Wednesday, June 17, 2009

தமிழன் - புத்திசாலியா? முட்டாளா?




இது ஒரு கோடி பெறும் கேள்வி என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். இது பைசா பெறாத கேள்வி. ஏனென்றால் இது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கேட்கப்பட்டிருக்க வேண்டிய கேள்வி. இப்போது இந்த கேள்வியே கிடையாது. விடை கிடைத்து விட்டதல்லவா?

தமிழன் முட்டாளே. அதுவும் படு முட்டா
ள்.

அவன் புத்திசாலி என்பதற்கு உங்களால் எத்தனை காரணங்கள் சொல்ல இயலும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவன் முட்டாள்தான் என்பதற்கு என்னால் ஆயிரம் காரணங்கள் சொல்ல இயலும். இதை மிகவும் வருத்ததுடன் சொல்கிறேன்.


1. முதலும் முக்கியமானதுமான மொழிப் பற்று. இது தமிழனுக்கு கொஞ்சம் கூட கிடையாது. இதற்கு சான்று யாரும் கேட்க மாட்டார்கள். இருந்தாலும் முட்டாள்களுக்கு விளக்குகிறேன். ஒரு மொழியின் வளமை அல்லது மொழியின் ஆதிக்கம் எங்கு அதிகமாக ஒரு சமுதாயத்தில் இருக்கும். ஊடகங்களில். அதாவது தொலைகாட்சி, வானொலி மற்றும் பத்திரிக்கைக்கள்.

ஆனால் நம் ஊடகங்களை பாருங்கள். தொலைகாட்சி தமிழின் கொலைக்காட்சி என்றாகிவிட்டது. வானொலியில் பண்பலை என்பது வர்த்தக ஓலிபரப்பு என்றான பிறகு தமிழே இல்லாத தமிழ் பண்பலையாகிவிட்டது. இதில் தனியார் ஒலிபரப்பு என்பது தமிழ் கொலைபரப்பு என்பதே சிறப்பு. இதில் மேலும் கொடுமை என்னவென்றால் இதை இவர்கள் நியாயப்படுத்த வேறு செய்வார்கள். இவர்கள் பேசும் சில வார்த்தைகளை இவர்கள் தமிழ் என்று சத்தியம் செய்வார்கள். இவர்கள் வியாபாரிகள்.

இவர்களை விடுங்கள். மொழியை வளர்க்க வேண்டிய பத்திரிக்கைகள் அடிக்கும் கொட்டம் அதைவிட கொடுமை. இதையெல்லாம் நம் தன்மான சிங்கமான தமிழன் தட்டி கேட்பானா..? இல்லை..அவனுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. அவனுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும். அது ஒன்றுதான் குறி.


அவன் பேசும் தமிழை கேளுங்கள்.

ஒரு "நைன் ஓ கிளாக்" வாக்கில என் "நம்பருக்கு" ஒரு " மிஸ்டு" போடு. நான் அந்த "ஜங்ஷ்னல" வந்து அப்படியே " பிக்கப்" பண்ணிக்கிறேன்.



யாருக்கிட்டையும் "சாப்டா" இருக்க கூடாது. "பவர்புல்லா" பேசனும்.


நான் "கிட்ஸை" "ஸுகுலல" " டிராப்" பண்ணிட்டு அப்படியே "விஜிடபிள்ஸ்" வாங்கிட்டி வந்துடுறேன்.


நீங்க "ஸ்டிரேட்டா" போய் "லெபட்"ல திரும்புங்க. ஒரு "பங்க்" கடைவரும்.


இந்த லட்சணத்தில் தமிழ் பேசும் தமிழர்கள் எப்படி புத்திசாலிகளாக இருப்பார்கள்?.


சமிபத்தில் ஐக்கிய நாட்டு சபையின் இளய தலைமுறையின் கல்விக்கான முன்னேற்றம் என்கிற ஆய்வில் பல நாட்டு அறிஞர்கள் (இதில் தமிழன் இல்லை1) மற்றும் விஞ்ஞானிகள் சொன்ன கருத்து என்ன தெரியுமா?


ஒரு குழந்தையின் உண்மையான மனவளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு மிகவும் உதவுவது அவரது தாய் மொழியில் அடிப்படை கல்வி கற்பிப்பதே என்பதாகும்.
அதுவும் 2 வயது முதல் 10 வயதுவரை அந்த குழந்தை தாய் மொழியில் கற்பது மிகவும் தேவை என்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் இப்படி தாய் மொழியில் கற்கும் குழந்தைகளில் அறிவுத்திறன் மட்டுமன்றி இவர்களின் பன்மொழி திறனும் மாற்று மொழியில் கற்கும் குழந்தைகளை விட சிறப்பாக இருக்கிறது என்று சொல்கின்றனர்.


ஆனால் நாம் சொல்வது என்ன? தமிழில் படிக்காதே. வேலை கிடைக்காது. ஆங்கிலம் உய்விக்கும். என்ன அநியாயம்? வேலைக்கு செல்வதற்கும் தாய் மொழிக்கும் முடிச்சு போட்டதே தப்பு.


யோசித்து பாருங்கள். இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பவிலும் வியாபாரத்திலும் தொழில் நுட்பத்திலும் வெற்றிக் கொடிகட்டும் தமிழர்களாகட்டும் அல்லது இந்தியர் யாராக இருந்தாலும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அவரவர் தாய் மொழியில் அடிப்படை கல்வி கற்றவர்களே. ஏன் நானே பள்ளிப்படிப்பை தமிழ் மொழியில்தான் முடித்தேன். கல்லூரி படிப்பை ஆங்கிலத்தில் படித்தேன். இதனால் எனக்கு எந்த வித நஷ்டமும் ஏற்படவில்லை. நான் ஏதோ விதிவிலக்கு என்று உடனே சொல்லிவிடாதீர்கள்.

இந்தியாவிற்கு வெளியே இன்று இருக்கும் சுமார் 1/2 கோடி இந்தியர்களில் 95 விழுக்காடு இவ்வாறு தாய் மொழியில் அடிப்படை கல்வி கற்றவர்கள்தாம். என்ன குடிமுமுகி போய்விட்டது? இன்னும் சொல்லப் போனால் இவர்களின் வெற்றியைப் பார்த்தே இப்போதுள்ள இளைஞர்கள் முன்னெற துடிக்கின்றனர். என்ன ஒரு கஷ்டம் என்றால் இன்றைய தலை முறையில் பலர் 20 வருடமுன்பிருந்தவர்களின் வெற்றியின் ஆதாரம் தெரியாமல் இங்கிலிஷ் பேசினால் எளிதில் வெல்லலாம் என்று தவறாக கணக்கு போட்டுவிட்டார்கள்.

இப்படி யோசிக்கும் தமிழன் எப்படி புத்திசாலியாக இருக்க முடியும்.?

தன் தாய் மொழியில் பேச பெருமை கொள்ள வேண்டாமா? அப்படி பேசாமல் கொலை செய்யும் ஊடகங்களை போராடி உடைத்தெறிய வேண்டாமா?

இன்று ஒரு பண்பலையில் (ஆகா !!) தமிழ் ஏன் அழிந்து வருகிறது என்று ஒரு கலந்துரையாடல் வைத்தார்கள் . தொகுப்பாளரும் கலந்து கொண்டவர்களும் எந்த மொழியில் பேசினார்கள் என்று சொல்பவர்களுக்கு பரிசு கிடையாது. ஆமாம். அதிக பட்ச ஆங்கில கலப்புடன் பேசப் பட்ட பகுதியாக இது வந்தது. மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதிலும் ஒரு பிரசங்கி தான் தமிழன் என்றும் ஆனால் தமிழ் ஒரு வெற்றியடையாத மொழி என்றும் அதானால்தான் அது அழிகிறது என்று ஆங்கிலம் கலந்த தமிழில் பேசினார். இது எப்படி இருக்கிறது என்றால்.,ஒரு பெண்ணை மான பங்க படுத்திவிட்டு அந்த கயவனே அந்த பெண் கற்பிழந்தவள் அதனால் நான் மணக்க மாட்டேன் என்று பழிப்பதற்கு சமம். தன் தாயை தானே விற்கும் கயவர்கள்.

சரி மொழியைத்தான் இப்படி கொன்றார்கள். மற்ற விஷயங்கள் எப்படி?

2. ஒழுக்கம்:- ஒரு புத்திசாலி எப்படி இருப்பான்? ஒழுக்கமாக இருப்பான். காரணம் ஒழுக்க மில்லாத சமுகம் வெற்றியடையாது என்பது அவனுக்கு தெரியும். அதுவும் தனிமனித ஒழுக்கமும் சமுக ஒழுக்கமும் மிகவும் முக்கியம் என்பது புத்திசாலிகளுக்கு தெரியும்.

ஓழுக்கம் என்றாலே நம் தமிழனுக்கு பெண்ணும் அவள் கற்பும்தான் தெரியும்.
உடனே நம்மாளு சொல்ல ஆரம்பிப்பாரு.. "கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த நாடு" அப்படின்னு ஆரம்பிச்சு மணிமேகலை சீவக சிந்தாமணின்னு போவாரு. கருமம்.

ஓழுக்கம் என்பது அதுதானா?
ஒழுக்கம் என்பது பொய் சொல்லாதிருத்தல்.
லஞ்சம் வாங்காதிருத்தல்.
பெரிவர்களிடம் மரியாதையாக பழகுதல்.
பெண்களிடம் கண்ணியமாக இருத்தல்.
அரசாங்கத்திற்கு ஒழுங்காக வரி செலுத்தாது ஒரு சமுதாய குற்றமாக கருதுதல்.
பொது இடங்களில் பண்பு குறையாது நடத்தல். (எச்சை துப்புவது, சிறுநீர் கழிப்பது, குப்பை போடுவது இதெல்லாம் கூட ஒழுக்ககுறைவுதான்).
வரிசையில் நின்று பழுகுதல்
அடுத்தவர் மனது புண்பாடாது பேசுதல், நேரம் தவறாமை
சொன்ன வாக்கை காப்பாற்றுவது..

இன்னும் பல.. இதில் ஒன்றாவது இன்றைய தமிழன் செய்கிறானா?

பெரியவரை நக்கலாக " என்னா பெரிசு" என்று அழைப்பது.
பெண்கள் மட்டும் எப்படி நடக்க வேண்டும் என்று அந்த காலத்து எம்.ஜி.ஆர் முதல் இன்றைய சிம்பு வரை அறிவுரை சொல்வது.
மக்களுக்காக இருக்கும் ஆட்டோ மற்றும் பேருந்துகாரர்கள் மக்களிடம் பழகும் விதம் அநியாயம். மக்களை மிருகத்தைவிட கேவலமாக மதிப்பது. இதைவிட கொடுமை..இப்படி இருப்பது நியாயம் என்று வாதாடுவது. இதற்கு பிரபல முன்னனி நடிகர்கள் வக்காலத்து வாங்குவது.
இதுதான் ஒரு புத்திசாலி சமுதாயம் செய்யும் செயலா?

தமிழ் மக்கள் வெற்றி என்பதற்கு பொருளாதார வெற்றி மட்டுமே என்று தவறாக புரிந்து கொண்டுவிட்டனர் என்பது என் கருத்து.

இது தவறு என்று இவர்கள் உணரும் போது காலம் கடந்துவிட்டிருக்கும்.
உதாரணமாக இன்று பலரிடமும் பொருளாதார சுழற்ச்சி அதிகப் பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா என்றால் இல்லை.

காரணம். நம்மை சுற்றியிருக்கும் சமுதாயம் ஒழுக்கத்துடன் சுத்ததுடன் இல்லாதவரையில் அதில் வாழும் நாம் எப்படி சந்தோஷமாக இருப்பது?
வெளிநாட்டை பார்த்து பார்த்து ஏங்குவது ஏழைகள் மட்டுமல்ல பணக்காரர்களும் உண்டு. சும்மா வெளிநாட்டில் சென்று சினிமா படபிடிப்பை நடத்தி மக்களுக்கு காட்டுகிறார்களே? அந்த வெளிநாட்டில் இருப்பது போல் நம் நாட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் மாற்றுவது எப்படி என்று எப்போதாவது யோசித்தார்களா தமிழர்கள்?

இல்லையே..அப்படி இருக்க..இவர்கள் எப்படி புத்திசாலிகளாக இருக்க முடியும்.?

மேலும் இவர்கள் எல்லாவற்றிற்கும் வறுமையைக் காரணம் காட்டுவார்கள். உண்மையில் வறுமைதான் காரணமா?

யோசித்துப் பாருங்கள். இல்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் இதைவிட வறுமையடைந்த நாடுகள் பல இன்று இருக்கும் நிலைப் பற்றி சொல்லவே வேணடாம். அவர்களெல்லாம் வளர்ந்தார்களே தம் ஒழுகத்தை இழந்தார்களா?

இன்னும் சொல்லப் போனால் அவர்களுடைய ஒழுக்கமே அவர்கள் வேகமாக வளர வழிவகுத்தது. வறுமை ஒழிந்தது. ஆக வறுமை ஒழுக்கக் கேடுக்கு காரணம் என்பது தவறு.

யோசித்து பாருங்கள்.

லஞ்சம் வாங்காமல் அரசுத்துறை இயங்கினால் இங்கு தொழில் செழித்து பல பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காதா? கூட்டு கொள்ளை அடிக்காமல் அரசுத் துறைகள் நடந்தால் அரசாங்க திட்டபணிகளின் பலன் மக்களை சென்றடைந்து மக்கள் மேம்படலாகாதா?

முடியும். ஆனால் நாம் அதற்காக முனைவதில்லை.

நம் இலக்கில் தவறு இருக்கிறது. நமது செயலில் தவறு இருக்கிறது. சுய நலம் நமக்கு பெருத்துவிட்டது.

ஒரு போக்குவரத்து துறை அதிகாரியிடமிருந்து சுமார் 10 கோடி ருபாய் வரை கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டதாக கூறுகிறார்கள். ஒரு அரசு ஊழியருக்கு இத்தனை வருமானம் எப்படி என்று வழுக்கு நடத்து 3 மாதங்களுக்குள் மிகக் கடுமையான தண்டனை வழங்கினால் மற்றவர் பயப்படுவர். ஆனால் நடப்பது என்ன? அவர் முதலில் ஜாமீனில் வெளியெ வந்து வழுக்கு சுமார் 10 ஆண்டுகள் நடக்கின்றன. இதற்கு நடுவே அந்த மனிதர் இறந்தே போகிறார். ஆதலினால் வழுக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அவரது சொத்துகள் அவரது குடும்பத்தாரால் அனுபவிக்கப் படுகிறது. இது நியாயமா? இதை பார்த்து மற்றவருக்கும் சட்டத்தின் மீது மதிப்பில்லாமல் போகிறது.

இன்று தமிழ்நாட்டில் சுமார் 354 பொறியிற கல்லூரிகள் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் சுமார் 20 கல்லூரிகளை தவிர மற்றவை யாவையும் யாரால் உருவாக்கப் பட்டவை? எந்த நிதி ஆதாரங்களால் வளர்ந்தவை என்பதற்கு ஒரு விசாரணை நடத்தினாலேயே போதும் நம் தமிழ் நாட்டின் லட்சணம் விடிந்துவிடும்.

ஆகக்கூடி நாம் நமது வாழ்வின் அனைத்து துறைகளிலும். அதாவது
கல்வி
போக்குவரத்து
சுகாதாரம்
பொதுத்துறை
மொழி
ஊடகம்
சட்டம்
நீதித்துறை (இந்த கூத்து பெரும் கூத்து)
அரசியல்
சமயம்
தனிமனித ஒழுக்கம்
என்று அனைத்து துறைகளிலும் சுயநலத்தின் காரணமாக லஞ்சத்தினால் சமுகத்தை
சீரழித்து விட்டோம். இதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. (நான் உள்பட!)
யாரும் இந்த சீரழிவின் பங்களிப்பிலிருந்து தப்பிக்க முடியாது. பங்களிப்பில் ஏற்ற தாழ்வு இருக்கலாம். சிலர் என்னைப் போல இந்த சீரழிவை பொறுக்காது அதில் பங்கு பெற மனமில்லாமல் தப்பித்து போன குற்றம் செய்தவர்களாக இருக்கலாம். ஆனால் பலரும் இந்த அநியாயத்தில் உழன்று அதில் பலனைடைந்து இந்த சீரழிவை ஊக்குவித்து மொத்த சமுதாயத்தை நச்சுப் படுத்தியவர்கள்.

இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். மனதளவில் திருந்த வேண்டும்.
இப்படி திருந்தாவர்கள் எப்படி புத்திசாலிகளாக இருக்க முடியும்.?????
தமிழர்கள் முட்டாள்களே.
நன்றி
ரவிகுட்டி.!

No comments: