Thursday, January 10, 2019

கோவில் ஒழுக்கம் !


#கோவில்_ஒழுக்கம்.
#temple_dicipline

எச்சரிக்கை :- பெரிய பதிவு !

இன்றைய முக்கால்வாசி இளம் பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பு என்பது பற்றி ஒரு மண்ணும் தெரியவில்லை.
குழந்தைகளின் இஷ்டத்துகெல்லாம் ஆடினால் சிறப்பான பெற்றோர்கள் என்று நினைக்கிறார்கள். இது அந்த குழந்தையின் எதிர்காலத்துக்கு வெடி வைக்கும செயல் என்று தெரிவதில்லை.

குழந்தை வளர்ப்பு என்பது கடல் போன்றது என்றாலும் நேற்று நடந்த ஒரு விஷயத்தை பார்ப்போம்.

நேற்று மார்கழி மாதத்தின் முதல் நாள் !
ஆண்டாள் பாசுரம் பாடி எம்பெருமாளை பள்ளியேழுப்பி தரிசனம் செய்ய மனைவியுடன் சென்றேன்.

அமைதியான காலை நேரம் பக்தி மிக்க ஒரு சிறு கூட்டம் இந்த அடாத குளிரிலும் குளித்து முடித்து கோவிலில் சரியான நேரத்துக்கு ஆஜர்.


திருப்பாவையை பாட ஆரம்பித்து ஒரு 5 பாசுரங்கள் தாண்டியிருக்காது. ஒரு இளம் தம்பதியினர் தங்களின் 4 வயது குழந்தை மற்றும் ஒரு வயது குழந்தையுடன் அவசர அவசரமாக வந்து கூட்டத்தில் அமர்ந்தனர். உடனே புத்தகத்தை திறந்து கொண்டு படிக்க தொடங்கினர்.


அப்போதுதான் பிரச்சனை கிளம்பியது. அந்த இளம் தாயார் குழந்தைகளை கீழே இறக்கி விட்டு மறந்து விட்டார். பெரிய கோவில். பளிங்கு தரை.. குழந்தைகள் ஓடி விளையாட ஆரம்பித்தன. ஒரே சத்தம். வீல் ..வீல்..என்று அந்த குழந்தை . அங்கும் இங்கும் ஓடி கையில் கண்டதையெல்லாம் உருட்ட தொடங்கியது.
அது Fire Extinguisher ஒ..அல்லது இரும்பு Chair ஒ...எல்லாவற்றையும் இழுத்தது.
குழந்தைக்கு என்ன தெரியும் பக்க விளைவுகள் ?


பாடிக் கொண்டிருந்தவர்களின் கவனம் கலைந்தது. பெரும்பாலோர் நெளிய ஆரம்பித்தனர். ஆச்சரியம் என்னவென்றால் அந்த பெற்றோர் கவலையே படவில்லை. யார் வீட்டு குழந்தையோ என்று இவர்கள் தலையை குனிந்து கொண்டு சாமி கும்பிடுகிரார்களாம் !!


பிறகு என் மனைவி அந்த இளம் தாயை ஒரு பார்வை பார்த்த பிறகு அந்த பெண் எழுந்து போனாள். அப்போதும் அவர் குழநதைகளின் கவனத்தை திருப்பவோ அமைதி படுத்தவோ முயலவில்லை. மறுபடியும் மறுபடியும் பின்னாடியே போய் கொண்டிருந்தார். இத்தனை கூத்துகளுக்கு நடுவே அந்த இளம் தந்தை கவலையே படாமால் உட்கார்ந்திருந்தார். அந்த இளம்தாயோ தம் குழந்தைகள் செய்வதை எல்லோரும் ரசிப்பதாக நினைத்து பெரும் சிரிப்புடன் மகிழ்ந்திருந்தார்.

நாங்களும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக பாசுரங்களை பாடி முடித்தோம்.

பிறகு பூசைகள் முடிந்தவுடன் நான் அந்த இளம் தந்தையை அணுகி என் எண்ணங்களை கொட்டி விட்டேன்.
கோவிலுக்கு வந்தால் கொஞ்சம் குழந்தைகளுக்கு பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
கோவில் உங்களுக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் சொந்தம்.
வீட்டில் கூச்சலிட்டு ஓடி விளையாடுவதை போல் கோவில் ஒரு விளையாட்டு திடல் அல்ல. இது அமைதியாக கடவுளை நாடும் இடம். மற்றவர்களின் அமைதியை கெடுக்க உங்களுக்கு உரிமை இல்லை.
இதே போல் ஒரு சினிமா தியேட்டரில் உங்கள் குழந்தைகளை சத்தமாக ஓடியாட விடுவீர்களா? 
தியேட்டர்காரன் புடிச்சு வெளியேத்திடுவான்.
அதை விடுங்கக்...வீட்டில் தமிழ் சீரியல் அல்லது கிரிகெட் மேட்ச் பார்க்கும் போது குறுக்கும் நெடுக்கும் ஓடி சத்தம் போட்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?  கோவில் என்றால் என்ன இளக்காரமா ?

அந்த இளம் தந்தைக்கு வருத்தமாக கூட இருக்கும். ஆனால் நான் சொன்னதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

நடுவில் ஒருத்தர் வந்து சொன்னார்.
சார்........குழந்தையும் தெய்வமும் ஒன்னு சார்.....அட்ஜஸ் பண்ணி போங்க...

எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை!!

நான் கேட்டேன் :- அப்ப...ஏன் சார்...கோவிலுக்கு வர்றீங்க?? .குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே!!  ..அப்ப உங்க வீட்டில் உங்க குழந்தைகள் முன்னாடி பாசுரம் பாடி கொள்ளுங்களேன்..

அவர் அதை ரசிக்கவில்லை என்று தெரிந்தது.

உண்மையில் குழந்தையும் தெய்வமும் ஒன்றுதான். ஆகவே குழந்தைகள் வைத்திருப்போர் ஒரு பருவம் வரை குழந்தைகளை கவனமாக வளருங்கள். தெய்வம் உங்கள் பின்னால் தானே வரும்.
ஆனால் நீங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் அடுத்தவன் அமைதியை கெடுப்பது ஏன்?

இன்னும் சிலர் கோவில் வந்து குழந்தைகளை வைத்துக் கொண்டு சாமிக்கு முதுகை காட்டிக் கொண்டு செல்பி எடுப்பது !!
என்ன கருமமோ ? 

நான் கண்ட வரையில் இந்த கூத்துகளெல்லாம் இந்த “நியோ ரிச்” ஆனா இளம் மென்பொறியாளர்களிடையே மிக அதிகம். இரண்டு லைன் கோடிங் எழுத தெரிந்தால் எல்லாம் அறிந்தோம் எனும் மிதப்பு. .
இளம் பெற்றோகளிலும் இளம் தாய்மார்கள் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது.


கோவிலை நாம் பெரும் முக்கியம் வாய்ந்ததாக கருதுவதில்லை.
இது மற்ற மதங்களில் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை.
நாம்தான் கோவிலில் குப்பை போடுவோம். வரிசையில் நிற்க மறுப்போம். கோவிலில் நடப்பவற்றுக்கு காசு கொடுப்பதுடன் நம் கடமை முடிந்தது என்று சென்று விடுவோம். இலவச சேவை செய்ய வரமாட்டோம்.  இத்தனையும் செய்துவிட்டு நாம் பக்திமான்கள் என்று பிதற்றி பெருமை கொள்வோம். இன்னும் நிறைய சொல்லலாம். படிக்கத்தான் நேரம் நமக்கிருக்காது.

ஒரு சிம்பொனி நடக்கும் இடமோ, ஒரு நாடகம் நடக்கும் இடமோ கூட அமைதியை கோருகிறது. ஆனால் இறைவனை ஒரு பெரும் இரைச்சல் கூச்சலுக்கிடையே எப்படி தேடுவது?  இசையில் இறைவனை நாடலாம். இரைச்சலில் இறைவனை எங்கனம் தேடுவது ?

சிந்திக்க மறுக்கும் மனமே இரைச்சலை நாடும்.

புரிந்தவர்கள் புண்ணியவான்கள் !
நன்றி.
ரவி சுந்தரம்.

பி.கு:- நான் மேலே சொன்னது பெரும்பான்மையான தறுதலை பெற்றோரை பற்றியே !! எல்லா நல்ல குணங்களுடன் சமுகத்தின் நலம் சார்ந்து நடந்து குழந்தைகளை வளர்க்கும் இளம் பெற்றோரை பற்றி அல்ல. அவர்களுக்கு என் வந்தனங்கள்.

Ravi sundaram
#Temple_dicipline


No comments: