Thursday, July 14, 2022

ரிஷி சுணக்

 

#ரிஷிசுணக்

நம் நாட்டு தொடர்புள்ள சரித்திர நிகழ்வுகள் நடக்கும் போது வழக்கப்படி நம்ம உள்ளூர் ஊடகங்கள் அதை கவனிக்க தவறி ஒரே சமயத்தில் 3 பேருடன் கள்ள தொடர்பு கொண்ட பேராசிரியை என்றோ.. அல்லது ஈஸிஆரில் எங்கு நல்ல பிரியாணி கிடைக்கும் என்றோ செய்தி சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இந்தியர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதியில்லை என்று சென்ற 1940 கள் வரை "பப்" களிலும் "கிளப்" களிலும் எழுதி வைத்திருந்த அதே இங்கிலாந்தில் இன்று ஒரு இந்திய வம்சாவழி நபர் அந்த நாட்டின் தலைமை பதவிக்கு போட்டியிடுகிறார்.  இவரே தான் கடந்த ஒன்றரை வருடமாக இந்த நாட்டின் நிதி மந்திரியாக பலரும் பாராட்டும் வகையில் பணியாற்றினார். அந்த நிதி மந்திரி நிலையை எட்டுவதை ஒரு 30 வருடம் முன்பு நினைத்தே பார்க்க இயலாது. அப்படி இருக்க இன்று அதையும் தாண்டி மேலே ஏற போட்டி போடுகிறார்.

எந்த இந்தியர்கள் பாராளுமன்ற ஜனநாயக அரசியலுக்கு தகுதியில்லாத காட்டுமிராண்டிகள் என்று திருவாளர். சர்ச்சில் பிரபு சொன்னாரோ அதே இங்கிலாந்தில் அதே சர்ச்சில் அமர்ந்து ஆண்ட பதவிக்கு ஒரு இந்திய வம்சா வழியினன் வெறும் 80 ஆண்டுகளில் போட்டியிடுகிறார்.

எப்பேற்பட்ட மாற்றம் இது!
எப்பேற்பட்ட வளர்ச்சியிது!!

இந்த நிலையை அடைய அந்த ரிஷிசுணக் மற்றும் அவரது குடும்பத்தினர் எப்படி திட்டமிட்டனர் உழைத்தனர் என்பதெல்லாம் பின்னாளில் அவர்களே புத்தகமாக எழுதலாம்.  அதைவிடுவோம்.

ஒரு பாமரனாக அதே நாட்டில் வேலை செய்தவனாக இதை நான் எப்படி பார்க்கிறேன்.? நிறவெறியின் மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கும் இந்த நாட்டில் குடியேறிய ஒரு இரண்டாம் தலைமுறை இந்திய வம்சா வழி இளைஞ்ரால் செய்யப்பட்ட ஒரு அசாத்தியமான சாதனை இது.

இத்தனைக்கும் இவர் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில்  ஒருவரான இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை. 

திருமணத்திற்கு முன்பே இவர் தன் சொந்த முயர்ச்சியில் பல கோடிகளை சேர்த்தவர். இவரின் தந்தை மற்றும் தாய் மருத்துவ தொழிலில் ஏற்கனவே நிறைய பணம் ஈட்டியவர்கள்.

பலருக்கும் தெரியாத விஷயம்.  இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இருக்கும் எம். பி. களில் மிகப் பெரிய பணக்காரர் இந்த ரிஷிசுணக் தான்.

ஆக நாம் சாதாரணமாக வெற்றியாளர் என்று பண அளவில் மதிப்பீடு செய்யும் விஷயங்களை இவர் எப்போதோ தாண்டி விட்டார்.

இந்த நிலையை அடைய இவர் தன்னிலையில் எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை. 

வெறும் கான்வென்ட் பள்ளியில் படித்தற்கே .. ஓ.. என் மகனா.. அவன் பெயர் Paddy.  பத்மநாபன் என்கிற பெயர் மிகவும் கர்நாடக இருக்கு..அவனோட தாத்தா பாட்டி ஆசைக்கு வைச்சோம்.  வாயில் நுழையமாறி Paddy ன்னு கூப்பிடுகிறோம்.. என்று சொல்லும் காலத்தில் இருந்து இன்னும் கீழே சென்று அர்த்தமேயில்லா விட்டாலும் மிஷ்கின் புஷ்கின் என்று அலையும் காலம் இது.   

அரசியலில் முன்னேற அவர் தன் மதத்தை நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்க வில்லை. இன்றும் இவர் தன்னை இந்து என்றுதான் சொல்லிக் கொள்கிறார்.

எந்த விதத்திலும் சலுகைகளின் அடிப்படையில் முன்னேற முனையவில்லை. தான் சிறுபான்மையினர் என்று அழுது அடம்பிடித்து பச்சாதாபம் தேட வில்லை.

அதே சமயம் நான் யார் தெரியுமா?  நீங்கள் ஏறி மிதித்த நாட்டை சேர்ந்தவன். எப்படி வந்திருக்கேன் பார்த்தீர்களா ?  என்றும் அறைகூவுல் விடும் விதத்திலும் நடக்கவில்லை.

நான் பத்திசாலி. படித்தவன். திறமைசாலி. இதுவரை என் சாதனை இது.

என்று முன்வைத்து கம்பீரமாக வழி விட சொல்கிறார்.

இன்றைய இளைஞர்களுக்கு இது தான் தேவை.

வெற்றியோ தோல்வியோ.. உன் திறமையை அறிவை முன்நிறுத்து. பாடுபடு. மரியாதை தானாக தேடி வரும். பிச்சை பாத்திரம் ஏந்தி பரிதாபம் தேடுவதை விடுத்து உன் திறமையை உன் சக்தியை விளம்பர படுத்தி வளம் சேருங்கள். சேர்த்த வளத்தை நல்ல படி செலவு செய்து அடுத்த நிலைக்கு முன்னேற முதலீடு செய்யுங்கள்.

 

இதைதான் திரு. மோடி மற்றும் பாஜக மத்தியில் செயல்படுத்துகிறது.

இந்தியாவின் ஏழ்மையை வியாபாரம் செய்யாமல் மனித வளத்தை அறிவு வளத்தை நெஞ்சு நிமிர்த்தி சொல்லி உலகை கவர்கிறார்.

அதனால்தான் அவரது அரசின் மீது உலக பார்வை படுகிறது. மதிப்பு உயர்கிறது. 

ஒரு வெற்றி எப்படி இருக்க வேண்டும்.? 

யார் நம்மை அடிமை படுத்தி கொள்ளையடித்து சூறையாடி நசுக்கினார்களோ அவர்களே நம் சக்தி உணர்ந்து, வரவேற்று மாலை சூடி மகிழ்ச்சியுடன் தலைவராக ஏற்றுக் கொள்ளுவதே நிரந்த வெற்றி.

இப்படி பட்ட வெற்றியை கல்வி, ஒழுக்கம் மற்றும் அறிவு கொண்டே பல தலைமுறைகள உழைத்தே அடைய முடியும்.

இந்த வெற்றியை போரினால் அல்லது குண்டு வைத்து ரத்த களரியாக்கி அடைய முடியாது. அப்படி அடையும் வெற்றி நிரந்தரமானதும் அல்ல.

சுடுகாட்டில் ராஜாவாக இருந்து என்ன பயன்.??

இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் ஒன்று ரிஷி சுணக் போன்றவர்கள் மேலேறி வந்தால் இந்தியர்களாக நாம் குளிர் காயலாம் என்று நினைக்காதீர்கள்.

அது நடக்காது.

ரிஷி போன்றவர்கள் தாம் சேர்ந்த இடத்திலும் செய்யும் செயல்களிலும் பாரபட்சமின்றியே இருப்பார்கள். அதனால்தான் அவர்கள் எங்கு சென்றாலும் உயர்கிறார்கள்.

அவர்களை பார்த்து நீங்கள் பெருமையடையுங்கள்.

அவர்களின் வழி என்ன என்று கண்டு அதன் படி உழையுங்கள்.

அவர்களிடம் சலுகைகள் கேட்காதீர்கள்.

ரிஷி.சுணக் இங்கிலாந்தின் பிரதமராக நாளை ஆகலாம்.

அது ஒரு இந்தியரின் வெற்றி அல்ல.

ஒரு இந்திய பாரம்பரியத்தில் வாழும் பிரிட்டானியரின் வெற்றி !!

வாழ்த்த தயாராக இருங்கள்.

ரவி சுந்தரம்

14/07/2022.

No comments: