நாம் எல்லோரும் பலஇடங்களில் பல விதமாக காட்சிதருகிறோம். இது கிட்ட தட்ட எல்லோருக்கும் ஒரளவு தெரியும். ஆனால் இதைப் பற்றி எத்தனை பேர் சிந்திக்கின்றனர்.? எத்தனைப் பேர் இதை ஒத்துக் கொள்கின்றனர்.?
ஆனால் யாரைக் கேட்டாலும் தாங்கள் எல்லா நேரத்திலும் எல்லாரிடமும் ஒரே மாதிரி பழகுவதாகவும் செயல்படுவதாகவும் சொல்வார்கள். தங்களிடம் பாசாங்கு இல்லையென்றே சொல்கின்றனர்.
தமிழர்கள் / இந்தியர்களை கேட்டால் உலகிலேயெ இந்தியர்கள்தான்/தமிழர்கள்தான் பொய்யாக வாழாமல் உண்மையாக வாழ்வதாகச் சொல்லுவார்கள். மேலும் இவரிகளின் கருத்துப்படி மேலைநாட்டில் கலாசார ஒழுக்கமெ கிடையாது. மேலைநாட்டினர் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ்வதாகவும் அவர்களின் வாழ்வில் ஆழ்ந்த கருத்தோ கோட்பாடுகளோ இல்லையென்று அடித்துக் கூறுவார்கள். இது உண்மையா?
தமிழர்கள்/இந்தியர்கள் ஒரு உண்மையான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்களா? இவர்களிடம் பொய்யுறை இல்லையா? இவர்களின் சமுக பொருளாதார அரசியல் இப்படி பொய்யை அடிப்படையாக கொண்டதில்லையா?
இவர்கள் மனசாட்சியின்படி மற்றவர்களுக்கு தீங்கிழைக்காமல் சுயநலம் பாராட்டாமல் தினசரி வாழ்க்கையை மேற்கொள்கிறார்களா? இவர்கள் தினமும் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்களா?
கேள்விகள்..கேள்விகள்..கேள்விகள்.
இதற்கு விடைதேட முற்பட்டோம்.
சரி. முதலில் ஒரு சாதாரண நடுத்தர வர்கத்து மனிதரின் தினசரி வாழ்க்கையில் அவர் எத்தனை முறை பொய்யுறைகள தெரிந்தே சொல்கிறார்?
தாமதமாக அலுவலகம் வந்தால் உண்மையான காரணங்களை ஒரு போதும் சொல்வதில்லை. அதற்கு காரணம் சுமார் 99% இவரது திட்டமிடாததே முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் இதே தவறை மற்றவர் அல்லது இவருக்கு கீழ் இருக்கும் பணியாளர் செய்யும் போது இவர் அதை கடுமையாக கண்டிப்பார்." இவங்க எப்போதுமே இப்படிதான் சார்? பொய்யைத் தவிர வேறொன்றுமே சொல்லமாட்டார்? ........எல்லோருமே அப்படித்தான்."(விடுபட்ட இடத்தில் அந்த மனிதரின் பிர்தேசமோ, மொழியோ, அல்லது ஜாதியோ சேர்த்துக் கொள்ளுங்கள்)
அலுவலகத்தில் மற்றவர் செய்த செயலுக்கு பாராட்டு இவருக்கு கிடைத்தால் அதை மறுப்பேதும் சொல்லாமல் வாங்கி கொள்வார். அப்பத்தான் அவர் பிழைக்கத் தெரிந்தவர். இல்லையே இவர் பிழைக்கத் தெரியாதவர். ஆனால் இவரது பாராட்டை மற்றவர் வாங்கிக் கொண்டால் "அயோக்கியன்..தூரோகி".
