Wednesday, June 21, 2017

ப.ஜ.க தான் ஹிந்துக்களின் அடையாளமா !!

---ஒரு சாமான்ய இந்தியன் ப.ஜ.க.வை தெரிவு செய்தது எப்படி? -- நீண்ட பதிவு...


2014 - ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஒரு முன்னாள நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். (இப்போது அவர் என்னிடம் கோபித்து கொண்டுவிட்டார் :) )


அன்று பேச்சு வரும் தேர்தல் மற்றும் முடிவுகளை பற்றி சென்றது. அவரின் கணிப்பின் படி ப.ஜ.க. ஜெயிக்காது. அது அவரது கணிப்பு என்பதை விட விருப்பம் என்றே நான் நினைத்தேன். காரணம் ப.ஜ.க. ஏன் வராது என்பதற்கு அவரால் பெரிய காரணங்களை சொல்ல முடியவில்லை. மீண்டும் மீண்டும் குஜராத் படுகொலை. பா.ஜ.க வின் இந்து மத சார்பான அரசியல். ஆர்.எஸ்.எஸ் சின் பின்னணி என்று எல்லோருக்கும் பல காலமாக தெரிந்த விஷயத்தையே சொன்னாரேயன்றி புதிதாக ஒன்றும் சொல்லவில்லை. மோடி ஒரு பயங்கர கொலைகாரன் என்று மட்டும் திரும்ப திரும்ப சொன்னார்.


நான் அவரது கருத்துகளில் பெரிய மறுப்பேதும் சொல்லவில்லை. காரணம் அது அவரது புரிதல். ஆனால் கணிப்பு என்று வந்தால் நம் விருப்பு வெறுப்பை தாண்டி நிதர்சனம் என்ன என்று பார்க்க வேண்டும் என்றே சொன்னேன்.


என் கணிப்பின் படி ப.ஜ.க. மீண்டும் வர வாய்ப்புகள் அதிகம் என்றே சொன்னேன்.
அதுவே சரி என்று நிருபணம் ஆனது.

என் கணிப்பிற்கான காரணம். மத்தியில் காங்கிரசின் அதீத ஊழல்கள். அதுவும் மன்மோகன் சிங்கின் இரண்டாவது தொடர் ஆட்சியில் வெளிச்சத்துக்கு வந்த ஊழல்கள் மிக அதிகம். ...வரலாறு காணாத அளவில் காங்கிரஸ் சிக்கி கொண்டது. இது காங்கிரஸ் மீதான வெறுப்பை மக்களிடம் பரவலாக்கியது. இந்த அரசு மக்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டதை போல் ஒரு உணர்வு ஏற்பட்டதை மறைக்க இயலாது.
இதை தாண்டி காங்கிரசில் சோனியா ராகுலை தாண்டி தேசிய அளவில் எந்த முகங்களும் இல்லை. ராகுல் பாவம் ...இந்த அரசியலில் இவரது தந்தையை போலவே மிகத்தவறாக வழி நடத்தப்படுகிறார். இவருக்கு பல மாநில அரசியலே புரியவில்லை.


எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கட்சி தொடர்ந்து இரு முறை ஆட்சி செய்யும் போது அவர்களுக்கு பல தோல்விகளுக்கு சாக்கு சொல்ல வாய்ப்பில்லாமல் போகிறது. ஆட்சியில் இருந்து கொண்டு மக்களை தொடும்படியான சாதனைகளை செய்யாமல் தேர்தலை சந்திப்பது மிகவும் கடினமான விஷயம். அப்போதும் வெற்றி பெற பேசாமடந்தை பிரதமர் உதவமாட்டார். அதற்கு இந்திரா போன்று எதையாவது சொல்லி மக்களை தம் பக்கம் இழுக்கும் வல்லமை கொண்ட தலைமைகள் தேவை. அது காங்கிரசில் இல்லாமல் போனது.


காலம் மாறிக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள் மாறுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய தலைமுறைகள் வந்து கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். அவர்களின் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது?


இதையெல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருந்தது.
அதுதான் மதசார்பின்மை.

இதை பற்றி விரிவாக பேச வேண்டும்.

மதசார்பின்மை என்பதை மிக மோசமாக, தொடர்ந்து பொய்களின் அடிப்படையில் உபயோகித்து அரசியலில் ஜெயிக்கும் பாணியை நேரு முதல் ராகுல் வரை செய்வது மக்களுக்கு அலுப்பை தட்டியது. இவர்களின் இந்த பாணியை அன்று கருணா முதல் இன்று அகிலேஷ் வரை அனைவரும் செய்து விட்டனர்.


