென்ற தலைமுறையும் ஒரு பெரிய காரணம். மிச்சம் மீதி புண்ணியத்தை சினிமா கதாசிரியர்கள் சிவப்பு கதாநாயகியை வர்ணித்து வர்ணித்து புண்ணியத்தை தேடிக்கொண்டார்கள்.
ஆனால் ஒன்று ஒத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக் விழிப்புணர்வு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
இந்த நிறவெறியாவது மாறும் அறிகுறி உண்டு. அனால் இப்போது இருக்கும் ஜாதிவெறி மற்றும் மதவெறி இனவெறி மாற அறிகுறியே இல்லை. இவை இன்னும் வேகமாக வளர்க்கும் அறிகுறிதான் தெரிகிறது.
இந்த லட்சணத்தில் நாம் எப்படி தென்னாப்பிரிக்காவையோ அல்லது ஆஸ்திரேலியாவையோ குறை சொல்ல போவது? இங்கிருக்கும் பம்பாயில் இனவெறியின் அடிப்படையில் ஒரு கட்சியே இயங்கி வடநாட்டவரையும் தென்னாட்டவரையும் அடித்து கொல்கிறார்கள். அந்த கட்சியுடன் வழக்கம் போல் தேசிய கட்சிகள் கூட்டணி வைக்கின்றன. அப்படி இருக்க மற்றவரை குறை சொல்லவது எப்படி சாத்தியம்.? அனைத்து தேசிய கட்சிகளும் இந்த கட்சியை புறக்கணித்தால் மக்களுக்கு இந்த இனரிதியான நிலைப்பாடு தவறென்று தெரியும். ஆனால் செய்தோமா? இல்லையே. ஆக இனவெறியைப் பற்றி மற்ற நாட்டவரை குறை கூறும் போதே நம் உள்நாட்டில் இருக்கும் இந்த இனவெறியை நிறுத்த முயலவேண்டும். இல்லையென்றால் நாம் மற்றவர்களை குறை கூறும் தார்மீக உரிமையை இழக்கிறோம்.
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். "ரேசிசம்" என்கிற ஆங்கில வார்த்தைக்கு நிறவெறி என்கிற ஒரு பொருள் மட்டுமல்ல. இனம், மதம், மற்றும் ஜாதி இப்படி பலவிதங்களிலும் மனிதர்களை பிரித்து பார்த்து பழிவாங்குவதோ அல்லது தாக்குவதோ கூட "ரேசிசத்தின் " வெளிப்பாடே.
இதை இந்தியாவில் நாம் விடாது செய்கிறோம்.
இந்தியாவில் இனத்தின் பேரால் அடித்து கொன்றாலும் ஆஸ்திரேலியாவில் நிறத்தின் பேரால் அடித்து வீழ்த்தினாலும் போகும் மனித உயிர் ஒன்றுதான். அது விலை மதிப்பில்லாதது.
ஆகவே தயவு செய்து இதை நிறுத்துங்கள்.
நன்றி.
ரவிக்குட்டி.
பி.கு: சமிபத்தில் ஆஸ்திரேலியா சென்றவன் என்கிற வகையில் சில இந்திய மாணவர்களின் நடவடிக்கைகள் எப்படி என்பதையும் எழுதுவேன்.
No comments:
Post a Comment