பக்கத்திலிருக்கும் பெண் அல்லது ஆண் தன்னை கண்டு உருகினால் நமக்கு சந்தோஷம். "நாமதான் ஹீரோ / ஹீரோயின்..சூப்பரில்ல.!."இதை தன் வாழ்க்கை துணையிடம் சொல்வோமா? சொன்னால் நீ முட்டாள் அல்லது பைத்தியக்காரன்? சொல்லாவிட்டால் நீ கில்லாடி! இதையே மற்றவர் செய்தால் அவர் "கடைந்தெடுத்த அயோக்கியன்.நம்பிக்கை துரோகி..இவனெல்லாம் நிக்க வச்சு சுடனும் சார்".
ஒரு விஷ்யத்திற்காக வரிசையில் நிற்க வேண்டியுள்ளதா? உடனே அங்கு நமக்கு தெரிந்தவர் வேலை செய்கிறார்களா என்று பார்த்து அவர் மூலம் வரிசையை முந்த அல்லது தவரிக்க முயல்கிறோமா? அப்படி செய்தால் நீங்கள் நல்ல "நெட்வொர்க்" வைத்திருக்கிறீர்கள் என்று நீங்களே உங்களை பாராட்ட தயங்க மாட்டீர்கள். இதை ஒரு குற்றமாகவே பார்க்க மறுக்கிறீர்கள். வரிசையில் நிற்பது இழிவாகவே உங்களுக்கு படுகிறது. இப்படி இல்லாமல் நீங்கள் வரிசையில் நின்று, சிபாரிசு இல்லாமல் காரியம் செய்வதை பிழைக்கத் தெரியாதவர் செய்யும் செயல் என்பது தமிழர்/இந்தியர்களின் பெருவாரியான கருத்து.
இதை ஒரு ஒழுக்கக்கேடாகவே பார்க்க மறுக்கிறது நம் சமுகம். இதைப் உங்களிடம் எதிர்பார்த்து அல்லது இதற்கு உங்களை ஆட்படுத்தும் நபர் உங்களின் மோசமான எதிரியாகக் கருதப்படுவார்.
நீங்கள் வேலை செய்யும் பதவியின் காரணமாக உங்களுக்கு யாராவது கையூட்டு கொடுக்கும் போது நீங்கள் அதை வாங்க மறுத்தால் நீங்கள் ஒரு "உதவாகாரை". உங்களுக்கு கையூட்டு கொடுத்தால்தான் நீங்கள் வேலை செய்வீர்கள் என்றால் நீங்கள் பிழைக்கத் தெரிந்தவர். மேலும் நீங்கள் ஏமாற்றாமல் உங்கள் கடமையைச் செய்தால் நீங்கள் "நியாயமானவர்" மற்றும் "வாக்கு தவறாதவர்". "பர்பெக்ட் ஜென்டில்மென்".
ஆனால் நீங்கள் கையூட்டு கொடுக்க நேர்ந்தால் அதை வாங்கும் ஆள் "பகல் கொள்ளைக்காரர்" மேலும் " இந்த நாடு உருப்படுமா?" "ஒரு நியாய்ம் வேண்டாம்?" என்று கேள்விகள் வேறு கேட்கப்படும்.
உதாரணம் : நிலப் பதிவு மற்றும் வாகன பதிவு அலுவலகம். (இங்கு லஞ்சத்தை ஒழிக்கவே முடியாது).
ஒரு பொருள் இலவசமாக கிடைக்கிறது என்றால் அந்த பொருள் தங்களிடம் இருந்தாலும் (உ.ம். இலவச தொலைக் காட்சி)சும்மா போய் வாங்கிவைத்துக் கொள்ளாதவர்கள் தமிழகத்தில் எத்தனைப் பேர்?
"சும்மாத்தானே சார் தர்றாங்க" இது சும்மா வரவில்லை தங்களின் வரிப் பணத்திலிருந்து வருகிறது என்று எத்தனைப் பேர் உணர்கிறார்கள்? அப்படியே உணர்ந்தாலும் "அதுசரி..நம்ம பணம்தான் நமக்கே திரும்பி வருகிறது" என்று சாலஜாப்பு வேறு.
தம்மிடம் ஏற்கனவே இருப்பதாலும் தமக்கு அது தேவைப்படாததாலும் அல்லது தனக்கு அதைப் பெற தகுதியில்லாததாலும் எத்தனைப் பேர் எத்தனைப் பொருள்களை மறுத்திருக்கின்றனர்? இலவசத்தை பெறுவதில் ஏறக்குறைய எல்லோரும் அடிமைகள் என்றே சொல்லலாம். (உ.ம்.ரேஷ்ன் கார்டு).
இது திருட்டு இல்லையா? மற்றவர்களுக்கு சேர வேண்டியதை தட்டிப் பறித்தலாகாதா? இப்படி தகுதியில்லாதவர்கள் வாங்காமல் இருந்தால் அந்த பொருளை கொள்முதல் செய்வதாலும், அதற்கு மானியம் அளிப்பதாலும் அரசுக்கு ஏற்படும் செலவீனங்கள் குறைந்தால் அந்த வரிப்பணம் வேறு பல காரியங்களுக்கு பயன்படலாம். அல்லது வரிச்சுமை சற்றே குறையலாம் அல்லவா? ஆனால் இந்த விஷ்யத்திற்கு உடனடிபதில்.."நாம வாங்காட்டா என்ன சார்? நம்ம பேரைச்சொல்லி வேற எவனோ வாங்கிட்டு போப்போறான்".
அதுசரி..அவர் குற்றவாளி என்றால் நீங்கள் என்ன?
தமிழர்/இந்தியர் தம் வாழ்நாளில் தாம் சம்பாதித்த வருமானத்தில் எத்தனை சதவிகிதம் மற்றவர்களுக்காக அல்லது தன்னைவிட வறுமையில் இருப்பவர்களுக்கு செலவிட்டிருக்கிறார் என்று ஆராய்ந்தால் மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சும். அப்படி செலவு செய்வதை 99 விழுக்காடு மக்கள் யோசித்தே பார்த்ததில்லை. அவர் கோடியில் சம்பாதித்தாலும் அல்லது ஆயிரங்களில் சம்பாதித்தாலும் அல்லது நூற்றுக் கணக்கில் சம்பாதித்தாலும் அது அத்தனையும் தாம் தம் உறவு குடும்பம் என்றே செலவு செய்கின்றனர்.
இத்தனைக்கும் இவர்கள்தான் கர்ணனைப் பற்றி மிக உயர்வாக பேசுவார்கள்.
இப்படி செலவு செய்யாததற்கு காரணம் இந்தியாவின் வறுமைதான் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். காரணம் கடந்த பல ஆண்டுகளாக உலகில் தங்கத்தை மிக அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூதன்மை வகிக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது?
இந்தியாவில்தான் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள்கூட கொஞ்சம் கூட தான் வாழும் அல்லது தன்னை சுற்றியுள்ள சமுகத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை.
இதைச் சொன்னவுடன் "அஹா..எப்படி இதைச் சொல்லலாம்..அந்த பள்ளி இல்லையா..இந்த சத்திரம் இல்லையா..இந்த கோவில் இல்லையா" என்று உதாரணம் காட்டத் தொடங்காதீர்கள்.
சமுகத்திற்கு செய்வது என்பது கோவிலுக்கு செய்வதில்லை. பள்ளிக் கல்வி வியாபாரம் ஆகிவிட்டப் பிறகு கல்விக் கூடங்களைப் பற்றி சொல்லக்கூடாது.
திருப்பதி பெருமாளுக்கு செய்வது அந்தணர்களை அழைத்து சோறுப் போடுவது இதெல்லாம் சமுக பயன்பாடு ஆகாது.
உண்மையான சமுக நலன் என்பது சுற்றுச் சுகாதாரத்தை போற்ற பணம் தருதல், அல்லது அது சம்பந்தமான ஆராய்ச்சிக்கு வழிவகைச் செய்தல், மருத்துவ உதவிகளை ஏழைக்களுக்கு மலைவாழ் மக்களுக்கு எடுத்துச் செல்லுதல் (அவர்களை உங்களிடம் = நகரத்திற்கு= அழைக்காமல் அவர்களிடம்
இவைகளை கொண்டு செல்லுதல்), இலவச தரமான கல்வி அல்லது கல்விக்கான கட்டுமான பணிக்கான (கட்டிடம், உபகரணங்கள்)பொருள்களை
கிராமம் கிராமாக கொண்டு செல்லுதல், இந்திய கலாசாரம் அல்லது மொழி சார்ந்த கலாசாரத்தை பேணுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்குதல், நல்ல தரமான நூலகளை வெளிக் கொணர வர்தக ரீதியில்லாமல் இலக்கியத்தின் வளர்ச்சிக்காக உதவுதல், தொடர்ந்து மொழி சார்ந்த வளர்ச்சிக்காக திறன்வாய்ந்த மக்களைக் கொண்டு ஊடகங்களில் பங்கு கொள்ளூதல்
இப்படி பல வகையாகும்.
1. இந்தியாவில் பெரிய அளவில் மருந்து சம்பந்தமான ஆராய்ச்சி நடக்கிறதா?
நடக்கிறது என்றால் அது எத்தனை மற்றும் யாரால்?
2.சிறு விஞ்ஞானிகள் அல்லது தொழில் முனைவோர்களுக்கு ஊக்குவிக்க ஊடங்கள் மூலமாக என்ன நடவடிக்கைகள் நடக்கிறது? இப்படிப் பட்டோர் வங்கிகளை நம்பியிராமல் வேறு ஏதாவது உதவி செய்யும் அமைப்பு உள்ளதா?
3. வாழ்வின் முன்னேற்றம் என்றால் அது அரசு வேலையை நாடுவது அல்லது சினிமாவில் பேரெடுப்பது அல்லது அரசியலில் சேருவது. இதுவல்லாது வேறு வழி காட்டப்படுகிறதா?
இது போன்று எத்தனை வகைகளில் சமுதாயத்திற்கு இந்த கோடீஸ்வரர்கள் பயன் தரலாம்? செய்தார்களா?
இந்தியாவில் உழைக்கும் அனைவரும் தங்கள் வருமானத்தில் சுமார் 5 விழுக்காடு மற்றவர்களுக்கு சமுதாய நலன் சார்ந்த திட்டங்களுக்கு கொடுக்கத் தொடங்கினாலேயே இந்தியாவில் வறுமை ஒரே வருடத்தில் காணாமல் போய்விடும். இதுவரை ஏன் செய்யவில்லை?
காரணம் நாம் மிகப் பெரிய சுயநலவாதிகள்.
இந்தியாவில் மணமக்கள் வாங்கு வரதட்சிணை அசர வைக்கிறது.
இந்தியாவில் சராசரியாக சுமார் 10 பவுன் நகை கல்யாண சீராக கொடுக்கப் படுகிறது.(இது மிகவும் குறைந்தபட்ச மதிப்பீடு) அதாவது சுமார் 80 கிராம் தங்க நகை எந்த வித பயன் பாடும் இல்லாமல் ஒரு வீட்டில் முடங்கி போகிறது. ஒரு வருடத்தில் சுமார் 1 கோடி திருமணங்கள் நடப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் ஒரு வருடத்தில் சுமார் 800 டன் தங்கம் எந்த வித பயன் பாடும் இல்லாமல் முடங்கிப் போகிறது. இதன் இன்றைய பண மதிப்பீட்டில் பார்க்கலாம்.
80 கிராம் = ரூ.96000/=
800 டன் = ரூ. 9600,00,00,000/=
அதாவது சுமார் 9600 கோடி ரூபாய்கள் விரமாகிறது. இதைத் தவிர பாத்திரம் பண்டம், உடைகள் மற்றும் வருவோர் போவோருக்கெல்லாம் உணவு என்று எத்தனை கோடி ரூபாய்கள் நமது பெருமைக்காக வீணடிக்கிறோம்.
மலைப்பாக இருக்கிறது அல்லவா?
இன்னுமா நாம் நம்மை ஏழ்மை நாடு என்று சொல்லிக் கொள்வது?
நமக்கு எத்தனை கோடிகள் வருமானம் வந்தாலும் நாம் ஏமாற்றத் தவறுவதில்லை.
பேராசை என்ற வெள்ளத்தில் திளைப்பதில் நாம் மன்னர்கள்.
ஆட்டோ ஓட்டுபவராக இருந்தாலும் அல்லது "சத்தியம்" ராஜுவாக இருந்தாலும் சரி நமக்கு பணம் போதவே போதாது.
ஆசைப் படுவது வேறு. பேராசைப் படுவது வேறு என்பதை கூட நாம் மறந்து விட்டோம்.
நியாயமாக நமக்கு நம் திறமை, படிப்பு, உழைப்பு, வாய்ப்பு இதன் அடிப்படையில் கிடைக்க வேண்டியவைகளுக்கு அசைப் பட்டால் அது ஆசை.
ஆனால் நாம் நமக்கு இது வேண்டு என்று நினைக்கிறோமேயன்றி அதற்கு நாம் தகுதியானவரா அல்லது அதை நேர்மையாக அடைய முடியுமா என்று யோசிப்பதில்லை.
மேலும் ஒருவர் ஒரு கோடிக்கு (இன்றைய தேதியில்)மேல் பணம் சேர்த்து என்ன செய்யப் போகிறார் என்று அவருக்கெ தெரியாது.
உ.ம். சத்தியம் ராஜு. அவரது சொத்து அவர் தன் நிறுவனத்திலேயே திருட வேண்டிய காரணம் என்ன?
மேலும் இன்னும் மேலும் என்கிற ஒரு விதமான மனோவியாதியன்றி வேறு என்ன?
அவர் திருடாமலேயே ஒழுங்காக நிறுவனத்தை (உலகாளாவியது)நடத்தியிருந்தாலேயே இன்னும் ஒரு 10 வருடங்களில் அவரது சொத்து
இரு மடங்காயிருக்கும்.
ஆக நாம் சொத்து சேர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்.
ஆனால் தனிப்பட்ட முறையில் கேட்டு பாருங்கள். ஒரு ஆள் கூட இதை
ஒத்துக் கொள்ள மாட்டார்.
ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் கேளூங்கள் அவர் தினசரி எத்தனை பேரிடம் சரியான காசு வாங்கினார் என்று? எல்லாமே நியாயமான சவாரி என்பார்.
ஆனால் அவருக்கு தெரியும். அவர் பிடுங்கியது அநியாயம் என்று.
"என்னாசார் பண்றது..நாங்களும் வாழ்னுமே" வழக்கமான பல்லவி.
அப்ப மற்றவர்களை ஏமாற்றித்தான் தமிழ்நாட்டில் வாழ முடியுமா?
அப்படி இருந்தால் கேவலமில்லையா?
மளிகைக் கடைக்காரரை கேளுங்கள். கலப்படமில்லையா என்றால்
இல்லவே இல்லையென்பார்.
அவரது தனிப்பட்ட பதிலும் "நாங்களும் வியாபாரம் செய்து நாலு காசு பாக்கனுமில்ல".
பூக்காரியை கேளுங்கள், முழும் சரியாக போடப்படுகிறதா என்று?
கற்பூரம் ஏத்தி சத்தியமே செய்வார்.
தனியாக கேட்டால் "என்னா பண்றது..ரவுடிக்கு மாமுல் குடுத்து, தண்டல் கட்டி ஊட்டை யார் பார்த்துகிறது!"..புருஷன் குடிகாரன். காரணங்களா இல்லை.
சினிமா தியேட்டர் வைத்திருப்பவரை கேளுங்கள். "ஏன்..பாதி படத்தில் குளிர் வசதி நிறுத்தப் படுகிறடது? ஏன் கழிவறை மோசமாக உள்ளது"..
அவரது தனிப்பாடல்: " என்னா சார் பண்றது..கார்பரேஷன், மின்சார வாரியம், லோக்கல் போலீஸ், ரவுடி மாமுல், எல்லாத்தை தாண்டி படமும் ஓடாமல் கையை கடிக்குதே"
எல்லோருக்கும் காரணங்கள் இருக்கிறது. ஒரு தொழிலை தம்மால் சரியாக செய்ய முடியாமல் போனால் அதிலிருந்து விலகி தமக்கு தெரிந்த வேறு
தொழிலை செய்யாமல் அந்த தொழிலேயே மொள்ள மாறித்தனமும் முடிச்சவிக்கி தனமும் செய்து நீடிக்க நினைப்பது தவறில்லையா? திருட்டுத்தனமில்லையா?
இதுதான் தமிழன்/இந்திய கலாசாரமா?
மேலே நான் கூறிய கேள்விகள் ஏதாவது அநியாயமா?
இது போன்று ஏதாவது ஒன்று மேலை நாடுகளில் நடக்கிறதா?
அப்படியிருக்க அவர்களது கலாசாரம் எப்படி ஒரு மோசமான கலாசாரம் ஆகும்?
மேலை நாடுகளில்:
1. அரசாங்க அலுவலகத்தில் அலுவலர் தம் கடமையை செய்ய நீங்கள் கையூட்டு தரவேண்டுமா?
2. கல்லூரியில் சேர்வதற்கு லஞ்சம் உண்டா?
3. மின்சார இணைப்பு பெற லஞ்சமோ அல்லது மின்சாரம் திருட லஞ்சமோ உண்டா?
4. சாலை விதிகளை மீற காவலர் கையூட்டு பெறுவாரா?
5. எந்த ஒரு இடத்திலும் வரிசை மீறுதல் நடை பெறுமா?
6. நீங்கள் சட்ட பூர்வமாக செய்யும் எந்த தொழிலுக்கும் ரவுடிகள் அல்லது அரசியல்வாதிகளுக்கு "மாமூல்" தரவேண்டி இருக்குமா?
7. வாடகை வாகனத்தில் "மீட்டருக்கு மேல் போட்டு குடுசார்" உண்டா?
இந்தியன் தாத்தா சொன்னால் போல், இந்தியாவில் அவரவர் கடமையை செய்யவே நாம் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் மற்ற நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர்கள் கடமையை செய்யாதிருக்க லஞ்சம் பெற வாய்புண்டு. அதுவும் மாட்டிக் கொண்டால் கட்டாயம் விரைவில் தண்டனை நிச்சயம்.
இதுவரை சொன்னது அதிகம் என்று நினைத்தீர்களானால் நான் இன்னும் சொல்ல ஆரம்ப்பிக்கவேயில்லை என்றே சொல்லலாம்.
நான் இன்னும் அரசியல்வாதிகளைப் பற்றி பேசவே தொடங்க வில்லை.
வீட்டில் உள்ள உறவுகளைப் பற்றி பேசத் தொடங்கவில்லை.
ஊடகங்களின் நிலைப்பாட்டை அல்லது செயல்பாட்டை இன்னும் தொடவேயில்லை.
சாமான்ய மனிதனின் சமுக கடமைகளின் நிழலைக் கூட இன்னும் நான் சுட்டிக்காட்டவில்லை.
அதற்குள்ளாகவே அலுப்பு தட்டுகிறது.
கவிஞர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது!
"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமக்களாகவே!" நாம் இருக்கிறோம்.
இதில் நாம் மிக உயர்ந்த கலாசாரத்தை கொண்டவர்களாக பேசிக் கொள்கிறோம். மற்றவர்களை தூற்றவும் செய்கிறோம்.
வெட்கமாக இல்லை நமக்கு?
எனக்கு இருக்கிறது.
4 comments:
உங்களுடைய அனைத்து தமிழ் பதிவுகளையும் படித்தேன்.
நிறைய எழுதுங்கள் அய்யா.
நன்றி திரு. ரமேஷ் அவர்களே. உங்கள் ஊக்குவிப்பிற்கு என் நன்றி.
ரவி
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
please keep writing frequently.
your writing content has quality init. keep rocking):
Post a Comment