Friday, May 12, 2017

டல்லாஸ் பயணம்.

சமிபத்தில் டெக்சாசில் உள்ள டல்லஸ் நகருக்கு பயணம் செய்தேன்.

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் மெக்சிகோவின் எல்லையில் இருக்கும் இந்த மாநிலம் அமெரிக்க மாநிலங்களிலேயே மிகப்பெரியதாக கணிக்கப்படுகிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது பெரிய அளவிலான இயற்க்கை அதிசயங்களோ சுற்றுலா தளங்களோ இல்லாத வெறும் கட்டாந்தரை என்று சொல்லலாம். ஆனால் இங்கு அமெரிக்காவின் மிக முக்கிய வளம் உண்டு. அமெரிக்காவின் அகோர எரிசக்தி பசிக்கு தீனி போடும் எண்ணெய் வளங்கள் இங்கு அதிகம் இருப்பதாக சொல்கின்றனர்.

மற்றப்படி இத்தனை பெரிய மாநிலத்தில் பெரிய நகரங்கள் என்று சொன்னால் வெறும் நான்கு நகரங்களையே சொல்கின்றனர். ஒன்று தலைநகரம் ஆஸ்டின்..இங்கு சிறந்த பல்கலைகழகம் உண்டு.

அடுத்து டல்லாஸ் ...இதிலும் சிறந்த பல்கலைகழகம் உண்டு. பல நிறுவனங்கள் தம் தொழிற்கூடத்தை அமைத்துள்ளன. இங்குதான் நவீன அமெரிக்க சரித்திரத்தின் முக்கிய நிகழ்வான ஜான். F. கென்னடி சுட்டு கொல்லப்பட்டார்.

மூன்றாவது ஹூஸ்டன் ..இங்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் - நாசா வின் ஆய்வு மற்றும் விண்வெளி கட்டுப்பாட்டு மையம் இருக்கிறது.

நான்காவது சான் ஆண்டனியோ எனும் சிறு நகரம். இந்த நகரத்தின் ஒரே சிறப்பு ...இதுதான் மெக்சிகோ விலிருந்து ஐக்கிய அமெரிக்காவில் நுழைவோருக்கு தென் படும் முதல் பெரிய நகரம்.  இங்குதான் ஐக்கிய அமேரிக்கா மெக்சிகோவை ஒரு சிறு சண்டையில் மிகச்சில உயிர்களை பறிகொடுத்து வெற்றி கொண்டு டெக்சாஸ் மாநிலத்தையே தம் பிடிக்குள் கொண்டு வந்தது.  அந்த சண்டை நடந்த தேவாலாயம் மற்றும் கட்டுமானங்கள் இன்னமும் சரித்திர சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன.

பூகோள ரீதியாக அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலமும் ஏதாவது ஒரு இயற்கையின் சீற்றத்துக்கு பலியாகும் என்று சொல்வார்கள். அதன் படி டெக்சாஸ் மாநிலம் டொர்னாடோ என்று சொல்லப்படும் சூரைக்காற்றுக்கும் பனிக்கட்டி மழைக்கும் அடிக்கடி ஆளாகும். பனிக்கட்டிகள் என்பது சிலசமயம் ஒரு கிரிகேட்பந்து அளவுக்கு கூட இருப்பதால் சேதாரம் அதிகம் இருக்கும். சூறைக்காற்று பல சமயங்களில் வீடுகளையே தூக்கி செல்லும்.

மற்றப்படி  இந்த மாநிலம் கிட்டத்தட்ட தென்னிந்திய பருவநிலையை ஒட்டியே இருக்கிறது. அதனால்தானோ என்னவோ ...இங்கு குடியேறும் இந்தியர்களும் மிக அதிகம்.  இங்கு ஏகப்பட்ட கோயில்களும் இந்திய உணவு விடுதிகளும் அதிலும குறிப்பாக தென்னிந்திய உணவு விடுதிகளும் இருக்கின்றன.

நான் தங்கிய ப்ளேனோ எனும் பகுதியில் அடையார் ஆனந்தபவன் மற்றும் சரவணபவன் கூட இருக்கிறது.

மற்றப்படி ஒரு சுற்றுலா பயணியாக நாம் இங்கு அதிக நாள் செலவிட முடியாது. காரணம். வழக்கமான அமெரிக்காவின் பெரிய கார்கள் பெரிய ரோடுகள் பெரிய கட்டிடங்களை தவிர  டல்லாசில் நாம் பார்க்க கூடிய ஒரே இடம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சுட்டு கொல்லப்பட்ட இடம்.

இந்த இடம் டல்லாசில் டௌன்டவுன் என்று அழைக்கப்படும் இடத்தில் இருக்கிறது.

நான் இந்த இடத்தை சென்று பார்த்த போது எனக்கு ஒரு சுவாரசியமான விஷயம் தென்பட்டது. அதாவது இவர்கள் கடந்து போன அந்த நிகழ்வை எப்படி பார்க்கிறார்கள் ? எப்படி பாதுகாக்கிறார்கள்?  என்பதே...

இந்த நிகழ்வில் இறந்து போனது திரு. ஜான் பிளிட்ஜெரால்டு கென்னடி என்கிற ஒரு இளம் ஜனாதிபதி. இறந்த போது அவருக்கு வயது 46 மட்டுமே.
பதவிக்கு வந்து இரண்டு வருடங்களை தாண்டியவர். மிகவும் சவாலான நேரங்களான ரஷ்யா மிரட்டல்களை திறம்பட கையாண்டு அமெரிக்காவை
வழி நடத்தியவர் என்று கூறுகின்றனர்.

இவரை அமெரிக்காவின் ஒருசாரார் மாறிவரும் எதிர்காலத்தின் அடையாளமாக பார்த்தனர். ஒலி மற்றும் ஒளி ஊடக சாதனங்கள் வெகு ஜன மக்களுக்கு எளிதாக கிடைக்கதொடங்கிய காலத்தில் மிக அதிகமாக காண்பிக்கப் பட்ட தாலோ என்னவோ இவர் பல குறைகளுக்கு இடையேயும் மிகப்பிரலமானார். இவரது இளமையும், வசிகரிக்கும் இவரது தோற்றமும் துணை புரிந்தன.

இங்கு நான் எழுத வந்தது இவரை பற்றியல்ல. அதற்கு பல புத்தகங்கள் உள்ளன.  இவரது கொலையை இறப்பை அது நடந்த இடத்தை அமெரிக்க எப்படி அணுகியுள்ளது என்பதேயாகும்.

நகரத்தின் மையத்தில் இருக்கும் ஒரு சாதாரண 7 மாடி கட்டடத்தின் முன் இருக்கும் ஒரு திருப்பத்தில் இந்த ஜனாதிபதி ஒரு திறந்த காரில் பயணம் செய்யப்படும் போது அந்த கட்டிடத்தின் 6 வது மாடியில் இருந்து கொலைகாரன சுட்டதாக சொல்கின்றனர்.

https://upload.wikimedia.org/wikipedia/commons/6/6b/Dealey-plaza-annotated.png


இன்றும் அந்த கட்டிடம் அங்கேயேதான் அப்படியே எந்த வித மாற்றங்கள் இன்றி இருக்கிறது. அந்த கட்டிடத்தில் இருந்த அரசு அலுவலங்கள் இடம் மாறி விட்டன. அந்த கட்டிடம் மிகச்சிறிய மாற்றங்களுடன் ஒரு மியுசியமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் அமெரிக்க வர்த்தக குணத்திற்கு ஏற்ப காசு வாங்கி கொண்டு உங்களை அனுமதிக்கிறார்கள்.  ஒருத்தருக்கு இந்திய பண மதிப்பின் படி கிட்ட தட்ட ஆயிரம் ரூபாய்கள்.  கொடுத்த காசுக்கு குறைவில்லாமல் ஒரு தானாக இயங்கும் ஒலி நாடா பெட்டியை தருகிறார்கள். அதை காதில் மாட்டிக் கொண்டு மேலே சென்று குறிப்பிட்ட வழியாக் செல்லும்படி அந்த ஒலி பொறி சொல்கிறது. கைடு வேண்டாம். இது எத்தனை மொழிகளில் வேலை செய்யும் என்று பார்க்க வில்லை. எனக்கு ஆங்கிலம் தெரியும். அம்புடுதேன்.


அந்த கட்டத்தின் ஆறாவது மாடியில் இருந்த ஒரு ஜன்னலின் வழியாக அந்த கொலையாளி ஜான் வில்கின்ஸ் பூத் சுட்டதாக சொல்கின்றனர்.  எனவே லிப்ட் நம்மை நேராக ஆறாவது மாடிக்கு அழைத்து செல்கிறது. அங்கே அந்த கொலையாளி இருந்ததாக சொல்லும் ஜன்னலையும் கொலை நடந்த அன்று எப்படி இருந்ததோ அதே நிலையில் (சில பல பெட்டிகள் சூழ ) வைத்திருக்கின்றனர்.  அந்த ஜன்னலுக்கு அருகே செல்லும் முன்பு மிச்சம் இருக்கும் அந்த தளத்தில் கென்னடியை பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்கின்றனர். இந்த அறிமுகத்தில்தான் நான் சொன்ன சுவராசியம் இருக்கிறது.

(காரில் இருந்து கென்னடி அந்த கட்டிடத்தை பார்த்திருந்தால் இப்படித்தான் தெரிந்திருக்கும் )

சுற்றி வரிசையாக  படங்களும் ஒலி /ஒளி காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் அந்த ஜனாதிபதியின் வாழ்க்கை வரலாறு குறிப்பும் அவரது அரசியல் நிலைப்பாடுகளும் பின் அதன் பின்னணியில் அவர் டல்லாஸ் வந்த போது அங்கு இருந்த அரசியல் களமும் எந்த வித மறைவும் இன்றி தெரிவிக்கப்படுகிறது.  அன்று தெற்கு அமெரிக்க மாநிலங்களில் கென்னடிக்கு ஓரளவு எதிர்ப்பே இருக்கிறது.  அவருடைய மிதவாத கொள்கைகளும் நிறவெறிக்கு எதிரான நடவடிக்கைகளும் அவரை கொஞ்சம் இந்த மாநிலங்களில் அந்நிய படுத்தியே வைத்திருந்தது. இதை அந்த மியுசியத்தில் இருக்கும் படங்களும் ஒலி ஒளி காட்சிகளும் மறைக்காமல் தெரிவிக்கின்றன.

ஒரு தலைவர்  இறந்தாலே அதுவும் அசாதாரண சூழலில் இறந்தால் போதும் அவரது   அனைத்து எதிர்மறை விஷயங்களும் மறக்கப்பட்டு அவர் ஒரு மகா புருஷராக அல்லது மகா தியாகியாக அல்லது உலகையே  காக்க வந்த பெண் தெய்வமாக பார்ப்பது போன்ற கல்யாண குணங்களை கொண்ட இந்தியாவில் இருந்து வந்த எனக்கு இது சுவாரசியமாக பட்டது.

இப்போது கென்னடி விஷயத்திற்கு வருவோம். .

அந்த ஆறாவது மாடியில் இருந்து சுட்டபோது கொலையாளியின் பார்வையில் என்ன தெரிய வாய்ப்பு உள்ளது என்பதை அறிய அதே ஜன்னலுக்கு மேலே உள்ள ஏழாவது மாடி ஜன்னலில் இருந்து நீங்கள் பார்க்கலாம். அதற்கும் வழி செய்து இருக்கிறார்கள்.

கென்னடி சுட்ட போது அவர் ஒரு திறந்த காரில் பயணம் செய்துள்ளார். அவர் சுடப்பட்டப் போது  சென்ற பாதை இன்னமும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.  அவர் மீது குண்டு பட்ட போது அவர் அந்த சாலையில் எந்த இடத்தில் இருந்தார் என்பதை குறிக்கும் விதத்தில் அங்கு ஒரு X குறி மட்டும் இடப்பட்டு இருக்கிறது.

மற்றபடி அந்த சாலைகள் மூடப்பட்டு தேசிய அடையாளமாக மாற்றப்பட வில்லை.  அந்த இடம் புனிதப்படுத்தப்பட வில்லை. மறைக்கப் படவில்லை. அனால் மறக்கப் படவுமில்லை.

 முக்கியமாக

(சாலையில் ஒரு X குறி போடப்பட்டிருப்பதை கவனிக்கவும். )

இங்கு டல்லாசில் கென்னடிக்கு  ஒரு சிலை கூட கிடையாது.

ஒரு சரித்திர நிகழ்வை அதன் சாதக பாதகங்களுடன்  ஒரு நிகழ்வாகவே யதார்த்தமாக பார்த்து அப்படியே அதை அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறார்கள்.

கிட்ட தட்ட இதே வயதுள்ள  இளம் அரசியல் தலைவர் திரு. ராஜீவ் காந்தி
இந்தியாவில் தமிழகத்தில் ஸ்ரீ பெரும்பதூரில் வேறு விதமாக கொல்லப்பட்டார்.  அவருக்கான அந்த நினைவிடத்தை நான் இதுவரை கண்டதில்லை.

காண ஆசை...




No comments: