Wednesday, August 02, 2017

ரேஷன்.- இங்கிலாந்து

உணவு தட்டுப்பாட்டின் பலன் உணவு கட்டுப்பாடு.
ரேஷன்.
அதாவது உணவு விநியோக கட்டுப்பாடு.

வழக்கமாக் போர்காலங்களில் எதிரி நாட்டு உணவு ஆதாரங்களை அல்லது வழிகளை தடுத்து அல்லது சிதைத்து அந்த நாட்டை அடி பணிய வைப்பது பலகாலமாக நடக்கும் விஷயம். எதிரி நாட்டில் பஞ்சத்தை உருவாக்குவது ஒரு உத்தியாகவே பாவிக்கபடுகிறது.

தொடர்ந்து நடந்த பல ஐரோப்பிய போர்களால் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கிட்ட தட்ட எல்லா நாட்டு அரசுகளும் மக்களை பெருமளவு வறுமையிலேயே வைத்திருந்தனர்.  இங்கிலாந்து பிரான்சு போன்ற நாடுகள் தங்கள் காலனி நாடுகளை சூறையாடி தப்பி பிழைத்தன. அது முடியாத ரஷியா போன்ற நாடுகளில் உணவு தட்டுப் பாட்டால் புறநகர் மற்றும் கிராமங்களில் கிளர்ச்சி எழுந்தது. ரஷிய புரட்சி நடந்த காலத்தை இப்போது கவனியுங்கள். முதலாம் உலக போர் காலத்தையும் கவனியுங்கள். ரஷ்ய புரட்சியின் வேர் தெரியும்.

ரேஷன் தொடங்கியது முதலாம் உலக போர் காலத்தில் என்றாலும் இது முழு மூச்சாக இங்கிலாந்தில் இரண்டாம் உலக போர் காலத்தில்தான்  பெரிய அளவில் கடைபிடிக்க பட்டது. காரணம் இங்கிலாந்து ஒரு கடல் சூழ்ந்த நாடு.

இங்கிலாந்து படை ஜெர்மனியின் உணவு சங்கிலிகளை குண்டு வீசி தகர்த்தாலும் பலன் பெரிதாக இல்லை. காரணம் தரை வழியில் ஆயிரம் வழிகள்.  ஆனால் அதே ஜெர்மனி இங்கிலாந்து உணவு கப்பல்களை தாக்கி அழித்த போது கடல் சூழ்ந்த நாடான இங்கிலாந்து திணறியது.
கடைகளில் கூட்டம் வரிசை கட்டி நின்றது.  பதுக்கல் பெருகியது.
எங்கும் காலி ஷேல்புகளே கடைகளில் காணப்பட்டது.

முதலில் இங்கிலாந்து அரசு உணவு கட்டுப்பாட்டுக்கு தயங்கியது. உணவு பொருள்களின் விலைகளை கட்டுப்படுத்தையும் விரும்ப வில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நிலைமை கட்டு மீறி போக தொடங்கியதும் அரசு புரட்சி வருமோ என்று பயந்தது. ஒரு வகையில் இங்கிலாந்து அரசரின் ஒன்றுவிட்ட சகோதரனான ரஷிய மன்னர் வீழ்ந்து விட்டார். அந்த தாக்கம் இங்கும் வருமோ என்று அஞ்சியது. எனவே மக்களின் பசியை போக்க தலைமைகள் உணவு பங்கீட்டு முறைக்கு ஒத்துக் கொண்டது. இதன் வழியாக உணவு பொருள்கள் பதுக்கப் படுவது தடுக்க முடியும் என்று நம்பி செயலில் இறங்கியது.

அந்த சமயத்தில் இங்கிலாந்து 5 கோடி மக்களுக்கு தேவையான 70% இறைச்சி மற்றும் பாலடைக்கட்டி போன்றவைகள் வெளியில் இருந்ததுதான் வரவேண்டும்.
அரிசி, சக்கரை மற்றும் தேயிலை, காபி மற்றும் சில தானிய வகைகள் 100% இறக்குமதியே ! பார்லி, கோதுமை போன்ற சில தானியங்கள் 50% வரை இறக்குமதியே !
வாழைபழங்கள் கிடைக்கவே கிடைக்காது. மேலும் பல பழங்கள் அரிதாகின.
.
1917ல் முதன் முதலில் ரொட்டி (Bread) உணவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரேஷன் அட்டைகள் விநியோக்கிகப் பட்டன. பின் இறைச்சி விநியோக கட்டுப்பாட்டுக்குள் வந்தது. படிப்படியாக எல்லா அத்தியாவசிய பொருள்களும் இந்த விநியோக கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
இந்த முறையில் ஒருவருக்கு உணவு குறைவாக கிடைத்தாலும் உணவு உண்டு எனும் அளவில் உத்திரவாதம் கிடைத்தது. கடைகளில் வரிசைகள் குறைந்தன. தங்கள் முறை வரும் போது மட்டும் சென்று பெற்றுக் கொண்டனர்.

உங்களுக்கு தெரியுமா ? அந்த காலகட்டத்தில் மதிய உணவில் ஒருவன் இரண்டு முறை (Two Course) (நம்ம சாம்பார் சாதம், தயிர் சாதம்) என்று சாப்பிட்டால் அது குற்றமாக பாவிக்கப்பட்டது. இரவில் மூன்று முறை சாப்பிட்டால் அது குற்றமாக பாவிக்கப்பட்டு தண்டிக்கப் பட்டனர்.
மெழுகுவர்த்தியும், தீப்பெட்டியும் கூட ரேஷன் செய்யப்பட்டது.
இப்படி பல விஷயங்கள்.

போர் முடிந்த சிலகாலம் கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டு ரொட்டி போன்றவைகள் ரேஷனில் இருந்து நீக்கப்பட்டது.
இப்படியெல்லாம் தொடங்கிய உணவு கட்டுப்பாடு 30 களில் நேர்ந்த பொருளாதார (GREAT DEPRESSION)  வீழ்ச்சியையும் எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை. இதில் இருந்து மீள்வதற்குள் இரண்டாம் உலக போர் தொடங்கியது. 

முந்தைய போரின் அனுபவத்தால் உணவு கட்டுப்பாட்டை இந்த முறை முதலில் இருந்தே தீவிரமாக செயல்படுத்தி மக்கள் வெறுப்பின் விளிம்புக்கு போகாமல் அரசு பார்த்துக் கொண்டது. எரிபொருள் மற்றும் இறைச்சி வெண்ணெய், சக்கரை இப்படி பல பொருள்களும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விநியோகிக்கப் பட்டது.  எவ்வளவு திறமையாக விநியோகித்தாலும் பக்க விளைவான கருப்பு சந்தை தொடங்கியதை தடுக்க முடியவில்லை.

இந்த லட்சணத்தில் ஜெர்மானியர்கள் தங்களின் U Boat என்றும் நீர் முழுகி சாகசத்தால் சுத்தி நின்று அடிக்கிறார்கள். உணவு வரத்து பெரும்பாடானது.
ஒரு காலகட்டத்தில் சிலர் ஆராய்ச்சிக்கு வைத்திருந்த வெள்ளை  எலிகளை தின்ன தொடங்கினர். (நாம வழக்கமா செய்றதுதானே எனும் குரல் கேட்கிறது )

இந்த முறை ரொட்டி விநியோக பட்டியிலில் இருந்து தப்பியது. மீன் என்றும் இந்த பட்டியலில் வரவில்லை. எனவே மீன் கிடைத்தாலும் விலை கூடுதலானது. வெறும் பொறித்த மீன் மற்றும் உள்ளூர் விளைச்சலான உருளைகிழங்கு வறுவலை உப்பு போட்டு தின்றுவிட்டு போவார்கள். அன்று பிரபலம் அடைந்த பழக்கமோ என்னவோ இன்றும் இங்கிலாந்தின் அதிகம் உண்ணப்படும் உணவு இந்த பொறித்த மீனே..
துணி வகைக்கு கடும் வறட்சி நேர்ந்தது. அதுவும் ரேஷனில்.

இப்படி எல்லாவகை பொருள் தட்டுப்பாட்டுக்கும் நடுவே அரசு ஏழைகளின் உணவு வகைகளுக்கு மானியமும் வழங்கி அவர்களை பாதுகாத்தது.
ஒரு நபருக்கு ஒரு குழந்தைக்கு ஒரு முதியவர்களுக்கு என்று உணவு அளவீட்டு முறைகள் பின்பற்றப்பட்டன. 

வழக்கமான சந்தை பொருளாதாரத்தில் ஏற்படும் அத்தனை குளறுபடிகள் கயமைகள் இங்கும் நடந்தது. பதுக்கல், போலி ரேஷன் கார்டுகள், அரசின் மெத்தனம் போராட்டங்கள் என்றும் அரங்கேறியது.

அனால் பொதுவாக மக்கள் தாங்கள் தங்கள் நாட்டுக்காக இதை ஒரு தியாகமாக கருதி செய்ய முன் வந்தனர். சுயகட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு ஒரு சிறு குழுக்களாக இயங்கி ஒரு கடினமான கால கட்டத்தை தாண்ட உதவினர். அதற்கு சர்ச்சில் போன்ற மிகப் பெரிய ஆளுமைகளின் வழி நடத்தல் உதவியது. (சர்ச்சில் நமக்குதான் வில்லன். அவர்களுக்கு ஹீரோ!)

இது ஒரு குறுகிய கால சோதனை காலம். போர் முடிந்தவுடன் நிலைமை சரியாகும் என்று நம்பிக்கை விதைக்கப் பட்டது.

அந்த நம்பிக்கைகளை பாழாக்காமல் அரசியல்வாதிகளும் பதவி போட்டி இருந்தாலும் பெருமளவு நேர்மையாக நடந்து கொண்டனர்.
யுத்தம் முடிந்த பின் ஒரு 10 ஆண்டுகள் இந்த உணவு விநியோக கட்டுப்பாடு தொடர்ந்தது. ஒவ்வொரு பொருளாக இந்த கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. உள்ளூர் உற்பத்தியும், இறக்குமதியும் பெருக பெருக மக்கள் இந்த கட்டுப்பாடுகளை மறக்க தொடங்கினர்.
1954ல் கடைசியாக உணவு விநியோக கட்டுப்பாடுகள் முழுவதும் நீங்கின.

ரேஷனால் விளைந்த சில நன்மைகள் கீழ கண்டவை :

இந்த ஒரு 30 வருட காலகட்டத்தில் கட்டுப்பாடுகளின் காரணமாக பல விதத்தில் இங்கிலாந்து அரசியல், அறிவியல் பொருளாதார மாற்றங்களை கண்டது. அவசியத்தின் காரணமாக உணவுப் பொருள்களின் உபயோகம் மற்றும் பாதுகாப்பில் ஆராய்ச்சிகள் நடந்து மிகப் பெரிய முன்னேற்றம் கண்டது. பொருள்களை விநியோக்கிகும் முறைகளும் மாறின.
உணவு பழக்கம் மாறியது. உடுத்தும் உடைகள் மாறிப் போயின.
சோஷலிச கொள்கைகள் வலுப் பெற்றன. பகிந்தளிக்க வேண்டிய அவசியத்தை மக்கள் மனதில் ஆழமாக பதித்தன.

அரசியல் ரீதியாக போரில் நொடித்து போன இங்கிலாந்து மாறிவரும் சூழ்நிலையில் இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டை கட்டி ஆள பொருளாதார மற்றும் மனிதவள ஆற்றல் இன்றி வேறு வழியின்றி சுதந்திரம் தருகிறோம் என்று கை விட்டது. 

இதன் பின் இன்ன பிற நாடுகளும் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டன.

இவை சிறப்பான பக்க விளைவுகள்தானே..!

No comments: