கொட்டாவி விடாம படிங்க. :)
78ன் கடைசியில் எங்கள் வீட்டருகில் ஒரு
சம்பவம்.
என் நண்பனின் வீட்டுக்கு மேல் வீட்டில் என் தந்தையின் நண்பர் (ஒரு வக்கீல்)
தன் வயதான தாய், மனைவி மற்றும் மகனுடன் இருந்தார்.
ஒரு மதியம் அந்த வக்கீல் அலுவலகம் சென்ற சமயத்தில் இது நிகழ்ந்தது.
எங்களுக்கு விடுமுறையாதலால் நாங்கள் ஒரு 5 பேர் பக்கத்தில் தெருமுனையில்
உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தோம்.
திடிரென்று "ஐயோ..அவனை புடிங்க..வனை புடிங்க" என்று அந்த வக்கீல்
இருக்கும் வீட்டில் இருந்து வந்தது. நாங்கள் ஓடி சென்று பார்க்கும் போது ஒரு நபர்
கையில் பையுடன் மாடி படி இறங்கி எங்களை தாண்டி ஓடினான்.
பால்கனியில் இருந்து கத்தி கொண்டிருந்த கிழவின் தலையில் இருந்து ரத்தம்
கொட்டிக் கொண்டிருந்தது. அதே சமயம் பக்கத்து பில்டிங் மாடியில் குடியிருந்த
பெண்மணி ஓடி வந்தார்.
ஒரே குழப்பம். புடிங்க...புடிங்க என்று எங்களை தாண்டி ஓடியவனை கை
காட்டினார்.
நாங்க ஓடி போய் சிறிது தூரத்தில் அவனை பிடித்து இழுத்து வந்தோம். ஒரு 30 வயது
மதிக்க தக்க ஆளு முன்னுக்கு பின்னே உளறினான். அவன் பையை சோதித்த போது பேப்பரில்
அழகாக இரண்டு மூன்று தடவை சுருட்டப் பட்டு ஒரு இரும்பு குழாய் இருந்தது. அதில்
ரத்த கரையும் இருந்தது.
அவனை பக்கத்தில் கம்பத்தில் கட்டி போலிசுக்கு சொல்லிவிட்டோம். யாரும் அவனை
பெரிதும் தாக்காமல் பார்த்து கொண்டோம். அப்பவும் பக்கத்து குடிசை மாற்று பகுதியில்
இருந்து வந்தவர்கள் அவனை கடுமையாக தாக்க முற்பட்டனர். அவர்களிடம் இருந்து அவனை
காப்பாற்றுவதே பெரும் பாடாக இருந்தது.
இரண்டு காவலர்கள் சைக்கிளில் வந்தனர். அப்போது அந்த பகுதி விருகம்பாக்கம்
காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் அந்த காவல்நிலையம் செங்கல்பட்டு கிழக்கு
சரகத்தில் வந்தது. அடிபட்டது ஒரு வக்கீல் அதுவும் சிபிஐ அலுவலகத்தை சேர்ந்தவர்
என்று கூறிய பிறகுதான் வேகமாக வந்தனர்.
வந்த காவலர்கள் அசுவாரசியமாக அவனை அழைத்து சென்றனர்.முறையாக புகார்
கொடுத்ததும் எங்களையெல்லாம் சாட்சியாக கையெழுத்து வாங்கி சென்றனர்.
அடிபட்ட பெண்மணியை அதற்குள் முதலுதவி செய்து மருத்துவ மனைக்கு அழைத்து
சென்றோம். தாமதமாக காவலர்கள்..ஏம்பா..அடிபட்ட அம்மா எங்கே...அதுக்குள்ள எப்படி
ஆஸ்பத்திரிக்கு கூட்டி கிட்டு போனீங்க ன்னு சும்மா உதார் விட்டுவிட்டு போனார்கள்.
அந்த பெண்மணி உடைந்த மண்டை சரியாக 5 மாதத்திற்கு மேல் ஆனது. அது தனி கதை.
குற்றவாளி கைது செய்யப்பட்ட அன்றே ஜாமீனில் வெளி வந்தான் என்று பிறகு தெரிந்து
கொண்டோம்.
ஆனால் விஷயம் இனிமேல்தான் இருக்கு.
சுமார் 9 மாதம் கழித்து பூந்தமல்லி கோர்ட்டுக்கு
வழக்கு வந்து பல வாய்தாகளுக்கு பிறகு 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு சாட்சிகளை
விசாரிக்க எங்கள் முறை வந்தது. அன்றுதான் ஒரு செஷன்ஸ் கோர்ட் நடக்கும் விதம்
கண்டேன்.
சுஜாதா கதையெல்லாம் படித்து வக்கீல்களை பற்றி இருந்த பெரிய மரியாதையெல்லாம்
தவிடு பொடி !
ஒற்றை வரி.....கேவலம்!
பேரு விவரமெல்லாம் கெட்ட பிறகு ...
நீங்க அந்தம்மாவுக்கு என்ன உறவு?
உறவு இல்லீங்க...தெரிஞ்சவங்க..
எப்படி தெரிஞ்ச்சவங்க !
அட...இது என்ன கேள்வி? என் நண்பன் வீட்டு மாடியில்
இருப்பவர்கள். என் தந்தையின் நண்பரின் அம்மா என்ற அளவில் ....
நீங்க அந்தம்மாவை அடிச்சத பார்த்தீங்களா ?
இல்லை. ஆனால் இவர் அந்த வீட்டில் இருந்து ஓடியதை பார்த்தோம்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க தம்பி..என்றார் அந்த அழுக்கு கோட்டு
போட்டு பல்லு குத்தி கொண்டிருந்த நாத்தம் புடிச்ச வக்கீல்..
அப்பறம் என்ன நடந்தது. என்றார்.
விவரமா சொன்னோம்.
சரி..இப்ப நான் நடந்தது என்ன என்று சொல்லட்டுமா ?
அந்தம்மா கத்தின உடனே நீங்க ஓடி ரோடில் வெறுமனே நடந்து கொண்டிருத்த இந்த
ஆளை புடிச்சு கட்டி வைச்சு அடிச்சிருக்கீங்க....சரியா...
இல்லைங்க...அவரு அந்த வீட்டில் இருந்து ஓடியதை பார்த்து துரத்தி.....
ஸ்ஸ்ஸ் ..ஆமாம். இல்லை...என்றுதான் சொல்லணும். கேட்ட கேள்விக்குதான் பதில்
சொல்லணும் என்று இடைமறித்து கடுப்படித்தார்.
மேலே சொல்ல விடாமல் துரத்தி விட்டார்.
உணவு வேளைக்கு பிறகு வந்த கேஸ் என்பதால் பப்ளிக் பிராசிக்யுடர்...தூங்கி
வழிந்து கொண்டிருந்தார்.
வெளியே வந்தவுடன்..போலீஸ்காரர்..காவி பல் தெரிய சிரித்து கொண்டே..சிகரெட்
இருக்கா என்று கேட்டு....இதெல்லாம் நிக்காது தம்பி என்றார்.
வெறுப்பாக இருந்தது..
அடிபட்ட அந்த வயதான தாயை கூண்டில் ஏற்றினர்.
வழக்கமான அறிமுக கேள்விகளுக்கு பிறகு
என்ன நடந்ததும்மா? என்றால் கடைசியாக
இந்த ஆள் கதவை தட்டி ஏதோ பேரை சொல்லி அவர் இருக்கிறாரா என்று கேட்டார்.
நான் இல்லை என்றேன்.
சரி..கொஞ்சம் தண்ணி கொடுங்கள். தாகமா இருக்கு என்றார்.
சரி..இருங்கள் என்று சொல்லி திரும்பி சமையல் அறைக்கு சென்று தண்ணி எடுத்து
திரும்ப பார்த்தேன். அப்போதுதான் இவர் பின்னாலேயே வந்து என் கழுத்தை என் வீட்டில்
கிடந்த துணியாலேயே வைத்து இறுக்க முனைந்தார்.
நான் போராடினேன்.
அந்த சமயத்தில் இந்த போராட்டத்தை பின் வீட்டு ஜன்னலில் இருந்த பெண்மணி
பார்த்து சப்தம் போடா இந்த ஆள் தன் கையிலிருந்து ஏதோ கொண்டு என் தலையில்
அடித்தார்.
எத்தனை முறை அடித்தார்? கேள்வி..
4 அல்லது 5 முறை ..
4 ஆ..அல்லது 5 ஆ...
நினைவில்லை..ஆனால் ரத்தம் என் சேலையில் விழுவதை பார்த்தேன். நான் தடுமாறி
விழப்போனேன்.
அதற்குள் அந்த ஆள் ஓடி போய் என் வீட்டு கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு
ஓடி விட்டார்.
அருகிலேயே பால்கனி இருந்ததால் நான் பால்கனியில் வந்து சத்தம் போட்டேன்...
என்று விவரித்தார்.
அந்த வக்கீல் இன்னும் சில அபத்த கேள்விகளை கேட்டு ஒற்றை வரியில் பதில்
சொல்ல வற்புறுத்தி வெறுப்பேற்றினார்.
இதில் எதிலுமே சம்பந்த மில்லாத மாதிரி
அந்த வட்டார மாஜிஸ்டிரேட் பாதிநேரம் உண்ட மயக்கத்தில் இருந்தார். அடிக்கடி
தலையை சொரிந்து கொண்டு தூங்கி வழிந்தார்.
எல்லாம் மெதுவாக அசுவாரசியமாக கடனே எழவே என்று நடந்தது. குற்றவாளியும்
ஊருக்கு அடுத்த பஸ் எப்போ என்று கடிகாரத்தை பார்த்து கொண்டிருந்தார்.
வெய்யிலும், தூசும், எங்கும் அப்பி கிடந்தன..சாயம் போன
சிவப்பு துணி அந்த நீதிபதி மேஜையை சுற்றி போர்த்த பட்டிருந்தது. நீதிபதியின்
பின்புறம் காரை போன சுவற்றில் காந்தி சோகமாக சிரித்தார்.
நல்லவேளை...அப்போது மொபைல் இல்லை. இருந்திருந்தால் எல்லோரும் அதை நோண்டி
கொண்டிருப்பார்கள்.
கடைசியில் அந்த வயதான தாயின் முன் அந்த வக்கீல் ஒரு எதிர் வாதம் வைத்தார்.
அதுதான் இந்த வழக்கு எப்படி போகுதுன்னு எங்களுக்கு புரியவைத்தது.
இதை பாருங்கம்மா...நீங்க சொன்னதெல்லாம் பொய்!
இந்த ஆள் உங்க வீட்டில் கிழே வந்து வெய்யிலுக்கு இளைப்பாற உட்கார்ந்து
கொண்டிருந்தார். பிறகு உங்களிடம் தண்ணி கேட்டார். அவர்
உங்க ஜாதி இல்லை மற்றும் தாழ்ந்த சாதி என்பதால் நீங்கள் அவரை எழுந்து போகும்படி
விரட்டினீர்கள். மேலும் ஜாதி சொல்லி திட்டி விரட்டினீர்கள்.
அவர் மறுக்கவே...நீங்களும் உங்க ஆள்களும் அவரை கம்பத்தில் கட்டி வைத்து
அடித்து துன்புறுத்தினீர்கள் என்று சொல்கிறேன். பிறகு பொய்யான குற்றம் சொல்லி
காவலரிடம் ஒப்படைத்தனர் என்கிறேன்.. இதுதான் நடந்தது என்றார்.
இதை கேட்டு ஒரே நொடியில் ச்சே...என்று ஆகிவிட்டது.
இந்த முட்டாள் வக்கீலின் வாதத்தில் எத்தனை ஓட்டைகள் பாருங்கள்.
அடிபட்ட அந்த வயதான அம்மாவுக்கு குற்றவாளியின் ஜாதி எப்படி தெரியும்.?
அந்த அம்மா தலையில் அவரே அடித்து கொண்டாரா?
அடுத்த வீட்டு ஜன்னலில் (10 அடி தூரம்) இருந்து பார்த்த அந்த
பெண்மணி குருடா?
அந்த வீட்டில் இருந்து ஓடியதை பார்ந்த நாங்கள் 5 பெரும்
குருடா?
அந்த குற்றவாளியின் கையில் இருந்த ஆயுதத்தில் இருந்த ரத்தம் பொய்யா?
எத்தனை சாட்சிகள்?...எத்தனை ஆதாரங்கள்?
எல்லாவற்றையும் ஜாதி என்கிற இல்லாத ஒற்றை பொய் குற்றசாட்டில் கடக்க முயன்ற
அந்த வக்கீலின் கயமை முகத்தில் அறைந்தார் போன்று வாயடைக்க வைத்தது. இந்த
பார்வையில் வழக்கில் எதிர்ப்பார்கள் என்று நினைத்தே பார்க்க வில்லை. உறைந்து
போனோம்.
இந்த குற்றசாட்டுக்கு ஒரே ஒரு காரணம்தான்.
அந்த வயதான பெண்மணி ஒரு அய்யர் வீட்டு பெண்மணி.
இன்றுவரை அந்த குற்றவாளி என்ன ஜாதி என்று கேட்க தோன்றவில்லை.
எல்லாவற்றையும் விட கொடுமை..நாங்கள் வெளியே வந்த போது ஜாமீனில் இருந்த குற்றவாளியின்
கூட வந்தவங்க கான்ஸ்டபிளுடன் சிரித்து கொண்டே...“என்ன கொலையா செஞ்சுட்டாங்க....ரெண்டு
தட்டு அதான்
புடிச்சீங்க..அடிச்சீங்க..விட்டுட்டு போக வேண்டியதானே.....இதுகேன்னவோ..இத்தனை பேர்
வந்த சாட்சி சொல்லி அலைகழிச்சு”..... என்று சத்தமாக சொன்ன போது பி.பி.யும்
சிரித்தார். வெறுப்பின் உச்சத்திற்கே சென்றோம்.
அன்று கொஞ்சம் மாற்றி நடந்திருந்தால் அந்த கிழவியும் இறந்திருக்கும்.
நாங்கள் தடுக்காவிட்டால் குற்றவாளியை அடித்தே கொன்றிருப்பார்கள். இதை யாருமே
நினைக்கவில்லை.
வழக்கின் தீர்ப்பு என்ன என்றுதானே கேட்கிறீர்கள்.??
அதற்கு அப்புறம் நாலுமுறை கோர்ட்டுக்கு அந்த பி.பி. ஏதேதோ
(காரணம்....மச்சினிக்கு உடம்பு சரியில்லை என்பது போன்ற) அபத்த காரணங்கள் சொல்லி வர
வில்லை. இத்தனைக்கும பாதிக்கப்பட்டவர் ஒரு நேர்மையான சிபிஐ பப்ளிக்
பிராசிகியுட்டர். ஆனால் அவராலும் ஒன்று செய்ய முடியவில்லை.
பொறுக்க முடியாமல் நீங்க ஏன் சார்..ஒன்னும் பண்ணல என்று கேட்டேன்.
அவர் சொன்னார்...உள்ளூர் பி.பி. ஒவ்வொரு முறையும் காசு
எதிர்ப்பார்க்கிறார். அம்மாவின் தலை காயத்திற்கு செலவு செய்ததே அதிகம். இதில்
ஒவ்வொரு முறை கோர்ட்டுக்கு கேஸ் வரும் போதும் அங்கு வரும் இன்ஸ்பெக்டர் அல்லது
கான்ஸ்டபிள் முதல் பி.பி. வரை கோர்ட்டு கிளார்க் முதல் எல்லோருக்கும் காசு அழ
வேண்டியிருக்கு.
அதான் அலுத்து போய். நமக்கு வேலை இருக்கு...அதுக்கு அலைவாமா இவிணுங்க
பின்னாடி சுத்துவோமான்னு ...நாசமா போ..என்று விட்டுவிட்டேன். என்றார்.
.
முதல் கோர்டிலேயே சோர்ந்து போன ஆட்கள் மேல் முறையீடா செய்யப் போகிறார்கள்
என்கிற தைரியத்தில் சரியான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.
அதற்கு அந்த ஆளிடம் காசு வாங்கப்பட்டது என்றும் சொன்னார்கள்.
மேலே சொன்ன வழக்கு...ஒரு சின்ன உதாரணமே...
நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் ஆயுதம் போன்ற உறுதியான சாட்சிகளுடன் கூடிய
ஒரு சாதாரண வழக்கிலேயே இந்தியாவில் ஜாதியும் மதமும் எப்படி வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம் உபயோகப் படுத்தப் பட்டது என்று புரிந்த நாள் அன்று.
அப்போவே ..அப்படி!!!!
இப்ப.... :(
நன்றி
ரவி சுந்தரம்.
No comments:
Post a Comment