Thursday, August 04, 2016

பார்ப்பன வெறுப்பு - நியாயமா !!

எச்சரிக்கை: மிக நீண்ட பதிவு... 

என் நண்பர் சமிபத்தில் என்னை கேட்ட கேள்வி கொஞ்சம் சிந்திக்க வைத்தது. இதை முன்பே பலமுறை சிந்தித்ததுண்டு. 
தமிழ் சமுகத்தில் பிராமணர்கள் மட்டும் ஏன் இத்தனை வசைகளை வெறுப்பையும் சந்திக்கின்றனர்? உண்மையில் இந்த சமுகம் ஒட்டு மொத்தமாக இந்த வசைக்கு தகுதியானதுதானா? இவர்கள் மீது கற்பிக்கப் பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும கதைகளுக்கும் எத்தனை ஆதாரங்கள் உண்டு? இந்த தமிழ் சமுதாயத்தில் நல்லதாக எந்த வித பங்களிப்பையும் இந்த சமுகம் செய்யவே இல்லையா? மக்கள் தொகையில் (தமிழகத்தை பொறுத்தவரை) வெறும் இரண்டு சதவிகதமே உள்ள ஒரு ஜாதி எப்படி ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே வழி நடத்தியதாக அல்லது சீரழித்ததாக தொடர்ந்து சொல்லப் பட்டு வருகிறது.? அப்படியென்றால் மிச்சம் 98 சதவிகித மக்கள் சிந்திக்கவேயில்லையா ? 
திராவிட கட்சியினரோ அல்லது மற்றவரோ இதற்கு ஒற்றை வரியில் "அதுதான் பார்பன சூழ்ச்சி" என்று கடந்து போகலாம். அல்லது "பெரியாரை படி அவர் எல்லாத்துக்கும் பதில் சொல்லிவிட்டார்" என்று பெரியாரே முற்றிலும் முடிவாக ஒரு 3000 வருட சரித்திரத்தை முடக்கி போடலாம். அதுவும் இல்லையென்றால்..." நாங்கள் பார்பனரை சொல்லவில்லை. பார்ப்பனியத்தை தான் சொன்னோம்" என்று திமுக பாணியில் விலகி போகலாம். ஆனால் இது யாவும் சரியான பதில்கள் அல்ல. 
 பார்பன எதிர்ப்பில் பல கற்பிதங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒவ்வொன்றாக பார்ப்போம்.
 எதையும் சொல்வதற்கு முன் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். நாம் பேசப்போகும் தமிழகத்தின் இன்றைய மக்கள் தொகை 7 1/2 கோடி. ஆனால் சுமார் 1000 வருடங்கள் முன்பு இந்த தமிழகத்தின் மக்கள் தொகை 5 முதல் 10 லட்சம் இருந்தால் அதிகம். (1930 லேயே சென்னையின் மக்கள் தொகை வெறும் ஒரு லட்சம்தான்.) ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 30 முதல் 40 வீடுகளே இருக்கும். இதில் அனைத்து சாதியினரும் எல்லா பொருளாதார சிக்கல்களும் அடக்கம். இந்த பின்னணியில் நான் சொல்வதை பார்த்தால் நலம்.
 1960 முன்பு பார்பனர்கள் எல்லோரும் பெரும் நிலச்சுவான்தார்களாக இருந்தனர் என்னும் மாயை. (ஆண்டைகள்). இதற்கு அடிப்படை : சோழர்கள் காலத்திலேயே மன்னர்கள் பல கிராமங்களை அந்தணர்களுக்கு தானமாக கொடுத்தார்கள். சோழர்கள் காலத்திலாகட்டும் இன்றாகட்டும் அந்தணர்களின் சமுகம் 2 அல்லது 3 சதவிகிதத்திற்கு மேல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் எனில் மக்கள் தொகையில் அந்தணர்கள் மட்டும் பெரும் அழிவிற்கு ஆளானதாக சரித்திரம் இல்லை. எல்லோருக்கும் நடந்ததே இவர்களுக்கும் நடந்து வந்துள்ளது.
 "சதுர்வேதி மங்கலங்கள் இறையிலி நிலங்கள் கூட ஒட்டுமொத்தமாக அளிக்கப்பட்டவை. தனிப்பட்டவை அல்ல. அவற்றின் மூலம் அவர்கள் நிலக்கிழார்களாக எல்லாம் ஆகியிருக்க முடியாது." (நன்றி.: அ.நீ ) 
அப்படி இருக்க இவர்கள் மட்டும் எப்படி எல்லோரும் ஆண்டைகளாக இருக்க முடிந்திருக்கும் ? மேலும் தமிழகத்தில் எந்த பகுதியிலும் அந்தணர்கள் அரசர்களாக இருந்ததாக சரித்திரமும் இல்லை. குறுநில மன்னர்களாக இல்லை. பாளையக்காரர்களாக இருக்கவில்லை. பெரிய ஜமீன்தாரர்களாக (இந்த பட்டங்கள் வெள்ளையர்காலத்தில் வருகின்றன) இல்லை. மிராசுதார்களாக ??? (இதுவும் வெள்ளையர்காலத்து பட்டம்)
 சரி..
கணக்குக்காக ஒரு 10 மிராசுகள் என்று வைத்துக் கொள்வோம். மீதி....??? ஆக...எந்தகாலத்திலும் அந்தணர்கள் பெரும் நில கிழார்களாக இருந்ததேயில்லை. பின் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? கோவிலில் பூஜைகள் செய்வதை தவிர ? மன்னர்கள் அவைகளில் திவானாக (ஒருவகையான கணக்கரே!!) ..இதுவும் எல்லா மன்னரிடம் இல்லை. ஒரு சில மன்னரிடம் மட்டுமே!!! பெரும்பணக்காரர்களிடம் கணக்குபிள்ளையாக, கிரமாத்தில் கர்ணமாக, முன்சீபாக, இன்ன பிற உத்தியோகஸ்தர்களாக.... இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இவர்களுக்கு நிலம் இருந்திருக்கலாம். வீடுகள் இருந்திருக்கலாம். ஆனால் அவை எந்த காலத்திலும் மொத்த விவசாய நிலப்பரப்பில் 5 விழுக்காடுகளுக்கு மேல் கை கொண்டிருக்க இருக்க வாய்ப்பே இல்லை. மீதி 95 சதவிகித நிலம் மற்ற ஜாதியினரிடமே இருந்து வந்துள்ளது. 
 உதாரணத்திற்கு...திருவாரூர்கருமுத்து தியாகராஜர செட்டியார் குடும்பத்தின் பரம்பரையாக சொத்து ஆயிரம் வேலிகளுக்கும் அதிகம்.. தஞ்சை மூப்பனார் பரம்பரை பல காலங்களாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை கொண்டுள்ளனர். பூண்டி வாண்டையார் குடும்பமும் பெரும் நிலகிழார்களே.. 
இப்படி பல அப்படி இருக்க இவர்கள் மட்டுமே எப்படி ஒரு அடிமைத்தனமான சமுகத்தை கட்டமைத்த குற்றத்தை சுமப்பது ? 
 நியாயமில்லையே... 
அடுத்தது பார்பனர்கள் மற்றவர்களை கல்வி கற்பதை தடுத்தார்கள். அடிப்படை : பார்பனர்கள் மற்றவர்களுக்கு வேதங்களை சொல்லி தர மறுத்தனர். உண்மை என்ன? 
வெள்ளையர் வருமுன்...இங்கு கல்வி என்பது அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே இருந்து வந்துள்ளது. ஆகவே அந்த அந்த சமுகம் தம் ஜாதியின் குடும்பத்தின் அடிப்படையிலேயே கற்ப்பித்தலில் இருந்து வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் பல துறைகளில் குடும்பத்திற்கு வெளியில் கற்பித்தல் இல்லவேயில்லை.இதன் அடிப்படை காரணம் பொருளாதாரமே !! எந்த தொழிலிலும் யாரும் பெரும் பணக்காரர்களாக வளர்வது எளிதானதில்லை. ஒவ்வொரு ஊரிலும் பெரிய அளவில் போட்டியின்றி எல்லா தொழில் சார்ந்த ஜாதியினரும் இருந்ததாலும் அன்றைய சமுக கட்டமைப்பு பெரிய அளவில் பணம் சார்ந்து இல்லாமல் இருந்ததாலும் அவரவர் தம் குடும்பத்தினருக்கே தம் தொழில் கல்வியை கற்பித்தனர். சுயநலம்தான்.
 பணக்காரன என்பது நில உடைமையைசார்ந்து இருந்த வரை ஒருவன் பெரும்பாலும் பிறப்பாலேயே பணக்காரனாக முடிந்தது. இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு. வணிகம். இதில்தான் ஒருவர் ஒரு தலைமுறையிலேயே பெரும் பணக்காரராக வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அந்தணர்கள் வணிகம் செய்ததில்லை. (அந்த காலத்தில் ).. இந்த சூழ்நிலையில் இருக்கும் ஒரே கோவிலில் மணி அடித்து கலம் நெல்லை வாங்கும் உரிமையை வேறு ஒருவருக்கு யார்தான் விட்டுக் கொடுப்பார்கள் ? 
பின் கல்வி மறுத்தான் என்பது எப்படி சொன்னார்கள் ? இங்கு கல்வி என்பது எப்படி மாறியது என்ரூ பார்க்க வேண்டும். வெள்ளையர் வந்தவுடன் இந்த பழைய கணக்கு பிள்ளைகள் பங்கு முக்கியமானதாக மாறியது. இவர்கள் வெகு விரைவாக மாற்று மொழியை கற்க நேரமும் வாய்ப்பும் கிடைத்ததனால் சமுதாய ஏணியில் முக்கிய பங்கு வகிக்க தொடங்கினர். 

துபாஷி....(இரட்டை மொழி பேசுபவர்) பதவியை அந்தணர் மட்டுமல்ல நாயுடு, நாயக்கர், முதலியார், செட்டியார் போன்ற மற்ற சமுத்தினரும் வகித்தனர். ஒரு 400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த ஒரு வேற்று நாட்டுக்காரனுடன் அவன் மொழியை கற்று உரையாட வணிகம் செய்ய இவர்கள் தேவைப்பட்டார்கள். பின் இவர்களின் முக்கியத்துவம் அதிகரிக்க அதிகரிக்க இந்த பதவியிலும் போட்டிகள் உண்டாயிற்று. இதே காலத்தில்தான் வெள்ளையர் தம் கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கினர். பக்கத்திலேயே இருந்த இந்தஜாதியினர் மாறிவரும் இந்திய தமிழக சூழ்நிலையில் இந்த வாய்ப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து கொண்டு உடனே அதை பயன்படுத்தி கொண்டனர். 
இது எப்படி என்றால்...கணினி அறிமுகமான பொழுது அதிகம் படித்தவர் நகரத்தினரே ...அதனால் முன்னேறியவர்கள் அவர்களே...அதே சூழ்நிலைதான் வெள்ளையரின் ஆங்கில கல்வி அறிமுகபடுத்தப் பட்டபோது. .. ஆகவே அன்று போட்டியின் காரணமாக பல்வேறு காரணங்கள் சொல்லி தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது மற்ற தொழில் புரிவோர்களும் இந்த ஒரு சிலரால் ஆங்கில கல்வி மறுக்கப்பட்டது. 
அன்று அது பலருக்கு தேவைப்படவும் இல்லை. பண்ணையில் வேலை செய்ய ஆள் குறையும் போது அவன் போய் பள்ளியில் அமர்ந்தால் பண்ணையார் சும்மா விடுவாரா? இதற்கு அந்த வாத்தியார் துணை போனாலும் நடக்குமா ? பொருளாதாரம் எல்லாவற்றையும் விழுங்கிவிடும். 
 1947 வரை பள்ளி கல்வி தனியாரிடமும் அதுவும் அந்தஅந்த ஊர்பெரும் பணக்கார் குடும்பத்தாரிடையேதான் இருந்தது. அப்படி இல்லை என்றால் வெள்ளையரை சார்ந்த கிறிஸ்துவ அமைப்பினரிடையேதான் இந்த கல்வி அமைப்புகள் இருந்தன. இந்த கல்வியும் வெறும் 100 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுக படுத்தப்பட்டது தான். 
 காமராஜர் காலத்துக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பள்ளிகள் இருந்தன ? அவைகளில் யார் யார் படித்தனர் என்று ஒரு ஆய்வு செய்தால் விளங்கும். எனவே...பார்பனந்தான் கல்வியை எல்லோருக்கும் செல்லாமல் தடுத்தான் என்பது முற்றிலும் உண்மையில்லை.
 அந்தணர்கள் தங்களின் தொழில் சார்ந்த இடமான கோயில்களில் தாங்களே இருக்க விரும்பி அதை. சுற்றியே தங்கள் வாழ்வியலை அமைத்து கொண்டனர். இது ஒரு கருத்து. பிராம்மணர்களாக விரும்பி கோவிலைச் சுற்றி குடியிருப்புகளை அமைத்து கொள்வதும் சமுதாய விதிகள் அவர்களை அப்படி அமைக்க நிர்பந்தித்தன. மேலும் "ஒரு ஊரில் பஞ்சம் வந்தால் பிராம்மண சாதிகள் பஞ்சம் பிழைக்க வேறு ஊருக்கு செல்வது கூட தடை விதிக்கப்பட்டுள்ளது"  - இதுவும் ஒரு கருத்து - நன்றி அ.நீ . 
ஆனால் அவர்கள் தங்கள் ஜாதியினரே ஆனாலும் தொழில் சார்ந்த கல்வி தகுதி அடைவதில் யாருக்கும் எந்த விதி விலக்கும் அளிக்கவில்லை. 14 வருடம் வேத பாடசாலையில் படிக்க வேண்டும் என்றால் படித்தே ஆகவேண்டும். அப்படி படித்தவனே "கனபாடிகள்" என்கிற உச்ச தகுதிக்கு உரியவனாகிறான். மற்ற அந்தணர்கள் தகுதியில் அவனுக்கு கீழேதான். 

இவர்களின் தொழில் ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயமாக இருந்ததால் அதை அதிகமாக உயர்த்தி பேசி அதன் புகழை அவசியத்தை தக்க வைத்து கொண்டார்கள். மற்றவரை சட்டென்று உள்ளே வரவிடாமல் செய்ய மொழியை (சமஸ்கிருதம்) ஓரளவு பயன் படுத்திக் கொண்டனர். இது கூட ஒரு பகுதிதான். காரணம் அந்தணர்களில் ஒரு பகுதியினரான வைஷணவர்கள் முற்றிலும் தமிழ் மொழி சார்ந்தே வழிபாட்டு வந்துள்ளனர். ஆகவே தமிழ் மொழி இவர்களுக்கு அந்நியமல்ல. மற்றபடி பார்ப்பனர்களின் தமிழ் பற்று பற்றி இங்கு விலாவரியாக சொல்லி நேரம் பாழ்படுத்த விரும்பவில்லை. "பிராம்மண வர்ணம் என்பதற்குள் பல சாதியினர் காலம் காலமாக வந்திருக்கின்றனர். அவை எல்லாம் தொடக்கம் முதலே பிராம்மண சாதிகள் கிடையாது. எனவே ஏதோ ஐயாயிரம்/இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சாதிகளே பிராம்மணராக இருந்திருக்கின்றன என்பதெல்லாம் வரலாற்று அடிப்படை அற்ற rhetoric".- நன்றி. அ.நீ . மற்றபடி அவரவர் சாதிக்கேற்றவாறு அவரவர் சாமிகளை படைத்து வணங்கி வந்துள்ளனர். அவரவர் சாதிக்கேற்ப கிராம பூசாரிகளும் உண்டாயினர்.பிராமணர் அல்லாமல் ஓதுவார்கள், பண்டாரங்கள் என்று பலரும் அவரவர் வழியில் இறைவழிபாட்டை செய்து வந்தே உள்ளனர். 
 உதாரணமாக..மதுரை ஆதினம் பல நூறு ஆண்டுகளாக (திருஞ்சானசம்பந்தர் காலம் முதல்) பிராமண அல்லாதோர் கொண்டே நடத்தப்படும் மடம் ஆகும். அதே போல்தான் தருமபுரி ஆதினமும். இன்னொன்று திருப்பானந்தாள் ஆதீனம். ஆக இறை வழிபாட்டிலும் இவர்கள் பெரிய ஆளுமையாக (சிதம்பரம் தவிர) இல்லை. மேலும் சைவ வைணவ இறை வழிபாட்டையே இவர்கள்தான் கொண்டுவந்தனர் என்பது தமிழ் சமுதாயத்தின் தொன்மையையே அவமதிப்பதாகும். 
 பின் எங்குதான் இந்த பிராமணர்கள் தப்பு செய்தார்கள்?
 இவர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இல்லை. மண்ணின் மைந்தர்கள்தாம். ஆனாலும் பெரிய அளவில் நில உரிமையாளர்களாக இல்லாமல் போனதால் இவர்கள் எப்போதும் அதிகாரம் இருப்பவர்களை அண்டியே பிழைப்பு நடத்தியுள்ளனர்.வெள்ளையர் வருமுன்பு மன்னர்களுக்கும், ஜாமீந்தார்களுக்கும் துணை போன இவர்கள் பின்னர் வெள்ளையரின் அணுக்கத்தில் வேகமாக அதிகாரத்திற்கு வெகு சமீபத்தில் இருக்க தொடங்கினர். அதற்கு படிப்பு மட்டுமே வழி வகுக்கும் என்பதை அறிந்து கொண்டு அதை கெட்டியாக பிடித்து கொண்டு தம் வாழ்வை ஸ்திரப் படுத்தி கொண்டனர். அதிகாரத்தின் பக்கத்தில் இருந்து கொண்டு அதன் பலனை அனுபவிக்கும்போது அந்த அதிகாரத்தின் தீய விளைவை கண்டிக்காமல் போனார்கள். இன்னும் சொல்லப் போனால் அநியாயங்களுக்கு துணை போனார்கள். பல சமயங்களில் அதை நியாயப்படுத்தினார்கள். சாத்திரங்களோ, கதைகளோ, எதுவுமே திரிக்கப்பட்டு இவர்கள் மூலமாக சொல்லப்பட்டதின் விளைவு இவர்களே அதை முன் வைத்ததால் இவை இவர்களுடையாதாகி போனது. வர்ணாசிரமம் இருந்தது உண்மை. தொழிலின் அடிப்படையில் பிறந்த இந்த ஜாதி பின் காலப்போக்கில் பிறப்பின் அடிப்படையில் ஆகிப் போன கொடுமை இல்லை என சொல்ல இயலாது. ஆனால் வர்ணாசிரமம் என்பதை இவர்கள் தொடங்கி வைத்தார்கள் என்பது திரிபு. இதுவும் நிலவுடமை மற்றும் பொருளாதார நோக்கத்திலேயே தான். நிலைநிறுத்தப் பட்டது. நிலமில்லாத விவசாய தொழிலாளர்கள் மற்றும் வேறு சில தொழில் புரிவோர்கள் நாளடைவில் ஒடுக்க்பட்டவர்களாகி போனார்கள். 
 உதாரணமாக நில உடமை மற்றும் சொத்துக்களின் பின்னணியில் எப்படி சொந்தத்தில் திருமணம் செய்வது சடங்காகி போனதோ அப்படியே இதுவும். சில சமயம் சொத்துக்களை தாண்டி தம் பிள்ளைகள் தம் முன்னே பாதுகாப்பாக இருப்பதை முன்னிறுத்தியும் இந்த திருமணங்கள் நடந்தன. காலப் போக்கில் இது முறை மாமன் உரிமையாகிப் போனது. சொந்தத்தில் திருமணம் செய்வது சரியா தவறா என்று இங்கு நான் ஆராயவில்லை. அதன் காரணிகளே ஆராயப்படுகின்றன. பொருளாதாரத்தில் தொடங்கிய சாதியை சாத்திரங்கள் பேரை சொல்லி நிரந்தரமாக்கும் போது பிரச்சனை வெடிக்கிறது. 
 புலையனின் உருவத்தில் சிவனை கண்ட ஒரு மதம் எப்படி தீண்டாமையை போதிக்கும்.? தள்ளி நில் என்று சொன்ன தவறுக்காக புலையன் காலடியில் ஆதி சங்கரர் வீழ்ந்தார் என்று கதை வரும் மதம் தீண்டாமையை போதிக்குமா? 
யாதவ குலத்திலும், ஷக்திரிய குலத்திலும் கடவுள் அவதரித்ததாக சொன்ன மதம் தீண்டாமையை போதிக்குமா ? பின் என்ன நடந்தது ? 
பொருளாதாரம். சுயநலம். இது மனித இயல்பு..
இன்று சாதி..நாளே வேறு ஒன்று என்று எப்போதும் மனிதர்கள் தங்களை மற்றவர்களை விட கொஞ்சம் உயர்ந்தவர்களாகவே காட்டி கொள்ள எல்லா பிரயத்தனமும் செய்வார்கள். இதில் தமிழ் சமுதாயம் விதி விலக்கு இல்லை. அந்த ஜாதிய திரிபின் முன்னணியில் இவர்கள் இருந்ததினால் இவர்களும் குற்றம் சொல்லப்பட வேண்டியவர்களே.. மேலும் ஒரு முக்கிய காரணி...இங்கு பரவிய கிறிஸ்துவம். வெள்ளைக்காரன் வெறும் வணிகத்தை மட்டும் கொண்டு வரவில்லை. தன்னுடன் மத போதகர்களையும் கொண்டு வந்தான். உண்மையில் 17 நூற்றாண்டுகளில் ஆசியாவிற்கு கடல்வழி மார்க்கம் கண்டடைய ஐரோப்பிய மன்னர்களின்ஆதரவை தேடிய மாலுமிகள் வெறும் வியாபார பலன்களை மட்டும் சொல்லி பணமும் ஆதரவும் கேட்கவில்லை. இந்த பயணங்கள் கிறிஸ்துவத்தை வளர்ப்பதற்கும் முக்கியமானது என்றே ஆதரவு திரட்டினர்.
 அப்படி வந்த கிறஸ்துவ பிரசாரகர்கள் இங்கிருக்கும் கட்டமைப்பை தவறாக புரிந்து கொண்டு தங்கள் பிரச்சாரத்தை கை கொண்டனர். மன்னரையோ, ஜமீந்தாரையோ வீழ்த்துவது பின்னாளில் மட்டுமே சாத்தியமானது. அதுவும் அரசியல் மற்றும் போர்களின் அடிப்படையிலேயே.. மேலும் இது போன்ற அரசியல் தலைமைகளின் பலம் இந்த மத மாற்றத்திற்கு பெரிதும் தேவை பட்டது. எனவே நேரடியாக இவர்களை இந்த மத மாற்ற பிரசாரகர்கள் தாக்கவில்லை. மற்றபடி மதத்தின் பிராசாரத்தில் எதிரி இந்து கடவுளின் அருகே இருப்பதாக காட்டி கொண்ட பிராமணரே என்று கண்டு கொண்டு அவரையே தூற்ற தொடங்கினர். யாரை இந்த சமுகம் பாவம் புண்ணியம் பார்ப்பான் , நியாயம் பேசுவான் என்று நம்புகிறதோ அவனை அயோக்கியனாகவும், தவறானவனாக சித்தரித்து சந்தேகத்தை கிளப்பினால் அந்த சமுதாயத்தை வீழ்த்துவது எளிது என்பது அடிப்படை தந்திரம். பிரித்தாளும் சூழ்ச்சி இங்கும் சிறப்பாக வேலை செய்தது. செய்தார்கள். 

சாதீய சமுகத்தில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள தங்களை தலையாக சொல்லிக் கொண்டதனால் வெட்டு முதலில் கழுத்தில் தானே விழும் ? விழுந்தது. காலம் மாற பத்திரிக்கைகளும் ஊடகங்களும் போக்குவரத்தும் முன்னேற முன்னேற மனிதர்களின் தொடர்பு எல்லைகள் விரிவடைந்தன. கிறிஸ்துவ அடிப்படையில் அமைந்த ஆங்கில கல்வி புதிய (தவறோ சரியோ ) சிந்தனைகளை தூண்டின. அடிப்படையே தெரியாவிட்டாலும் அவர்களால் நம் சமுதாயத்தை பற்றி தங்கள் வசதிக்கேற்றவாரு வளைத்து எழுதி கற்பிக்க முடிந்தது. 
 இந்த காலகட்டத்தில் பிராமணர் அல்லாதோரும் இந்த அதிகார (வெள்ளை அரசு ) பங்கீட்டில் தங்கள் நிலைக்காக பேச கிளம்பினர். பெரியார் போன்றோர் அன்றைய காலத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை கேள்வி கேட்டனர். தவறில்லை. ஆனால் அதற்கு ஒட்டு மொத்த பழியையும் ஒரே ஜாதி மேல் ஏற்றியதுதான் தவறு. அவருடைய தனிப்பட்ட அனுபவங்களில் கூட தமிழகத்தில் தொடக்க காலத்தில் அவரோ அவரது குடும்பமோ மோசமாக நடத்தப் பட்டதாக சொல்லமுடியாது. பின்னாளில் அவர் பிரமாணர்களின் மீது விஷம் கக்க தொடங்கிய பிறகு கூட ராஜாஜி போன்றவர்கள் அவரை மதித்தே வந்தனர். ஆனால் பெரியார் போன்றோருக்கு பிராமண எதிர்ப்பு என்பது ஒரு முகமூடியே. ஆனால் அவரால் வேறு என்ன செய்ய முடியும் ? திருப்பி அடிக்காத மேல் சாதியாக பாவிக்கபட்டவன் பிராமணன் ஒருவன்தான். எனவே அவனை பலி கொடுத்து விட்டனர். தாழ்த்தப் பட்டோரை பற்றி பெரியாரின் கருத்து நாடே அறியும். தங்களை பற்றி சொல்லாதவரையிலும் எல்லாம் நலமே என்று மற்றவரும் சும்மா இருந்துவிட்டனர். (இன்றுவரை அதுதான் நிலை. ) இந்த நிலை மற்ற சாதிகளுக்கு வசதியாகவும் போயிற்று. இந்த திசையில் பயணம் செய்தால் அரசியல் வெற்றி, காசு, பதவி கிடைக்கும் என்கிற போது எல்லோரும் தங்களையும் வஞ்சிக்கப்பட்ட கோஷ்டியில் சேர்த்துக் கொண்டு தம் தம் பங்கை பெற்றனர். இதில் ஆண்ட பரம்பரையினர், ஆளாத பரம்பரையினர் எல்லோரும் ஐக்கியமாயினர். இந்த பிளவுகளுக்கும் தவறான புரிதலுக்கும் முக்கிய பங்காற்றிய அந்நிய மத அமைப்புகள் இந்த குழம்பிய குளத்தில் நன்றாக மீன் பிடித்தனர். பின்னாளில் சினிமா இந்த மாயையை ஊதி பெரிதாக்கியது. மீண்டும் மீண்டும் ஏன் சொல்கிறோம் என்று தெரியாமலேயே பிராமணர்களை பற்றி காதால் கேட்டது கேட்காதது அவன் சொன்னது இவன் சொன்னது எல்லாவற்றையும் அரங்கேற்றினர். சினிமா தான் பரந்து பட்ட தமிழகத்தின் வேதமாயிற்றே. எனவே பலரும் இவைகளை உண்மை என்றே நம்ப தொடங்கினர். 

 ஆக இந்த தமிழ் சமுதாயத்தில் எல்லா சாதியினரை போல் இந்த பார்பன சாதியினரும் தங்களை தக்க வைத்து கொள்ள சுயநலமாக செயல்பட்ட ஒரு அங்கம் தான். நடந்தவைகளுக்கு இவர்களை மட்டும் குற்றம் சொல்வதால் தமிழகம் வாழ்ந்து விடுமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இன்று தமிழகத்தில் அரசு வேளைகளில் 2 சதவிகிதம் கூட பார்பனர்கள் கிடையாது. காவல் துறையில் 2 சதவிகிதத்திற்கு கூட கிடையாது. வறுமையின் காரணமாக கிராமத்தை விட்டு 30 களில் 40 களில் நகரத்தை நோக்கி நகர்ந்த ஒரு ஜாதி பின்னாளி அந்த நகரத்தின் அதிகாரங்களில் ஒதுக்கப்படும் போது வேறு வேறு வழிகளை தேடுகிறது. இதற்கு இவர்களின் கல்வி பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கையும், கடந்த 4 தலைமுரைகளாக கல்வி கற்ற பாரம்பரியமும் பெருமளவு உதவுகிறது.

 முதலில் ஆசிரியர் என்று தொடங்குகின்றனர். அப்போது மற்ற மருத்துவும், பொறியாளர் என்பது எல்லாம் வெள்ளையரிடமே இருந்தது. பின்பு அதே மருத்துவம் பொறியாளர் போன்ற கல்விகளில் தேர்ந்து முக்கிய பதவிகளில் இருந்தனர். பிறகு இந்திய அரசியல் அமைப்பின் கீழ் போட்டி வலுத்து இவர்கள் அரசாங்க வேலைகளை பெருமளவு இழக்க நேருகிறது. இவர்கள் அரசு வேலையிழப்புக்கு பிறகு வங்கி மற்றும் காப்பீடு துறையில் நுழைந்தார்கள். அங்கும் போட்டி பயமுறுத்த இவர்கள் அப்போது தொடக்கத்தில் இருந்த கணினி துறையில் நுழைந்தார்கள். முதலாம் தலைமுறை கணினி படித்தவர்களில் பெரும்பாலோர் முன்னேறிய சமூகத்தினர் எனப்படும் பார்ப்பனரே. இதன் பலன் இன்று இந்த பிரிவினர் பஞ்சம் பிழைக்க வெளிநாடுகளில் புகுந்துவிட்டனர். 

 இது சாதனையின் எக்களிப்பும் அல்ல. வேதனையின் புலம்பலும் அல்ல. ஒரு மாற்றத்தின் பதிவு. அவ்வளவே.. 

இது போல் ஒவ்வொரு ஜாதியினரும் பொருளாதார ரீதியில் முன்னேறியே உள்ளனர். சுதந்திரத்திற்கு பின் நாடார்கள் வணிகத்தில் இறங்கி சாதியின் அடிப்படையில் ஒரு குழுவாக இயங்கி பெரும் வெற்றியயை கண்டுள்ளனர். நகரத்தார் சமூகத்தினர் வட்டித் தொழிலில் முன்பிருந்தாலும் மாறிவரும் சமுதாய சூழலுக்கு ஏற்ப வங்கித் தொழிலில் நுழைந்தது பெரும் வெற்றி கண்டுள்ளனர். இவர்கள் விட்ட இடத்தை வட்டித்தொழிலில் மார்வாரி இனத்தனவர் நுழைந்தது வளம் பெற்றனர். இப்படி ஒவ்வொரு ஜாதியினரும் வாய்ப்புகளை தொடர்ந்து தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியே வந்துள்ளனர். உழைப்பை தாண்டி ஜாதியின் பின்புலம் ஒருவருக்கொருவர் உதவுவதில் இவர்கள் எல்லோருக்கும் உதவியுள்ளது. இப்படியுள்ள சமுதாயத்தில் பிராமணர்களை மட்டும் நோவதேன்...? 

பிராமணர்கள் தவறு செய்யவில்லை என்று வாதிட முடியாது. ஆனால் அவர்கள் மட்டும்தான் தவறிழை த்தவர்கள் என்று கட்டுவது மகா பொய். மேற்கூறிய பல பொய்யான கற்பிதங்களை தொடர்ந்து சொல்லி வந்ததின் பலன் என்ன வென்றால், எதையும் சிந்திக்காமல் மற்றவர்களை போல இதை இந்த பிராமணர்களே ஒரு இரண்டு தலைமுறையாக நம்பத்தொடங்கி விட்டனர். இவர்கள் தங்களுக்குள் ஒரு வித குற்ற உணர்வில் புழுங்க தொடங்கி விட்டனர். இதனால் விளைந்த நற்பயன் என்ன வென்றால் "சுய பரிசோதனை" வேகமாக இந்த சாதியில்தான் தோன்றி ஓரளவு இவர்கள் மாற தொடங்கினர். ஆனால் மாற்றம் என்பதை இவர்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாக புரிந்து கொண்டனர். அதாவது தமிழ் சமுகத்தை விட்டு விலகிப் போதல்.. இது தவறு. இந்த தமிழ் சமுகம் எல்லோருக்குமானது. மாற்றங்களை முன்னெடுக்காமல் விலகிப் போவது பலன் தராது. தமிழ் சமுதாயம் மட்டுமல்ல தேசிய விடுதலை போராட்டங்களில் பிராமணர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. வெள்ளையனிடம் அதிக எண்ணிக்கையில் வேலை பார்ததினாலோ என்னவோ விடுதலை போராட்டத்திலும் பெரிய பங்காற்றினார்கள். சுப்ரமணிய சிவா, வீர வாஞ்சி, பாரதி , மதுரை வைத்தியநாத ஐயர், ராஜாஜி இப்படி போகிறது ஒரு பட்டியல். இந்திய விடுதலைக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத இந்த வலது சாரிகளும், திராவிட இயக்கங்களும் இன்று இதே பிராமணர்களை தேச விரோதிகள் போல் ஏசுவது நகைப்பிற்குரியது. வைக்கம் பெரியார் என்று கூவும் இவர்கள் சேலத்தில் ராஜாஜியும், மதுரையில் வைத்தியநாத ஐயரும் தலித்துக்களுடன் ஆலய பிரவேசம் செய்ததை ஏன் கூற மறுக்கிறார்கள்.?

 பிராமணர்கள் பெரியாரை தாண்டி தமிழகத்தை நேசிக்க பழகியிருக்க வேண்டும். கருணாநிதியும் பெரியாரும் தமிழர்களின் ஒரு சிறு பகுதியின் அடையாளமே என்று தாண்டி தமிழருக்கு குரல் கொடுக்க வேண்டும். தமிழுக்கு குரல் கொடுக்க வேண்டும். ராஜாஜியும், வைத்தியநாத ஐயரும் முன்னெடுத்த தீண்டாமை ஒழிப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சென்றிருந்தால் பாதி பிரச்சனைகள் இருந்திருக்காது. அதைத்தான் இன்று இந்துமதம் இவர்களிடம் எதிர்பார்க்கிறது. பலர் செய்கிறார்கள். அதை இன்னமும் நாடறிய செய்ய வேண்டும்.

 பிராமணர்களை வசை பாடுவதும். ஒரு வகையான மடை மாற்றம் செய்யும் உத்திதான். பெரியார் தொடங்கி வைத்த இந்த அடிதடியில் இன்று அனைவரும் சங்கமம். ஒரு விஷயத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் அடுத்த இரண்டு தலைமுறையில் பழைய அழுக்குகள் மறைந்து புனித பட்டயம் கட்டப்படும் என்று நம்பி செய்யும் வியாபாரம் இது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் : குடுமி வைத்து கொள்ளும் வழக்கம் தமிழ் நாட்டில் பன்னெடுங்காலமாக அனைத்து சாதியிலும் இருந்து வந்தது. வீட்டில் இருக்கும் வயாதான பெரியவர்களை கேட்டால் இது தெரியும். மற்ற சாதியினர் சென்ற நூற்றாண்டின் இடையில் அதாவது 1930 களிலேயே மாறிவிட்டாலும் கடைசி வரை தங்கள் தொழில் சார்ந்த அடையாளமாக இன்னமும் இதை தொடர்பவர்கள் பிராமணர்களில் ஒரு பகுதியினரே . ஆனால் குடுமி என்பதே எப்படி ஒரு ஜாதியின் அடையாளமாக ஆகியது. ? இத்தனைக்கும் இந்த ஜாதியிலும் ஒரு சிறு பகுதியினரே கடவுள் மதம் சம்பந்த பட்ட தொழிலின் அடையாளமாக இதை வைத்துள்ளனர். ஆனால் இந்த குறியீடு எப்படி மாறிவிட்டது என்று பாருங்கள் ? \
மேலும் பரங்கி மலையில் (சென்னை ) உள்ள தேவாலயத்தில் ஒரு சித்திரம் உண்டு. அதில் ஒரு கிறிஸ்துவ மத குருவை ஒரு குடுமி வைத்த கருப்பு மனிதன் வேலால் குத்தி கொல்வதை போன்ற வரையப் பட்டிருக்கும். இந்த ஓவியம் 1940 அல்லது 50 களில் வரையப் பட்டிருக்கலாம். இதன் பின்னணிதான் சுவாரசியம். இந்த மத குரு 1000 வருடங்களுக்கு முன்பு வந்து இங்கு பிராத்தனை செய்த போது ஒரு இந்து வெறியனால் குத்தி கொள்ளப்பட்டாராம். அவருடைய சமாதி இங்கு இருக்கிறதாம். இது உண்மையா பொய்யா என்பதை விடுங்கள். அது வேறு விஷயம். இதில் காமெடி என்னவென்றால் ...இன்று இந்த ஓவியத்தை காண்பவர்கள் அல்லது அதைப் பற்றி சொல்பவர்கள் அந்த ஓவியத்தில் ஒரு பார்பனன் கிறிஸ்துவ குருவை கொன்றதற்கான சாட்சி என்கிறார்கள். பார்பனன் என்பதற்கான அடையாளம் அந்த குடுமியாம். எப்படி கதைகள் மெல்ல மெல்ல திரிக்கப்படுகின்றன. பாருங்கள். கொலை நடந்ததாக சொல்லப்படுவதே உண்மையா பொய்யா என்று தெரியாத கதையில் இதில் யார் கொலை செய்தார்கள் அவர்கள் என்ன ஜாதி என்பதை இன்று உள்ள நாகரீகத்தின் அடிப்படையில் கதை சொல்லி திரிக்கிறார்கள்.

 தங்கள் பிரசாரத்திற்கு பயன் தரும் வகையில் எந்த ஒரு கதையையும் தங்கள் வசதிக்கேற்ப திரித்து சொல்வது கட்சி அரசியலில் மட்டுமல்ல மத அரசியலிலும் உண்டு. இதையும் சிந்திக்காத சாமான்யர்கள் வாயை பிளந்து கொண்டு கேட்டு பின்னாளில் ஆமாம் அந்தணன் கொன்றான் என்று சொல்லி போவார்கள். காட்சி திரிபுக்கு இதூ ஒரு உதாரணமே.. (இதெல்லாம் சொன்னதற்காக கிறிஸ்துவ விசுவாசிகளும், மத சார்பற்ற சக்திகளும் என்னை பார்பனன், காவி , ஹிந்து வெறியன் என்று தூற்றுவீர்கள் என்று நம்புகிறேன் .பரவாயில்லை...அது உங்கள் எண்ணம். இதில் நான் சொல்ல ஏதுமில்லை ) 

 எதிர்க்க துணிவில்லாத ஒரு சமுகத்தை அடிப்பதில் ஒரு வசதி உண்டு. உங்களுக்கு ஆள் சேர்க்க வேண்டிய செலவு இல்லை. காற்றிலே கத்தி வீசலாம். யாரும் கேட்க மாட்டார்கள். மூடர்கள் உங்களை வீராதி வீரன் என்று வர்ணிப்பார்கள். பொய்யை சரித்திரம் என்று சொல்லலாம். கேட்பவர் சரித்திரமே படிக்கவில்லை. அதை தேடவும் எத்தனிப்பதில்லை என்பது வசதிதானே. அப்படியே எவனாவது எழுந்தால் அவன் பார்பன அடிவருடி என்று அடித்தால் போதும் ஒய்ந்துவிடுவான். இன்று இந்த சமுதாய போட்டியில் பரிசுகள் ஏராளம். போட்டிகளும் ஏராளம். மதம் இனம் என்று அதிகமாக பிரித்து அனைத்திலும் இந்தியனில் இருந்து வெள்ளையன் (மீண்டும் ) வரை எல்லோரும் இங்கு தங்களின் கொள்ளையை நிலை நிறுத்த போராடுகின்றனர். அதற்கு வசதியாக திட்டுவதற்கு அல்லது திசை திருப்ப ஆள் வேண்டுமே ? இதன் முன்னணியில் இருப்பது இடது சாரிகளே...தங்கள் தோல்வியை யார் மீதாவது எதன் மீதாவது ஏற்றியே பழக்கப்பட்ட இவர்கள் இன்று அதை இப்படியும் செய்கின்றனர். 

 அந்நிய சிந்தனைகளின் இடைச்செருகல் இன்றி நாம் இந்த ஏற்றத்தாழ்வுகளை சரியாக கையாண்டு இருப்போமா என்பவர்களுக்கான பதில் ஒன்றே... மாறிக் கொண்டிருந்த உலகில் 17ம, நூற்றாண்டுகளுக்கு பிறகு அந்நிய தலையீடு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நாம் இந்தியா என்று ஒரு ஒற்றை நாடாக இருந்திருப்போமோ இல்லையோ இந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கு நிச்சயமாக நம் கலாசாரத்திலேயே ஒரு நல்ல தீர்வு கண்டிருப்போமோ என்றே தோன்றுகிறது. காரணம் இன்று வெளியில் இருந்து வந்த மதத்தாலும் இந்த ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க முடியவில்லை. தீர்வு நம் கலாசாரத்தில் தான் உள்ளது என்றே தோன்றுகிறது. புத்தனையும், மகா வீரரையும், ஆதி சங்ககரரையும், விவேகானந்தரையும் ராம கிருஷ்ண பரம அம்சரையும் தந்த இந்த கலாசாரம் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு தராமாலா போகும்.???? ஆக இந்திய சமுதாயத்தில் பிள்ளையார் படிக்க குரங்காகி போன சாதி விஷயத்தில் பெரும்பாலோர் தெரிந்தோ தெரியாமலோ சுயநலத்தில் அடிப்படையில் தவறிழைத்தவர்களே!! இதில் ஒரு சமுகத்தின் மீது மட்டும் பழியை சுமத்தி தப்பிக்க நினைப்பது இயலாது என்று சரித்திரம் நமக்கு தொடர்ந்து சொல்லித்தரும் பாடம். அது தவறான செயலும் கூட.... இன்று 1000 வருடங்கள் முன்பு ராஜானுஜர் தொடங்கியது போலசமுதாய மறுமலர்ச்சிக்கு எல்லோரும் முன் வர வேண்டும். ஒரு காலத்தில் செழிதொங்கியதாக சொல்லப்படும் இந்திய தமிழக கலாசாரம் அதை மீட்டெடுக்க வேண்டுமென்றால் அதை வெறுப்பின் அடிப்படையில் செய்ய இயலாது. அன்பின் அடிப்படையில் எல்லோரையும் அரவணைத்தே சமமாக பாவித்தே இதை செய்ய வேண்டும். இதற்கு இடையூறு உள்ளிருந்தும் வெளியிருந்தும் நிச்சயம் ஏற்படும். அதை நாம் ஒருங்கிணைந்தே எதிர்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் எல்லோரும் தங்கள் நிறங்களை மறைக்க துணிந்ததில்லை. இன்று எல்லோரும் எல்லா நிறங்களிலும் வருகின்றனர். வேட்டை பழையது. காடு பழையது . ஆனால் வேட்டையாலர்களின் உத்தி மாறிவிட்டது.