Tuesday, October 09, 2012


பல பொருள் வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தேவையா?




இது சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்ளும் வேலை. 

நான் பிரித்தானியாவில் சுமார் 12 ஆண்டுகளாக வாழும் ஒரு தமிழன். 
நான் இவர்கள் கூறும்  TESCO வில் சுமார் 5 ஆண்டுகள் அதிகாரியாக வேலை செய்தவன். தொடர்ந்து இங்கிலாந்தின் கிராமங்களில் வாழ்பவன். நான் லண்டனில் வசிப்பவன் அல்ல
எனவே இந்த பெரிய பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் இங்கிருக்கும் கிராம பொருளாதாரத்தை எப்படி சிதைத்து தம் கைகளில் வைத்துக்கொண்டுள்ளன என்று எமக்கு நன்றாகவே தெரியும். 
இத்தனைக்கும் இங்கு கிராமப்புறங்களில் ஓரளவுக்கு வளமான குடும்பத்தினரே வாழ முடியும். காரணம் இங்கிருக்கும் சூஷ்நிலை அப்படி..  இந்நிலையில் நம் கிராமங்களை போன்று ஏழ்மை சூஷ்ந்த பகுதிகள் என்ன ஆகும்.?

அந்நிய முதலீட்டை பல் பொருள் அங்காடியில் நுழையவிட்டால் என்ன ஆகும்? 
முதலில் கிடைக்க போவதாக  கூறப்படும் நன்மையை பார்ப்போம்:

1. தரம் உயரும்? - தரமான பொருள்களை வாங்க மக்கள் தயாராக இருப்பின் நாமே அதை தரலாமே!
 2. இடை தரகர் ஒழிக்கப்படுவார்.  உண்மை. ஆனால அவரது லாபமும் அங்காடி முதலாளிகளுக்கே செல்லும். உற்பத்தியாளருக்கு அல்ல. 
3. பகேஜிங் மற்றும் இது தொடர்பான தொழில்களில் மிகப்பெரிய முன்னேற்றம் பெருகும். உண்மை. ஆனால் அதன் விலை யார் தலையில் விழும்? மேலும் அந்த முயற்சியை இன்று நம்மவரே செய்ய தொடங்கிவிட்டனரே? இவர்கள் எதற்கு.?  ஒரு உதாரணம் "சிக்" மற்றும் "வெல்வெட்" ஷாம்பூ பொருள்கள். இன்னொரு உதாரணம்.  "ஹட்சின்சன்" பால் பொருள்கள்.
 4.வேலை வாய்ப்பு பெருகும்.  இது முட்டாள் தனமான வாதம். காரணம் இன்று எந்த பலசருக்கு கடையிலும் தவறாமல் காணப்படும் ஒரு பலகை. "வேலைக்கு ஆட்கள் தேவை" என்பதுதான். ஆப்படி இருக்கு இவர்கள் யாருக்கு வேலை கொடுக்க போகிறார்கள்.?  

பாதகங்கள் யாவை: ?
1. கொள்முதலில் முதலில் ஓரளவு லாபம் பார்த்த உற்பத்தியாளர்கள் சிறிது காலத்திற்கு பின் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் செல்லும் விலைக்குத்தான் கொடுக்க வேண்டும். காரணம் சந்தையில் போட்டி மிக குறைவாக இருக்கும். இதற்கான காரணம் சிறு கடைகள் இந்த திமிங்கிலங்களுடன் போட்டி போடா இயலாமல் நஷ்டப்பட்டு மூடப்படும். 
2.  மிக பெரிய கொள்முதல் என்பதால் சிறு விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஒதுக்கபடுவார்கள் அல்லது அவர்களின் நிறுவனமும் பெரிய விவசாயிகளால் அல்லது உற்பத்தியாளர்களால் விழுங்கப்படுவார்கள். மேலை நாடுகளில் இன்று சிறு விவசாயிகளே இல்லை என்று கூறலாம். 
3  சிறுவிவசாயிகள் இன்று சொந்தமாக தொழில் செய்கிறார்கள். ஆனால் இவர்களின் தொழில் மேலே சொன்னது போன்று பாதிக்கப்படும் பொது ஒன்று இவர்கள் பெரும் பண்ணையார்களிடம் விவசாய கூலிகளாக செல்வார்கள். அல்லது நகரத்தை நோக்கி நகர்வார்கள். இது இவர்களுக்கும் நல்லதில்லை. நகரத்திற்கும் நல்லதில்லை. 
4. கிராமங்கள் அழியும்போது அதன் கூட நம் கலாச்சாரமும் அழியும். நம் வாரச் சந்தை வழக்கம் அழியும்.நம் நாட்டுப்புற கலைகள் அழியும். நமது தொன்று தொட்டு வரும் கைத்தொழில்கள் மறையும். நம் குடும்ப உறவுகள் பாழ்படும்..  

இப்போதே நகரங்களின் குடும்பங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். எல்லாவற்றிக்கும் இந்த பெரு நகர வர்த்தக நிறுவனங்களையே நாம் சார்ந்திருபோம். அவர்கள் தம் லாபத்திற்காக சீனா போன்ற மலிவான பொருள்கள் கிடைக்கும் இடத்தை நம்பி இருப்பார்கள். 

உள்ளூர் திறமைகள் அழிந்து போகும். 

மேலே சொன்னவை பயமுறுத்துவது போல் இருக்கலாம். ஆனால் அவைதான் இன்று இங்கு இங்கிலாந்து கிராமப்புற மக்கள் இழந்துவிட்டதாக வருந்துகின்றனர். 
உதாரணமாக பால் உற்பத்தியை எடுத்துக்கொள்வோம்.
முன்பு அந்தாந்த கிராமங்களில் பால் உற்பத்தி செய்யப்பட்டு அவர்களின் பயன்பாட்டுக்கு உடன் கொண்டு வரப்பட்டதால் அங்கு சிறு பால்பண்ணைகள் நடைபெற்றுவந்தன. 
இவர்கள் தரத்தில் எந்த குறையும் இல்லை. பெகேகிங் முறையிலும் நவீனமே. பின் எப்படி இவை அழிந்தன.?  முதலில் இவர்களின் மொத்த உற்பத்தியும் இந்த பெரு நிறுவனங்கள் நல்ல விலைக்கு எடுத்துக்கொள்வதாக ஒபந்தம் இட்டு கொண்டன. பால் பண்ணை உரிமையாளருக்கு மிகவும் மகிழ்ச்சி. காரணம் இவர் இனி வீடு வீடாக சென்று பால் போடும் வேலை மற்றும் செலவு மிச்சம் அல்லவா.? லாபம் லாபம் ..லாபம் மட்டுமே.  

அதே நேரத்தில் இந்த கிராமத்தின் வெளியே ஒரு பெரிய இடத்தில் இந்த வர்த்தக நிறுவனம் தம் கிளையை துவங்குகிறது. எல்லோருக்கும் மகிழ்ச்சி..ஆஹா ..மலிவான விலையில் எல்லா பொருள்களும். வேறென்ன வேண்டும்.? கூடம் அலை மோதுகிறது. சுற்றியிருக்கும் சுமார் ௩௦ கிராமங்களின் மக்களும் இங்கேதான்!. 
திருவிழாதான்.!!

ஒரு வருடத்தில் சுற்றியிருக்கும் 30  க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்த சிறு சிறு கடைகள் வாடிக்கையாளர் இன்றி மூடப்படுகின்றன. இறைச்சி கடைகள் மூடப்பட்டு அதில் வேலை செய்யும் திறமையான 
முதலாளி இந்த பெரிய வர்த்தகத்தில் இறைச்சி பகுதியில் வேலை செய்ய வருகிறார். வேறு வழி. ? 
வாரச் சந்தைகள் புதிய விளை  பொருள்களை விற்றது நின்று போய் பழய புத்தகங்கள் சிடிக்களையும் டிவிடிக்களையும் விற்க தொடங்கினர். 

சிறு பண்ணைகள் ஒருங்கிணைப்பு என்கிற மந்திரத்தில் பலர் வேலை இழக்கின்றனர். சிறு கடைகள் மூடப்பட்டு அதன் முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் வேறு இடம் பெயர்கின்றனர். எனவே கிராம மக்கள் தொகை பாதிக்கப்படுகிறது. கட்டுபடியாகவில்லை என்று உள்ளுருக்கு வரும் பேருந்து நிறுத்தப்படுகிறது. வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டு online - வங்கிகள் மட்டுமே இருக்கின்றன. கிராம ஜனத்தொகை மேலும் சுருங்குகிறது. கட்டுபடியாகவில்லை என கூறி தபால் ஆபிஸ் கூட மூடபடுகிறது. 

சிறு கடைகள் மூடப்பட்டதினால் பெரிய நிறுவனத்தில் மேலும் லாபம்.  மேலும் புதிய பகுதிகள்..மேலும் திருவிழா. !!
மக்களுக்கு சேவை செய்ய தாமே தபாலாபிஸ் திறப்பதாக பெரிய நிறுவனம் அறிவிப்பு.  !!!
(இது எப்படி இருக்கு!!...கழுத்தை அறுத்துவிட்டு நெத்தியில் போட்டு வைப்பார்களாம்!!)

ஆனால் இப்போது இந்த நிறுவனம் தமக்கு பொருள்கள் தரும் விவசாயிகளிடம் சில நிபந்தனையோடு வியாபாரம் செய்கின்றன. விலையை தாமே தீர்மானிக்கின்றன. விவசாயிகள் அல்லது பால் உற்பத்தியாளர் எவ்வளவு லாபம் அடையலாம் என்பதை தாமே தீர்மானிகின்றன. இடு பொருள் என்ன என்று தீர்மானிகின்றன. பகேகிங் எப்படி இருக்க வேண்டும் என்று கட்டயப்படுதுகின்றன. இல்லை என்றால் தமது பொருளாதார வலிமையினால் பொருள்களை மற்ற நாடுகள் (நுஜிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ) முலம் பெறுகின்றன. (இப்படி உலகளாவிய கொள்முதலினால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்பு இன்னொரு கொடுமை!)

 இப்போது இதை விவசாயிகள் எதிர்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வேறு வழில்லை. காரணம் மற்ற சிறு கடைகள் மற்றும் சந்தைகள் ஒழிந்துவிட்டனவே. ஆக, இவர்கள் ஒன்று தம் தொழிலை விடலாம். அல்லது இந்த நிறுவனம் சொல்லும் விலைக்கு விற்று வயிறு வளர்க்கலாம். 
இங்கிலாந்தில் சில வருடங்களுக்கு முன்பு பல இடங்களில் இந்த பெரிய நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பால் கொள்முதல் விலையை குறைத்து கொள்ளை அடிப்பதாகவும், அரசு தலையிட வேண்டும் என்றும் போராட்டமே  நடந்தது. நம் நாட்டில் அரசே கொள்ளை அடிப்பது வேறு விஷயம்.!!

சுற்றியிருக்கும்  கிராமங்களில் இருப்பவர்கள் பெருமளவு ஒன்று இந்த வர்த்தக நிறுவனத்திற்கு வேலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனத்திருக்கு வேலை செய்ய வேண்டும் என்கிற நிலைமை தோன்றிவிட்டது. 
இது ஒரு மோசமான கழுத்தை இறுக்கி பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்கி விட்டதை இன்று இந்த கிராமமக்கள் உணர தொடங்கி விட்டனர்.  ஆனால் இதிலிருந்து மீண்டு வர பெரிய சுய சார்பு இயக்கமே இவர்கள் நடத்த வேண்டியுள்ளது. நடத்தவும் தொடங்கிவிட்டனர். !!  அனால் என்ன கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.


இது ஒரு சின்ன உதாரணம்தான். இது போல் ஒவ்வொரு உற்பத்தியும் தொழிலும்  கார்போரேட் லாபத்திற்காக நசுக்கப்படும். 
மேற்றுமொரு உதாரணம் மன்செச்டேரில் நசிந்து போன காட்டன் மில்கள். இந்த விஷயத்தில் நாம் முன்பு பெருமளவு செய்த காட்டன் ஏற்றுமதியும் ஒரு காரணம்.!! இன்று மான்செஸ்டர் மற்றும் அதன் சுற்று புரத்தில்தான் அதிக பட்ச வேலைல்லதோர் இருக்கின்றனர். காட்டன் மில்களே கிடையாது. ரெடிமேட் துணிகள் அதிகம் உற்பத்தி செய்த லெஸ்டர் (LEICESTER) போன்ற நகரங்கள் அந்த தொழிலை பெருமளவு இழந்தன. (நன்றி இந்தியா மற்றும் சீனா!!)
இன்று அதே நிலைமை சீனாவின் ஏற்றுமதியால் நம் கோயம்பத்தூர் மற்றும் திருப்பூருக்கு ஏற்பட்டுள்ளது. 

இப்படியிருக்க சுய சார்புள்ள நாம் ஏன் அதை இழந்து அந்த சூழ்நிலைக்கு செல்ல வேண்டும்?
இவர்களை தள்ளியிருந்து பார்த்து நாம் கற்றுக்கொள்ள கூடாதா?
 இந்த கார்பொரேட் கம்பெனிகளுக்கு மென் பொருள் எழுதி 
அவர்களை இயக்குவதே நம்மவர்தானே. அப்படி இருக்க எப்படி இந்த தொழில் நமக்கு தெரியாமல் இருக்கும் அல்லது 
அவர்கள் நமக்கு என்ன புதிதாக கற்றுகொடுதுவிடப் போகிறார்கள்?

மூலதனத்துடன் வருபவன் சமுக சேவை செய்ய வரவில்லையே?
வெளியிலிருந்து மூலதனம் போட்டு வருபவன் நாம் கலாச்சாரத்தை பேணுவானா அல்லது தமது லாபத்தை பார்பானா.? 

கார்பொரேட் கலாச்சாரத்தால் இங்கிலாந்து இழந்த, நாம் நம் நாட்டில் இழந்துவரும் கைத்தொழில்கள். 
 மர வேலை. அல்லது தச்சு.
 மண்பாண்டம் செய்தல்
 நகை வேலை செய்யும் அசாரி
 சிறு விவசாயிகள்
பால் தயிர் வெண்ணை வியாபாரி 
தோல் பொருள்கள் செய்யும் தொழில்
சிறு தையல் கடைக்காரர்.
சிறு மளிகை கடைக்காரர். 
சிறு அரிசி மண்டி  
உள்ளூர் சிறு தொழில்கள் 

இப்படி இன்னும் பலர். 
இது தேவையா!!

நான் வாழ்ந்துவரும் ஒரு இங்கிலாந்து கிராமத்தின் கதையைத்தான் மேலே கூறினேன். 
இது பல அடிப்படை வசதிகள் முழுவதும் அமைந்த ஒரு கிராமத்தின் கதை என்றால் இது எதுவுமே இல்லாத நம் கிராமங்கள் என்ன ஆகும். சூறையாடப்படும்.