ஒரு பெரும்பான்மை சமுதாயத்தை காட்டி பயமுறுத்தியே சிறுபான்மை சமுதாயத்தை தன் ஒட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தும் வித்தை ஒரு இரு பக்கமும் கூரான கத்தி போன்றது.


இந்த நாடகத்தின் அச்சு பிரித்தாளும் பிரிட்டிஷ் அரசு விட்டு போன எச்சம்.


சிறுபான்மையினரின் காவலனாக தம்மை காட்டி கொண்டு அரசியல் செய்யும் கட்சிகள் உண்மையில் ஒரு கட்டத்தில் பெரும்பான்மையினரின் வெறுப்புக்கு ஆளாவார்கள் என்பதை மறந்ததுதான். கொடுமை.....


சரி...இவர்கள் அப்படி சிறுபான்மையினருக்காவது நல்லது செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. அங்கிருக்கும் ஊழல் தலைமைகளுக்கே இவர்கள் இடம் கொடுத்தார்கள். பலன்...சிறுபான்மையினரும் இவர்களை நம்ப மறுக்க தொடங்கி விட்டார்கள்.

பெரும்பான்மையினர் இடையே பெரிய அளவில் ஒற்றுமை இந்தியாவில் இருக்க வாய்ப்பில்லாமல் இருந்தது.. காரணம் ஜாதி, மொழி என்று பிரிவுகள். ஆனால் அந்த பிரிவுகளை தாண்டி இவர்களை மதம் ஒன்றினைத்தது. அப்படி ஒன்று சேராதவர்களையும் இந்த கம்யுனிஸ்ட் மற்றும் மத மாற்றிகள் கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று ஒருங்கிணைத்தார்கள்.

சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இந்து என்று சொல்லிக் கொள்வதை ஒரு வெட்கப் படும் விஷயமாக மாற்றியது நேருவின் காங்கிரஸ். இது இரண்டு மூன்று தலைமுறைக்கு செல்லுபடியாகியது. இந்த கொள்கைக்கு மாற்றி பேசினால் இந்தியாவில் அரசியில செய்ய முடியாது என்கிற நிலைமை உண்டானது. அத்தகைய சமயத்தில் இந்து என்று பெருமை கொள்வோம் என்று ஒரு கட்சி வந்தால் குறைந்த பட்சம் ஒரு 20 சதவிகிதனராவது சேர்வார்களா ? மாட்டார்களா ? அப்படி வளர தொடங்கியது ப.ஜ.க.


இந்த கட்சியினரை மீண்டும் மீண்டும் மதவாதம் மதவாதம் என்று தாக்க தாக்க எதிர்வினையாக அந்த கட்சி மீண்டும் மீண்டும் தன்னை இந்துக்களின் காவலனாக காட்டிக் கொண்டு வளர தொடங்கியது. காரணம்...ஒருவன் தன்னை இந்து என்று சொல்லி கொள்வதையே மதவாதமாக இன்னொரு கட்சி எதிர்க்குமா? என்கிற கேள்வி சாமான்யரிமும் எழத் தொடங்கியதே காரணம். ..இந்த சாமான்யன் ரோடுக்கு வரமாட்டான். போராட மாட்டான். ஆனால் அவனுக்கு ஒரு கருத்து உண்டு. நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை கிண்டல் செய்தாலோ அல்லது அந்த நம்பிக்கை சார்ந்த கலாசாரம் அழியும் என்று அவன் பயந்தாலோ அவன் நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ தம் வெறுப்பை காண்பிப்பான்.
தம் மதம் சார்ந்தத கலாசாரம் சார்ந்த சூழலுக்கு ஆபத்து என்று அவன் நம்பினால் அவன் எவ்வாறாகிலும் தம் எதிர்ப்பை தெரிவிப்பான்.
இதைதான் ப.ஜ.க. கைபற்றியது.


இது தவறில்லையா என்று கேட்கலாம். எது தவறு என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அரசியலில் மாறுபடுகிறது.

சுதந்திர இந்தியாவில் இந்த மத வேறுபாடும் அதில் அதீத வெறுப்பும் பெருமளவு இல்லாமல் வளர்ந்த மாநிலம் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மட்டுமே என்றும் சொல்லலாம். கோவை கலவரத்திற்கு முன்பு இங்கு மத கலவரம் கண்டதேயில்லை. வடக்கு பற்றி எரிந்து கொண்டிருந்த போது கூட இங்கு அமைதியே நிலவியது. ஆந்திராவில் ஹைதிராபாத்தில் மதகலவரம் NTR காலம் வரை ஒரு வருடாந்திர நிகழ்வாகவே நடந்தது.  கேரளாவில் கம்யுனிஸ்ட் மற்றும் இந்து அமைப்புகள் இடையே போராட்டம் என்கிற போர்வையில் ஒரு பெரும் ரத்தகளறியே ஒரு காலத்தில் நடந்தது. ABVB யும் கம்யுனிஸ்டுகள் பின் புலத்தில் மாற்று மதத்தினரும் வெட்டி சாய்த்து கொண்டனர்.  

தமிழகமும் ஓரளவு கர்நாடகாவும் தப்பியது என்றே சொல்லலாம்.

ஆனால் வட இந்தியாவில் அப்படியில்லை. அவர்கள் சரித்திரம் அப்படி. பல நூறு ஆண்டுகளாக வடக்கே பல் வேறு படையெடுப்புகளின் காரணமாக இந்த இந்து இஸ்லாமிய பிரிவு மாறாத வடுவாக அங்கு உள்ளது. வெள்ளையர் காலத்தில் கொஞ்சம் அடங்கி இருந்த இந்த நிலை சுதந்திரதிற்கு பிறகு காங்கிரஸ் கம்யுனிஸ்ட் புண்ணியத்தில் மீண்டும் எழுந்தது.

அதை அடக்கி வைக்ககூடிய பெரிய தலைமைகள் இருந்தவரை இவை பெரிதாக வெடிக்கவில்லை.  ஆனால் பெரும்பான்மையான இந்துக்கள் இடையே தங்களின் மதம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாக ஒரு உணர்வு இருந்தே வந்துள்ளது.

இது தேவையில்லாதது. தவறானது ஆதாரமில்லாதது என்று அதை நீக்க கூடிய அளவில் காங்கிரஸ் போன்ற கட்சிகள் செயல்பட்டிருக்க வேண்டும். அனால் மாறாக இது போன்ற உணர்வுகளை ஒதுக்கி உதாசினபடுத்தியே வந்துள்ளது. இந்த சந்தர்பத்தைதான் பா.ஜ.க.சரியாக பயன்படுத்தி கொண்டது.

அரசின் மதசார்பின்மை என்பது எந்த மதத்தையும் ஆதரித்தோ எதிர்த்தோ செயல்படாமல் இருப்பது மட்டுமல்ல.  எல்லா மதத்தையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க வேண்டும் என்பதுவும் கூட என்பதை மறந்தார்கள்.  பழைய டெல்லியில்  ஒட்டு வேண்டும் போது டெல்லி இமாம் ஐ சென்று பார்த்து அவரை மறைமுகமாக “பாத்வா” விட சொல்வதை தொடங்கி வைத்தது இந்திராதான்.
அதே இந்திரா பதவி திரும்ப வேண்டி காஞ்சிபுரம் வரை வந்து சங்கராச்சாரியை சந்தித்ததும் உண்டு. இப்படித்தான் மதசார்பின்மை காக்கப்பட்டது.  இது எந்த மாதிரி செய்தியை மக்களுக்கு தெரிய படுத்தும்?  இப்படி இவர்களின் மதசார்பின்மையை பற்றி பத்தி பத்தியாக சொல்லிக் கொண்டே போகலாம்.

இது போன்ற சூழ்நிலையில் பாஜக போன்ற கட்சிகள் பலனடைவதில் ஆச்சரியம் இல்லை.

இந்த நிலையில் உலக சூழலும் மாறி வந்தது. உலகெங்கிலும் இஸ்லாத்தின் பெயரால் வன்முறை வளர்த்தெடுக்கப் பட்டது. இதை பெரும்பான்மை இஸ்லாமியர்கள் விரும்பாவிட்டாலும் முதலில் கொஞ்சம் இதை எதிர்க்க தயங்கினார்கள். காரணம்...மார்க்கத்தின் மீதான பற்று நாடு கடந்த விஷயம் என்று போதிக்கப்பட்டதுதான். இந்த போதனைக்கு பின்னும் சர்வதேச சதிகளும் தூண்டுதல்களும் உண்டு.  உதாரணமாக 48, 51, 67, 71  இந்திய பாக்கிஸ்தான் சண்டைகளில் இது இரு நாட்டின் சண்டையாகவே பார்க்கபட்டது. ஆனால் பிறகு
இது ஒரு மத உணர்வுள்ள இரு நாடுகளிடையே போரானது. 92ல் நடந்த குவைத் போர் கூட எங்கோ நடக்கும் ஒரு சண்டையாகவே பார்க்கப்பட்டது. 

ஆனால் அதற்கு பிறகு சவூதி அரேபியாவின் வாஹபி இஸ்லாம் இந்த மத்திய கிழக்கு சண்டைகளை சர்வ தேச மதரீதியான சதியாக மாற்றியது. எப்படி என்றால், இஸ்லாம் மார்க்கம் நாடு கடந்த எல்லைகள் கடந்த விசுவாசத்தை கோருகிறது என்பதை இந்த வஹாபி இஸ்லாம் போதிக்க தொடங்கி அதற்கான பெரும் பொருளையும் வாரி இறைத்தது. இதன் காரணமாக இந்திய இஸ்லாமிய சமுகத்தில் இருக்கும் சில புல்லுருவிகள் இந்த நிலையை முன்னெடுத்து தம்மை தம் சமுகத்தின் இடையே நிலை நிறுத்தி கொள்ள முயன்றனர். 

மத்திய கிழக்கு நாடுகள் தங்களுக்குள் இருக்கும் ஷியா சுன்னி பிரிவு சண்டைகள் மட்டுமில்லாமல் மக்களின் தார்மீக எதிர்ப்பு குரலை ஒடுக்கவும் ஒருவர் காலை இன்னொருவர் இழுத்து சண்டையை தொடர்ந்தே வந்துள்ளனர். அதன் காரணமாக ISIS போன்ற கிறுக்கு அமைப்புகளும் தோன்றி இந்த எல்லை தாண்டிய மார்க்க விசுவாசத்தை கோருகிறது.

இதுவும் இந்திய பெருப்பான்மையிடையே மட்டுமல்லாமல் உலக அளவில் இருக்கும் இஸ்லாமில் அல்லாதவர்கள் இடையே பெரும் பயத்தையும் அதன் காரணமாக எதிர் வினையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்தியா மட்டும் அமைதி பூங்காவாக இருக்குமா என்ன?

92ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு...அதன் அடுத்த ஆண்டு நடந்த மும்பாய் தொடர் குண்டு வெடிப்பும் இரு தரப்பையும் உலுக்கி போட்டது. அப்படியும் இந்தியர்கள் பெரும்பான்மையினர் மட்டுமல்லாது சிறுபான்மையினரும் இதை தாண்டி செல்ல முயன்ற போது அப்படி செய்யவிடாமல் நமது தேசிய கட்சிகள் பார்த்து கொண்டன.

ஆகவே மக்களே...இந்த ப.ஜ.க வின் வளர்ச்சி ஏதோ இன்று நேற்று மோடி வந்த பிறகு வந்ததாக நினைப்பது தவறு. மோடி வந்த பிறகு மோடி பக்தர்கள் அதிக சப்தமிடுகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதற்கும் மாறி வரும் ஊடகங்களே காரணம். இதே அளவில் மிக எளிதாக வலைதளமும் அதை பெரும் வசதியும் வாஜ்பாய் காலத்தில் இருந்திருந்தால் அப்பவும் இந்த கூச்சல்கள் கேட்டே இருக்கும். 

மிகவும் சகிப்புதன்மையுடன் இருந்த இந்தியர்களை மெல்ல மெல்ல அரசியல்வாதிகள் மதசார்பின்மை என்கிற பெயரில் தள்ளி கொண்டே வந்து இன்று நடுவீதியில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்.  இதன் அடையாளமே மோதி.

இன்று நம் சமுகம் ஒரு பிளவுபட்ட சமுகவாகவே உள்ளது. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையில்லாமல் வாழ தொடங்கி விட்டோம்..

இந்தியாவின் பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவர்களை, மிகவும் சகிப்பு தன்மை கொண்டவர்களை அவரவர் இஷ்டத்துக்கு இழுத்து இன்று அது ஒரு மதசார்புடைய கட்சியின் கையில் சேர்த்து விட்டார்கள்.

பா.ஜ.க., நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், ஒரு தேசிய கட்சியாக நிலை கொண்டு விட்டது. இனி அதை மாற்ற இயலாது. கண்ணுக்கு எட்டியவரை வேறு ஒரு மாற்று வழியும் தெரிய வில்லை.  காங்கிரசும் தனது குடும்ப அரசியலில் இருந்து ஒரு முழுமையான ஜனநாயக கட்சியாக உருமாற  மறுக்கிறது. மீண்டும் மீண்டும் சிதம்பரம், கபில் சிபில் போன்ற திருடர்கள் சுற்றி நின்று ஜால்ரா அடிக்கும் சோனியா வீட்டு கூடாரமாகவே இருக்கும் இந்த கட்சி
ஜனநாயக பாதையில் மாறும் வரை மோடி போன்ற வாய்சவடால் வீர்கள் நிறைந்த பாஜக கையில் இந்த நாடு பாடாய் படும்.

இனி என்ன செய்யலாம்?

இனியும் மீண்டும் மீண்டும் இந்த பெரும்பான்மை மதத்தவரை தவறான பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எதிர்ப்பதை விமர்சிப்பதை நிறுத்துங்கள்.
இந்து மதத்தை மத சார்ப்பின்மையால் அல்லது அதற்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அந்நிய மதங்களால் வீழ்த்த முடியாது. இந்த மதத்தில் ஆயிரம் தவறுகள் குறைகள் இருக்கலாம்.  அதையெல்லாம் ஒரு அரசியல் தளத்தில் பேசி ஒரு அரசியல் கட்சியை தோற்கடிக்க முயன்றால் அது ப.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு லாபமாகவே முடியும்.

காந்தியை கொன்றவர்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்வதால் சரித்திரம் மாறுமா? காந்தியை ஒரு வெறியன் கொன்றான். டாட்.. அந்த காலத்தை நீங்கள் நினைவு கொண்டால் அன்று நடந்த இந்து முஸ்லீம் கலவரமும் நினைவுக்கு வருமே! அதை என்ன செய்வீர்கள்?  எல்லா குற்றங்களையும் ஒரு அமைப்பு அல்லது ஒரு கட்சியின் மீதே சுமத்தி தம் நாற்காலியை தக்க வைத்துக் கொள்ளும் காங்கிரசின் பழைய பார்முலா இனி செல்லாது. காந்தியே வந்தாலும் இன்றைய தேர்தலில் தோற்றுத்தான் போவார். புனிதங்கள் உடைக்கப் பட்டுவிட்டன.

தேச பக்தி தவறானது அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள். மேலும் தேச பக்தி என்பது ஒரு கட்சியின் சொத்தல்ல.
அதை நீங்கள் பரிகசிக்க பரிகசிக்க அதை பா.ஜ.க. தனதாக்கி கொள்வதுதான் மிச்சம்.

எப்படி முஸ்லீம் லீக் ஐ ஒரு கட்சியாக ஏற்று கொண்டோமோ அது போல் ப.ஜ.க. வை ஒரு கட்சியாக ஏற்று கொண்டு அதன் செயல்பாடுகளை மத சார்பில்லாமல் எல்லோரும் விமர்சியுங்கள். நியாயம் கேளுங்கள். ஆனால் அதை எந்த மதத்தின் பின்னால் நின்று கொண்டு கேட்காதீர்கள்.

பாஜக வீல் இருக்கும் ஒரே நல்ல விஷயம் அதன் தலைமை ஒவ்வொரு 4 வருடத்திலும் தெரிவு செய்யப்பட வேண்டும். ஒரு தலைமை இரு முறைக்கு மேல் தெரிவு செய்யப்பட மாட்டாது. இதையே ஒரு காரணியாக கொண்டு ஒரு நல்ல தலைமையை அவர்கள் தெரிவு செய்ய கட்டாயப் படுத்த வேண்டும். எப்படி.? 

மதத்தை சாடாமல் காரிய காரணங்கள் அடிப்படையில் அந்த கட்சியை எதிர்த்து உள்ளுரில் நல்லவரை தெரிவு செய்யுங்கள். நாலு நல்லவர் சேர்ந்தால் சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ ப.ஜ.க. ஆட்டம் காணும். தோல்வியை விட சிறந்த ஆசிரியன் கிடையாது. இது பொதுவானது. காங்கிரஸ் மட்டும் விதி விலக்கு.

அப்படியின்றி நீங்கள் மீண்டும் மீண்டும் மதவாதம் மதசார்பின்மை என்று பேசி ஒரு மதத்தை மட்டும் வில்லனாக்கி கூச்சல் இடுவீர்கள் என்றால் நீங்கள் பா.ஜ.க.வின் வேலையை எளிதாக்குகிறீர்கள் என்றே அர்த்தம். அவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை தானாக அதிகரிக்கும்.  இதுதான் நிதர்சனம்.



இப்படி எழுதியதற்காக என்னை ஹிந்துத்வா ஆளு என்று குறை சொல்லி சிந்திக்க மறுப்பீர்கள் என்றால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

No comments: